
புத்தகத்தின் வழியாக எதையும் தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணமே என்னைப் புத்தக வாசிப்பாளனாகவும் சேகரிப்பாளனாகவும் மாற்றியது.!” – என பேசத்தொடங்கினார் ஶ்ரீவித்யா ராஜகோபாலன்.
காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜகோபாலன் காரைக்குடி முத்துப்பட்டினத்தில் உள்ள சிதம்பரம் அக்கிரகாரத்தில் வசித்து வருகிறார். இப்போது 76 வயது.
திருமணம் ஆன சில வருடங்களிலேயே இவரின் மனைவி இறந்துவிட, புத்தகங்களைக் காதலியாக்கிக் கொண்டவர் இவர். தன் வீட்டின் ஒரு பகுதியை நூலகமாக்கி, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்த, சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அடைகாத்து வருகிறார்.
“உயர்நிலைக் கல்வி படிக்கும் போது, எங்கள் ஊரான மன்னார்குடியில் கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூல் நிலையம் இருந்தது. ஏறக்குறைய இரண்டாயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் அது. அங்கு, எதைப் படித்தாலும் குறிப்பெடுத்துக் கொள்வேன்.
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த எனக்கு, 1973இல் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்து. அதனால், காரைக்குடிக்குக் குடிபெயர்ந்தேன். பணிக்கு சேர்ந்த நாள் முதல் புத்தகங்களை சேகரிக்க தொடங்கினேன். என்னுடைய சேகரிப்பில் உள்ள 80 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் பழைய புத்தகக் கடையில் வாங்கியவைதான். என்னிடம் உள்ள பல நூல்கள் பெரிய நூலகங்களில்கூட இல்லை.” என பெருமிதத்துடன் பேச்சைத் தொடர்ந்தார். “அகராதிகள், பேரகராதிகள், நிகண்டுகள், கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு, பயணம், ஆன்மிகம், சோதிடம், புராண இதிகாசங்கள், மருத்துவம் (சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி, அலோபதி) முதலான பல்துறை சார்ந்த நூல்களை உலகளாவிய தசம பகுப்பாய்வு முறையில் (UDC) பகுத்து வைத்துள்ளேன். இதனால் புத்தகங்களை எளிதாகத் தேடி எடுத்துவிடுவேன்.
என்னிடம், ஓலைச்சுவடிகளில் இருந்து முதன்முதலில் அச்சு வடிவம் கண்ட திருக்குறள் (ரோஜா முத்தையா நூலகத்திலும் ஒரு பிரதி உள்ளது), நாலடியார் பதிப்பு உள்ளது. 1812ஆம் ஆண்டு அச்சு வடிவம் கண்ட அந்நூல் 200 வருடங்களைக் கடந்த பின்பும் எவ்விதச் சிதைவுகளுக்கும் உட்படாதபடி பாதுகாத்து வருகிறேன்.
அதேபோல், இத்தாலியக் கட்டடக் கலைஞரான ஆண்ட்ரியா பல்லடியோ கட்டடக் கலை குறித்து எழுதி, 1601-ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற நூலின் பிரதிகளைச் சென்னையில் ஒரு சாலையோரக் கடையில் ஐம்பது ரூபாய்க்கு வாங்கி பாதுகாத்து வருகிறேன். இந்த புத்தகம் தான் என்னுடைய சேகரிப்பில் உள்ள நூல்களில் மிகப் பழமையானது. உலகில் உள்ள பல கட்டடங்களின் கலை நுணுக்கங்கள் அந்நூல்களில் உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த 64 திருவிளையாடல்களைக் கொண்ட பச்சிலை ஓவியம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த ஓவியங்கள் சேதமடைவதற்கு முன்னரே எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை நூலாக்கியுள்ளது பாண்டிச்சேரி பிரெஞ்சுக் கம்பெனி ஒன்று. இந்த நூல் கேட்பாரற்று, இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் காரைக்குடியில் உள்ள பழைய புத்தகக் கடையில் இருந்தது. இதனை விலைகொடுத்து வாங்கி, பைண்டு செய்து பாதுகாத்து வருகிறேன்.
தில்லி முகலாய மன்னரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் யானை, குதிரை, காலாட்படைகளின் ஊர்வலங்கள் 1.30 மீட்டர் நீளம் கொண்ட ஒரே தாளில் ஓவியமாக்கப்பட்டுள்ளது. அதுவும் என்னிடம் உள்ளது. மேலும் 16 அங்குலம் நீளமும், 11 அங்குலம் அகலமும் கொண்ட 'தி கிரேட் வேர்ல்டு அட்லஸ்' என்ற பெரிய நூலும், 8 கிலோ எடைகொண்ட ஆங்கில அகராதியும் என்னிடம் உள்ளது. நூலகத்திலுள்ள பழைய தமிழ் இலக்கிய நூல்களை அவை பதிப்பிக்கப்பட்ட ஆண்டுகளோடு சொல்கிறேன். வினோத ரச மஞ்சரி (1891, 1894, 1914, 1926, 1953, 1958, 1988), வினோத விசித்திர பத்திரிகை (1900), ஐங்குறுநூறு (உ.வே.சா -1903) பதிற்றுப்பத்து (உ.வே.சா. -1904), சூடாமணி நிகண்டு (1907, 1915), சதுரகராதி (1907), புதுமை நிகண்டு (1917, 1922), சீவகசிந்தாமணி (உ.வே.சா -1907), நற்றிணை (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் - 1915), திருக்குறள் (மு. ராகவ ஐயங்கார் - 1910), திருக்குறள் (பரி.உரை., ஆறுமுகநாவலர் பதி. - 1913) உட்பட சில பழைய நூல்கள் உள்ளன.
மேலும், பாரதிதாசனின் படைப்புகள், மு. வரதராசனின் படைப்புகள், திரு.வி.க. படைப்பு, சுத்தானந்த பாரதியின் படைப்புகள் முதலானவை முழுமையாகத் தொகுக்கப்பெற்று வைத்துள்ளேன்.
தனியொரு ஆளாக நூறாண்டுகளுக்கும் பழமையான புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகத்தைப் பராமரிப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. நூலக அறையின் ஜன்னல்களில் சல்லடைகளை பொருத்தியுள்ளேன். வெயில் நேரங்களில் சற்று நேரம் ஜன்னல்களைத் திறந்து வைப்பேன். அதிக வெயிலும் அதிக குளிரும் நூல்களை பாதிக்கும். அதில் கவனமாக இருப்பேன்.
ஆய்வாளர்கள், மாணவர்கள் வந்தால் அவர்களுக்கு தேவையானதை நானே ஜெராக்ஸ் போட்டுத் தருவேன். நூலகத்திலிருந்து நூல்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டேன்.” என்றவரிடம், உங்களுக்குப் பிறகு இந்த நூல்களை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேட்டோம்.
“அது குறித்து நான் யோசிக்கவில்லை. இந்திப் பழமொழி ஒன்று உண்டு. ஒவ்வொரு நெல்லிலும் அது யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களின் பெயர் இருக்கும் என. அதுபோலத்தான், என்னிடம் வந்து சேர்ந்த நூல்கள் எனக்குப் பிறகு உரியவர்களிடம் சென்று சேரும்.” என்கிறார்.
நூல்கள் மட்டுமல்ல; 300க்கும் மேற்பட்ட பாக்குவெட்டிகளும் இவர் சேகரத்தில் உள்ளன.