வைகை ஆற்றின் நடுவே நெற்றியில் வைக்கப்பட்ட துப்பாக்கி!
ரவி பேலட்

வைகை ஆற்றின் நடுவே நெற்றியில் வைக்கப்பட்ட துப்பாக்கி!

எண்பதுகள் காலகட்டத்தில் காவல் துறையின் செயல்பாடுகள்மீது அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் நம்பிக்கை இருந்தது.  நான் அப்பொழுது இராமநாதபுரம் மாவட்டம், இளையான்குடியில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றினேன். அங்கு நடந்த கொலைவழக்கு சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இராமநாதபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.இராமலிங்கம் ஐ.பி.எஸ். கட்டுப்பாட்டில் இளையான்குடி காவல் நிலையம் செயல்பட்டது. அவர் எதற்கும் கலங்காதவர்; அபாரமான நினைவாற்றல் மிக்கவர்; மாவட்டத்தின் ஒவ்வொரு சாலையையும் மூலை முடுக்கையும் அறிந்திருந்தார். முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கராத்தே கோபாலகிருஷ்ணன் வீரதீரச் செயல்கள் செய்வதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். காவல் துறையில் எல்லா மட்டங்களிலும் அலுவலர்கள் சேர்ந்து பணியாற்றினோம்.

1984 ஆம் ஆண்டு இறுதியில் சாலைக்கிராமம் ஊருக்கு அருகில் சமுத்திரம் என்ற குக்கிராமத்திற்குச் செல்லும் சிறிய சாலையில் நடுத்தர வயதான ஆண் சடலம் கிடந்தது. அந்தப் பிணத்தின் மார்பில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டவர் வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. நயினார்கோவில் காவல்நிலையத்தில் ஆதாயக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆய்வாளர் செல்வராஜ் புலன் விசாரணையைத் தொடங்கினார். நாட்கள் ஓடின. துப்பு எதுவும் துலங்கவில்லை.

கொலை வழக்கில் ஆய்வாளரின் புலன் விசாரணைக்கு உதவிடுமாறு காவல் கண்காணிப்பாளர் எனக்குக் குறிப்பாணை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய ஆணையில் கொலை செய்யப்பட்டவரின் இடது மார்பில் கத்தியால் குத்தப்பட்ட பல காயங்கள் இருந்துள்ளன என்றும் ஓராண்டுக்கு முன்னர் பரமக்குடி அருகில் உரப்புளி சாலையில் நடந்த ஆதாயக் கொலையினால் கொல்லப்பட்டவரின் இடது பக்க மார்பிலும் கத்தியால் குத்தப்பட்ட பல காயங்கள் காணப்பட்டுள்ளன என்றும் எனவே இரு கொலைகளையும் ஒரே கொலையாளி செய்திருக்கலாம் என்பதைப் புலன் விசாரணையில் கருத்தில்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. உரப்புளியில் கொலை செய்யப்பட்டவர் இளைஞர்; விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர். அவர் வைத்திருந்த பணமும் கைகடிகாரமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

புலன்விசாரணைக்காக எனக்கு போலீஸ் வேன் கொடுக்கப்பட்டது. முதலில் நயினார்கோவில் காவல் நிலையத்தில் கொலை வழக்குக் கோப்பைப் பெற்று ஆராய்ந்தேன். காவலர்களுடன் சாலைக்கிராமம் சென்று கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். சாலையின் இருபுறமும் வயல்வெளி; ஊர் தனியாக இருந்தது. கொலை செய்யப்பட்டவரின் சைக்கிள் அவருடைய ஊரை நோக்கி, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அவர் சாலைக்கிராமத்தில் இருந்து அவருடைய கிராமத்திற்குச் சென்றபோது, வழியில் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய பின்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது புலனாகியது.

சாலைக்கிராமம் வந்து விசாரணையைத் தொடர்ந்தேன். கொலை நடந்தது இரவுவேளை. கொலை செய்யப்பட்டவரை சம்பவம் நிகழ்ந்த அன்று மாலையில் சாலைக்கிராமத்தில் பலரும் வேவ்வேறு இடங்களில் பார்த்திருக்கின்றனர். அவர், சாராயக் கடையில் (அப்பொழுது இருந்தது) குடித்துவிட்டு உளறிக்கொண்டிருந்திருக்கிறார். அவர், ‘தன்னிடம் 4,000/- ரூபாய் இருக்கு, யார் வேண்டுமானாலும் சாராயம் குடியுங்க' என்று வீம்பாகப் பெருமை பேசியுள்ளார். சாராயக் கடையில் அவருடைய பேச்சைக் கேட்ட யாரோ ஒருவன் அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரைக் கொலைசெய்து பணத்தைக் களவாடிச் சென்று இருக்கலாம் என்று யூகித்தேன். அன்றிரவு அவர் திரையரங்கு சென்று சினிமா பார்க்கச் சென்று போதையில் தூங்கிய தகவலும் பின்னர் தெரிய வந்தது.

சம்பவம் நடந்த அன்று சாலைக்கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் ஒயிலாட்டம் ஆட வந்தவர்கள் சாராயம் குடிக்கச் சென்றதை அறிந்து ஒயிலாட்ட வாத்தியாரை அழைத்து விசாரித்தேன். கொலை செய்தது ஒயிலாட்ட வாத்தியாராக இருக்கலாம் என்று சின்ன சந்தேகம். அன்று வாத்தியாரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார் என்று தெரிந்தது. யார் அவர் என்று வாத்தியாரிடம் கேட்டபோது, அரியனேந்தலைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்று சொன்னார். சரி, ராமச்சந்திரனை நாளைக்கு விசாரணைக்கு அழைத்து வாருங்கள் என்று அவரிடம் சொல்லி அனுப்பினேன்.

மறுநாள் வாத்தியார் மட்டும் வந்தார். ராமச்சந்திரன் ஊரில் இல்லை என்றும், வெளியூர் சென்று இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவரை அழைத்து வருவதாகவும் சொன்னார். ராமச்சந்திரன் முன்னாள் ராணுவத்தினர் என்றும் நல்லவர் என்றும் கூடுதல் தகவல் தந்தார். ‘சரி. ஒரு வாரத்திற்குள் அவரை அழைத்து வாங்க' என்று கவனம் இல்லாததுபோலச் சொல்லி அனுப்பினேன். ஆனால், ராமச்சந்திரன் மேல் சந்தேகம் ஏற்பட்டது. ராமச்சந்திரன் ஊரான அரியனேந்தலும், பரமக்குடி வழக்கில் கொலைசெய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஊரான உரப்புளியும் ஒரே பகுதியில் அருகருகே இருந்தன. அது, சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

ராமச்சந்திரனைப் பற்றி விசாரித்திட காவலர்களை அனுப்பினேன். ஆறு அடி உயரமும் திடகாத்திரமான உடலும் மிக்க ராமச்சந்திரன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் என்றும் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் என்பதையும் அறிந்தோம். தலையை மொட்டையடித்துக்கொண்டு திரிகின்ற ராமச்சந்திரன் அவ்வப்போது பரமக்குடிக்கு வந்து செல்கிற தகவலும் கூடுதலாகக் கிடைத்தது.

இதுதவிர புதிய தகவல் தெரிந்தது. பரமக்குடி வழக்கில் கொலையுண்ட கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக இறக்கவில்லை என்றும், கத்தியால் குத்தப்பட்டவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார் என்றும் அவரை விசாரித்த சார்பு ஆய்வாளரிடம் தன்னைக் கத்தியால் குத்தியது யார் என்று தெரியும் என்றும் குணமானபிறகு அவனைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது தெரிய வந்தது. அதாவது தன்னைக் குத்தியவனைக் குணமடைந்தபிறகு கொல்ல எண்ணியிருந்த விஏஒ இரு நாட்களில் இறந்து போனார். இருவரும் ஒரே  சாதியினர், ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதை அனுமானிக்க முடிந்தது.

தொடர்ந்த விசாரணைகளினால் சாலைக்கிராமத்தில் பின்வரும் தகவல்கள் கிடைத்தன: சம்பவம் நடந்த அன்று ராமச்சந்திரன் சாராயக் கடையில் குடித்தபோது, கொலையுண்டவர் போதையில் உளறிக் கொண்டிருந்தார்; அன்றிரவு வாடகை சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்த ராமச்சந்திரன், விடியும் முன்னரே கடைக்கு முன்னர் சைக்கிளை விட்டுச் சென்றுவிட்டார்; பரதவயல் கிராமத்திற்குச் சென்று ஒயிலாட்ட வாத்தியாரைப் பார்க்கவில்லை. யோசித்தபோது இரு கொலைகளையும் ராமச்சந்திரன்தான் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உறுதியானது. எனது சந்தேகங்களைக் காவல் ஆய்வாளரிடமும் காவல் துணைக் கண்காணிப்பாளரிடமும் தெரிவித்தேன். ராமச்சந்திரனைக் கைது செய்யும் பொறுப்பைப் பரமக்குடி சார்பு ஆய்வாளரிடம் டிஎஸ்பி ஒப்படைத்தார்.

நாட்கள் உருண்டோடின. ராமச்சந்திரன் தனது ஓய்வூதியத்தை வாங்கிட பரமக்குடி கருவூலம் வந்தபோது சிக்கினார். அவரை நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரு நாட்கள் நயமாகப் பேசி  விசாரணை செய்தேன்.  சந்தேகங்களுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் யாரையும் கொலை செய்யவில்லை என்று மறுத்தார். கல்லுளி மங்கன். காவல் துணைக் கண்காணிப்பாளரின் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் திருடிய கைகடிகாரம், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி போன்றவற்றைக் கைப்பற்றினால்தான் குற்றத்தை உறுதி செய்ய முடியும் என்று டிஎஸ்பியிடம் சொன்னேன்.

‘இரண்டு பேரைக் கொலை செய்துவிட்டு, உண்மை யைச் சொல்லாமல் அடம் பிடிக்கிற இவனை வெளியே விட்டால் இன்னும் எத்தனை பேரைக் கொல்வானோ, அவனைச் சுட்டுக் கொன்று விடலாமா?' என்று ஆவேசத்துடன் டிஎஸ்பி  சொன்னார். எனக்கும் அடங்காத கோபம்.  இரவுவேளை. நான் டிஎஸ்பியிடம் சொன்னேன்;‘சார், கடைசி சந்தர்ப்பமாக அவனை வைகை ஆற்றுக்கு அழைத்துப் போவோம். இரு கைகளையும் கண்களையும் கட்டி விடுவோம். அவனிடம் உன்னைச் சுட்டுக் கொல்லப் போகிறோம். உண்மையைச் சொல்லிவிடு என்று சொல்கிறேன். அவன் சொல்லிவிட்டால் நல்லது. ஒருக்கால் அவன்

ரவி பேலட்

சொல்லாவிட்டால் நீங்கள் அவனுடைய நெற்றிக்கு மேலே துப்பாக்கியால் சுடுங்கள். நான் உங்கள் கையைப் பிடித்து மேலே தூக்கிவிடுகிறேன். விஜயரங்கன் அவனுடைய கண்களைக் கட்டியிருக்கிற துணியை அவிழ்க்கட்டும். மீண்டும் சுடுவதுபோலச் செய்யுங்கள். அவன் உயிர் பயத்தில் உணமையைச் சொல்லி விடலாம்' ராமச்சந்திரனுக்கு புரோட்டா வாங்கிச் சாப்பிடக் கொடுத்தோம். ‘டிஸ்பி உன்னைச் சுட்டுக் கொல்ல முடிவு செய்துவிட்டார், உண்மையைச் சொல்லிவிடு' என்று நானும் விஜயரங்கனும் சொன்னோம்.  ‘இல்லவே இல்லை. நான் பார்க்காத குண்டா? சுட்டுக் கொல்லட்டும்' என்று கத்தினான்.

நள்ளிரவு 12 மணிக்கு அவனை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு பரமக்குடியில் இருந்து கிளம்பி உரப்புளி அருகே வைகை ஆற்றுக்குள் சென்றோம். சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக இருந்தன. எதுவும் நடக்கலாம் என்ற சூழல். ராமச்சந்திரனிடம் மீண்டும் விசாரித்தோம். அவன், ‘யாரையும் கொல்லவில்லை, என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்' என்றான்.

ராமச்சந்திரன் கண்கள் துணியினால் கட்டப்பட்டன. கைகள் ஏற்கெனவே விலங்கிடப்பட்டிருந்தன. அவனை மண்டியிட்டு அமரச் செய்தோம். சுற்றிலும் டார்ச் விளக்குகள் ஒளிர்ந்தன. ‘ டிஎஸ்பி உன்னைச் சுட்டுக் கொல்லப் போகிறார். விஏஓவின் வாட்சை என்ன செய்தாய் என்று மட்டும் சொல்லிவிடு, உன்னைச் சுடாமல் காப்பாற்றுகிறேன்' என்று உருக்கமான குரலில் அவனிடம் சொன்னேன். அவன், ‘சுட்டுக் கொல்லுங்கள்' என்றான்.

டிஎஸ்பி ரிவால்வாரை எடுத்துச் சிறிது பின்னே சென்று அவன் உச்சந்தலைக்கு மேலே குண்டு செல்லும்படி சுட்டார். இரவின் அமைதியைக் குலைத்தவாறு குண்டு சீறிப் பாய்ந்தது. ஏற்கெனவே திட்டமிட்டபடி நான் டிஎஸ்பியின் கையைப் பிடித்துக் கொண்டேன். அவன் கண் கட்டை விஜயரங்கன் அவிழ்த்துவிட்டார். டிஎஸ்பி அவனைச் சுட்டுக் கொல்ல முயன்றது உண்மை என்றும் குண்டு அவன் நெற்றியில் பாய்ந்திடாமல் அவனை நான் காப்பாற்றியதாகவும் நம்பினான்.

நான் அவனிடம் ‘ராமச்சந்திரா... வாட்ச் எங்கே என்று சொல்லிவிடு, வீணாகச் செத்துப் போகாதே' என்றேன். ‘வாட்ச்சை மதுரை அருகே சமயநல்லூரில் மனோகரன் என்பவனிடம் விற்றுவிட்டேன்' என்றான். எங்களுக்கு உயிர் வந்ததுபோல இருந்தது. ‘எந்த மனோகரன்?' என்ற எனது கேள்விக்கு ‘மெயின் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வீடு. மில்லில் வேலை பார்க்கிறார்' என்று பதில் சொன்னான்.  ‘மனோகரன் எனது பள்ளித் தோழன், என் ஊரும் சமயநல்லூர்தான்' என்று டிஎஸ்பியிடம் மெல்லச் சொன்னேன்.

எல்லோரும் திரும்பிவந்து வேனில் ஏறினோம். ராமச்சந்திரன், நான் எதுவும் செய்யவில்லை என்று மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறினான். ரிவால்வர் வெடித்த பயத்தில் அவன் சொன்னதுதான் உண்மை, அதை மாற்றிப் பேசுகிறான் என்று முடிவு செய்தோம்.

இரவோடு இரவாக மதுரைக்கு அருகிலுள்ள சமயநல்லூர் கிராமத்திற்கு வேனில் பயணித்தோம். காலை ஆறு மணிக்குப் பொழுது விடிந்துவிட்டது. எல்லோரையும் வேனில் இருக்கும்படி  சொல்லிவிட்டு நான் மட்டும் மனோகரன் வீட்டிற்குச் சென்றேன். மனோகரனிடம் நடந்தது எதுவும்

சொல்லாமல்,‘அரியனேந்தல் ராமச்சந்திரனிடம் ஏதாச்சும் வாங்கினாயா?' என்று கேட்டேன். அவன் ‘கை கடிகாரம் வாங்கினேன். ராமச்சந்திரன், சமயநல்லூரில் உள்ள அவனது உறவினர் தங்கச்சாமி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தபோது வாங்கினேன்,' என்றவன் அந்த வாட்சைச் சில மாதங்களுக்குப் பின்னர் சமயநல்லூருக்கு வந்திருந்த பரமக்குடிக்கு அருகிலுள்ள அதிகரை ஊர்க்காரரிடம் விற்றுவிட்டதாகச் சொன்னான்.

மனோகரனை அழைத்துக்கொண்டு அதிகரை ஊருக்குச் சென்றோம். அந்தக் கைக்கடிகாரம் கைப்பற்றப்பட்டது. எனது புலன் விசாரணைப் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. அந்த வாட்சை அடையாளம் காட்டிட வந்த விஏஓவின் தகப்பனார், ‘ஏண்டா இந்த வாட்சுக்கா என் பிள்ளையைக் கொன்றாய். என்னிடம் கேட்டிருந்தால் எத்தனை வாட்ச் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுத்திருப்பேன்' என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன். சரியான புலன் விசாரணையின் காரணமாக ராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டான்.

சில மாதங்களுக்குப் பின்னர் ராமச்சந்திரன் ஜாமீனில் வெளியே வந்தான். சாட்சியங்களைக் கோர்வை செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புலன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் செய்த தவறுகளால் ராமச்சந்திரன் விடுதலையானான்.

நான் அப்போது பணி மாறுதல் காரணமாகச்  சிவகங்கை தனிப்பிரிவில் பணியாற்றினேன்.

சிறையில் இருந்து விடுதலையான ராமச்சந்திரன் என்னைக் கத்தியால் குத்தப் போவதாகச் சிலரிடம் சொல்லியதை அறிந்தேன். அதேவேளையில் டிஎஸ்பி அவனைத் துப்பாக்கியால் சுட்டபோது அவனைக் காப்பற்றியது நான்தான் என்று சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.

சிறையில் இருந்து வெளியேவந்த ராமச்சந்திரனின் உயிரற்ற உடல் இரு வருடங்களுக்குப் பின்னர் தேவகோட்டை அருகே தூக்கில் தொங்கியநிலையில் காணப்பட்டு, காவல்துறையினால் தற்கொலை என வழக்குப் பதியப்பட்டது என்று கேள்விப்பட்டேன். சிலரின் மரணமே புதிர்தான்.

என்னைப் பொருத்தவரையில் காவல் கண்காணிப்பாளர் என்மீது நம்பிக்கை வைத்துப் புலன் விசாரணை செய்திடுமாறு ஒப்படைத்திட்ட இரு ஆதாயக் கொலை வழக்குகளிலும் உண்மையைக் கண்டறிந்த திருப்தி இப்போதும் எனக்கு இருக்கிறது.

(ந.குலோத்துங்க பாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு)

மே, 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com