தீ சுடும், ஆனால் உறுதியாக்கும்!

தீ சுடும், ஆனால் உறுதியாக்கும்!
Published on

வாழ்க்கையென்பது நிச்சயமின்மை. எதிர்பாராதவற்றின் தொகுப்பே. எதிர்பாராத நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியையோ, துயரத்தையோ, அதிர்ச்சியையோ, திருப்பத்தையோ அளித்துவிடுகின்றன. ஆனந்தத்தையும், படிப்பினை-யையும் கொடுக்கின்றன. சில நேரங்களில் அவை வாழ்வின் போக்கையேகூட மாற்றிவிடுகின்றன.

மராத்தி கவிதையொன்றில் கணவனும் மனைவியும் குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் குழந்தை இறந்து பிறக்கிறது. மனைவி கலங்குகிறாள். கணவன் சொல்கிறான். “இவனை நாம் சுடுவோம். எஃகைப் போல் உறுதிபெற்று பகைவர்களை அழிக்கும் வீரனாக உருமாறுவான்!” இப்படித் திடீரென்று நிகழும் நிகழ்ச்சிகளால் மனிதர்கள் ஞானிகளாகவும் கூட மாறிவிடுகிறார்கள்! வாழ்வின் இயக்கம் இவற்றின் மீது தானே கட்டப்படுகிறது!

எனது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் எதிர்பாராத வகையில் நடந்திருக்கின்றன. சிலவற்றை மறக்கவே முடிந்ததில்லை; மறக்கவும் முடியாது. அப்படி ஒரு நிகழ்ச்சி, நான் வேலைதேடிக் கொண்டிருந்த நாட்களில் நடந்தது. நிரந்தர வேலையைப் பற்றிய கனவு என்னுடைய நாற்பது வயது வரையில் இருந்தது.

வேலூர் ஊரிசு கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் பட்டப் படிப்பைப் படித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சில மாதங்களிலேயே ஒரு என்.ஜி.ஓ அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சில ஆண்டுகளுக்குப்பின் அங்கிருந்து வெளியேறி ஓர் ஆங்கிலப் பள்ளியிலும், பின்னர் தற்காலிக ஆசிரியராக ஓர் அரசாங்கப் பள்ளியிலும் வேலை செய்தேன். இவற்றுக்கு நடுவே சுவரெழுத்து எழுதுதல், ஸ்கிரீன் பிரிண்டிங் என்றெல்லாம் வேறுசில வேலைகளிலும் ஈடுபட்டேன்.

இவ்வளவுக்கு நடுவிலும் நிரந்தர வேலைக்கான தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. போட்டித் தேர்வுகள் இல்லாத அல்லது குறைந்தளவே இருந்த அக்காலத்தில் வேலை-வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது மிகவும் முக்கியம். கல்லூரியிலிருந்து வெளிவந்த உடனேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கத் தொடங்கினேன். அவ்வப்போது அந்தப் பதிவை புதுப்பிக்கவும் தவறவில்லை. நாளிதழ்களையும், எம்பிளாய்மெண்ட் நியூஸ் போன்ற வேலைவாய்ப்பு செய்தி இதழ்களையும் தவறாமல் படிப்பதும், வேலையெடுப்பு பற்றிய செய்திகளை கவனமாகப் பின்தொடர்வதும் அப்போது ஒரு முக்கிய வேலை.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடைப்படையில் வழங்கப்பட்டு வந்த ஆசிரியர் வேலை, இனிமேல் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தால் தான் கிடைக்கும் என் அரசின் கொள்கைமுடிவு 2002-இல் கொண்டு வரப்பட்டதும், நிரந்தர வேலை பற்றிய அச்சம் கூடுதலாகத் தொற்றிக் கொண்டது. ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில், எவ்வளவு முயன்று எழுதியும், கட்-ஆஃப் மதிப்பெண் உச்சத்திலேயே நின்று கொண்டிருந்தது. நம்பிக்கையற்று துவண்டிருந்த அந்தச் சமயத்தில் தான், பதிவு மூப்பு அடிப்படையில் மீண்டும் அரசு ஆசிரியர் வேலை கிடைக்கலாம் என்ற செய்தி நாளேடுகளில் வெளியானது.

அது 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதி. நம்பிக்கையூட்டும் அந்தச் செய்தியைத் தொடர்ந்து, பதிவு மூப்பை சரிபார்ப்பதற்காக வீட்டிலிருந்து உற்சாகத்தோடு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கிளம்பிப் போனேன். என்னைப் போலவே அங்கு நூற்றுக்கணக்கானவர் குவிந்திருந்தனர். ஒவ்வொருவர் அட்டையும் சரிபார்க்கப்பட்டது. என்முறை வந்ததும் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியிடம் தகவலை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் விசாரித்தேன். “எந்த வருச சீனியாரிட்டி வரைக்கும் எடுக்குறாங்க சார்?” “அதெல்லாம் சொல்ல முடியாது” கடும் தொனியில் பதில் வந்தது. அடுத்து பேச எத்தனிப்பதற்குள், அந்த அதிகாரி என்னைத் தாக்கத் தொடங்கினார். வேலையற்றவர்கள் மீதான வெறுப்பு, உள்ளூரக் கனலும் சாதிவெறி, அதிகாரத் திமிர் என்று அந்த அதிகாரியின் ஆழ்மனதில் அப்பிக் கிடந்த எல்லாமே என்மீது வெளிப்பட்டு விட்டன. அரசுப்பணியைச் செய்யவிடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு மணி நேரம் அதிகாரியின் அறையிலேயே சிறைவைக்கப் பட்டேன்.

இத்தாக்குதலால் நிலைகுலைந்து போனேன் நான். அவமான உணர்வும், அச்சமும் பிடித்து ஆட்டத் தொடங்கின. புகழ்பெற்ற எழுத்தாளன், பலமேடைகளைப் பார்த்தவன், பிரபலமானவர்கள், உயர்ப்பொறுப்புகளில் உள்ளவர்களுடன் பழகியவன், பலரின் தோழமையைப் பெற்றவன், எண்ணற்ற வசகர்களைக் கொண்டவன் என்பவையெல்லாம் சேர்ந்து என்னுள் உருவாகியிருந்த தன்மதிப்பெனும் ’ஈகோ’ ஒருநொடியில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த வன்சிதைவை என்னால் எளிதில் ஏற்க முடியவில்லை. பலநாட்களாக மனம் உளைச்சலிலும், வேதனையிலும் கிடந்தது. அது பெரிய வதை.

நான் தாக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப் பட்டதாகவும் நாளேடுகளிலும் கிழமை இதழ்களிலும் செய்திகள் வெளியாகின. பல எழுத்தாளர்களும், அமைப்புத் தலைவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். தோழர்கள் பலர் என்னுடனிருந்தனர். எனக்கு ஆதரவாக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் வேறுசில பகுதிகளிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியைக் கண்டித்து, உரிய நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் அந்த அதிகாரி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் இடமாறுதல் செய்யப்பட்டார்.

விசயம் இத்துடன் நிற்கவில்லை. அந்த அதிகாரியின் மீது காவல்துறையில் நான் கொடுத்த வழக்கு, உண்மையற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அந்த அதிகாரி என்மீது கொடுத்த ‘அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தல்’ வழக்கு விசாரணைக்கு வந்து, மூன்று ஆண்டுகளுக்கு நீதிமன்றம் அலைய வேண்டியதாகியது. இந்த நெருக்கடியான காலங்களில் என்னுடன் இருந்து பல்வேறு உதவிகளை செய்த நன்றிக்குரியவர் பேரா.ஐ.இளங்கோவன் ஆவார். உதவிகள், தோழமை தேற்றுதல்கள் இருந்தும், இந்த நிகழ்வை வைத்து ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவலை எழுதிய பிறகுதான் என்னால் இதிலிருந்து விடுபட முடிந்தது. அந்த நாவல் ஒரு பஞ்சினைப்போல என் மனத்துயரினை உறிஞ்சியெடுத்துக் கொண்டது. இந்த உலகில் அன்றாடம் துயரப்படும் எளியவர்களின் முன்னால் என்துயரம் ஒன்றுமேயில்லை என்று அந்த நாவல் எனக்குக் கற்றுக் கொடுத்தது. பொது வாழ்க்கையில் ஈடுபடுகையில் இந்தச் சம்பவங்கள் மிகவும் இயல்பானவை என்பதையும் உணரவைத்தது.

இந்தச் சம்பவத்திலிருந்து நான் நிறைய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டேன்: 1.ஆட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கம் எப்போதும் ஒன்றுதான். 2.அது தனது அங்கமாக இருக்கிற ஓர் அதிகாரியைக் காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் பலிகொடுக்கும். 3.இந்தியச் சமூகத்தில் சாதியாலும் மதத்தாலும் மொழியாலும் மனிதர்கள் பிரிந்திருப்பினும், அவர்களை இயக்குவது தனிமனித அபிலாசைகளும் சுயநல முனைப்புகளுமேயன்றி வேறெதுவுமில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com