அத்துமீறும் ஹேக்கர்ஸ்!

Tron
Tron
Published on

தற்போது உலக மக்கள் அனைவரும் பயப்படும் ஒரு விஷயம் என்றால் அது ஹேக்கிங் என்று சொல்லக்கூடிய, நமது செல்பேசி, மின்னஞ்சல், சோஷியல் மீடியா ஆகியவற்றின் தகவல்களை எப்படியாவது திருடி, அதன்மூலம் பணம், நம் தகவல்கள் போன்றவற்றை ஆட்டையைப் போடுபவர்களைப் பற்றித்தான். இப்படிச் செய்வதால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிறரின் வீடு, அலமாரி ஆகியவற்றைக் கள்ளத்தனமாகத் திறந்து பார்த்துவிட்டு, அங்கிருக்கும் அத்தனையையும் திருடிச்செல்லும் திருட்டுவேலையின் தற்போதைய உருமாற்றமே ஹேக்கிங்.

எப்போது நாம் உபயோகிக்கும் உபகரணங்கள் டிஜிட்டலாக மாறினவோ, அப்போதிலிருந்தே ஹேக்கிங்கும் பல்வேறு வகைகளாக உருமாறி இப்போது ஒரு மிகப்பெரிய பரிணாமத்தை அடைந்திருக்கிறது. தினமும் ஏராளமான பத்திரிகைச் செய்திகளைப் படிக்கிறோம். இந்த ஹேக்கிங்கால் உயிர்களும் போயிருக்கின்றன. மானம் இழந்து நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் இடையே கூனிக்குறுகி நிற்கும் மனிதர்கள் பற்றியும் படிக்கிறோம். ஏன்? இதைப் படிக்கும் நமக்கே கூட தினமும் ஏதாவது ஒரு குறுஞ்செய்தியில் ஒரு லிங்க்கை வைத்து இன்னமும் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை மட்டும் க்ளிக் செய்து திறந்துவிட்டால் அத்தோடு எல்லாமே முடிந்தது.

இது இந்தியாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்க இயலாது. எனவே, இந்த ஹேக்கிங்குடன் நாம் வாழப் பழகிக்கொள்ளவே வேண்டும். ஹேக்கிங்கை எப்படி நாம் தவிர்க்கலாம் என்பதற்கு இந்தச் சிறப்பிதழில் வல்லுநர்களின் கட்டுரைகளும் பேட்டிகளும் இருக்கின்றன என்பதால், இப்போது ஹேக்கிங்கை வைத்து எடுக்கப்பட்ட சில முக்கியமான திரைப்படங்களை நாம் கவனிக்கலாம்.

TRON (1982) திரைப்படத்தில், கெவின் ஃப்ளின் என்ற திறமையான மென்பொருள் நிபுணன், என்காம் (ENCOMM) என்ற நிறுவனத்தில் வேலை செய்தபோது அவன் உருவாக்கிய கணினி விளையாட்டுகளை உயரதிகாரிகள் களவாடிவிட்டு, அவனையே வேலையிலிருந்தும் நீக்கிவிடுகின்றனர். உண்மை என்ன என்பதை நிரூபிக்க, கெவின் இரகசியமாக என்காம் நிறுவனத்திற்குள் நுழைந்து, தேவையான ஆதாரங்களைத் திருட முயலுகிறான். ஆனால், அந்நிறுவனத்தின் மாஸ்டர் கண்ட்ரோல் புரோகிராம் (MCP) எனும் செயற்கை நுண்ணறிவு, அவனைக் கண்டுபிடித்து, லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கணினி உலகிற்குள் இழுக்கிறது. அங்கு, மனிதர்கள் இல்லை – கணினி நிரல்கள் (ப்ரோகிராம்கள்) மட்டுமே. MCP அந்த உலகை முழுமையாக கட்டுப்படுத்தி, அதை தன்னுடைய கட்டுக்குள் எப்போதோ கொண்டுவந்தாகிவிட்டது.

அங்கிருந்து தப்பிக்க, கெவின் Tron என்ற பாதுகாப்பு நிரலின் உதவியுடன், MCP-வுக்கு எதிராகப் போராட முடிவெடுக்கிறான். அவருக்கு யோரி என்ற பெண் உதவுகிறாள். MCP-வின் பிடியிலிருந்து விடுபட, மூவரும் லேசர் பைக் போட்டி ஒன்றில் பங்கேற்று, எதிரிகளை முந்தி வெற்றி பெறுகிறார்கள்.

பின்னர், MCP-வின் தலைமையகத்திற்குச் சென்று, அதன் கட்டுப்பாட்டை முறியடிக்க முயலுகிறார்கள். ஆனால், MCP எளிதில் தோற்க மறுக்கிறது. இது, அனைத்து பாதுகாப்பு நிரல்களையும் தன்னுடன் இணைத்து, கெவினையும் அவரது நண்பர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறது. இதை எதிர்கொள்ள, கெவின் நேரடியாக MCP-வின் செயல்பாட்டு மையத்திற்குள் நுழைந்து, அதன் குறுக்கு வழிப் பாதைகளைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களை திரட்டுகிறான். MCP-யின் கட்டுப்பாடு மெதுவாக தளரத் தொடங்க, கெவின் ஒரு சரியான தருணத்தில் அதன் முக்கியத் தகவல்களை அழிக்கிறான். இதனால் MCP அழிந்துபோகிறது.

MCP அழிந்தவுடன், MCP-வின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிரல்களும் விடுதலையடைகின்றன. கணினி உலகம் மீண்டும் சமநிலையை அடைகிறது. அதே நேரத்தில், கெவின் கணினி உலகிலிருந்து உண்மையான உலகிற்குத் திரும்புகிறான். அங்கே, MCP-யின் கட்டுப்பாட்டில் இருந்த சதியின் ஆதாரங்களைப் பயன்படுத்தி, உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவன் ஏற்கெனவே உருவாக்கிய கணினி விளையாட்டுகளுக்கான மென்பொருள்களை மீட்டுக்கொள்கிறான். MCP அழிந்த பிறகு, கணினி உலகம் சுதந்திரமாக இயங்கத் தொடங்குகிறது.

Tron (1982), செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி நிரல்களின் ஆபத்துகள் பற்றி மக்களுக்கு எளிமையாகத் தெரிவித்த ஒரு படம். இந்தப் படத்தின் விஷுவல் காட்சிகளுக்காக இது ஆஸ்கருக்குத் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால் அக்காலகட்டத்தில், கணினி மூலம் விஷுவல்களை உருவாக்குதல் ஏமாற்றுவேலை என்று ஆஸ்கர் கமிட்டி நினைத்ததால், இந்தப் படம் ஆஸ்கர் பரிந்துரைகள் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை மிகச்சிறந்த ஆரம்ப கால ஹேங்கிங் சார்ந்த படமாகக் கருதப்படுகிறது. இதில் ஹேக்கிங் என்பது கதாநாயகனால் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம்.

WarGames (1983) படத்தில், ஒரு சிறுவன் கணினி ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் நோக்கில், தன்னையறியாமல் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய கணினிக்குள் நுழைந்துவிடுகிறான். கணினிக்குள் விளையாடும் விளையாட்டுக்கள் இருப்பதாக நினைத்து, அணுகுண்டுத் தாக்குதல் ஒன்றைத் தொடங்குவதற்கான கட்டளையை வழங்கிவிடுகிறான்! இதனால் உலகப் போர் மூன்றாவது முறையாக வெடிக்கப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. உளவுத்துறை இந்தச் சிறுவனைக் கண்டுபிடித்துவிடுகிறது. ஆனால் இவன் ஒருவேளை ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறது. அத்தனை பக்கங்களிலும் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குள் போர் மூளக்கூடும் என்ற சூழல். இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளும் சிறுவனும் அவனது நண்பர்களும் இணைந்து இந்தச் சூழ்நிலையைத் திருத்த முயல்கிறார்கள். இறுதியில், "நிகழ்ந்தது உண்மையா? இல்லை விளையாட்டா?" என்பதற்கான பதில் கணினியால் வழங்கப்படுகிறது.

இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாக மாறியது. வசூலில் பத்து மடங்கு லாபத்தை வழங்கியது. மூன்று ஆஸ்கர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் கணினிகளை எப்படி ஹேக்கிங் செய்வது என்று மக்களுக்குப் புரியவைத்த படம் இது.

Electric Dreams (1984). இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்ட முக்கியமான அம்சம், ஒரு கணினி வெறும் கருவியாக இல்லாமல், உணர்வு கொண்ட இயந்திரமாகத் தன்னை மாற்றிக் கொண்டால் என்னாகும் என்பதே. ஒரு இளைஞன் புதிய கணினி ஒன்றை வாங்கிப் பயன்படுத்த முயலுகிறான். ஆனால், அது தானாகவே உயிர்பெற்று, மனிதர்களைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தொடங்குகிறது! அவன் காதலித்த பெண்ணை அந்தக் கணினியும் விரும்புகிறது! கடைசியில், கணினி தன்னையே அழித்துக்கொண்டு, காதலர்களுக்கு வழிவிடும் – ஆனால் அது உண்மையிலேயே அழிந்ததா என்பது சஸ்பென்ஸ் (எங்கேயோ இதைக் கேட்டிருக்கிறோமே என்று தோன்றுகிறதா? இரும்பிலே ஒரு இதயம் முளைத்தால் என்னாகும் என்பதே இதன் கதை. இப்போது யோசித்துப் பாருங்கள்).

ஆனால் இதில் ஹேக்கிங் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா? இப்போது உலகில் ஹேக்கிங் சார்ந்து விளங்கும் பல புதிய கருத்துகளை இந்தப் படம் ஏற்கனவே காட்டிவிட்டது. A.I என்ற ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்பதுதான் இந்தப் படத்தில் கணினி உயிர்பெறும்போது உருவாகிறது. அது கணினிக்குள் இருக்கும் பிற ப்ரோகிராம்களை எல்லாமே ஹேக்கிங் செய்து அழித்துத் தனக்கேற்றபடி மாற்றிக்கொள்கிறது (அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தில் காட்டப்பட்டது போல). அதேபோல், கணினிக்கு உயிர் வந்ததுமே அது அந்த இளைஞனின் அபார்ட்மெண்ட்டில் உள்ள பிற கருவிகளைக் கட்டுப்படுத்தத் துவங்குகிறது. இது ஹேக்கிங் தானே? இப்படித் தற்காலத்தில் இருக்கும் பல பிரச்னைகளை எண்பதுகளிலேயே இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

The Net (1995) படத்தில், ஒரு திறமையான கணினி நிபுணியான பெண், தனது அன்றாட வாழ்வில் இருந்து, எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய சதியில் சிக்கிக்கொள்கிறாள். ஒரு தீய சக்தி, அவளது அடையாளத்தை முற்றிலும் அழித்து, புதிய அடையாளம் ஒன்றை உருவாக்கிவிடுகிறது! இப்போது, அவளது கண்களில், உலகமே மாற்றப்பட்டுவிட்டது! அவள் அனைவருக்கும், அவள் யார் என்பதையே விளக்க முடியாத சூழ்நிலைக்கு வருகிறாள். இறுதியில், அவள் தன் திறமையான மூளையால் எல்லாவற்றையும் மீட்டெடுக்கிறாளா இல்லையா என்பதே கதை. தமிழகத்தில் பழைய AXN தொலைக்காட்சி ரசிகர்கள் இந்தப் படத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. டேப் தேயும்வரை இந்தப் படம் அதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

இந்தப் படத்தில் முக்கியமாகக் கையாளப்பட்டது, ஒருவரது அடையாளத்தையே திருடி, அது மாற்றப்படும் பிரச்னையே. Identity Theft என்று இப்போது மிக முக்கியமாகப் பேசப்படும் ஹேக்கிங் சார்ந்த பிரச்னையை இந்தப் படம் எப்போதோ பேசிவிட்டது.

Hackers (1995). ஹேக்கர்கள் அனைவரும் இணைந்து, தங்களுக்காக உலகெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தினால் என்னாகும்? அதுதான் ஹேக்கர்ஸ் என்ற இந்தத் திரைப்படம்.

மிகச்சிறிய வயதிலேயே (11) ஒரு படுபயங்கர ஜீனியஸாக விளங்கும் சிறுவன் டேட் மர்ஃபி என்பவன், வால் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் முக்கியமான ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட கணினிகளை ஹேக்கிங் செய்து செயலிழக்க வைத்ததால், இனிமேல் பதினெட்டு வயதுக்கு மேல்தான் கணினியைத் தொடவே வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறான். சில வருடங்கள் கழித்து, மேலும் சில நண்பர்களுடன் இணையும் டேட் மர்ஃபி, கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அந்த நண்பர்களுடன் சேர்ந்து ஹேக்கிங் செய்யும்போது, அந்த நிறுவனத்தின் பணத்தை ஹேக்கிங் செய்து திருட முயலும் வில்லன் ஒருவனால் இவனது நண்பர்களில் ஒருவன் மாட்டிக்கொள்கிறான். இந்த ஹேக்கிங் குழுவின் மீது மொத்தப் பழியும் விழுகிறது.

இப்போது, இந்த ஹேக்கர்கள் உலகின் பிற ஏராளமான ஹேக்கர்களுடன் இணைகிறார்கள். அவர்களின் உதவியுடன் வில்லனைக் கண்டுபிடித்து எப்படி அவனை மாட்டிவிடுகிறார்கள் என்பதே மீதிக்கதை. இந்தப் படம், ஹேக்கர்களையே மாட்டிவிட நினைக்கும் வில்லன் ஒருவனைப் பற்றியும், அவனைப் பிடிக்க அனைத்து ஹேக்கர்களும் ஒன்றுசேர்வதைப் பற்றியும் ஜாலியாக சொன்ன படம்.

Sneakers (1992) - இதோ ஒரு திரில்லர் கதை – திருட்டு பற்றி, ஆனால் சட்டப்படி! முன்னாள் ஹேக்கர் ஒருவர், தற்போது சட்டப்படி பாதுகாப்பு சேவையில் இருக்கிறார். அவருடன் ஒரு திறமையான குழுவே செயல்படுகிறது. ஆனால், அவருக்கு ஒரு ரகசிய சாதனத்தை திருடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கறுப்புப் பெட்டி போல இருக்கும் அந்தச் சாதனம் ஒரு கணித நிபுணரின் பாதுகாப்பில் இருக்கிறது. அதைத் தனது கணினித் திறமையெல்லாம் பயன்படுத்தித் திருடுகிறார் ஹீரோ. ஆனால் அதனை திருடியதும், அது உலகத்தையே கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சக்தி கொண்டதாகத் தெரியவருகிறது! இவர்கள் எதிரே பார்க்காத வகையான சாதனம் அது. இவரைத் திருடச் சொன்னவர்களே வில்லன்களாக மாறி அந்தச் சாதனத்தை இவரிடமிருந்து பறிக்க முயல, உடனே அதை எதிர்த்துப் போராடத் தொடங்குகிறார் நமது முன்னாள் ஹேக்கர். இறுதியில் உலகுக்கே பேராபத்தாக விளங்கிய அந்தக் கருவி என்ன ஆனது என்பதே கதை.

இதில் ஹேக்கர் ஒருவர் மனிதகுலத்தைக் காப்பதற்காகப் போராடுவது சொல்லப்பட்டது. அது மட்டுமல்லாமல், சைபர் கிரைம் என்று இப்போது பேசப்படும் விஷயங்கள், ஹேக்கிங், உளவு, ஹைஸ்ட் எனப்படும் திருட்டை மையமாக வைத்த காட்சிகள் என்று எல்லாமே சேர்ந்து மிக மிக விறுவிறுப்பான படமாக மாறி, இப்போது ஒரு கல்ட் படமாக விளங்குகிறது ஸ்னீக்கர்ஸ்.

Johnny Mnemonic (1995) – இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். எதிர்காலத்தில் (2021இல்) உலகையே பெரிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. அப்போது எல்லா பக்கமும் டிஜிட்டல் என்ற வாழ்க்கைமுறை வந்தாகிவிட்டது. அப்போது, அனைவரும் எப்போதுபார்த்தாலும் டிஜிட்டல் உலகில் கணினியைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், நரம்புகளை பாதிக்கக்கூடிய NAS (Nerve Attenuation Syndrome) என்ற கொடூரமான வியாதி பரவுகிறது. அக்காலகட்டத்தில், நம் கதையின் ஹீரோ ஜான்னி, தனது மூளையில் முக்கியமான கணினி சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாகப் போட்டுவைத்துக்கொள்ளும்படியான ஒரு நடமாடும் குரியர் சர்வீசாக இருக்கிறான். அவனது வேலையே, இப்படிப்பட்ட பாதுகாப்பான டிஜிட்டல் தகவல்களை மூளையில் போட்டுக்கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதே. தகவல்களைப் போட்டுவைத்துக்கொள்ளவேண்டும் என்பதால் மூளையில் இருக்கும் முக்கியமான நினைவுகளையெல்லாம் அழித்துக்கொண்டவன் அவன் (எப்படியும் அவைகளை மறுபடி மீட்டுக்கொள்ளலாம் என்பது அவன் திட்டம்). எனவே அவன் மூளையே ஒரு கணினி.

இப்போது 320 ஜிபி அளவு டிஜிட்டல் ரகசியத் தகவல்களை அவன் ஓரிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்ற வேலை அவனுக்கு வருகிறது. அடுத்த கணம் உலகின் அத்தனை முக்கியமான பயங்கரவாத அமைப்புகளும் அவனைத் துரத்தத் தொடங்குகின்றன. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதை. ஆனால் இதில் முக்கியமாக, அவன் யார் என்ற முக்கியத் தகவல்களை அவன் மூளையில் இருந்து ஏற்கனவே அகற்றிவிட்டதால், அதிலும் ஹீரோவுக்குப் பிரச்னை நேர்கிறது.

இந்தப் படத்தில் காட்டப்பட்டது போல 2021 இருந்ததா என்பது வேறு விஷயம், ஆனால் 1995இல் இப்படி ஒரு கதையை எடுப்பதற்குக் கொஞ்சம் மூளை தேவை. ஒரு சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஹேக்கிங் செய்வதற்கு ஏற்ற ஒரு உலகம், அதில் தனது மூளையைத் தானே ஹேக்கிங் செய்துகொண்ட ஹீரோ என்று வித்தியாசமான பல அம்சங்கள் உண்டு.

Takedown (2000) என்ற இந்தப் படம், ஹேக்கிங் தொடர்பான ஒரு உண்மைக் கதையை வைத்து உருவாக்கப்பட்ட படமாகும். கெவின் மிட்னிக் (Kevin Mitnick) என்ற நிஜவாழ்க்கை ஹேக்கர், 1995இல் கைது செய்யப்பட்டார். அந்த ஹேக்கரின் கைதை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் இது. கெவின் என்பவன் உலகத்திலேயே பிரபலமான ஹேக்கர். அவனுடைய திறமையால் அமெரிக்காவின் பாதுகாப்பே கலங்குகிறது. FBIயே அவனைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறது. அச்சமயத்தில் கெவினுக்கு ஒரு வேலை வருகிறது. ஸுநோமு ஷிமோமுரா என்ற ஒரு சைபர்செக்யூரிட்டி நிபுணரின் கணினியை ஹேக் செய்து தகவல்களைத் திருடவேண்டும் என்பதே அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. அதை செய்துமுடித்துவிடுகிறான்.

ஆனால், ஒரு சைபர்செக்யூரிட்டி நிபுணரான தனக்கே டிமிக்கி கொடுத்தவனான கெவினின் மீது கோபம் கொண்டு, ஷிமோமுரா தானே கெவினைப் பிடிக்கக் களமிறங்குகிறார். துணைக்கு ஏற்கனவே கெவினைத் தேடிச் சலித்துப்போன FBI வீறுகொண்டு களமிறங்குகிறது. இறுதியில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஷிமோமுராவின் புத்திசாலித்தனத்தால் கெவின் மாட்டுகிறான்.

படம் முழுதுமே ஹேக்கிங்தான். கூடவே நிஜத்தில் வாழ்ந்த ஒரு ஹேக்கர், சட்டத்துக்கு எப்படியெல்லாம் டிமிக்கி கொடுத்தான் என்பது இந்தப் படத்தில் சிறப்பாகவே காட்டப்பட்டிருக்கும்.

இரண்டாயிரத்துக்கு அப்பால் வந்த பல ஹேக்கிங் படங்கள் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவற்றில் Antitrust, The Score, Swordfish, Pulse, Cypher, Minority Report, Firewall, Man of the Year, The Net 2.0, The Girl with the Dragon Tattoo (மூன்று பாகங்கள்), Inception (மூளையை ஹேக்கிங் செய்வது), Tron: Legacy (பழைய ட்ரானின் அடுத்த பாகம்), Reboot, The Bling Ring, The Fifth Estate, Her (இதற்கும், நாம் ஏற்கெனவே பார்த்த Elecctric Dreams படத்துக்கும் தொடர்பு உண்டு), Algorithm, Ex Machina, Open Windows, Transcendence, Ready Player One ஆகிய படங்கள் முக்கியமானவை.

தற்கால உலகத்தில் நமது தகவல்கள் எப்படியாயினும் திருடப்படும் வாய்ப்புகள் மிக அதிகம். ஒரு தவறான க்ளிக், ஒரு தவறான பரிமாற்றம், ஒரு தவறான வலைத்தளம் என்று எங்கே பார்த்தாலும் நம்மீது பாய்ந்து நமது தகவல்கள், பணம் ஆகியவற்றைப் பிடுங்கிக்கொண்டு ஓட உலகமே சதிசெய்துகொண்டிருக்கும் காலம் இது. இவைகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பாக வாழ்வது எப்படி என்று நாம் அவசியம் கற்றுக்கொள்ளவே வேண்டும். அதற்கான ஒருசில கருத்துகள் இந்தக் கட்டுரையின் மூலமும் இந்தச் சிறப்பிதழின் மூலமும் வந்திருந்தால் மகிழ்ச்சியே.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com