முதல் குழந்தையா?  

முதல் குழந்தையா?  

கவனிக்கவேண்டிய விஷயங்கள்...

முதல் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் தம்பதிகள் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் அது தொடர்பான நடைமுறைகளையும் சொல்லுங்கள் என்று பிரபல மகப்பேறு மருத்துவர் கனிமொழி என்விஎன்சோமு விடம் கேட்டோம். சென்னையில் உள்ள தாய்மை மருத்துவமனையின் நிறுவனரான இவர்  திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 “அந்த காலத்தில் தலைச்சன் பிள்ளை தங்காது என்று சொன்னால் அதற்கு பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் ஒரு முக்கியமான காரணமாக  இருந்தது.  சிறுவயதில்  பெண்களின் கருப்பை வளர்ச்சி முழுமையாக இருக்காது. பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் கருப்பை குழந்தையைத் தாங்கும் அளவுக்கு வளர்ச்சியும் வலிமையும் பெறும். அதனால் அச்சமயம் கருச்சிதைவுகள் சகஜமாக இருந்தன. இப்படி கருச்சிதைவு பலமுறை ஏற்பட்டால் எதுவுமே தங்காத நிலை ஏற்படும்.

ஆனால் இந்த காலத்தில் எல்லோருமே தாமதமாகத் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். சுமார் 30 வயதுக்கு மேல் தான் திருமணம் என்பதால் முதல் குழந்தை தங்காது என்பதை விட இப்போது முதல் குழந்தை கருத்தரிக்காது என்கிற நிலைக்குப் போய்விட்டோம். வேலைச் சூழல் காரணமாக 35 வயதையொட்டி தான் குழந்தைபெற்றுக்கொள்வதை யோசிக்கிறார்கள். பெண்ணுக்கு மட்டும் வயதாகவில்லை. அவளுடைய கருமுட்டைகளுக்கும் அச்சமயம் வயதாகிவிடுகிறது!

இரவுப்பணி செய்கிறவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கருவுறும் விகிதம் அவர்களுக்குக் குறைவாகவே உள்ளது. வார இறுதி பார்ட்டிகள், கொண்டாட்டங்களும் இதில் சேர்ந்துவிடுகின்றன.

ஒருவழியாக கரு நிலைத்துவிட்டது என்ற நிலையில் மருத்துவர்களாகிய நாங்கள் உங்களுக்கு ஓய்வு தேவை என்போம் அவர்களோ  முடியாதே.. வேலை இருக்கிறதே என்பார்கள்.

திருமணத்துக்கு வரன் பார்ப்பவர்கள் பல விஷயங்களைப் பார்க்கிறார்கள். முதலில் அதில் உடல்நலப்பரிசோதனையும் செய்து பார்த்துவிடுவது நல்லது என்பேன். பல பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறது. காரணம் மூன்றுவேளையும் ஒழுங்காகச் சாப்பிடாதது, காலை உணவு எடுக்காதது, குப்பை உணவுகளாகச் சாப்பிடுவது.

முதல் ட்ரைமெஸ்டர்

கருவுறவேண்டும் என்று திட்டமிடும்போதே போலிக் அமில மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்துவிடவேண்டும். எந்த மரபணுக் குறைபாடுகளும் இல்லாமல் கரு உருவாக இந்த மாத்திரைகள் உதவுகின்றன. இந்த விழிப்புணர்வு பரவலாக பெண்களிடம் இருப்பதை நான் காண்கிறேன். என்னிடம் வரும் முன்பே நாங்கள் இந்த மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் என சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள். கருத்தரித்த உடன் பார்க்கவேண்டிய இரண்டு விஷயங்களில் ஒன்று ரத்த அளவுகள் எப்படி இருக்கிறது  என்று பார்ப்பது. அடுத்தது ஸ்கேன். கரு, கர்ப்பப்பையில்தான் இருக்கிறதா கருமுட்டைக் குழாயில் இருக்கிறதா என்று பார்த்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த காலத்தில்  மூன்று மாதங்களுக்கு முன் ஸ்கேன் பண்ணினால் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடாதா என்ற அச்சம் பெரியவர்களிடம் உள்ளது. ஸ்கேன் என்பது ஒலி அலைகளின் மூலம் செய்யப்படுவது என்பதால் எத்தனைமுறை எடுத்தாலும் எதுவும் ஆகிவிடாது என்பது நிச்சயம். முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டுமுறையாவது ஸ்கேன் எடுப்பார்கள். முதல் ஸ்கேன் முன்னரே சொன்னமாதிரி அது எங்கே உட்கார்ந்துள்ளது என்று பார்க்க, இரண்டாவது 12 வாரங்களுக்குள் எடுக்கப்படுவது. அது ஆரம்ப கட்டக் குறைபாடுகள் இருப்பின் கண்டறிவதற்காக. அதை டவுன் ஸிண்ட்ரோம் ஸ்கிரீனிங் என்போம்.  இந்த சமயத்தில் வாந்தி இருந்தால் அதற்கு  மாத்திரைகள் எடுக்கலாம். இதற்கான பாதுகாப்பான மருந்துகள் உள்ளன. மாத்திரை சாப்பிடக்கூடாது என்று வாந்தியைக் கட்டுப்படுத்தமுடியாமல்போய், நீர்ச்சத்து இழந்த நிலையில் மருத்துவமனை வருவதை இது தவிர்க்கும்.

இரண்டாவது  ட்ரைமெஸ்டர்

12 வாரத்தில் இருந்து 29 வாரங்கள் வரை இருக்கக்கூடிய காலகட்டம் இது. இதில் இரண்டு ஸ்கேன்கள் மிக முக்கியமானவை. 20 ஆவது வாரத்தில் எடுக்கக்கூடிய அனாமலி ஸ்கேன். இது குழந்தையின் மொத்த உடல் உறுப்புக்களையும் பார்க்கக்கூடியது. அனைத்தும் முறையாக உருவாகி உள்ளனவா என்று பார்ப்பதற்காக இது செய்யப்படுகிறது. 28 வாரத்தில் குழந்தையின் இதயத்தையும் கூட இப்போது எக்கோ செய்து அது ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்று பார்த்து விடுகிறோம்.  அந்த அளவுக்கு இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கருவில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமில்லாமல் தாய்க்குமே எக்கோ பண்ணி இதயச் செயல்பாட்டை பரிசோதிப்பதும் பழக்கத்தில் வந்துவிட்டது. பிரசவத்தின்போது எதிர்பாராத சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது.

மூன்றாவது ட்ரைமெஸ்டர்

இந்த சமயத்தில் தேவையான அளவுக்கு குழந்தையின் உடல் எடை  சரியாக இருக்கிறதா? அதைச் சுற்றி இருக்கும் திரவம் சரியான அளவில் உள்ளதா என பரிசோதிப்போம். இந்த திரவ அளவு குறைந்தாலும் நல்லதில்லை; அதிகரித்தாலும் நல்லதில்லை. சிலருக்கு திடீரென இந்த திரவ அளவு குறைந்துவிடும். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.

முதல் இரண்டு டிரைமெஸ்டர்களிலும் டிடி வாக்ஸின் கொடுத்துவிடுவோம்.  இரண்டாவது ட்ரைமெஸ்டரின்போது ஸ்வைன்ப்ளூ தடுப்பூசியும் கூட போடப்படுகிறது.

இருபதாவது வாரத்தில் இருந்து கருவுற்ற ஒரு பெண் உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கவேண்டும்.  முதலில் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் தொடங்கும். 28 வாரத்தில் இருந்து சுகப்பிரசவம் நடப்பதற்கான உடற்பயிற்சிகளைச் செய்யச் சொல்வோம்.  நார்மல் பிரசவத்துக்கும் சிசேரியனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மூன்று நாள்தான் மருத்துவமனை வாசம். பழைய காலத்தில் இருந்ததுபோல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் வழக்கம் இப்போது இல்லை. தரையில் அமர்ந்து எழும் வழக்கமும் இல்லை. ஆகவே உடற்பயிற்சிகள் அனைத்துமே இதைக் குறிவைத்தே சொல்லித் தருகிறோம். என்னுடைய பேஷண்ட்கள் அனைவருக்குமே  ஆறாவது  மாதத்தில் இருந்து தரையில் அமர்ந்து வாழையிலையில்தான் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிடுவேன். அதுவே குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சியாக அமையும்.

முதல் ட்ரைமெஸ்டர் முடியும்போதே இரும்புச் சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை தொடங்கிவிடும். குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கும் முதல் ஆறுமாதம் வரைக்கும் இந்த மாத்திரைகள் தொடரும்.

 பிரசவம் என்பது மறுஜென்மம் என்று அந்த காலத்திலிருந்தே சொல்லப்பட்டுவருவதால் பெண் மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதற்கான குடும்ப ஆதரவு குறிப்பாக கணவனின் ஆதரவு அவசியம். பிரசவம் நடக்கும்போது என்னுடைய மருத்துவனையில் கணவர் விரும்புகிறாரோ இல்லையோ அவர் உடன் இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிடுவேன்.  நார்மலோ சிசேரியனோ...  ‘நீங்க வாங்க, உங்களுக்கு ஒரு ஸ்டூல் போட்டு அமரவைக்கிறோம்.  அவங்க எவ்வளவு அவஸ்தைப் படறாங்கன்னு பாருங்க. ஒரு குழந்தை மட்டும் அந்த அறையில் பிறக்கவில்லை. ஓர் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பிறக்கிறார்கள்… என்பதுதான் உண்மை.  ஸ்டைலா நகத்தைக் கடிச்சிகிட்டு வெளியே நடந்துகிட்டு இருக்கலாம்னு நினைக்காதீங்க தம்பி… கண்டிப்பா உள்ளே வரணும்’ என்று சொல்வேன். சிலர்.. டாக்டர் எனக்கு மயக்கம் வரும்பாங்க.. கவலையே படாதீங்க.. பக்கத்திலேயே பெட் போட்டு உங்களுக்கு டிரிப்ஸ் ஏத்தி பாத்துக்க ஒரு நர்ஸையும் ஏற்பாடு பண்ணிவிடுவோம் என சொல்லி விடுதுதான் என் வழக்கம்.  அவங்க கூட இருக்கும்போது அந்த  பெண்ணுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நம்ம ஆள் ஒருத்தர் கூட இருக்காங்கன்னு… இதுபோல் நிறைய விஷயங்கள் இருக்கும். குழந்தையின் தொப்புள்கொடியை நாங்க அப்பாவைத்தான் வெட்டச் சொல்வோம். அப்பாவுடனான உறவு அங்கேயே தொடங்குகிறது.

கர்ப்ப காலங்களில் பயணம் என்றால் சுமார் 50-60 கிமீ தூரம் தாண்டி பயணம் செய்வதை நான் ஏற்பது இல்லை. இப்ப ஒரு விஷயம் வந்து இருக்கு. கர்ப்பமாக இருக்கும்போது வெளிநாடு உள்ளிட்ட இடங்களுக்குப் போய் போட்டோ ஷூட் எடுக்கும் பேபிமூன் என்ற பழக்கம் வந்துள்ளது. எல்லாம் நார்மலாக இருந்தால் இதில் ஒன்றும் தவறு இல்லை. இவங்க கர்ப்பம் ஆவதே 30-35 வயதில்.  இதற்காக சிகிச்சை எடுத்து கருவுருகிறார்கள். இந்த நேரத்தில் இதுபோன்ற பயணங்கள் சரி இல்லை என்று தடுத்துவிடுவோம்.

 சிலர் பிரசவத்துக்காக அம்மா வீடு செல்லவேண்டும் என்பார்கள். ஏழு மாதத்துக்கு முன்பே அங்கே போய் செட்டில் ஆகிவிடுங்கள். அங்கே  பிரசவம் பார்க்கப்போகும் மருத்துவருக்கும் அப்போதுதான் உங்களுடன் பழக்கம் ஏற்படும். பிரசவ முறைகள் எளிதாகும். கர்ப்ப காலத்தில் பைக் பயணம், கார் ஓட்டுதல் போன்றவற்றையும் தவிர்க்கச் சொல்லிவிடுவேன்.” என முடிக்கிறார் மருத்துவர் கனிமொழி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com