அண்ணாமலை
அண்ணாமலை

"என்னைப் பேச வைக்காதீர்கள்!''

தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.

திராவிட அரசியல்வாதிகள் போல அண்ணாமலை இயல்பிலேயே பேச்சாளர் இல்லை. அதாவது திராவிட இயக்கம் ‘யார் மேடைப் பேச்சா ளர்' என்பதற்கு உருவாக்கி வைத்திருக்கும் இலக்கணத்துக்குள் வருபவர் அல்ல. ஆனால், பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த திராவிட அரசியலை அதே பேச்சின் மூலம் தோற் கடிக்கப் போவது அண்ணாமலைதான்.

அண்ணாமலையின் பேச்சின் அடிநாதம் என்ன? வெற்றுப் புகழுரைகளைத் தவிர்ப்பதும், என்ன விஷயமாகப் பேசுகிறோமோ அதை மட்டும் தெளிவாகப் பேசுவதும்தான். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாகச் செய்கிறார். இயல்பிலேயே ஒரு ஐ பி எஸ்ஸுக்கு இருக்கும் மூளையும் திறமையும் கடும் உழைப்பும் இவருக் குக் கை கொடுப்பதால், இதுவரை இந்தியாவே சந்தித்திராத ஒரு பேச்சாளரை நாம் இன்று பார்க்கிறோம்.

எந்த மேடையில் என்ன பேசுகிறோம் என்பதில் அண்ணாமலைக்கு இருக்கும் தெளிவைத் தனியே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேதம் ஓதும் மாணவர்களுக்கு மத்தியில் பேசினாலும், அரசியல் பற்றிப் பேசினாலும், கல்லூரியில் மாணவர்கள் பற்றிப் பேசினாலும், அங்கே என்ன பேசுகிறோம் என்பதில் அவர் காட்டும் அக்கறையும், தகவலில் துல்லியமும் ஆச்சரியப்படுத்துபவை. இவை அத்தனையையும் கையில் எவ்விதத் துண்டுச் சீட்டும் இன்றிப் பேசு கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.

அண்ணே அண்ணே என்று அழைத்துக்கொண்டே, பத்திரிகையாளர்களின் தவறான கேள்விகளை விமர் சிக்கவும் அண்ணாமலை தவறுவதில்லை. ஆரம்பத் தில் அண்ணாமலையை நம் மற்ற அரசியல்வாதிகள் போலத்தான் என்று தவறாக எடை போட்டுவிட்ட பத்திரிகையாளர்கள் இன்று அவரிடம் கேள்வி கேட்பதற்கு முன்னால் நிறைய யோசிக்கிறார்கள். ஒவ்வொரு பத்திரிகையாளரின் உள்நெஞ்சுக்கும் தெரியும், அண்ணாமலை இந்திய அரசியல்வாதிகளில் தனி ரகம் என்று. இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள், அவ்வளவுதான்.

ஒன்றிரண்டு கூட்டங்களில் இப்படிப் பேசிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது எளிது. ஆனால் அண்ணாமலை ஓய்வே இன்றி தமிழ்நாட்டின் தெருவெங்கும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இது சாதாரண சாதனை அல்ல. இதே சாதனையை திராவிட அரசியல்வாதி செய்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமே அதைக் கொண்டாடும்படி செய்திருப்பார்கள்.

அண்ணாமலையின் இன்னொரு பலம், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுகிறார். அண்ணாமலையின் ஆங்கிலம் கணவான்களுக்கு உரிய உயர்தர ஆங்கிலம் அல்ல. அவரது தமிழைப் போலவே, மனதில் இருப்பதை அப்படியே உரக்கச் சொல்லும் ஆங்கிலம். இதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பேச்சா ளர்கள் நிறைந்த சபையில் அவரால் எளிதாகக் கூட் டத்தைத் தன்வசப்படுத்த முடிகிறது.

கர்நாடகத் தேர்தலின் போது இப்படி ஒரு கலந்து ரையாடலில் பேசிய அண்ணாமலை, தனது ஆழமான உரையால் அங்கே மேடையில் இருந்த அத்தனை எதிர்க்கருத்துக்காரர்களையும் மௌனமாக்கினார். தமிழ்நாட்டில் நாள்தோறும் நடப்பது அன்று கர்நாட கத்திலும், பின்னர் அண்ணாமலை பேசிய அனைத்து ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களிலும் நடந்தது.

அண்ணாமலையின் தமிழ்ப் பேச்சின் குறைபாடு, லகர ளகர உச்சரிப்பு. அலங்கார வார்த்தைகளில் பேசி மக்களை மயக்க நினைப்பவர்கள்தான் இந்த லகர ளகர உச்சரிப்பைப் பெரிதாக்குவார்கள். கருத்தரசியல் செய்ய நினைப்பவர்கள் கருத்தையே முக்கியமாகப் பார்ப்பார்கள். அண்ணாமலை அந்த வகையில் ஒரு கடினமான பெஞ்ச்மார்க்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இவரது பேச்சில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று, யாரையும் கண்ணியத்துடன் பேசுவது. கண்ணியம் வேறு; கடுமையாகப் பேசுவது வேறு. தவறான கேள்வி கேட்கும் பத்திரிகையாளரைக் கடுமையாகப் பேச அண்ணாமலை தவறுவதில்லை. ஆனால் கண்ணியக் குறைவாகப் பேசுவதே இல்லை.

இரண்டாவது விஷயம், தன்னை யாராவது கண்ணி யமின்றிப் பேசினால், அவர்களுக்கு எங்கே அடித்தால் வலிக்குமோ அதைத் தெளிவாகப் பேசுவது. இதுவரை இருந்த பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாகச் சறுக்கிய இடம் இது. ‘எனக்கும் உங்களைவிட மோசமாகப் பேசத் தெரியும், என்னைப் பேச வைக்காதீர்கள்' என்கிற மிரட்டல் அண்ணாமலையின் ஒவ்வொரு பதிலிலும் தெரியும். இந்தப் பேச்சுதான் அண்ணாமலையைப் பார்த்து திராவிட அரசியல்வாதிகளை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

திராவிட அரசியல்வாதிகள் முதலில் அண்ணாமலை என்கிற ஒருவர் இல்லை என்பது போல் ஒட்டு மொத்தமாகத் தவிர்க்கப் பார்த்தார்கள். பின்னர் அதன் மூன்றாவது லேயர்காரர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்போது இரண்டாவது லேயர்காரர்கள் கோபமாக அண்ணாமலை என்கிற பெயரைச் சொல்லியே திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அண்ணாமலையின் அடுத்த 45 நாள்கள், அதாவது தேர்தல் நெருங்க நெருங்க, மிகக் கடுமையான தாக்குதல் ஆட்டமாக இருக்கும். அப்போது முதல் லேயர்காரர்களே பேசுவார்கள்.

ஓர் அரசியல்வாதியின் பேச்சு என்பது இப்படி விலகிச் செல்ல நினைப்பவர்களையும் பதில் சொல்ல வைப்பதாக இருக்கவேண்டும். தனது ஆழமான பேச்சுகள் மூலம் அண்ணாமலை அதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

( கட்டுரையாளர் ஹரன் பிரசன்னா, எழுத்தாளரும் பதிப்பாளரும் ஆவார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com