சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-உடன் ஸ்டன் சிவா மற்றும் குடும்பத்தினர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-உடன் ஸ்டன் சிவா மற்றும் குடும்பத்தினர்

''ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” – ஸ்டன் சிவா

‘’சினிமாவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் மாஸ்டர்களின் பணி என்பது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு ஷாட்டும், உயிரைப் பணயம் வைத்து செய்யக்கூடியதுதான். ‘மிஸ்டர் ரோமியோ'வில் டூப் போட்டு, நெஞ்சில் பலத்த அடிபட்டு ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன்'' என்கிறார் ஸ்டன் சிவா. ரஜினியின் ‘ஜெயிலர் ' தொடங்கி இந்திய மொழிகள் அத்தனையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் அதிரடிப்படம் ‘அகண்டா' வாகட்டும் வெற்றிமாறனின் யதார்த்தமான ‘விடுதலை'யாகட்டும் தனது தனி முத்திரையைப் பதிக்கும் ஸ்டன் சிவாவை சந்தித்து உரையாடினோம்.

‘‘வறுமையான குடும்பம், ஓலைக் குடிசை வீடு என்னோடது. ஆனா சின்ன வயசுலயே சினிமா கனவு காண ஆரம்பிச்சுட்டேன். அதே வயசுல எடுத்த இன்னொரு முக்கியமான முடிவு என்ன ஆனாலும் ஒரு வெளிநாட்டுப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும்ங்குறது. குடும்ப சூழலை மீறி அதே காலகட்டத்துல கராத்தே கத்துக்க ஆரம்பிச்சுதான் சினிமாவுக்கே வந்தேன். சினிமாவுல வாழ்க்கை சண்டைக் கலைஞனாகத் தொடங்கியது. அப்புறம் கொஞ்சகாலத்துல ராம்போ ராஜ்குமார், கனல் கண்ணன் மாஸ்டர்கள்கிட்ட உதவியாளராக வேலை பண்ண ஆரம்பிச்சிதான் மாஸ்டரானேன். நினைச்சமாதிரியே மாஸ்டர் ஆனபிறகுதான் வியட்நாம் நாட்டுப் பெண்ணைத்தான் திருமணமும் செஞ்சேன்.

அப்படி என்னை முதல் முதலா மாஸ்டராக்கி சிவகுமாரா இருந்த என்னை ஸ்டன் சிவாவா மாத்துனவர் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார். அவரை என்னைக்கும் மறக்க முடியாது. அவர் மாஸ்டர் ஆக்கின பிறகு தொடர்ச்சியா படங்கள் பண்ணிக்கிட்டே இருந்தேன். தமிழ், தெலுங்குன்னு மாறி மாறி வொர்க் பண்ணிக்கிட்டிருந்த எனக்கு திருப்பு முனையா அமைஞ்ச ரெண்டு படங்கள் பாலா சாரோட ‘நந்தா'வும் பிதாமகனும்.

அதுலயும் குறிப்பா ‘பிதாமகன்' படத்துல அமைஞ்ச சண்டைக்காட்சிகள் என்னை உலகத்தின் அத்தனை மூலைக்கும் கொண்டுபோச்சுன்னே சொல்லணும். மணிரத்னம் சார் தன்னோட ஆபிஸுக்குக் கூப்பிட்டு அரைமணி நேரத்துக்கும் மேல அந்த ஃபைட்டுகளைப் பத்திப் பாராட்டிப் பேசினார்.

 சினிமாவுல இருக்குற 24 கலைப்பிரிவுகளில் ரொம்ப ரிஸ்கான டிபார்ட்மெண்ட் எங்க ஃபைட்டர்ஸ் தொழிலும், லைட்மேன்கள் வேலையும் தான். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுற எப்ப வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கும்ங்குற படு ஆபத்தான வேலை.

 என் சர்வீஸ்ல எத்தனையோ சண்டைக்கலைஞர்கள் படப்பிடிப்புகள்ல உயிரை இழந்திருக்காங்க. இன்னும் எவ்வளவோ பேர் உடல்ல பயங்கர அடிபட்டு படுத்த படுக்கையா கிடக்காங்க. .ஃபைட்டர்கள், டூப் போடுறவங்க சட்டையைக் கழட்டிப்பாத்தீங்கன்னா அவங்களுக்கு இருக்கிற தழும்புகளை எண்ணக்கூட முடியாது. அசிஸ்டெண்டா வேலை பார்த்தப்ப எனக்கும் எவ்வளவோ அடி விழுந்துருக்கு. அடி வாங்காம நீங்க ஒரு ஃபைட்டரா வேலை செய்யவே முடியாது.

வருஷம் 96. பிரபுதேவாவோட ‘மிஸ்டர் ரோமியோ' படம். கனல் கண்ணன் மாஸ்டரோட அசிஸ்டெண்ட் நான். ஏ.வி.எம். ஸ்டுடியோவுல ஷூட்டிங்.. தரையிலருந்து 30 அடி உயரத்துக்கு பைக்ல பறந்து மூணாவது ஃப்ளோருக்குள்ள பைக்கை விடணும். கொஞ்சம் மிஸ் ஆகி கீழ விழுந்து நெஞ்சுல சரியான அடி. சுய நினைவுக்கு வர்றதுக்கே 8 மணி நேரத்துக்கும் மேல ஆச்சி. கெட்ட நேரத்துலயும் என்னோட அதிர்ஷ்டம் அடுத்த பில்டிங்லயே விஜயா ஹாஸ்பிடல் இருந்தது. மூணு மாசம் ஹாஸ்பிடல்லயும். மூணு மாசம் வீட்டுல பெட் ரெஸ்ட்ல இருந்தும்தான் மீண்டு வந்தேன்.

எங்களுக்கு இது ஓ.கே. ஆனா ஹீரோக்கள் அடிபட்டு இப்படி ஆறு மாசம் ஹாஸ்பிடல்ல படுத்தா, அந்த படத்தோட புரடியூசர் தொடங்கி எத்தனை குடும்பங்கள் வேலை இல்லாம தவிக்கணும்? அதனாலதான்

சாதாரண ஹீரோக்களோ ஆக்‌ஷன் ஹீரோக்களோ டூப் போடாம நாங்களே நடிக்கிறோம்னு சொல்றப்ப நாங்க ஒப்புக்கிறதே இல்லை. ஒரு பொறுப்பான ஸ்டன்ட் மாஸ்டர் கண்டிப்பா ஹீரோக்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல ரிஸ்க் எடுக்க விடக்கூடாதுங்குறது என்னோட அபிப்ராயம்.

 எல்லோரையும் போல நானும் நடிகனாகணும்னுதான் சினிமாவுக்கே வந்தேன். அசிஸ்டெண்டா வேலை செஞ்சு மாஸ்டராவும் ஆன பிறகு பல படங்கள்ல நடிச்சிருந்தாலும் மறக்காம முடியாத படம்னா அது கமல் சாரோட நடிச்ச ‘வேட்டையாடு விளையாடு'தான். அதுலயும் கமல் சார் என்கிட்ட ‘ கண்ணு வேணும்னு கேட்டியாமே..இந்தா வந்து எடுத்துக்கன்னு சொல்லுவாரே... மாஸ் சீன் அது.

இந்தி வரைக்கும் அத்தனை மொழி படங்கள்லயும் மாஸ்டரா ஒர்க் பண்ணியிருந்தாலும் எனக்குப் பிடிச்ச ரெண்டு பெரிய ஹீரோக்கள் பாலகிருஷ்ணாவும் சூப்பர் ஸ்டார் ரஜினியும். ரெண்டு பேரோட ஈடுபாடுமே வேற லெவல். ரஜினியோட ‘ஜெயிலர்' படத்துல என் பையன் கெவினும் மாஸ்டரா களம் இறங்கியிருக்கான். இந்தப் படத்துல ரஜினி சார் பண்ணியிருக்கிற ஃபைட்டுகள் நிச்சயம் பெரிய அளவுல பேசப்படும்.

 என் ரெண்டு பசங்களுமே என்னை மாதிரியே சண்டைக் கலைஞர்களா வந்தது திட்டமிட்ட செயலான்னு நிறைய பேர் கேக்குறாங்க. அவங்களுக்கு நிறைய சாய்ஸ் குடுத்து, நிறைய யோசிக்க டைம் குடுத்து அவங்களா விரும்பித் தேர்ந்தெடுத்த துறைதான் இது.

 முந்தியெல்லாம் என் பையன் கெவினை ஹீரோவா வச்சி ஒரு படம் டைரக்ட் பண்ணலாம்னு ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப அவன் ஃபைட் மாஸ்டரா அறிமுகம் ஆனவுடனே, ‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கப்பா, ஃபைட் மாஸ்டரா ஹிட் அடிச்சிட்டு, சீக்கிரமே உங்களை ஹீரோவா வச்சி படம் இயக்குறேன்பான்னு சொல்றான். ஒரு மாஸ்டரா எனக்கு இதைவிட என்ன பெருமை வேணும்?'' தந்தையாகவும் நெகிழ்கிறார் ஸ்டன் சிவா.

logo
Andhimazhai
www.andhimazhai.com