கோட்பாட்டிற்கு விசுவாசமாக இருத்தல்...

கோட்பாட்டிற்கு விசுவாசமாக இருத்தல்...
Published on

இன்றைய உலக அரசியலரங்கில் பிரதானமாக வைக்கப்படும் வாதம் அரசுகள் அவை முன் வைத்த கோட்பாடுகளுக்கு வி்சுவாசமாக நடக்கின்றனவா என்பதே. நானறிந்த வரையில் இந்த விசுவாசம் என்ற சொல் அதனளவில், ‘ கேள்விகள் இன்றி அடிபணிதல்’ என்ற பொருளைக் கொண்டதாகவே கருதுகிறேன். இதையே கொள்கைக்கு நேர்மையாக இருப்பது என பெயர்த்தால் ஒரு சுயமரியாதைக்கான இயல்பும், நெகிழ்வும் இருப்பதாக உணர்கிறேன்.

கோட்பாட்டுச் சட்டகங்களும் ஆட்சியும்

கொள்கைக்கு 100% நேர்மையாக, கோட்பாடுகள்/ கொள்கைகளிலிருந்து இம்மி விலகாத ஒரு ஆட்சி நடைபெற முடியுமா? அது இனிமையான கற்பனை என்றால் பலருக்கு அதிலும் அரசியல் சரித்தன்மை எனும் சுடர் ஏந்தியவர்க்குக் கடும் கோபம் வரும் என்பது மெய்.

அனைத்து வகையான, மனித சமூக நலன் கருதிய கொள்கைகளும்/ கோட்பாடுகளும் அதனளவில் உருவாக்க நிலையிலேயே முழுமையடைந்து விடுவதில்லை. அப்படிக் கருதினால் அவை வேதங்களாக மாறி விடும் அனைத்து தத்துவக் கோட்பாட்டுச் சிந்தனைகளும் தம்மளவில் சில உறுதியான அடிப்படைகள் கொண்டவை என்பதை மறுப்பதற்கில்லை. அந்த அடிப்படைகள் ஒரு போதும் நிலைகுலைவதில்லை. அதேவேளையில் அந்த அடிப்படைகள் மீது நேர்மறையாக கட்டியெழுப்பப்படும் தொடர் சிந்தனைகளும் கோட்பாடுகளின் இன்றியமையாத பகுதியாவதைத் தவிர்க்க முடியாது. இந்தத் தொடரும் கோட்பாட்டுச் சிந்தனை வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பது கவனத்திற்குரியது.

அரசுகளும் ஆட்சிகளும்

அரசு எனும் வடிவை வந்தடைவதற்கு முன்னரான சமூக அமைப்பு முறைகளின் எந்தத் தடயமுமற்று, அரசு எனும் நவீன அமைப்பு உருவாகியது எனக் கருத முடியாது. எனவே அரசு மற்றும் ஆட்சி எனும் நிலைகள் பல்வேறு விதமான பரிசீலனைகளின் விளைவே. அரசு எனும் தொடரும் அமைப்பு ஆட்சிகளின், அவற்றின் கோட்பாட்டு அடிப்படைகளின் பரிசோதனைக் கூடங்களாவதை ஒரு போதும் மறக்கவியலாது. எனவே அரசுகள் ஆட்சிகளையும், ஆட்சிகள் அரசுகளையும் பாதிப்பிற்குள்ளாக்குவது தொடர்ந்து நிகழும் நிகழ்வு. இதனூடாகவே கோட்பாடுகளும், கொள்கைகளும் தங்களை தொடர் மறுகட்டமைப்பிற்கு ஒப்புக்கொடுக்கின்றன. எனவேதான் 100% இம்மி விலகாத கோட்பாட்டு ஆட்சி சாத்தியமாவதில்லை.

இதுவரை மனித சிந்தனை கண்டடைந்த மிகச் சிறந்த அரசியல் கோட்பாடாகக் கருதப்படும் சமூக சமத்துவ சிந்தனையான ‘மார்க்சியம்‘ இப்போது மாபெரும் சவாலை எதிர்கொண்டு முதலீட்டியத்தின் சோதனைக் கூடத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. மார்க்சிய கோட்பாட்டு உன்னதம், அரசுகளின் ஆட்சிகளின் வடிவில் எதிர்கொண்ட தடைகள், சறுக்கல்கள் ஏராளம். ஒரு மாபெரும் சமூகப் பொருளாதார சமத்துவச் சிந்தனைகள் ஆட்சிகளாக தகவமைத்துக் கொள்ள, அவற்றின் செயல்பாட்டுத் தளத் தேவை கருதி உருவாக்கிக் கொண்ட மாற்றங்களும், அந்தச் சிந்தனைகளின் தொடர்ச்சியானதே நடப்பு. செயல்பாட்டுத் தளத்தில் ஆட்சிகளாக அவை அடைந்த தோல்விகள் இன்று வரலாற்று சாட்சியங்கள். ஆனால் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது, அரசுகளின் மற்றும் அது கட்டமைத்த ஆட்சிகளின் தோல்விகள், அந்தச் சிந்தனையின் தோல்வியாக ஒரு போதும் கருதப்படக் கூடாது. அது அறியாமையின் உபவிளைவு மட்டுமே.

21 ஆம் நூற்றாண்டின் மூலதனம் மற்றும் சொத்துரிமை சார் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்த பிரெஞ்சு அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் தாமஸ் பிக்கெட்டி போன்றோர், இன்று உலகை ஏறத்தாழ விழுங்கி விட்ட முதலீட்டியத் திமிங்கலங்களிடமிருந்து தப்பும் வழிகளை நாம் மார்க்சிய சிந்தனைகளின் மூலங்களிலிருந்தே பெற முடியுமெனக் கருதுகின்றனர். ஆனால் சமூகப் பொருளாதாரக் கோட்பாடான பொதுவுடைமை கருத்தியல், அனைத்து வகையான சமூகக் குழுக்களிடையேயும், நிலப்பரப்புகளிலும் ஒரே விதமான சட்டகமாகச் செயல்பட முடியாது என்பதும் அரசுகளின், ஆட்சிகளின் தோல்விகள் கற்றுத் தந்த பாடம். மட்டுமல்ல, பொதுவுடைமைக் கோட்பாடுகளின் அடிப்படைகளைக் கொண்டு மாற்றுத் திட்டங்களை வகுக்கத் திட்டமிடும், பொருளியல் வல்லுநர்கள், நவீன முதலீட்டியத்திற்கு எதிராக, சோசலிச சமுதாயம் உருவாக்கும் யோசனைகளை முன்வைப்பதில்லை. மாற்றாக, அனைத்து நாடுகளிலும், ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து விட்டிருக்கும்

‘ சொத்துரிமையை ‘ பரவலாக்கம் செய்வதையே பரிந்துரைக்கின்றனர். பரவலாக்கமும், பொதுவுடைமையும் ஒன்றல்ல, ஆனால் நாட்டின் மூலதன வளம் வெகுசிலரிடம் மட்டுமே சென்றடைவதைத் தவிர்க்க, அரசு சார் மூலதன முதலீடுகள், விரல் விட்டு எண்ணக்கூடிய அதானிகளின் கைகளில், இலவச மூலதனமாகச் சென்று சேர்வதைத் தடுக்க, அவை அரசின் வருவாய் பெருக்கும் மூலதனங்களாகத் தொடர்வதும், அந்த வருவாய் மக்கள் நலத் திட்டங்களாக மாற வழிவகுப்பதே முறை எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மாற்றுக்கான பரிந்துரையின் எளிய விளக்கம் மட்டுமே. இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி, இந்த மாற்று ‘பொதுவுடைமை’ கோட்பாட்டிற்கு நேர்மையானதாக , பாரம்பர்ய மார்க்சிய சிந்தனையாளர்களால் (?) ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது உறுதி.

இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகளும் ஆட்சிகளும்

இந்தியத் துணைக் கண்டம் ஒரு ‘தேசமானதே’ அல்லது ‘தேசங்கள்’ ஆனதே அதற்கான தேவையின் அடிப்படையில் இருந்து உருப்பெற்றது அல்ல. பன்மைத்துவமான இன, மொழி, மத, பண்பாடுகள் நிலவிய இவ்வளவு பரந்த நிலப்பரப்பு ‘ஒரு தேசமாக உருவாக மூல காரணம், கிழக்கிந்தியக் கம்பெனியும், அதனைத் தொடர்ந்த பிரிட்டிஷ் இந்தியா எனும் ஆட்சி அமைப்பும். 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரைபடத்தை கண்டால் ஒரு வியப்பு தோன்ற வாய்ப்புண்டு. அதன் விரிந்த நிலப்பரப்பில் பர்மா, மலேசியா, தாய்லாந்து உட்பட்ட பல நிலத்துண்டுகள், பிரிட்டிஷ் காலத்திலேயே தனி அரசுகளாக தங்களைத் தகவமைத்துக் கொண்டது அல்லது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே ‘அமைய ‘ அனுமதித்ததும்தான் அந்த வியப்பு.

அதே வேளையில் இன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எனச் சிதறிப் போன பகுதிகள் எப்படி தனித் தனி நாடுகளாகும் உரிமை பெறாத பகுதிகளாக 1940 கள் வரை தொடர்ந்தன என்ற கேள்வியை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் ஆகிய மூன்று ராஜதானிகள் பெரும்பாலும் முற்றிலுமாக பிரிட்டிஷ் இந்தியாவாக மாறி விட்ட நிலையில், மத்திய இந்தியாவின்

(இன்றைய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்) பெரும்பாலானவை முடியரசுகளாகத் ( பிரின்ஸ்லி ஸ்டேட்ஸ் ) தொடர்ந்தன. அவற்றில் ஹிந்து அரசர்கள் மற்றும் முஸ்லிம் சுல்தான்களின் ஆட்சிகள் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தன. இதே கதைதான் இன்றைய பாகிஸ்தானிலும். இன்று வரை பாகிஸ்தான் பகுதியாக விரும்பாத பலுஜிஸ்தான் மற்றும் எல்லைப்புற பழங்குடி சமூகங்கள் வாழும் பகுதியும் அடக்கம்.

ஆக இன்றைய இந்தியா- பாகிஸ்தான் மீதான உரிமைக் கோரல் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் ஆகிய இரு தரப்பினரிடமும் இருந்தது. இதனோடு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு மிக முக்கியமான கூறு கராச்சியையும், ராவல்பிண்டியையும் தலைமையிடமாகக் கொண்ட குஜராத் பனியா சமூகத்தின் மூலதன ஆட்சி. இந்தப் பொருளாதார வளம்தான் ஹிந்து மஹா சபா போன்ற அமைப்புகளின் ‘அகண்ட பாரதம்‘ குறித்த ஆவலாதிக்கு வித்திட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உயர்வர்க்கம்- பனியா கூட்டணியே இந்தியத் துணைக்கண்டத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் அரசியலையும், அதாவது சுயராஜ்ய - ஹிந்து சுயராஜ்ய அரசியலை கட்டமைத்தது. இதன் எதிர்விளைவாகவே ஜின்னாவின் முஸ்லீம் பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தது. அதிலும் 1930 களின் மத்தியக் காலங்களில் உச்சத்தை எட்டிய ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ எனும் பிரகடனமே , 1940 களின் பாகிஸ்தான் கோரிக்கையைத் தூண்டியது.

இங்கே, எதற்காக ஓரளவில் பலரும் அறிந்த வரலாற்றைப் பதிவு செய்கிறேன் என்ற கேள்வி எழவே செய்யும். காந்தியாரின் ராமராஜ்யம் அல்லது கிராமராஜ்யம் எனும் கனவு நவீன இந்தியாவிற்கான தற்சார்பு பொருளாதாரக் கொள்கையாக அறியப்பட்டாலும், இந்தியா – பாகிஸ்தான் எனும் இருநாடுகள் தீர்மானத்தில் அந்தப் பொருத்தமில்லாப் பொருளாதாரக் கோட்பாடு நிறமிழந்து போனது. எனவே விடுதலை பெற்ற இந்தியாவிற்கான பொருளாதாரக் கோட்பாடுகள் ஏதும் அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காந்தியத்தைக் கொண்டாடிய முதலாளிகள், அவரது கொள்கைக்கெதிரான நவீன தொழில் நுட்பங்களையும், தங்களால் ஏற்கெனவே வலுவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சர்வதேச வியாபாரங்களையும், புதிய ஆட்சியில் தடையின்றித் தொடர்ந்தனர். இடையே இந்தியப் பிரதமர் நேரு போன்றவர்களின் சோசலிச ஆர்வம் ஐந்தாண்டுத் திட்டங்களில் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் பெரும் மதவாதப் போருக்கிடையே உருவான இந்தியாவின் உருவாக்கத்தின் போக்கைத் தீர்மானிப்பதில் மதவாதம் முன்கை எடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

ஜவர்ஹர்லால் நேரு, ஜின்னா ஆகிய மதவாதத் தீவிரமற்ற இரு தலைவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் எந்நாளும் தீராமல் தொடரும் மதவாதப் பிணிக்குக் காரணமானார்கள் என்பது கசப்பான உண்மை. எனவே இந்தியா அதன் தோற்றுவாயிலேயே உயர் சாதி- பனியா கூட்டணியின் நலன் பேணும் தேசமாகவே உருப்பெற்றது. பனியா மூலதன முதலைகள் இந்தியப் பொருளாதாரத்தை கபளீகரம் செய்து விட்ட பின்பும், இந்திய அரசியலரங்கில் காந்தியவாத எளிமை, நேர்மை, தியாகம் எனும் முகப்பூச்சு ஓங்கி ஒலித்தபடி இருக்கிறது. எனவே கோட்பாட்டிற்கு விசுவாசம், கொள்கைக்கு நேர்மை என்பவை இப்போது பம்மாத்துகள் மட்டுமே.

வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே இன, மொழி, மத, கலாச்சார வேறுபாடுகள் பண்பாடு மற்றும் அரசியலரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கமாகவே இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பாரதம் எனும் இந்தியா உருவாக்க முனைப்பில் துளிர்த்த ஹிந்து எனும்’ஒற்றை’ மதம் இந்த மண்ணில் நிலவிய பல நூறு மதநம்பிக்கைகளைத் தனதாக்கிக் கொண்டு அதிகாரம் கோரியது.

வைதிக சக்திகளுக்கான எதிர்ப்பியங்கங்கள் இந்திய நிலப்பரப்பின் பல பகுதிகளில் காலங்கள் தோறும் தோன்றி சமூக மாற்றத்தைக் கோரின என்ற போதும், இந்திய விடுதலை நாளில் அந்த எதிர்ப்பு, அரசியல் சிந்தனையாக, இயக்கமாக மாறியது தென்னிந்தியாவில் மட்டுமே என்பது கவனத்திற்குரியது. மெட்ராஸ் ராஜதானியில்

‘ பார்ப்பனரல்லாதோர் அறிக்கை’ ( NON BRAHMIN MANIFESTO ) வெளியிட்டு கட்டமைந்த சௌத் இந்தியன் லிபரல் பெடரேஷன்( S I L F ) எனும் நீதிக்கட்சி ( JUSTICE PARTY ), பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி முதல் இரட்டையாட்சி முறையில்

( DYARCHY ) சென்னை மாகாண ஆட்சியையும் கைப்பற்றியது. காங்கிரஸ் அமைப்பில் அரசியல் களம் கண்ட பெரியார் ஈ.வெ.ரா, அந்த அமைப்பின் வழி பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்பில்லை என உணர்ந்து சுயமரியாதை இயக்கம் எனும் தனி வழி கண்டார்.

மதம் மற்றும் கடவுள் கொள்கை மறுப்போடு பெரியார், தேசம், தேசியம் எனும் அமைப்புகளையும் அந்தக் கோட்பாடுகளின்படி கட்டமையும் அரசு ( GOVERNMENT ) எனும் ஏற்பாட்டையும் நிராகரித்தார். மனித சமத்துவம் நிறுவப்பட எல்லைகளற்ற தேசமும், இறையாண்மையின் இருப்பாக சுயமரியாதை கொண்ட தனி மனிதர்களே இருக்க முடியும், அவர்களால் அங்கீகரிக்கப்படும் அரசுகள் அல்ல எனவும் அறிவித்தார். இந்தியா விடுதலை பெற்ற நாடான போது, அதனையும், தேர்தல் அரசியலையும் நிராகரித்து ‘பண்பாட்டுத் தளத்தில் உயர்சாதி, ஹிந்து மத மேலாண்மையையும் ஒழிப்பதே முதல் குறிக்கோள்’ என அறிவித்தார்.

பெரியாரின் தளபதியாகத் திராவிடர் கழகத்தைக் கட்டியெழுப்பிய அறிஞர் அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை வென்றெடுக்க வெறும் பண்பாட்டுத் தளச் செயல்பாடு உதவாது என பெரியாரோடு முரண்பட்டு, தேர்தல் அரசியல் வழியாகவும் பங்காற்றிட வேண்டுமெனத் தீர்மானித்துத் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கினார். பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட இயக்கமானாலும் தி.மு.க, அவரது கடவுள் மறுப்புக் கொள்கை, ஒரு வெகுமக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப உதவாது எனக் கருதி ‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ எனும் சமரசத்துக்கு நகர்ந்தது. நாடு, இறையாண்மை எனும் பெரியார் கோட்பாடுகளைத் தொடர்ந்த அண்ணா, கட்சிக்குத் தடை எனும் நிலை உருவான போது திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு மாநில சுயாட்சியென அந்தக் கோரிக்கைக்கு மறுவடிவம் கொடுத்தார்.

அரசு, ஆட்சி எனும் இரு வடிவங்கள் ஒன்றையொன்று எவ்வளவு தீவிரமாக மாற்ற முடியும் என்பதற்கு தி.மு.க எனும் கட்சியின் வரலாற்றைக் கொண்டு ஆய்ந்தால் சில தெளிவுகள் வரக்கூடும். அரசியல் சமரசங்கள் எவ்வளவு தீவிரமாகப் பாதிக்கும் என்பதையும், கொள்கைத் தெளிவு கொண்ட தலைமையின் ஆழமான புரிதல்கள், சமரசங்களையும் மீறி கொள்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதையும் ஆய்ந்து தெளியலாம். கடவுள் மறுப்புக் கொள்கையைக் கைவிட்டதில் 99% திமுக வினர் கடவுள் நம்பிக்கையாளர்களாகி நிற்கிறார்கள். ஆனாலும் இன்னும் பெரியாரிய சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கைகளைக் கைவிட்டு விடவில்லை. திமுக இன்னும் இந்தியாவின் கூட்டாட்சி எனும் சிந்தனையை ஏந்தி நிற்கிறது. காஷ்மீர் சிறப்பு நிலை பறிக்கப்பட்டபோது ( பிரிவு 370 ), இந்தியாவின் அரசியல் கட்சிகளில் முதன்மையாக நின்று அதனை எதிர்த்து நீதிமன்றங்களிலும், தில்லியில் மைதானங்களிலும் குரலெழுப்பியது தி.மு.க மட்டுமே. கோட்பாடுகளையும் கொள்கைகளையும் கால மாற்றங்களுக்கொப்பத் தகவமைத்துக் கொண்டு தொடர்வது அவற்றின் அடிப்படை நோக்கங்களுக்கு துரோகமிழைப்பதாக மட்டுமே கருதப்பட முடியாது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com