போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை

போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை

பொதுவாக இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை எல்லாமே பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும். ஊடகத்தில் ஒரு காலத்தில் பத்திரிகை இருந்தது; பிறகு தொலைக்காட்சி வந்தது. அதிலேயே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். இப்போது டி.வி. பார்ப்பது ஐந்துபத்து நிமிடம் ஆகிவிட்டது. சோசியல் மீடியாதான் எல்லாம் என ஆகிவிட்டது.

யாரும் டி.வி.யில் செய்தி பார்ப்பதில்லை. மொபைலில் பார்த்துவிடுகிறார்கள். மக்கள் எப்படியான தகவல்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களோ அதையே அரசியல் கட்சியோ மற்றவர்களோ பயன்படுத்துவது எளிய முறை. இது சாதாரணமானதுதான். தவிர்க்கமுடியாத ஒன்று.

பத்திரிகைகளைப் படித்தால் அவற்றின் வழியாக மக்களிடம் கருத்துகளை எடுத்துச்சென்றதைப்போல, இப்போது மொபைலைப் பார்த்து எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறார்கள், அதன் தாக்கம் இருக்கிறது.

டிஜிட்டல் உலகில் எது உண்மை, பொய்யெனத் தெரியாமல் இருப்பதற்கு முதலில் அவசரப்படாமல் இருக்கவேண்டும். வரக்கூடிய தகவல் உண்மையா, பொய்யா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இதில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. இன்னொன்று, வதந்தியோ தகவலோ எத்தனையோ பேருக்கு ஒரு நொடியில் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய சக்திவாய்ந்த தளமாக இருக்கிறது.

உலக அளவில் குறிப்பாக பல ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியே மாறக்கூடிய அளவுக்கு சமூக ஊடகத்தின் பலம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு கோயம்பேட்டில் பேருந்துநிலைய மாற்றத்தால் நேற்று (ஜன.24) நடைபெற்ற பிரச்னையை, மக்கள் அவதியென சிறிதாக ஊடகங்களில் வந்திருக்கலாம். ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் அதைப் பற்றி படம் எடுத்துப் பதிவிட்டதால் அது பரவியது. ஒரு கோடி பேராவது பார்த்திருப்பார்கள். உடனே விசயத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் சவால்களும் உண்டு.

பொய்ச் செய்தி முக்கியமான பிரச்னை... ஒரு கட்சியாக இது பெரிய சவால் எங்களுக்கு...

இராமர் கோயில் சிலை நிர்மாண விழாவுக்கு எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போகவில்லை. ஆனால் அவர் போனதாக ஒரு செய்தி வைரல் ஆகிவிட்டது. இப்படி பொய்ச்செய்திகள் ஆளும் தரப்பிலிருந்து பரப்பப்படுகிறது. இதை எதிர்கொண்டு மறுப்புசொல்வது, பதில் தருவது சவாலாக இருக்கிறது. பெரிய கஷ்டம்... பொய்ச்செய்தி சீக்கிரமாகப் போய்விடுகிறது.

இது தொடர்பாக புகார் தருவதே சிக்கலாக இருக்கிறது. முன்னரெல்லாம் சைபர் கிரைம் போலீசில் புகார் தரவேண்டும். அவர்கள் டிஜிட்டல் ஆதாரம் எடுத்து வழக்கு பதிவார்கள். இப்போது லோக்கல் புகாராக எடுக்கிறார்கள்.  கடந்த வாரம் ஒரு கைது... புகார் தந்தது ஒரு ஐடி மேல்; கைதுசெய்யப்பட்டது இன்னொரு ஐடி உள்ளவரை! இந்த மாதிரியான பிரச்னைகள்... நல்ல சட்டங்கள் இல்லை. இதனால் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன.

போலிச்செய்தி இப்போது பெரிய பிரச்னையாகியிருக்கிறது.

நீண்ட காலமாக இருந்துவரும் பொது ஊடகங்களைவிட, இதில் சாதகம் அதிகம். ஊடக நிறுவனங்கள் என்ன வெளியிடுகிறார்களோ அதைத்தான் மக்கள் பார்க்கமுடியும். இப்போது அப்படி இல்லை. அவர்களுக்கென சில நோக்கங்கள் இருக்கும். சமூக ஊடகத்தில் அவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களிடம் நேரடியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய கருவியாக இது இருக்கிறது. அதற்கான கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. அதைச் சரிசெய்துகொண்டால் போதும்.

நேற்று எங்கள் தலைவரின் ஒரு நிகழ்ச்சி... அதை சில ஊடகங்கள்தான் நேரலையாகப் போட்டார்கள். மற்றவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கலாம். இப்படிப்பட்ட இடத்தில் நாங்களே நேரலை செய்யமுடிகிறது. கோடிக்கணக்கானவர்களிடம் கொண்டுபோக முடிகிறது. இது சமூக ஊடகத்தில்தான் சாத்தியம்.

நீங்கள் கேட்பதைப் போல வெளியாரிடம் வேலைகளை ஒப்படைப்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது. இதில் சுத்தமாக இல்லை. இதில் அவுட்சோர்சிங் எனப்படுகிற வெளியார் வேலையாகச் செய்வது வேண்டாம் என கட்சித் தலைமை உறுதிபடச் சொல்லிவிட்டது. பொதுச்செயலாளரின் உத்தரவே, ஒவ்வொரு பூத்திலும் இரண்டு பேர் சமூக ஊடகத்துக்கென இருக்கவேண்டும் என்பதுதான். அவருடைய திட்டம்தான் இது.

கட்சி அறிக்கைகள், அறிவிப்புகள், பொதுச் செயலாளரின் எல்லா குறிப்புகளும் ட்விட்டர், பேஸ்புக் மூலம்தான் வெளியிட்டு வருகிறோம். ஒரு பூத்தில் 100 பேர், 200 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லாரிடமும் சோசியல் மீடியா இருக்காது. பூத்தில் உள்ள இந்த இரண்டு பேர் மூலம் எல்லா தகவல்களையும் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம். இவர்களுக்கு சமூக ஊடகம் பற்றி விழிப்பூட்டல் செய்திருக்கிறோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சுமார் 300 பூத் என்றால் 600 பேருக்கு மூன்று மாதங்களாக தனியாகப் பயிற்சி அளித்துவருகிறோம்.

எல்லா விசயங்களையும் வெளியாருக்குத் தரமுடியாது. விளம்பரம், வீடியோவை உருவாக்குவதைப் போல குறிப்பிட்டவற்றுக்கு சரிவரும். எங்கள் பொதுச் செயலாளர் அண்மையில் தந்த பேட்டியிலேயே, எந்த வெளி நிறுவனம் இல்லாமல் கட்சியின் ஐடி அணி மூலமே பெரும்பாலான வேலைகளைச் செய்ய பயிற்சியைத் தந்துகொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

வெளியார் வருவார்கள், அவர்களுடைய வேலையைப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் போனபிறகு விசயங்கள் சட்டென கீழே போய்விடும். தொலைநோக்குக்கு சுயபலம்தான் முக்கியம்.

வரும் தேர்தலில் எங்களின் உத்தி எனக் கேட்டால், முன்னைய எங்களின் ஆட்சியின் சாதனைகளையும் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் பிரச்சாரம் செய்வோம்.

தேர்தல் உத்திகளைப் பொறுத்தவரை, இப்போதைக்கு நாங்கள் வெளியாரை அணுகவில்லை என்றுதான் தகவல். சொந்தக் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பொதுச்செயலாளரின் வழிகாட்டல்.

இளைஞர்களுக்கான உத்திகளைப் பற்றிக் கேட்கிறீர்கள். புதிய வாக்காளர்கள்தான் புதிய, எந்தக் கட்சியையும் சாராத ஒரு பகுதியினராக இருக்கிறார்கள். இதைப்போலவே பெண்கள் மத்தியில் எங்கள் கட்சியைக் கொண்டு

செல்வதில் தனித்தனியான உத்திகளை கட்சித் தலைமையே வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறோம். அதைத் தொடருவோம்.

சி.டி.ஆர். நிர்மல்குமார், இணைச்செயலாளர், அதிமுக

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com