குடும்பப் பெயர் குழப்பங்கள்!

குடும்பப் பெயர் குழப்பங்கள்!
Published on

தமிழகத்தைத் தவிர வடநாட்டிலும் மேலைநாடுகளிலும் குடும்பப் பெயர் எனப்படும் கடைசிப் பெயர் கலாசாரம் மிகவும் பிரபலம். நரேந்திர மோடி, ராகுல் காந்தி என்பது போல மோடி, காந்தி என்பவை குடும்பப் பெயர்கள். ஆந்திராவில் தாங்கள் வாழும் ஊர்ப் பெயரைத் குடும்பப் பெயராகக் கொள்வார்கள். வெங்கிபரப்பு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாய் லட்சுமண்தான் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண். தமிழகத்திலும் நாஞ்சில் மனோகரன், விழுப்புரம் சின்னையா மகன் கணேசன் என்பது போல இவை அரிதாகக் காணப்படுவதுண்டு என்றாலும், தமிழகத்தில் குடும்பப் பெயர் கலாசாரம் வழக்கில் இல்லை.

தமிழகத்தில் இனிஷியல் கலாசாரம் மட்டுமே உண்டு. ஓ. பன்னீர்செல்வம், எம்.ஜி. ராமச்சந்திரன் என்பன போலப் பெயர்கள் அமையும். இதனால் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொருவருக்கும் கடைசிப் பெயர் மாறுபடும். வெளிநாடுகளில் இதனால் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்தியக் கடவுச்சீட்டு எடுக்கும்போதே இக்குழப்பம் தொடங்கிவிடும்.

 வடநாட்டு அதிகாரிகளுக்குக் குடும்பப் பெயர் இல்லாத கலாசாரம் புரிவதில்லை. ஒரு குழந்தையின் கடவுச்சீட்டு எடுக்கும்போது தந்தையின் பெயரை அவளுக்குக் குடும்பப் பெயராகக் கொடுத்தால், அவர்கள் தந்தை பெயரையும் மகள் பெயரோடு சேர்த்துவிட்டு, குடும்பப் பெயர் பகுதியை காலியாக விட்டுவிடுவார்கள். இதே கடவுச்சீட்டுடன் அமெரிக்க விசாவுக்குச் சென்றால், அவர்கள் இதெல்லாம் இந்தியாவில் சாதாரணம் என்று கூறி, குடும்பப் பெயராக என்.எல்.என் (NLN= No last name) என்று போட்டுக் கொடுத்துவிடுவார்கள். என்.எல்.என் என்றால் கடைசி பெயர் இல்லை என்று பொருள். NLN என்பதே ஆவணங்களில் கடைசிப் பெயராகப் பதிவாகிவிடும். இறுதியில் பச்சை அட்டை வாங்கும்போதுதான் இந்தக் குழப்பம் தீரும்.

தாமஸ் எனும் நண்பர் ஒரு கதையைச் சொல்வார். அவர் தந்தை பெயர் மேத்யூ. தாமஸ் மேத்யூ எனும் பெயருடன் அவர் அமெரிக்காவிற்கு வந்தார். தாமஸ் மேத்யூ என்பது அவர்களுக்குப் புரியும் பெயர் என்றாலும், அவர் பெயரைச் சொல்பவர்கள் உனக்கு ஏன் இரண்டு முதற்பெயர்கள் இருக்கின்றன, உன் குடும்பப் பெயர் என்ன என்றுதான் கேட்பார்கள். தாமஸ் என்பது முதற்பெயர், மேத்யூ என்பது குடும்பப் பெயர் என்று அவர் விளக்கினால், மேத்யூ என்பது எப்படி குடும்பப் பெயராகும் அதுவும் ஒரு முதற்பெயர் தானே என்பார்கள். இதையே 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து விளக்கிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அந்த மனிதர் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்.

பிரபலங்களையும் இந்தச் சிக்கல் விடவில்லை. கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை என நாம் அறிந்தாலும் அவரது உண்மையான பெயர் R.சுந்தரராஜன். அப்பா பெயர் ரகுநாத பிச்சை. இப்படி இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனின் பெயருடன் அமெரிக்கா வந்து இறங்கினார். ஆனால் சுந்தர் என தன் பெயரை சுருக்கி சொன்னார். ஆனால் ஆவணங்களில் சுந்தரராஜன் ரகுநாதபிச்சை என இருக்கும். அமெரிக்க குடியுரிமை பெற்றபோது பெயரை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் எனும் அடிப்படையில் பெயரைச் சுருக்கி சுந்தர் பிச்சை ஆனார்.

அதேபோல் தான் இந்திரா நூயியின் கதையும். சென்னையைச் சேர்ந்த தமிழரான இவர் இந்திரா கிருஷ்ணமூர்த்தியாக அமெரிக்கா வந்தார். அங்கே ராஜ் நூயி எனும் தமிழரைச் சந்தித்தார். ராஜ் நூயி தமிழராக இருந்தாலும் மங்களூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கர்நாடக வழக்கப்படி நூயி எனும் ஊர் பெயரைத் தன் கடைசிப் பெயராகச் சேர்த்துக்கொண்டிருந்தார். அவரைத் திருமணம் செய்தவுடன் இந்திரா கிருஷ்ணமூர்த்தி இந்திரா நூயி ஆனார்.

லண்டன் சென்ற எம். ராதிகாவின் கதையும் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டது. எம் என்பதை குடும்பப் பெயராக ஏற்கமாட்டோம் என அதிகாரிகள் சொல்ல, கணவர் ராம்குமாரின் பெயரைச் சேர்த்து ராதிகா ராம்குமார் ஆனார். ஆனால் அதன்பின் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவர் ஆக, இப்போது எல்லாரும் அவரை டாக்டர் ராம்குமார் என்றே அழைக்கிறார்கள். ஒரு பெண்ணை டாக்டர் ராம்குமார் என அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஐரோப்பாவிற்குச் சென்றபோது ஒரு விசித்திரமான சிக்கலைச் சந்தித்தார். அவரது தந்தை பெயர் விஸ்வநாதன், இவரது பெயர் ஆனந்த். அதாவது முறைப்படி இவர் வி. ஆனந்த். ஆனால் மேலைநாடுகளில் இவரது முதல் பெயரான 'விஸ்வநாதன்' என்பதை குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டனர். இதனால் அவரை எல்லாரும் 'மிஸ்டர். விஸ்வநாதன்' என்றே அழைத்தனர். இறுதியில் இந்தப் பெரிய பெயரை உச்சரிக்க முடியாமல், வெளிநாட்டு ஊடகங்கள் அவருக்கு 'விஸ்ஸி' (Vishy) என்ற செல்லப் பெயரை வைத்தன. இன்றும் சர்வதேச செஸ் அரங்கில் அவர் விஸ்ஸி என்றே அறியப்படுகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் (அல்லா ரக்கா ரஹ்மான்), பாஸ்போர்ட்டில் முதல் பெயர் அல்லா ரக்கா என இருக்கும். சர்நேம் ரஹ்மான். அமெரிக்க விமான நிலையங்களில் அல்லா ரக்கா என்பதை சரியாக உச்சரிக்க தெரியாமல் "அல்லா" என அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நெல்லியட்டு ஷியாமளன் பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அமெரிக்கா சென்றபோது 'மனோஜ் நெல்லியட்டு' என்பதை யாராலும் உச்சரிக்க முடியவில்லை. கடுப்பாகி எம்.நைட் ஷியாமளன் ஆகிவிட்டார்

தமிழகத்தின் எளிய இனிஷியல் கலாசாரம் ஒரு தனித்துவமான அடையாளம் என்றாலும், சர்வதேச அளவில் நுணுக்கமான நிர்வாகச் சிக்கல்களை இன்றும் ஏற்படுத்தி வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com