flood disrupted road

பேரிடர்களில் நிலவியல்: ஆய்வுகளும் பரிந்துரைகளும்

Published on

மும்பை, டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில் (TISS) பணியாற்றியபோது 12 ஆண்டுகளில் இருபது பேரிடர்களை ஆய்வு செய்தவர் பேராசிரியர் பாலமுருகன் குரு. இப்போது திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பூமியியல்(Geology) துறைத் தலைவராக இருக்கிறார். தான் ஆய்வுசெய்த சில பேரிடர்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

லே லடாக்

2010இல் லே லடாக் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு, Flash Flood வந்தது. லே மட்டுமில்லாமல் சுற்றியுள்ள 100 கிமீ பகுதியிலும் கடும் பாதிப்பு. அது ஒரு வறட்சியான குளிர்ந்த பகுதி Cold Desert. ஆண்டுக்கு மொத்ததமே 10 செமீ மழைதான். தண்ணீரே இல்லை. ஊற்று நீர்தான். பனிக்கட்டி கோடையில் உருகி, அதைப் பயன்படுத்துவார்கள். நீர் மேலாண்மை அருமையாக இருக்கும்.

பேரிடர் ஆகஸ்டில் நிகழ்ந்தும் உடனே போகமுடியவில்லை. அக்டோபர்- டிசம்பர் அதிக பனிப்பொழிவு இருந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் செல்லமுடிந்தது. சேதாரம் அதிகமாக இருந்தது. காரணம், அதுவரை அந்த ஊரில் அவ்வளவு மழையை மக்கள் பார்த்ததே இல்லை.

மழையே பெய்யாத மலைப்பகுதி என்பதால் ஓடைகளோ, சிற்றாறுகளோ அங்கு பெரிதாக இல்லை. நீர்வழித் தடங்கள் இருந்தால் அவற்றின் வழியாக வெள்ளம் வடிந்திருக்கும் வாய்ப்பு அங்கு இல்லை. நாங்கள் ஆய்வை முடித்து, மூன்று பரிந்துரைகளைக் கொடுத்தோம்.

ஒன்று, இருக்கும் ஓடைகளை அகலப்படுத்த வேண்டும். அகலப்படுத்த முடியாத இடங்களில் ஆழப்படுத்த வேண்டும். பல இடங்களில் வளைவான ஓடைகளில் வெள்ளம் குறுக்கே பாய்ந்த நிலையில், அவற்றின் கரையை பலப்படுத்தக் கூறினோம்.

அப்போது, லே லடாக் மலைப்பகுதி தன்னாட்சி கவுன்சில் மூலம் நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் புனரமைப்புப் பணிகளைச் செய்தார்கள். அடுத்த ஆண்டு போனபோது முக்கால்வாசி முடித்திருந்தார்கள். 2013இல் மீண்டும் சென்றபோது, பாதிப்புகளை சரிசெய்துவிட்டார்கள். அப்போது, சுற்றுலா பயணிகள் அதிகரித்துவிட்டார்கள்; குடிநீருக்கு ஏதாவது செய்யமுடியுமா எனக் கேட்டார்கள். அதற்கும் ஒரு திட்டத்தைக் கொடுத்தோம். சுமார் 8 ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் சிந்து நதியிலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லே லடாக் பகுதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து மோட்டார் மூலமாக அல்லாமல் புவியீர்ப்பு விசை மூலம் தானாகவே நீர் மேட்டிலிருந்து பள்ளத்துக்கு வரும் முறையைச் செயல்படுத்த வைத்தோம். ஊற்று நீரையும்கூட இந்த முறையில் கொண்டுசெல்லப் பரிந்துரைத்தோம்.

சிக்கிம்

2011இல் சிக்கிமில் நிலநடுக்கத்தைப் போய்ப் பார்த்தோம். அதில் நிலச்சரிவும் சேர்ந்துகொண்டது. மலைப்பகுதியில் இப்படி ஒரு வாய்ப்பு உண்டு. இரண்டையும் ஆய்வு செய்தோம். இதைத் தொடர்ந்து சமூகப் பங்கேற்பு பேரிடர் ஆபத்துக்குறைப்புத் திட்டத்தைச் Community Based Disaster Risk Reduction செயல்படுத்தினோம். ஊருக்கு இரண்டு பேரைத் தேர்வுசெய்து, நிலச்சரிவோ நிலநடுக்கமோ ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிப்பது. சிக்கிம், அதையொட்டிய மேற்குவங்கத்தின் காளிமங் ஆகிய பகுதிகளில் அரசு உதவியுடன் தன்னார்வ அமைப்புகள் மூலம் பயிற்சி அளித்தோம். அடுத்து வந்த ஆண்டுகளில் உடைமைகளை இழந்தாலும் உயிர்களை இழக்காத நிலையை அதிகப்படுத்தியது.

அதற்கு முன்னரே அங்கு ஒரு நடைமுறை இருந்தது. இப்படி பேரிடர் நிகழும் இடங்களில், கிராம உணவு வங்கி என உண்டு. பேரிடர் நிகழ்ந்தால் மக்களே தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வார்கள். மேற்குவங்கம், அசாம், ஒடிசா, பீகார், ம.பி., உ.பி.யில் வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் இப்படியொரு அமைப்பு உண்டு. அரசின் உதவியுடன் இப்படியொரு ஏற்பாடு.

உத்தராகண்ட்

2013இல் உத்தராகண்ட் மாநிலத்தில் இமாலயன் சுனாமி எனச் சொல்லப்படும் நிலச்சரிவு. அங்கு சென்று திரும்பும்வழியில் உத்தரகாசியில் முக்கிய சாலையில் புதிதாக ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. நான்கு நாள்கள் அங்கேயே உட்கார்ந்துவிட்டோம். மற்ற இடங்களில் மீண்டும் ஆய்வுப் பணிகளில் இறங்கிவிட்டோம். அந்தமாதிரி சமயங்களில் போக்குவரத்து தடைபட்டுவிடும். மழை பெய்தால் ஹெலிகாப்டர், டிரோன் வைத்தும் எதையும் செய்யமுடியாது. உணவு, மருத்துவம், பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுசெல்ல முடியாது. அரசோ வேறுயாருமோ உதவிக்கு வரமுடியாது; அப்போது மக்கள் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்கான திட்டம்தான் பயன்பட்டது.

பீகாரில் சீட்டாமாரி ஆற்றில் வெள்ளம். இது நேபாள எல்லையில் இருக்கிறது. அங்கு ஆறு சிறுத்தையைப் போல பாய்ந்துவரும் என்பதால் சீட்டாமாரி என்று பெயர். அந்த அளவுக்கு அங்கு வெள்ள பாதிப்பும் அதிகம். ஆண்டுமுழுக்க நீரோட்டம் இருப்பதால் கரைகளைப் பலப்படுத்துமாறு பரிந்துரை செய்தோம்.

5 மண்டலங்கள்

இந்திய அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் என 5 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அடிக்கடி நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுவது ஐந்தாவது மண்டலம். இதில் இமயமலை, குஜராத்தின் கட்ச் பகுதிகள் உள்ளன.

நான்காவது மண்டலத்தில் இமயமலையின் சில பகுதிகள், குஜராத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள்.

மேற்குத்தொடர்ச்சி மலை, உ.பி., ம.பி., ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் சில பகுதிகள், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் ஆகியவை மூன்றாவது மண்டலத்தில் வருகின்றன.

இரண்டாவதில் மற்ற பகுதிகள் இடம்பெறுகின்றன.

ஒன்றாவது மண்டலம் என்பது பழைமையான பாறைகளைக் கொண்ட மிகக் குறைவான வாய்ப்புள்ள பகுதிகள்.

என்ன ஆய்வுசெய்கிறோம்?

குறிப்பிட்ட இடத்துக்குப் போய் அது நகரமோ கிராமமோ மாவட்டமோ மாநிலமோ அந்த இடத்தில் என்னென்ன பேரிடர் நிகழ வாய்ப்பு இருக்கிறது என ஆய்வுசெய்வோம். நிலச்சரிவு என்றால் எந்தெந்த இடங்களில், எந்தெந்தப் பாதைகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று வரைபடம் தயாரித்துக் கொடுப்போம். செயற்கைக்கோள் படங்களையும் தொலையுணர்வுக் (Remote Sensing) கருவிகளையும் புவித் தகவல் அறிவியல் (GIS) மூலம் காரணங்களை அறிந்து, இன்ன பகுதிகளில் நடக்கலாம், மழை பெய்தால் இன்ன பகுதிகளில் அதிகமாக நடக்கலாம் என்கிறபடி சொல்வோம். அப்படி அங்கு நிகழ்ந்தால் எப்படியான கட்டுமானங்களைச் செய்வது என்பதைச் சொல்வோம்.

மக்கள்தொகையையும் ஆய்வுசெய்வோம். பகல் நேரம், இரவு நேரம் என்ற கணக்கும் முக்கியம். பகலில் எல்லாரும் வேலைக்குப் போய் விழிப்பில் இருப்பார்கள். குஜராத்தில் 2001 ஆம் ஆண்டு நடந்த பூகம்பத்தில குடியரசுதினத்துக்கு எல்லாரும் தயாராக இருந்த சமயத்தில் நடந்ததால் உயிர்ச் சேதம் குறைவு. அதுவே இரவில் நிகழ்ந்திருந்தால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.

இதைப் போல, வெள்ளத்திலும் எந்தெந்தப் பகுதியில் அதிகமாக, குறைவாக நடக்க வாய்ப்பு என வகைப்படுத்தலாம். மிக அதிக வாய்ப்பு, அதிகம், குறைவு, மிகக் குறைவான வாய்ப்பு எனச் சொல்லமுடியும். லே லடாக், அசாம் மாநிலங்களில் செய்தோம். அதுபோல 2015இல் நம் கடலூர் மாவட்டத்தில்கூட வெள்ள ஆய்வு செய்திருக்கிறோம். சுழல் காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டன. மர நடவு குறித்து மட்டுமே பரிந்துரை செய்தோம்.

புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை எந்த இடங்களில் அதிகமான முறை கரையைக் கடந்திருக்கிறது, அந்த இடங்களில் மக்கள்தொகை, கால்நடைகள் எண்ணிக்கை எப்படி? மக்களை மட்டும் காப்பாற்றுவது எப்படி, அவர்களுடன் வசிக்கிற மற்ற விலங்குகளைக் காப்பது எப்படி என ஆய்வுசெய்து 100 ஆண்டுகளின் தரவுகளைக் கொடுத்திருக்கிறோம்.

இதன்படி, ஒடிசாவில் இப்படியான புயல் குடியிருப்புகள் அமைத்திருக்கிறார்கள். மக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஒரு வாரம், பத்து நாள்கள் பத்திரமாகத் தங்கிக்கொள்ளவும் உணவு, குடிநீர், மருந்து, எரிபொருள்கள் கிடைக்கும்படி அரசே தயார்செய்து வழங்குகிறது. புயல் காலத்தில் மட்டும் அங்கு போய் தங்கிக்கொள்ளலாம்.

மாநில, மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் கிராம அளவில் பேரிடர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும் எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம். மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்தப் பரிந்துரையை அளித்தோம். எந்த பாதிப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட இடமென்று இருக்கும்தானே? இதனால்தான் கிராம மட்டத்திலிருந்து சொல்லிக்கொடுக்கிறோம். ஒருவேளை தமிழ்நாடு முழுவதிலும் ஒரு பேரிடர் வருகிறது என வைத்துக்கொள்வோம்; அப்போது யார் யாருக்கு உதவமுடியும்? அவரவரே தற்காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? மாவட்ட அளவில் இதைச் சொல்லித்தர முடியாது.

தமிழகத்தில் எப்படி எதிர்கொள்வது?

தமிழ்நாட்டில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இருக்கிறது. மாவட்ட அளவில் எங்கெங்கு பேரிடர் வாய்ப்பு இருக்கிறதென வகுத்து வைத்திருக்கிறார்கள்.

மலைப்பகுதிகளான உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகியவற்றில் நிலச்சரிவுக்கான வாய்ப்பு அதிகம். தாழ்வான பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகம். குறிப்பிட்ட இடத்தைச் சொல்லமுடியாது; காரணம், மக்கள்தொகை அதிகம் என்பதால் பாதிப்பின் அளவு அதிகமாகலாம். எங்கேயும் முறைப்படி செய்திருந்தால் அளவைச் சொல்லமுடியும். இடத்துக்கு இடமே பாதிப்பின் அளவு மாறுபடும்.

சென்னையில் பாயும் அடையாற்றால் சைதாபேட்டை போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அதிகம். பரங்கிமலை போன்ற மேடான பகுதிகளில் பாதிப்பு குறைவு.

பூமியின் வரலாற்றைப் பார்த்தோமானால் விதவிதமான இயற்கைச் சீற்றங்கள் எக்கச்சக்கமாக நடந்திருக்கின்றன. இன்ன இடத்தில் இப்படி நடக்குமெனச் சொல்வோம்; ஆனால், சூழ்நிலை தர்க்கப்படி இருந்தால் அதன் பாதிப்பு குறைந்து போய்விடலாம். இந்த இடத்தில் வெள்ளம் என்றால் வடிகால், வாய்க்கால் சரியாக வைத்திருந்தால் தண்ணீர் அப்படியே ஓடிவிடும். இதேபோல, நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்பணைகள், தடுப்புச்சுவர், சாய்வு அதிகமாக இருந்தால் சாய்தலை முறைப்படுத்தினால் வழிப்படுத்தினாலோ பாதிப்பைக் குறைக்கலாம்.

வீடு கட்டவோ சாலை அமைக்கவோ மலைச்சரிவில் வெட்டியெடுத்தால் சரிவின் கூர்மை குறைந்துவிடுகிறது. சாலை அமைக்கும்முன்னரே அல்லது அமைக்கும்போதோ சாய்வுப் பகுதியில் சுவர் அமைக்கவேண்டும். உதகை, கொடைக்கானலில் இப்படி பார்க்கமுடியும். அந்த இடங்களில் மண்ணின் அடர்த்தி, அதன் தன்மை, மட்டம் எப்படி இருக்கிறதெனப் பார்த்து அந்தச் சுவரைக் கட்டுவார்கள். ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தன்மை இருக்கும்.

சரிவு மட்டும் இல்லை, 15 அம்சங்கள்!

இதில் பலரும் சொல்வதைப் போல இத்தனை டிகிரி சாய்வு என்பதை மட்டும் கட்டுமானம் செய்யும்போது கவனித்தால் போதாது. அது ஓர் அளவுகோல் மட்டுமே. அடுத்து, எவ்வலவு கனத்துக்கு மண் தடிமன் இருக்கிறது என்பது. மூன்றாவது, அதில் எவ்வளவு மட்டத்தில் மரம், செடிகொடிகள் இருக்கின்றன என்பது.. அதற்கு மேல் கட்டுமானம் ஏதும் நடந்திருக்கிறதா என்பது அடுத்தது. அதையடுத்தும் நிலத்தில் அதிர்வுகளை உண்டாக்கவும் தூண்டவும் செய்யும் காரணிகள் உள்ளனவா என்பது ஐந்தாவது... அதன் பிறகு, மழை அளவு, எந்த அளவுக்கு இடம் ஆற்றை ஒட்டி இருக்கிறது என 15 அம்சங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட இடம் வயநாட்டைப் போல ஆற்றை ஒட்டி எவ்வளவு தூரம் என்பதும் ஒரு காரணி. மழையும் முக்கியம்.

கட்டுமான ஒழுங்குமுறை (Building Code)

இந்த நிலைமைகளுக்கேற்ப பேரிடர் ஆபத்துக் குறைப்பு அம்சங்களுடன் கட்டுமானங்களைச் செய்யவேண்டும். இன்னின்ன பகுதிகளுக்கு இந்தக் கட்டுமானம்தான் என்கிற ஒழுங்குமுறையைக் (Code) கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

கிராம அளவில் நகர்ப்புறங்களில் வார்டு அளவில் பேரிடர் மேலாண்மைச் செயல்முறை இருக்கவேண்டும். எல்லா மாநிலங்களிலும் கிராம அளவிலான திட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா கிராமங்களிலும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சேதாரம், மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க கட்டாயம் கிராம மட்டத்தில் வரும்முன் காப்போம் எனும் மனநிலையைக் கொண்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் எந்த மேலாண்மைத் திட்டத்தையும் வெற்றிகரமாக ஆக்கமுடியாது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com