சுவாரஸ்யமில்லாத ஏதோ ஓர் அலுவல் நிமித்தமான மின்னஞ்சலுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கையில் தொலைபேசியில் அறிவிப்பு மணி, குடியுரிமை ஆணையத்திடமிருந்து ஸ்வீடன் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகச் செய்தி. இவ்வளவு சீக்கிரம் நடக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை.
நண்பன் இசாக்கிற்கு “எனக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்துவிட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அலுவல் பணியைத் தொடர, அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் அவனிடமிருந்து பதில் வந்தது. எனக்கும் சேர்த்து அவன் உற்சாகமாய் துள்ளிக் குதிப்பதாய் சொல்லியிருந்தான், இரண்டு ஸ்மைலி எமோஜி, ஒரு பீர் கோப்பை எமோஜி, நான்கு ஹார்டின்கள். சம்பிரதாய நன்றியை தெரிவித்த மறுநொடியே “மகிழ்ச்சியாய் இருக்கிறாயா????” அவனுக்கு என்னை ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. தெரியவில்லை, ஒற்றை வார்த்தை பதில் தான் என்னால் முடிந்தது. நீ மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவள் என்று நான் சொல்லப்போவதில்லை, ஏனென்றால் மகிழ்ச்சி எல்லோருக்குமானது. சந்தோசமாக இருக்கத்தான் காரணம் தேவை. மகிழ்ச்சிக்கு காரணங்களும், சாதனைகளும் தேவையில்லை. - இரண்டு ஸ்மைலிகளுடன் சந்தோசத்திற்கும், மகிழ்ச்சிக்குமான வேறுபாடுகளை விளக்கும் பெரிய ஸ்வீடிஸ் தத்துவத்தை அனுப்பியிருந்தான்.
அவன் சொல்வதும் உண்மைதான், மகிழ்ச்சிக்கு காரணங்களும், சாதனைகளும் தேவையில்லை. அத்துடன் அந்த நாளுக்கான வேலையையும், துயரத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். பிரிட்ஜிலிருந்த சாக்லேட் பாரில் மூன்று கட்டிகளை உடைத்து வாயில் போட்டு மெதுவாக கரைய விட்டேன். குடியுரிமை கிடைத்ததை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவேற்ற நிறைய வாழ்த்துக்களும், ஹார்ட்டின்களும், முகம் தெரியாதவர்களின் ஒப்புதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் தானே. ஆனால் என்னால் ஏன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை, எனக்குத் தான் காரணம் இருந்ததே, ஸ்வீடன் நாட்டின் நிரந்தர குடியுரிமை, இனி எனக்காக குரல் கொடுக்க சங்கம், வேலை போனாலும் வாங்கும் சம்பளத்திற்கு காப்பீடு, இலவச மருத்துவம், ஓய்வூதியம் எல்லாமும். ஆனால் இதற்காகவா இத்தனை தூரம் ஓடி வந்தேன், அப்பொழுது வாழ்வின் நோக்கம் தான் என்ன, ஆனால் வாழ்க்கைக்கு ஏன் நோக்கமிருக்க வேண்டும், எல்லோரும் சாதனையாளர்களாக இருக்க வேண்டியதில்லையே. டோல்கீன் சொன்னதைப்போல சாதாரண வாழ்க்கையைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லையே.
எதற்காக இந்தியாவிலிருந்து இங்கு வந்தேன், எதற்காக இந்த பயணம், பத்தாண்டுகளுக்கு முன் குடியுரிமை கிடைத்திருந்தால் இது வாழ்வின் மிகப் பெரிய சாதனையாக இருந்திருக்கும், சாதனை தானே சந்தோசத்தின் மிகப் பெரிய ஆதாரம், இப்பொழுது என்னால் ஏன் சந்தோசமாக இருக்க முடியவில்லை, இது ஏன் சாதனையில்லை, காலம் தாழ்ந்த நிகழ்வென்றெல்லாம் இல்லை, காரணிகள் மாறிவிட்டன அவ்வளவு தான்.
ஏறிட்டுப் பார்த்த கண்கள், இளக்கார சிரிப்புகள். ஏதோ ஒரு கோபத்துடனே அலைந்து கொண்டிருந்த காலம். ஒரு திருநங்கையாக என்னை மதிப்பீடு செய்து கொண்டிருந்தவர்களிடம் எப்படிச் சொல்வது அவர்களை விட எனக்கு ஆணவம் அதிகம் என்றும், நானும் அவர்களை மதிப்பீடு செய்து கொண்டிருந்தேன் என்றும். என்னையும் சக மனிதராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையெல்லாம் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை, எந்த வகையிலும் என்னோடு சமமாக இருக்க தகுதியில்லாத உங்களோடு உரையாட விரும்பவில்லை என்ற கர்வம் மட்டுமே.
பொதுச் சமூகத்தை கூட நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும், திருநங்கை சமூகத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களின் சடங்குகளும், சம்பிரதாயங்களும், நம்பிக்கைகளும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. நவீனத்தையும், அறிவியலையும் தேடிக் கொண்டிருந்தேன், அந்த சமூகத்தை மறக்க, என்னை நான் சகித்துக் கொள்ள, வெளியேறியாக வேண்டிய கட்டாயத்திலிருந்தேன். இது எனக்கான மானுட விடுதலை, மோட்சமென்று கூட சொல்லலாம், பாபாசாகேப் அம்பேத்கர் புத்த மதம் தழுவ முன்வைத்த எல்லா காரணிகளும் எனக்கும் பொருந்தியது. என்னை என் அடையாளத்திற்குள் சுருக்கிய அறிவாளிகளை நான் மன்னித்தாக வேண்டும். ஏதோ சங்கிலியால் பிணைக்கப்பட்ட, மூச்சு முட்டிய, கழுத்து நெறிக்கப்பட்ட உணர்வு. அவர்களின் எல்லா மதிப்பீடுகளையும் மறந்து விட்டு வாழ வெகு தூரம் செல்ல வேண்டியிருந்தது.
இருபத்தி ஆறு வயதில் செய்ய நினைத்த எல்லாவற்றையும் அடைந்தாகிவிட்டது, இனி எனக்கும், சமூகத்திற்கும் நிரூபிக்க எதுவுமில்லை. நான் மேதாவி இல்லை என்பது புரிந்ததாலோ என்னவோ இப்பொழுது கோபப்படவும் முடிவதில்லை. கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை ரசிக்கத் துவங்கி விட்டேன். மனிதர்களை நேசிக்க முடிகிறது. இனி திரும்பிப் போகலாம் என்று தோன்றுகிறது. அதனால் குடியுரிமை சாதனையாக தெரியவில்லை. ஒருவேளை திரும்பிச் சென்றால் உபயோகமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம். திருநங்கை வலியை பற்றி சொல்லுங்கள் என்று கேட்பவர்களின் சில் மூக்கை உடைக்க நினைக்காமல் நமட்டுச் சிரிப்புடன் கடந்து போகுமளவிற்கு முதிர்ச்சி வந்து விட்டதென்றே நினைக்கிறேன். இல்லையென்றாலும் பரவாயில்லை, சில சில் மூக்குகள் உடைந்தால் தான் என்ன?
உப்சாலாவிலிருக்கும் தோழியுடன் டேட்டிங் போக சம்மதித்திருந்தேன். நாங்கள் வைக்கிங்குகளின் மணல்மேட்டையும், புராதன சுடுகாட்டையும் சுற்றி பார்க்க முடிவு செய்திருந்தோம். அவளுக்காக ஒரு பூங்கொத்தையும், இரண்டு முத்தங்களையும் எடுத்துச் சென்றாக வேண்டும். சூடான மெதுவடையும், தேனீரும் கிடைக்கப் பெற்றால் இப்போதைக்கு போதுமானதாக இருக்கும்.
(கனகா வரதன் - சென்னையை சேர்ந்தவர், தற்போது ஸ்டாக்ஹோமில் வாழ்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போதையிலிருந்து விடுபட பெண் கவிஞர்களின் சாப்பிக்(sapphic) கவிதைகளை தேடிக் கொண்டிருக்கிறார்)