ஐரோப்பிய தொடர்களை அடிச்சிக்க முடியாது ப்ரோ!

ஐரோப்பிய தொடர்களை அடிச்சிக்க முடியாது ப்ரோ!

பொதுவாகவே வெப் சீரீஸ்களில் அமெரிக்காவைச் சேர்ந்த வெப் சீரீஸ்களுக்கும் ஐரோப்பாவைச் சேர்ந்த வெப் சீரீஸ்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அமெரிக்காவில் பெரும்பாலும் நமது ரசனையை ஒத்திருக்கும் வெப் சீரீஸ்களே அதிகம்.  வணிகத் தன்மைகள் என்று நம்மூரில் இருக்கும் அம்சங்களே அங்கும் இருக்கும். ஆனால் ஐரோப்பாவில் இதற்கு நேர் எதிரான ரசனை இருப்பதால், அங்கே இருக்கும் வெப் சீரீஸ்கள் சற்றே உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா/இந்தியாவைப் போல வணிகத்தன்மை அதிகமாக இருக்கும் காட்சிகள் அவ்வளவாக இருக்காது. மனித வாழ்க்கையுடன் ஒத்துப்போய் அதையே திரையில் காட்டும் வெப் சீரீஸ்களே அதிகம். (ஐரோப்பாவின் திரைப்படங்களும் அப்படிப்பட்டவையே). கூடவே ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டுக்கும் ரசனை உணர்வில் சில மாற்றங்கள் இருப்பதால் அதற்கேற்றவாறு வெப் சீரீஸ்களும் மாறுபடும்.

எப்படி மாறுபடும் என்றால், ஐரோப்பாவில் எடுக்கப்படும் பெரும்பான்மையான வெப் சீரீஸ்களில் லொகேஷன் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. லொகேஷன் மூலமாக ஐரோப்பிய வெப் சீரீஸ்கள் அவற்றைப் பார்க்கும் நமக்கு பல செய்திகளைக் கடத்துகின்றன. குறிப்பாக ஸ்கேண்டினேவிய வெப் சீரீஸ்கள். ஸ்கேண்டினேவியா என்றால் வட ஐரோப்பாவில் இருக்கும் நார்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளையும் குறிக்கும். சரித்திர காலத்தில் வைக்கிங்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிலிருந்தே இந்த நாடுகளின் சரித்திரம் தொன்மை வாய்ந்ததால் இந்த நாடுகள் தங்களை ஒரு கூட்டணியாக ஸ்கேண்டினேவியா என்ற பெயரில் அழைத்துக்கொள்கின்றன. தெற்கு ஸ்வீடனில் ஸ்கேனியா என்ற பகுதியில் இருந்தே ஸ்கேண்டினேவியா என்ற பெயர் உருவானது.

ஸ்கேண்டினேவியா என்பது ஒருபக்கம் இருக்க, இந்த நாடுகளுடன் ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்தைச் சேர்த்தால் அந்தக் கூட்டணிக்கு நார்டிக் என்று பெயர். எனவே, ஒட்டுமொத்தமாக ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில்

எடுக்கப்படும் ஸ்கேண்டினேவிய மற்றும் நார்டிக் வெப் சீரீஸ்களே தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த ஐரோப்பிய சீரீஸ்கள் என்பது என் தாழ்மையான கருத்து. இதற்குக் காரணம், ஆழமான, சற்றே இருண்ட தன்மை உடைய கதைகளே இந்த நாடுகளின் வெப் சீரீஸ்களில் பெரும்பங்கு வகிக்கின்றன. கூடவே இந்த நாடுகளின் அற்புதமான லொகேஷ்ன்கள். இந்த சீரீஸ்களில் லொகேஷன்கள் கதையை சொல்வதில் பெரும்பங்கு வகிக்கும் என்று முன்னரே பார்த்தோம்.

எனவே ஒட்டுமொத்த ஐரோப்பா, அதற்குள் அடங்கியிருக்கும் ஸ்கேண்டினேவியா, நார்டிக் வெப் சீரீஸ்களில் சிறந்தவைகளை இந்தக் கட்டுரையில் கவனிப்போம்.

ட்ராப்டு & எண்ட்ராப்டு (Trapped & Entrapped)

ட்ராப்டு வெப் சீரீஸ் மிகவும் பிரபலமான, விறுவிறுப்பான வெப் சீரீஸ். ஐஸ்லாந்தில் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் போலீஸைப் பற்றிய சீரீஸ் இது.  ஐஸ்லாந்தில் ஒரு சிறிய ஊர். அதில் ஒரு கொலை. அந்தக் கொலையைத் துப்பறிய வரும் போலீஸ். ஊர்மக்கள் மீது சந்தேகம். அப்போது அந்த ஊரில் ஒரு பெரும் பனிப்புயல், இதனால் துப்பறிவதில் பிரச்னைகள் என்ற வழக்கமான டெம்ப்ளேட்தான் என்றாலும், இந்த சீரீஸ் பெருவெற்றியடைந்ததற்கு அதன் நம்பகத்தன்மையே காரணம். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஐரோப்பிய சீரீஸ்களில் கமர்ஷியல் அயிட்டங்கள் என்று அமெரிக்காவில் வைக்கும் விஷயங்கள் இருக்காது. என்ன நடந்தாலும் நம்பும்படிதான் இருக்கும். அதற்கு இந்த சீரீஸ் ஒரு எடுத்துக்காட்டு.

இந்த சீரீஸ் பெரிய வெற்றி அடைந்ததுமே அதற்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதன் பெயர் எண்ட்ராப்டு (Entrapped). இதிலும் ட்ராப்டு ரீஸில் வந்த அதே போலீஸ்காரர்தான் ஹீரோ. ஆனால் இந்த சீரீஸில் சற்றே வேறுபட்ட கதைக்களம். ஊருக்குள் இரண்டு கும்பல்கள் - ஒன்று அந்த ஊரைச்சேர்ந்த பைக்கர்கள். இன்னொன்று அந்த ஊரில் இருக்கும் அமைதி மார்க்கம் தேடும் ஆன்மீகவாதிகள். இவர்களில் ஒருவர் கொல்லப்படுகிறார். இதைத் துப்பறிய வருகிறார் ஹீரோ. இதுதான் கதைச்சுருக்கம்.

இந்த சீரீசின் சிறப்பம்சம், வடக்கு ஐஸ்லாந்தில் எடுக்கப்பட்ட சீரீஸ் என்பதே. இங்குதான் 54 கிலோமீட்டர்கள் ஹைக்கிங் செல்வதற்கான மலை உள்ளது.  சில எரிமலைகளும், சில பனியாறுகளும் உண்டு.  இந்த இடம் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும். இங்கேதான் பெரும்பாலும் எண்ட்ராப்டு  எடுக்கப்பட்டது. முதல் பாகம் போல அவ்வளவு விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு குறிப்பிடத்தகுந்த சீரீஸ்தான்.

தி செஸ்ட்நட் மேன்

இது டென்மார்க்கைச் சேர்ந்த சீரீஸ். மொத்தம் ஆறே எபிசோடுகளில் ஒரு அட்டகாசமான கதையைச் சொல்லிய சீரீஸ் இது. ஒரே சீசனில் முடிந்துவிடும் என்பது இந்தக் கதையின் சிறப்பம்சம்.

1987இல் ஒரு தனியான பண்ணையில் ஒரு குடும்பம் கொலை செய்யப்பட்டதை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடிக் கிறார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய கோபன்ஹேகனில் (டென்மார்க்கின் தலைநகர்),  இளம் பெண் ஒருவர் கொலைசெய்யப்படுகிறாள்.  பிணத்துக்கு ஒரு கை இல்லை.  அங்கே செஸ்ட் நட் (Chest nut) என்று சொல்லப்படும்

சிறியதொரு கொட்டையால் செய்யப்படும் பொம்மை கிடைக்கிறது. இதுதான் தடயம். வேறு ஒரு டிபார்ட்மெண்ட்டுக்கு மாற்றலாகிச் செல்ல இருக்கும்  நயா துலின் என்ற பெண் போலீஸிடம் இந்தக் கேஸ் வருகிறது.  அதேபோல் யூரோபோல் என்ற ஐரோப்பிய போலீஸ் கூட்டமைப்பில் இருந்து வேறு ஒரு கேஸ் தொடர்பாக வந்திருக்கும் மார்க் ஹெஸ் என்ற போலீஸ்காரரும் நயா துலினுடன் சேர்ந்துகொள்கிறார். இருவரும் சேர்ந்து கொலைகாரனைக் கண்டுபிடிப்பதே இந்த சீரீஸின் சுருக்கம்.  இதிலேயே இன்னொரு உபகதையாக டென்மார்க்கின் பெண் அமைச்சரான ரோசா ஹார்த்துங், ஒரு வருடம் வீட்டிலேயே இருந்துவிட்டு இப்போதுதான் மறுபடியும் பாராளுமன்றம் வரப்போகிறார். காரணம் ஒரு வருடத்துக்கு முன்னர் அவரது பன்னிரண்டு வயது மகளை யாரோ கடத்திக் கொன்றுவிட்டார்கள். இந்தக் கேஸ் டென்மார்க் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்ட கேஸாகவும் இருக்கிறது.

இந்த இரண்டு அம்சங்களும் எப்படிப் பொருந்துகின்றன என்பதே செஸ்ட்நட் மேன் (Chestnut Man). இதுவும் பலராலும் பாராட்டப்பட்ட சீரீஸ்தான்.

மனி ஹெய்ஸ்ட்

இந்த சீரீஸ் பற்றிய அறிமுகமே தேவையில்லை என்ற அளவு இந்த சீரீஸ் உலகம் முழுக்கப் பிரபலமாகிவிட்டது. இந்த சீரீஸ் முதலில் நெட்ஃப்ளிக்ஸால் ஒளிபரப்பப்படவில்லை என்பதும், முதல் இரண்டு சீசன்கள் தொலைக்காட்சியில் வந்தபின் பிரபலமைடைய, அதன்பின்னரே நெட்ஃப்ளிக்ஸ் இந்த சீரீஸை வாங்கியது என்பதும் சீரீஸ் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

மனி ஹெய்ஸ்ட்,  ஐந்து சீசன்களைக் கொண்டது, இதன் முக்கியமான கரு - இரண்டு பெரிய திருட்டுகளை செயல்படுத்த ப்ரொஃபஸர் என்று அழைக்கப்படும் ஆசாமி திட்டமிடுகிறார்: ஒன்று ஸ்பெயினின் பணத்தை அச்சடிக்கும் ராயல் மின்ட்; மற்றொன்று பாங்க் ஆஃப் ஸ்பெயின். முதல் சீசன் ஆரம்ப திருட்டைப் பின்தொடர்கிறது, அங்கு எட்டு கொள்ளையர்கள், ஒவ்வொரு நகரத்தையும் குறிக்கும் குறியீட்டுப் பெயரைக் கொண்டவர்கள், பேராசிரியருடன் இணைந்து 2.4 பில்லியன் ஈரோ பணத்தை  அச்சிடுகின்றனர். திட்டம் வெளிவரும்போது, குழுவிற்குள் பதட்டங்கள் அதிகரிக்கின்றன & புதிய, உறவுகள் உருவாகின்றன, இன்ஸ்பெக்டர் ராக்வெல் முரில்லோ கதையின் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக உருவாகிறார்.  இரண்டாம் சீசனில், அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் அனுபவிக்கும் உளவியல் வேதனைகள், கொள்ளையர்களிடையே உள்ள உள் மோதல்கள் ஆகியவற்றை ஆழமாக ஆராய்கிறது.  இது பணம் அச்சடிக்கும் இடத்தில் இருந்து  ப்ரொஃபஸரின் ஆட்கள் அட்டகாசமான திட்டமிடலுடன் தப்பிப்பதில் முடிவடைகிறது. மூன்றாவது சீசன், ப்ரொஃபஸரின் ஆட்களில் ஒருவனான ரியோவை மீட்பதற்காக மீண்டும் அனைவரும் ஒன்றிணைவது, புதிய சவால்களை எதிர்கொள்வது, இன்ஸ்பெக்டர் அலிசியா சியராவை ஒரு வலிமைமிக்க எதிரியாக அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நான்காவது சீசனில், பேங்க் ஆஃப் ஸ்பெயினில் திருடவேண்டும் என்ற நோக்கத்தில் பலவிதமான துரோகங்கள், மரணங்கள் மற்றும் ப்ரொஃபஸரின் திட்டங்கள் முதன்முறையாக முறியடிக்கப்படுவதைப் பற்றிச் சொல்கிறது  இறுதியாக ஐந்தாம் சீசனில் ப்ரொஃபஸரின் ஆட்கள்  பாங்க் ஆஃப் ஸ்பெயின் மீதான இடைவிடாத தாக்குதல்களை எப்படிச் சமாளிகின்றனர் என்றும்அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகள், பிளவுகள்,  ப்ரொஃபஸர் பிடிக்கப்படுவது, அவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலிசியாவுக்குமான சவால் மற்றும் அதன் விளைவு என்றெல்லாம் போய், வழக்கப்படி ஒரு எதிர்பாராத க்ளைமேக்ஸுடன் மொத்த சீரீஸும் முடிகிறது.

தி பிரிட்ஜ்

ஸ்வீடனைச் சேர்ந்த துப்பறிவாளர் சாகா நோரன், டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டின் ரோட் ஆகியோர் இரு நாடுகளையும் இணைக்கும் ஓரெசண்ட் பாலத்தில் நிகழும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் சேர்ந்து செயல்படுகிறார்கள். அப்போது அந்தப் பாலத்தின் எல்லையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு உடலை இருவரும் துப்பறியத் துவங்குகிறார்கள்.  அது ஒரு சிக்கலான விசாரணையாக மாறுகிறது,  அவர்கள் மெல்ல ஒன்றோடொன்று தொடர்புடைய குற்றங்களின் தொடர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறார்கள்,  இந்த இருவரில் சாகா நோரன் புத்திசாலித்தனமாக சிந்திக்கக்கூடியவர். சமூகம் பற்றித் தெரிந்தவர். அதில் சில கசப்பான அனுபவங்கள் பெற்றவர். அதேசமயம் மார்ட்டின் ரோட், எதையுமே  அனுதாப அணுகுமுறையுடன் அணுகுபவர்.  இந்த இருவரும் சேர்ந்து என்ன செய்கிறார்கள் என்பதே இந்த சீரீஸின் கதை. கூடவே  உலகமயமாக்கலின் தாக்கம், இந்த இரண்டு துப்பறிவாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை  உட்பட பல்வேறு கருப்பொருள்களை இந்த சீரீஸ் ஆராய்கிறது,  இந்தத் தொடர் அதன் சிக்கலான கதைக்களம், நன்றாக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் டென்மார்க் - ஸ்வீடனுக்கு இடையிலான அரசியல் தொடர்பு ஆகியவற்றால் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டார்க்

எப்படி மனி  ஹெய்ஸ்ட் உலகெங்கும் பிரபலம் அடைந்ததோ அப்படி டார்க் வெப் சீரீஸும் பிரபலம் அடைந்தது. ஆனால் முந்தையது அனைவருக்கும் புரிய, டார்க்கோ அதன் சிக்கலான கதையமைப்பால் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே புரியும்படி ஆகியது. இருந்தாலும் உலகெங்கும் உள்ள 'Cult' என்று அழைக்கப்படக்கூடிய குறிப்பிடத்தகுந்த சீரீஸ்களில் டார்க்கும் ஒன்று. இதன் பயங்கர சிக்கலான கதையமைப்பை மிக எளிதில் சொல்லவேண்டும் என்றால், 2019 இல் எரிக் என்ற இளைஞன் மர்மமான முறையில் காணாமல் போனதில் இருந்து இதன் கதை தொடங்குகிறது. ஒரு அணு மின் நிலையம் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்புடைய விசித்திரமான நிகழ்வுகள் இந்தக் கதையில் இடம்பெறுகின்றன என்பது சிறுகச்சிறுகத் தெரிகிறது.  1888, 1921, 1953, 1986, 2019, மற்றும் 2052 ஆகிய ஆண்டுகளை உள்ளடக்கிய பல தசாப்தங்களாக காலச்சுழலில் இந்க் கதையில் வரும் ஊர் சிக்கியுள்ளது. இந்தக் காலக்கெடுவில் பரவியிருக்கும் கதாபாத்திரங்கள், காலத்தின் வழியாகப் பயணிக்க அனுமதிக்கும் குகை அமைப்பைக் கண்டுபிடிக்கின்றனர். குடும்ப ரகசியங்கள், ஒரு ரகசிய சமூகம் மற்றும்  பூட்ஸ்ட்ராப் முரண்பாடு (Bootstrap Paradox) என்று அழைக்கப்படும் ஒரு விஷயம் ஆகியவை கதையின் மையமாக உள்ளன. வெவ்வேறு காலங்களில் கதாபாத்திரங்களின் செயல்கள் ஒருவரையொருவர் எவ்வாறு பாதிக்கின்றன, காலத்தைக் கையாளுவதன் விளைவுகள் என்னென்ன என்பவற்றை இந்தத் தொடர் ஆராய்கிறது.  இறுதியில், இதற்கு முன்னர் பார்த்தவற்றை எல்லாம் அழியுங்கள் - மறுபடியும் முதலில் இருந்து அனைத்தையும் தொடங்குவோம் என்று இந்தக் கதைக்கான மிக முக்கியமான கருவாக ஒரு விபத்தைக் காட்டி, அதிலிருந்து முழுக்கதையையும் வேறு ஒரு கோணத்தில் சொல்லி முடிக்கிறது.

கமோரா

இத்தாலியில் Camorro என்ற ஒரு மாஃபியா அமைப்பு  இருக்கிறது. துளிக்கூட இரக்கமோ பச்சாதாபமோ இல்லாத ஒரு கொடூர அமைப்பு இது. இந்த அமைப்பில் மெதுவே உள்ளே வரும்  இன்னொரு மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த சிரோ டி மர்சியோ (Ciro Di Marzio) என்ற கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லும் சீரீஸ் இது.  அதிகாரம், துரோகம், தனிநபர்கள், சமூகத்தின் மீதான குற்றச் செயல்களின் தாக்கம் ஆகியவற்றின் கருப்பொருள்களை இந்த சீரீஸ் ஆராய்கிறது. சிரோ ஒரு மாஃபியா ஆசாமியாக மெல்ல உயரும்போது அவர் குடும்பத்துக்குள் உருவாகும் உள் மோதல்களை எதிர்கொள்கிறார், தங்களின் மாஃபியா கும்பலுக்கு எதிரான கும்பல்களுடன் மோதுகிறார். இதற்கெல்லாம் மேலாக, மாஃபியாவின் கொடூர உண்மைகள் மற்றும் அவைகளின் தாக்கங்கள் ஆகியவைகளை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தங்கள் சிரோவுக்கு உருவாகின்றன.  கொமோரா சீரீஸ் பிரபலமானதற்குக் காரணம் அது Organized Crime என்று அழைக்கப்படும் குற்றங்களை எப்படிக் காட்டியது, கதாபாத்திரங்கள் அதில் எப்படி இயல்பாக எழுதப்பட்டிருந்தன, Camorra போன்ற குற்றவியல் அமைப்புகளின் இருப்புக்குப் பங்களிக்கும் சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களின்  சித்தரிப்பு ஆகியவை.

ஐரோப்பாவில் இருந்து வந்திருக்கும் மிகப் பிரபலமான வெப் சீரீஸ்களில் ஒருசிலவற்றைத்தான் இந்தக் கட்டுரையில் பார்த்திருக்கிறோம். இவைதவிர The Killing, Lupin, Valhalla Murders, Rangnarok, Midnight Sun, Lilyhammer, Bordertown, The Rain, Home for Christmas, Norsemen, Kingdom, A very Secret Service, Babylon Berlin, Borgen, The Bureau, Cable Girls, Call my Agent, Caliphate, Dag, Deadwind, Deutschland “83, Find me in Paris, Oktoberfest: Beer and Blood (கிட்டத்தட்ட Peaky Blinders போன்ற சீரீஸ்), Romanzo Criminale: La Serie போன்ற மிகச்சிறப்பான வெப் சீரீஸ்கள் ஐரோப்பாவில் அதிகம்.  இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு புதிய உலகை ரசிகர்களுக்குக் காட்டும் திறன் படைத்தவை. என்னதான் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க சீரீஸ்கள் போல ஐரோப்பிய சீரீஸ்களில் பல உலகப்புகழ் பெறவில்லை என்பது எனது சிறிய வருத்தம். ஆனால் டார்க், மனிஹெய்ஸ்ட் போன்ற சீரீஸ்கள் இதை உடைத்திருக்கின்றன. உண்மையில் அமெரிக்க சீரீஸ்களை விடவும் ஐரோப்பிய சீரீஸ்கள்தான் நேர்த்தியாகவும் இயல்பாகவும் எழுதப்பட்டுப் படமாக்கப்படுகின்றன. இவைகள் நம் ரசனை உணர்வையே மாற்றவும் வல்லவை.

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஐரோப்பிய சீரீஸ்களைப் பரிந்துரை செய்யும் சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை. முயற்சி பலனளித்தால் மகிழ்ச்சி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com