முதல் 150 நாள்கள்

தலைமை | ஆட்சி | அரசியல்
முதல் 150 நாள்கள்
Published on

மக்களாட்சியில் உச்ச பதவியை வகிப்பவரின் ஆளுமை, துணிவும் முடிவெடுக்கும் திறனும் சரிவிகிதத்தில் கொண்டதாக இருக்கவேண்டும்

- பிளாட்டோ

ஒரு காலத்தில் தலைமை என்பது உடல்வலிமையோடு தொடர்புடையதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று மாறி உள்ளது!

- மகாத்மா காந்தி

நல்ல செயல்கள் மூலம் வெற்றி கிடைத்து அதைக் கொண்டாடும்போது மற்றவர்களை முன்னிலைப் படுத்தி பின்னால் இருந்து வழி நடத்தவேண்டும். அபாயத்தின் போது முன் வரிசையில் நில்லுங்கள். அப்போது உங்கள் தலைமைப் பண்பு போற்றப்படும்.

- நெல்சன் மண்டேலா

அவருக்கு 48 வயது. கவர்ச்சிகரமான தோற்றம். உலகத் தலைவர்களிடம் நல்ல அறிமுகம் இருந்தது. லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்குத் தகுதியானவராக இந்திரா காந்தியைத் தேர்வு செய்ய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்ததில் ஆச்சர்யம் இல்லை.

நேரு, சாஸ்திரி ஆகிய இரு தலைவர்களின் மரணத்தைத் தொடர்ந்து துயரத்தில் இருந்த இந்திய மக்களுக்கு நேருவின் மகள் தலைமை ஏற்பது ஆறுதலாக இருக்கலாம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் மொரார்ஜி தேசாய் களத்தில் குதித்தார். போட்டி கடினமாக இருந்தாலும் இந்திரா 1966 ஜனவரி மாதம் பிரதமராக, காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்ற இரண்டாவது மாதத்தில் வடகிழக்கில் மிசோ மலைத்தொடரில் பிரிவினைக் கலவரம் வெடிக்க அதில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அது பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கவில்லை. காந்த இரு ஆண்டுகளாக மழைப் பொழிவு போதாமையால் இந்திய விவசாயம் பொய்த்துப் போய் வெளிநாடுகளில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்தார்கள். மார்ச் மாதம் இந்திரா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார். இந்திரா அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதற்கு அமெரிக்க கோதுமை இறக்குமதி செய்யவேண்டும் என்பதும் காரணம். ‘புதிய இந்திய பிரதமர் பிச்சை கேட்டு வருகிறார்’ என்று ஒரு அமெரிக்க பத்திரிகை எழுதியது. ஆனால் இந்திரா அச்சமயம் அங்கே நடந்துகொண்ட விதமும் ஆற்றிய உரைகளும் நாட்டின் கௌரவத்தை மீட்டெடுத்தன.

இச்சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்து போனது. வெளிநாடுகளிலிருந்து ஆயுதம், உணவு தானியம், தொழில்துறைக்கு தேவையான எந்திரங்கள், கச்சாப்பொருட்கள் இறக்குமதியால் ஏற்பட்ட நிலை இது. இதைச் சரிசெய்ய இந்திய நாணயத்தின் மதிப்பைக் குறைத்தாக வேண்டும். குறைத்தால் ஓர் அமெரிக்க டாலர் 4.76 ரூபாய் என்ற நிலையில் இருந்து 7.50 ரூபாய் ஆக உயரும்! குறைக்கச் சொல்லி அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேச நிதியங்களில் இருந்து அழுத்தம் இருந்துவந்த காலகட்டம்! வேறு வழியின்றி நாணய மதிப்பைக் குறைக்க முன்வந்தார்!

இந்த நடவடிக்கைக்கு கட்சிக்குள் எதிர்ப்புகளை எதிர்கொண்டார் இந்திரா. தன்னை பிரதமராக்கிய காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துக்கு மாறாகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம். ஜூன் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநில மறுசீரமைப்பு பற்றிய ஆலோசனை என அமைச்சரவையைக் கூட்டினார். இப்ப இதுக்கு என்ன அவசரம் என அனைவரும் நினைத்தார்கள். இந்திரா காந்தி, ரூபாயின் மதிப்பைக் குறைக்கவிருப்பதாக அறிவித்தபோது அமைச்சர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடனே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார் அவர். அமைச்சர்களுக்கு இந்த குறிப்பு எழுதப்பட்ட தாள்கள் வழங்கப்பட்டன. அவர்கள் மறுபேச்சு பேசவேண்டியது இல்லை. சம்மதம் தெரிவிக்கவேண்டியதுதான்! எதிர்க் கருத்துகளையும் சில அமைச்சர்கள் சொன்னார்கள்… அன்று மதிய உணவுக்கு முன்னதாக இந்த முடிவுக்கு சம்மதம் பெறப்பட்டு, அன்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது!

காமராஜருக்கும் இந்திராவுக்கும் இடையே விரிசல் ஏற்பட இந்த சம்பவமே காரணமாக அமைந்தது! தவிர்க்க முடியாத நடவடிக்கை என்றாலும் கட்சியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து அழுத்தமான பெண்மணியாக அவர் எடுத்து வைத்த அடி அது!

பின்னாளில் மன்னர்மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல், வங்க தேசப்போர் என இந்திரா வலுவான ஒரு தலைமையைத் தந்தார்!

எதைப் பற்றியாவது வாயால் பேசவேண்டு மென்றால் ஆண்களிடம் கூறுங்கள். எதையாவது செய்து முடிக்கவேண்டுமென்றால் பெண்களிடம் கூறுங்கள். – என்ற மார்கரெட் தாட்சரின் கூற்றை இங்கே நினைவு கூரலாம்!

தலைமைப் பண்பும் கற்றுக்கொண்டே இருப்பதும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாதவை என ஜான் எப் கென்னடி கூறினார். வலுவான அரசியல்தலைவர்கள் ஆரம்பகட்டத்தில் தடுமாறினாலும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். அதுதான் வரலாறு முழுக்கப்பார்க்க முடிகிறது!

ஒரு நல்ல தலைவன் தன் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவான். ஒரு மகா தலைவன், மக்களுக்கு தங்கள் மீதே நம்பிக்கை உருவாகச் செய்வான் என்கிறார் எலினார் ரூஸ்வெல்ட்.

இந்த இதழ் உங்கள் கையில் தவழும்போது தமிழ்நாட்டில் தேர்தல் சூடு தணிந்து புதிய ஆட்சி அமைப்பது யார் என்று தெரிந்திருக்கும்! எப்போதும் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதால் ஏற்கெனவே ஆட்சி அமைத்த சில தலைவர்கள் தம் ஆரம்ப கட்டங்களில் குறிப்பாக முதல் 150 நாள்களில்- அல்லது இன்னும் கூடுதலாக சில மாதங்களில் - செய்தவை என்ன என்பது பற்றி சில குறிப்புகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறோம்! லீ குவாங் யூ, ஒபாமா, மெர்கல் போன்ற உலகத்தலைவர்களைப் பற்றியும் சில பக்கங்கள் சேர்த்திருக்கிறோம்!

எந்த பெருஞ்செயலுக்கும் ஆரம்பத்தில் எடுத்து வைக்கும் அடி முக்கியம் அல்லவா?

logo
Andhimazhai
www.andhimazhai.com