சங்க இலக்கியத்தில் கடவுள்

சங்க இலக்கியத்தில் கடவுள்

சங்க இலக்கியம் என்பது பற்றி இரண்டு கருத்துகள் உண்டு. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவையே சங்க இலக்கியம். இவற்றுடன் பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை சேர்ந்ததே சங்க இலக்கியம் என்பது இன்னொரு கருத்து. ஆனால் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்ற அளவில் நிறுத்துவதே சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் பின்வந்த கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலையில் சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் வர ஆரம்பிக்கின்றன.

புதிய வாழ்க்கை நடைமுறைகள், கடவுள் பற்றிய விஷயங்கள் மாற ஆரம்பிக்கின்றன. நம் கையில் இருக்கும் சங்க இலக்கியங்கள் கிமு 3-கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்தைச் சேர்க்கலாமா என்கிற கருத்து உண்டு. தெபொமீ போன்ற பெரிய அறிஞர்கள் அது ஒரு school of thought என்பர். தொடர்ந்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தமையால் அதில் பிற்காலக் கருத்துகளும்  சேர்ந்திருக்கலாம் என்பர்.

தொல்காப்பியத்தில் மிக முற்பட்ட கால செய்திகளும் இருக்கும்; பிற்பட்ட காலத்துச் செய்திகளும் இருக்கும். அதனால் இது சங்க இலக்கியத்துக்கு முற்பட்டது என்பவர்களும் உள்ளனர்; பிற்பட்டது எனச்  சொல்பவர்களும் உண்டு.

எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் இம்மூன்றையும்வைத்துக்கொண்டு இதிலிருக்கும் இறைக்கோட்பாடு என்னவெனப் பார்ப்போம். இவற்றில் கடவுள் வணக்கம் இருக்கிறதா எனில் இருக்கிறது. வேதங்களைப் பற்றி உள்ளதா? உள்ளது.

இதெல்லாம் எப்படி இருக்கிறது என்றால் பிற்காலத்தில் வந்த கடவுள் வணக்கம் போல இருக்காது. கிபி ஐந்து, ஏழு நூற்றாண்டுகளில் வரும் பக்தி இலக்கிய காலகட்டம் போல் இருக்காது. அதாவது நிறுவனம் சாராத பண்புதான் காணப்படும். வேத மரபு, ஆகம மரபு என இரண்டு உண்டு. பின்னால் வந்த பக்தி இலக்கியங்கள் ஆகமம் சார்ந்தது. அதனை வேள்வி செய்யும் அந்தணர் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆகமம் உருவ வழிபாடு கொண்டது. வேத மரபு உருவ வழிபாடுஇல்லாதது.

உருவ வழிபாடு வந்தபின்னர் தான் பெரும் கோவில்கள் உருவாயின. ஆனால் சங்க இலக்கிய காலத்தில் பெருங்கோயில்கள் இல்லை. முதன்முதலில் அளவில் பெரிய கோவிலானது கிபி எட்டாம் நூற்றாண்டில் ராசசிம்ம பல்லவனால்தான் கட்டப்பட்டது என்பர்.

தொல்காப்பியத்தில்,

மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

என்று வருகிறது.

மாயோன் என்றால் கரியோன். திருமால் என்பர். சேயோன் என்றால் முருகன். தொல்காப்பியத்தில்  சொல்வதுபோல் சங்க இலக்கியத்தில் வழிபாடுகள் உள்ளதா என்றால், அது வேறு மாதிரி உள்ளது.

தொல்காப்பியத்தில் சிவ பெருமான் இல்லை என்பது சுவாரசியமானது. சங்க இலக்கியங்களில் சிவன் என்ற பெயரே இல்லை. ஆனால் அவரைப் பிற்காலத்தில் குறிக்கும் அடைமொழிப் பெயர்கள் உண்டு.

பரிபாடலில் சிவன் என்ற சொல் இல்லை. ஆனால் இவற்றிலும் கலித்தொகையிலும் முருகன், சிவனுடைய மைந்தன் என்ற கண்ணோட்டம் உருவாகி விடுகிறது.

சங்க இலக்கியம் வேலன் வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால் அதுதான் வட இந்தியாவின் கார்த்திகேயா வழிபாடா என்று சொல்லமுடியாது. பின்னால் பெரிய அளவில் வணங்கப்படும் விநாயகர் வழிபாடு இல்லை. சங்ககால நூல்களில் பிள்ளையார் என்று சொல்லப்படுவது முருகனைத்தான் குறிக்கும். நச்சினார்க்கினியார் அப்படித்தான் உரை எழுதி  வைத்துள்ளார். பின்னால்தான் பிள்ளையார் எனும் சொல் விநாயகருக்கு வருகிறது. நமது வரலாற்றுப் படி பிள்ளையாரை முருகனின் தம்பி என்றும்  சொல்லலாம். ஏனெனில் சங்ககாலத்துக்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் தான் பிள்ளையார் வழிபாடு இங்கே வருகிறது. அதன் முன்பு இல்லை.

திருமுருகாற்றுப்படை என்ற நூல் சங்ககால நூற்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது. இதில் பழைய முருகனுக்கும் தகவல்கள் இருக்கும்; கார்த்திகேயனும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும். ஆடு அறுத்து முருகனுக்கு பலியிடும் செய்தி வரும். இது சங்ககால முறை. ஆனால் இந்த நூல் சைவ நூல்களான பதினோராம் திருமுறையிலும் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம். சைவ நூல்களில் கறிசமைத்து முருகக் கடவுளை வழிபடுவது பற்றி இதில் மட்டுமே வரும். எப்படி சேர்த்தார்கள் என்று தெரியாது. ஆக முருக வழிபாடு என்பது மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் முருகன் அழகு தெய்வம்; வீரதெய்வம் என்று சொல்லப்படுகிறது. கொஞ்சம் கோபமான தெய்வமாகவும் காட்டப்பட்டு, முருகு ஏறிவிட்டது தலைவிக்கு எனச் சொல்லி சாமியாடிகள் அதைச் சரிசெய்வது போன்றவை எல்லாம் சொல்லப்படுகிறது.

பத்துப்பாட்டு நூலான மதுரைக் காஞ்சியில் கோயில்கள் பற்றி வரும் குறிப்புகள் பௌத்த சமணக் கோவில்கள் பெரியதாக இருந்தன என்கின்றன. புத்தரைக் கும்பிடும்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை கவனமாகக் பிடித்துக்கொள்ளுங்கள் என்று வருகிறது. அவ்வளவு பெரிய கோவிலும் கூட்டமும் இருந்துள்ளன. இதனாலேயே இந்த இலக்கியமே கூட சற்றுப் பிற்பட்டதாக இருக்கலாம் என்று சொல்வர்.

வேத வேள்விகள், வேதம் படிப்பது போன்றவை பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேதம் என்பது எழுதாக் கிளவி. வேள்விகள் செய்யும்போது வேள்வித் தூண் அருகே ஆமையைக் கட்டிவைப்பர். அது அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டிருக்கும் என்றெல்லாம் வருகிறது.

எயினந்தை மகனார் இளங்கீரனார் எழுதிய அகநானுற்றுப் பாடலில் வேள்வித்தீயில் இடப்பட்ட ஆமை, தான் வாழ்ந்த குளத்துக்குச் செல்ல விரும்பியதைப் போல என வருகிறது.

கரியாப் பூவிற் பெரியோர் ஆர

அழலெழு தித்தியம் மடுத்த யாமை

நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு

(அகநானூறு 361)

பொ.வேல்சாமி
பொ.வேல்சாமி

வேள்வி செய்யவேண்டும் என்றால் வேள்வி செய்யும் தலைவனுக்கு குறைந்தபட்சம் நான்கு மனைவியராவது வேண்டும். புறநானூறு 166 ஆவது பாடலில் உவேசா அவர்கள் இதை அடிக்குறிப்பாக எழுதி இருப்பார். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பனைப்பற்றி ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல் அது.

கரிகாலன் வேள்வி செய்ததாகவும் அதில் அவன் மனைவியர் கலந்துகொண்டதாகவும் புறநானூற்றுப் பாடல் எண் 224-இல் கருங்குழல் ஆதனார் பாடுகின்றார்.

இதுபோன்ற யாகங்களை நிறையச் செய்துள்ளனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இப்படியெல்லாம் யாகங்களை பெருமையாக தங்களின் பெயர்களில் சூட்டிக்கொண்ட அரசர்கள் இருந்திருக்கின்றனர்.

மனிதன் மேன்மையடைய கடவுள் வழிபாடு வேண்டும் என்கிற கருத்து சங்க இலக்கியங்களில் உள்ளது. பரிபாடல், கலித்தொகையில் புராணக்கதைகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. திருப்பரங்குன்றத்தில் முருகன் இருந்ததாகவும் அங்கே வழிபட்டதாகவும் பரிபாடல் சொல்கிறது. இதில் 22 பாடல்கள் கிடைத்துள்ளன. அதில் திருமாலுக்கு 6, முருகனுக்கு 8, வைகை நதி குறித்து 8 பாடல்கள் உள்ளன.

சிவன் பற்றிப் பாடலேதும் கிடைக்கவில்லை. கலித்தொகையில் சிவனை ஒப்பிட்டுச் சொல்லும் செய்திகளும் மகாபாரதச் செய்திகளும் வரும்.

இந்திர விழா என்பது சிலப்பதிகாரத்தில் தான் வருகிறது. திருக்குறளிலும் இந்திரனே சாலும் கரி என்று வரி. இதற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் இந்திரன் எனும் சொல் இல்லை. நிறைவாக

 சங்க இலக்கியத்தில் சைவக் கடவுள், வைணவக் கடவுள், காளி, பௌத்தக் கடவுள், சமணக் கடவுள் எல்லோரையும் வணங்கும் போக்கு காணப்படுகிறது. வேதமதம், வேள்வி சார்ந்த மதம், வேள்வி சாராத மதம் என்ற குறிப்புகள் உள்ளன.

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஜூன், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com