மலைகளின் மீது நடக்கும் வரலாற்று வகுப்பு

பசுமை நடை
மலைகளின் மீது நடக்கும் வரலாற்று வகுப்பு
Published on

தமிழ்நாட்டின் பண்பாட்டு மையமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் மதுரை திகழ்கிறது. இங்கே நம்முடைய பெரும் செல்வங்களாக சமணர் படுகைகள், தொல்லியல் அகழாய்வுத் தளங்கள், கோட்டைகள், அருங்காட்சி யகங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள வரவேற்கக் காத்திருக்கும்.

இந்தத் தொன்மையான நகரத்தில், இயற்கையையும் வரலாற்றையும் பாதுகாக்கும் முயற்சியாக 2010-ஆம் ஆண்டு பசுமை நடை இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம், மதுரையின் வரலாற்று, இயற்கை வளங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, சூழலியல் பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையால் இயற்கை வளங்களும் மலைகளும் பாதிக்கப்பட்டபோது, இதற்கு எதிராக யானைமலை, அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக போராடினார்கள். போராடும் இந்த மக்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்தார்கள்.  இந்தப் போராட்டத்தின் நீட்சியாக உருவானது தான  பசுமை நடை இயக்கம்.

2010-ஆம் ஆண்டு முதல், இந்த இயக்கம் மக்களை வரலாற்றுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, நடைபயணத்தின் மூலம் கற்றல் அனுபவத்தை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நடைபயணங்கள், இயற்கையையும் வரலாற்றையும் இணைக்கும் ஒரு தனித்துவமான அனுபவமாக அமைகின்றன. தொடங்கும் போது முதலில் மக்கள் வருவார்களா? அதிகாலை 6 மணிக்கு எல்லாம் நாம் அழைக்கும் ஒரு இடத்திற்கு அவர்கள் வரவேண்டும் என்றால் அவர்கள் அதிகாலை 5 மணிக்கு எல்லாம் எழ வேண்டும், இது சாத்தியமா என்பன போன்ற பல கேள்விகள் எங்கள் மத்தியில் இருந்தன, ஆனால் முதல் நடைக்கு வந்திருந்த 35 பேரின் முகத்திலும் என்றைக்கும் நான் பார்த்திராத உற்சாகம் இருந்தது, இந்த உற்சாகம் பெரும் நம்பிக்கையை என்னுள் பாய்ச்சியது, கொஞ்சம் சிரமப்பட்டு நாம் இதனை ஒருங்கிணைத்தோம் என்றால் நிச்சயம் மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை துளிர்த்தது.

வரலாற்றுச் சின்னங்களில் தொடங்கினோம், மெல்ல மெல்ல அதில் பல இடங்கள் வந்து இணைந்தன. மதுரையில் இருந்து 40 கிமி சுற்றளவிற்குள்ளான இடங்களுக்கு தான் முதலில் சென்றோம், அதன் பின்னர் கொடைக்கானல் தாண்டிக்குடி-பண்ணைக்காடு, கழுகுமலை, சித்தன்னவாசல், குடுமியான் மலை என இடங்கள் வந்து எங்கள் பட்டியலில் இணைந்தன.

சமீபத்தில்  கண்ணகியின் பயணப் பாதையைப் பின்பற்றி, மதுரையின் மேற்கு எல்லையான விராட்டிப்பத்துக்கு  (பிராட்டியார் பத்து)  நடை பயணம்  மேற்கொண்டோம். சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுடன் தொடர்புடைய வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைப்பது என்று இன்னும் சில இடங்களை அடுத்தடுத்து தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிகாலையில் நடப்பது என்பது உடல்நலத்துடன் தொடர்புடைய விசயம் ஆனால் அந்த நடையுடன் அறிவுப்பூர்வமான ஒரு காரியத்தை இணைத்தால் அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதுவே எங்கள் நடையின் அனுபவமாக இருந்துவந்துள்ளது.

பசுமை நடையின் ஒவ்வொரு பயணமும், வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்களின் உரைகளுடன் நடைபெறுகிறது. கீழக்குயில்குடி சமணர் மலையில் நாங்கள் 15 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளால், பசுமை நடைகளால் இன்றைக்கு அது மதுரையில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. உள்ளூர் மக்களுடன் இங்கே சனி-ஞாயிறுகளில் விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கில் வருவதை பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

நடப்பது மட்டும் அல்ல பசுமை நடை மலையேற்றத்திற்கான ஒரு களமாகவும் மாறியிருக்கிறது. யானைமலை, கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, மாங்குளம், திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், பேரையூர், கிடாரிப்பட்டி, முத்துப்பட்டி, சித்தர்மலை என இந்த மலைகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்களை பசுமைநடை அழைத்துச் சென்றுள்ளது.

மதுரையைச் சுற்றி இந்த மலைகள், வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ள கிராமங்களில் உள்ள மக்களையும் இந்த நடையில் விருந்தினர்களாக அழைத்து அவர்களுடனும் உரையாடல்களை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

இதில் தனிநபர்கள் பங்கு கொள்வதை விடவும் குடும்பங்களின் பங்களிப்பே அதிகம். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என ஒரே நடையில் எல்லா வயதினரும் உற்சாகமாக பங்கேற்பது மிகவும் முக்கியம். அதே போல் நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் முதல் மதுரையின் கூலி தொழிலாளர்கள் வரை அனைவரும் சமமாக, பங்கேற்கும் ஒரு சமத்துவத்தின் தளமாகவும் பசுமை நடை திகழ்கிறது.

இந்த நடையில் பங்கேற்கும் பலரும் “எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நாட்களில் நாங்கள் கடும் முயற்சி செய்து அவர்களை தூகத்தில் இருந்து எழுப்ப வேண்டும். ஆனால் பசுமை நடைக்கு செல்லும் நாட்களில் அலாரம் அடிக்கும் முன்பே அவர்கள் எழும்பி விடுவார்கள்,” என்பார்கள். குழந்தைகளும் முதியவர்களும்  இந்த நடையில் பங்கேற்க காலை 6 மணிக்கு எல்லாம் எங்கள் Meeting Pointல் சிரித்த முகத்துடன் வரும் போது எங்கள் அலுப்பு எல்லாம் பறந்து போகும்.

ஒரு நடையின் மூலம் என்ன சாத்தியம்? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, வரலாற்று மற்றும் இயற்கை பயணங்களை மேற்கொண்டு, ஒரு பெரும் சமூக ஒற்றுமையை வளர்த்துள்ளது பசுமை நடை.

ஒரு நடையின் மூலம் காலை உடற்பயிற்சி சாத்தியம், வரலாற்றுப் புரிதலை பரவலாக்குவது சாத்தியம், தமிழ் மொழியின் தொன்மங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது சாத்தியம், கீழடி அகழாய்வு தொடர்பான விழிப்புணர்வை உலகம் முழுவது ஏற்படுத்து சாத்தியம், எந்த வயதிலும் கற்றலைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது பசுமை நடை. மதுரையின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய பயணமாக அது 15 ஆண்டுகளை கடந்து 250வது நடையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

(அ.முத்துகிருஷ்ணன், சூழலியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர்)

logo
Andhimazhai
www.andhimazhai.com