
Comeback என்றால் என்ன? பொதுவாக, ஏதோ ஒன்றில் உச்சத்தில் இருந்துவிட்டு, திடீரென்று காணாமல்போய், பின்னர் மறுபடியும் அதே இடத்துக்குச் செல்வதே கம்பேக் என்று சொல்லப்படுகிறது. முன்னர் அடைந்த வெற்றிகரமான இடத்தைத் திரும்பவும் அடைவது. திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் இதற்கு நிஜவாழ்க்கையில் ஏராளமான உதாரணங்களைக் காண முடியும். இதோ இந்த அந்திமழை கம்பேக் ஸ்பெஷல் இதழிலேயே வேறு பக்கங்களில் நீங்கள் அதனைக் காணலாம்.
நிஜவாழ்க்கையிலேயே நம் கண் முன்னர் பல உதாரணங்கள் இருக்கையில் ஹாலிவுட் இதனைச் சும்மா விட்டுவிடுமா? கம்பேக் என்பதை எடுத்துக்கொண்டால் ஏராளமான ஹாலிவுட் படங்கள் இந்த வகையில் வந்திருக்கின்றன. அவற்றில் மிக சுவாரஸ்யமான, சுவையான, விறுவிறுப்பான, புத்துணர்ச்சியூட்டக்கூடிய சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.
1. The Hustler
முதலாவதாக, ஹாலிவுட்டில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கதாபாத்திரம் நடித்த இரண்டு படங்களைப் பார்க்கலாம். 1961 செப்டம்பரில் ‘The Hustler’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. இந்தத் திரைப்படம் அதே பெயரில் அமைந்த ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. மிகப்பிரபலமான நடிகர் பால் நியூமேன் இந்தத் திரைப்படத்தின் நாயகனாக நடித்தார். எட்டீ ஃபெல்சன் என்பது பால் நியூமேனின் கதாபாத்திரத்தின் பெயர். எட்டீ, pool என்று அழைக்கப்படும் விளையாட்டில் அற்புதமாகக் கைதேர்ந்தவன். இளைஞன். வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற வெறி உள்ளவன். அதேசமயம் சின்னச்சின்ன ஏமாற்றுவேலைகளைச் செய்யவும் தயங்காதவன். ஒரு ஹோட்டலில், குடிகாரன் போல நடித்து, பூல் விளையாட்டில் தவறுகள் செய்பவனாக ஏமாற்றி, அங்கே இருப்பவர்களிடம் தன்னை எளிதில் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி, அதன்பின் அனைவரையும் வென்று பந்தயத்தில் வெல்வான். இப்படித்தான் அவனது கதாபாத்திரம் அறிமுகமாகும். கதை துவங்கும்போதே இந்த விளையாட்டில் அவன் ஒரு வெற்றிகரமான நபர்.
இதன்பின்னர் ஒரு பெரிய நகரமான நியூயார்க் சென்று, அங்கே ஏராளமான பணம் வெல்லலாம் என்று முடிவுசெய்து, அங்கே இருப்பதிலேயே மிகப்பெரிய பூல் வீரரான மின்னசோட்டா ஃபேட்ஸ் என்பவரை வேண்டுமென்றே பந்தயத்துக்கு இழுப்பான். அவருக்கு இவன் யார் என்று தெரியாததால், இவனுடன் மோதுவார். முதலில் தோற்பது போல ஏமாற்றி, பின்னர் அவரை முதல் பந்தயத்தில் வென்றுவிடுவான் எட்டீ. இதனால் உந்தப்பட்டு, வரிசையாகப் பந்தயத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்வான். ஆணவம் மிகுந்து விளையாடுவான். பதினோராயிரம் டாலர்கள் வென்றுவிடுவான். ஆனால் அவனது நண்பன் சொல்லியும் கேட்காமல், ஆட்டத்தை நிறுத்தாமல் இன்னும் அதிகமாகப் பந்தயத் தொகையை உயர்த்திக்கொண்டே சென்று, ஒரு முழு இரவு விளையாடி, பதினெட்டாயிரம் டாலர்கள் வென்று, பின்னர் மொத்தமாக அனைத்தையும் மின்னசோட்டா ஃபேட்சிடம் தோற்றுவிடுவான். அவனை அந்தப் பந்தயத்தைப் பார்ப்பவர்கள் அவமானப்படுத்திவிட, தோல்வியடைந்த எட்டீ, விரக்தியில் இரவோடு இரவாக, நண்பனிடம் கூடச் சொல்லாமல் நியூயார்க்கைவிட்டே ஓடிவிடுவான்.
இதன்பின்னர் எட்டீயின் வாழ்க்கையில் என்னென்னவோ தோல்விகள் நடக்கும். குடிப்பான். இவனைப்போலவே குடிகாரியாக இருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ்வான். தோல்வியின் அடித்தளத்துக்குச் செல்வான். அப்போதுதான் பல நாட்கள் கழித்து எட்டீயின் நண்பன் எட்டீயைக் கண்டுபிடிப்பான். தன்னுடன் ஊருக்கே வந்துவிடும்படி நண்பன் வற்புறுத்த, எட்டீ ஒத்துக்கொள்ளமாட்டான். ஒரு வெறியில், தன்னை வென்ற மின்னசோட்டா ஃபேட்சை மறுபடியும் வென்று உலகுக்குத் தன்னை நிரூபிப்பதாகச் சொல்லி சபதமிடுவான் எட்டீ.
ஆனால் மறுபடியும் விளையாடப் பணம் வேண்டுமே? இதனால் மறுபடியும் ஏமாற்றுவேலைகள் செய்யத் துவங்கி, சின்னச்சின்ன இடங்களில் பூல் விளையாடுபவர்களிடம் தனக்கு விளையாடத் தெரியாது என்று ஏமாற்றி அவர்களைப் பந்தயத்தில் வெல்வான். அப்போது ஏற்கெனவே எட்டீ தோற்ற பந்தயத்தில் பார்வையாளர்கள் பிரிவில் இருந்து எட்டீயை அவமானப்படுத்திய பெர்ட் என்னும் நபரைச் சந்திப்பான். அவருமே பூல் விளையாடுபவர்தான். அப்போதுபோலவே இப்போதும் எட்டீயை அவமானப்படுத்துவார். அவனுக்கு எந்தவிதமான நல்ல குணங்களுமே இல்லை என்றும், விளையாட்டில் வெல்லத் திறமை மட்டும் போதாது என்றும், கண்ணியம் வேண்டும் என்றும் அடித்துப் பேசுவார். எட்டீ இதன்பின் மெல்ல மாறுவான். அதனைக் கவனித்து, பெர்ட்டே எட்டீயை மறுபடியும் மின்னசோட்டா ஃபேட்சிடம் விளையாட அழைத்துச் செல்வார்.
இறுதியில் பெர்ட்டால் எட்டீயுடன் இருந்த பெண் தற்கொலை செய்துகொள்வாள். இது எட்டீக்குத் தெரியவரும். மின்னசோட்டா ஃபேட்சிடம் எட்டீ வரிசையாகத் தோற்பான். இறுதியாக விடாப்பிடியாக நின்று வென்றுவிடுவான். வென்றபின்னர் தன்னை நிரூபித்து, பெர்ட்டை மிரட்டிவிட்டு, அதன்பின்னர் இனி எங்குமே விளையாடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு எட்டீ செல்வதுடன் இந்தப் படம் முடியும்.
இன்றுவரை ஹஸ்லர் திரைப்படம் ஹாலிவுட்டின் மறக்கமுடியாத கம்பேக் திரைப்படங்களில் ஒன்று. காரணம் அதன் நாயகன் ஒரு சராசரி மனிதன். பிறரைப் போலவே வாழ்ந்து, ஏமாற்றி, ஏதாவது செய்து வாழ்க்கையில் வெல்லவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் வெல்லவேண்டும் என்றால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை இறுதியில் கற்பவனாக இருப்பான் எட்டீ. இந்தப் பாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் பால் நியூமேன் நடித்து இந்தப் படத்தை மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக மாற்றினார்.
2. The Color of Money
அதே எட்டீ, இருபது வருடங்கள் கழித்துத் திரும்பிவந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஹஸ்லர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான ‘Color of Money’. இதனை இயக்கியவர் அற்புதமான இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்சேசி. இந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றார் பால் நியூமேன் (ஹஸ்லர் படத்துக்கு ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை). 1986இல் கலர் ஆஃப் மனி வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது.
இருபது வருடங்கள் கழித்து எட்டீ இப்போது ஒரு மதுபான விற்பனை செய்யும் நபராக இருப்பார். நல்ல பணம், அமைதியான வாழ்க்கை என்று இருந்தாலும், பூல் விளையாட்டை விளையாட முடியாத ஆழ்மனத் தவிப்பில் இருப்பார். ஆனால் எதேச்சையாக, வின்செண்ட் என்ற இளைஞனைச் சந்திப்பார். இளவயதில் (ஹஸ்லர் படத்தில்) எட்டீ எப்படித் துடிப்பாக இருந்தாரோ வின்செண்ட்டும் அப்படியே இருப்பான். அவனும் பூல் விளையாட்டில் சிறப்பாக செயல்படுவான். இதனால் வின்செண்ட் மீது எட்டீக்கு ஒருவிதமான பரிவு ஏற்படும். அவனுக்குப் பூல் விளையாட்டில் தனக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுக்கொடுத்து அவனை மிகப்பெரிய வெற்றியாளனாக ஆக்க முடிவுசெய்வார்.
ஆனால் வின்செண்ட்தான் இளவயது எட்டீ போலவே அகம்பாவம் பிடித்து யாரையும் மதிக்காமல் அலைந்துகொண்டிருக்கிறானே? அவனுடன் பழகி விளையாட்டை சொல்லிக்கொடுக்கும்போதுதான், தனக்குள் இருந்த விளையாட்டு வெறி அடங்கிவிட்டதால் வெறுமனே சொல்லிக்கொடுத்தால் மட்டும் போதாது என்றும், தானே மீண்டும் பூல் விளையாடினால்தான் வின்செண்ட்டை திறம்படப் பயிற்றுவிக்கமுடியும் என்றும் எட்டீக்குப் புரிகிறது. விளையாடத் துவங்குகிறார். ஆனால் ஒரு ஏமாற்றுவேலை செய்து வெல்பவனால் (எட்டீ எப்படி இருந்தாரோ அப்படியே) தோற்கடிக்கப்படுகிறார். முன்னர் செய்த வினை எட்டீயைத் தாக்குகிறது.
ஆனால் மனம் இழக்காமல் மறுபடி மறுபடி விளையாடி, இம்முறை வின்செண்ட்டையே ஒரு தருணத்தில் எதிர்க்கிறார். மிகவும் நேர்மையுடன் விளையாடவேண்டும் என்று முடிவுசெய்கிறார். அவனுடன் இறுதிப் பந்தயத்தில் எட்டீ வென்றாரா? வென்று, தன்னையே மறுபடியும் புதுப்பித்துக்கொள்கிறாரா என்பதே கலர் ஆஃப் மனியின் க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தில் இருபது வருடங்கள் முன்னர் இளைஞராகச் செய்த அதே எட்டீ கதாபாத்திரத்தை நடுத்தர வயது நபராகச் செய்து, அச்சு அசலாக அப்படியே நடித்து ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டார் பால் நியூமேன். வின்செண்ட்டாக அப்போது மிகவும் இளயவதான டாம் க்ரூஸ் நடித்தார். இந்த இருவருக்கும் இடையான உரையாடல்கள் மிகவும் பிரபலமானவை. எட்டீ என்ற கதாபாத்திரத்தை இருபது வருடங்களுக்கும் மேலாக மனதில் சுமந்துகொண்டிருந்த பால் நியூமேனுக்கு இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சேசியால் ஆஸ்கர் கிடைத்து இந்தக் கதாபாத்திரத்துக்காக அற்புதமான நடிப்பைக் கொடுத்த பால் நியூமேனை இன்றும் மறக்கமுடியாத நடிகராக இந்த இரண்டு படங்களும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.
3. Seabiscuit
சீபிஸ்கெட் என்பது அமெரிக்க சரித்திரத்தில் மறக்கவே முடியாத ஒரு பந்தயக் குதிரை. ஒருகாலத்தில் போட்டிக்குக் குதிரையே இல்லாமல் எப்போதும் நம்பர் ஒன்னாக இருந்த இந்தக் குதிரை, திடீரென்று தோற்கத் துவங்கி, அதன்பின் புகழை எதனாலோ இழந்து, குதிரைப் பந்தயங்களுக்கே தகுதியில்லாதது என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால் அதன்பின் ஒரு தருணத்தில் மறுபடியும் போட்டிகளில் நுழைந்து மீண்டும் நம்பர் ஒன்னாக மாறி, சரித்திரப் புகழ் பெற்றது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்தக் குதிரைக்கான சிலைகள் உண்டு. இந்தக் குதிரை பற்றிய மறக்கமுடியாத திரைப்படமே ‘Seabiscuit’. 2003இல் வெளியாகி, மறக்க முடியாத உணர்ச்சிகரமான காவியமாக மாறியது.
முப்பதுகளின் காலகட்டம். அமெரிக்காவில் சார்லஸ் ஹோவார்ட் என்ற, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த (மகனின் இறப்பு) ஒரு பணக்காரர், உருவத்தில் சிறிய ஒரு குதிரையை வாங்குகிறார். அதனைப் பயிற்றுவிக்க டாம் ஸ்மித் என்ற பயிற்சியாளர் வருகிறார். அவர்தான் உண்மையில் ஹோவார்டை அந்தக் குதிரையை வாங்கச் சொன்னவர். உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அந்தக் குதிரையின் துடிப்பு இருவருக்கும் பிடிக்கிறது. அதன் பெயர் சீபிஸ்கட். அப்போது யாருக்குமே தெரியாத ஜான் போலார்ட் என்ற இளைஞனை அந்தக் குதிரையின் ஜாக்கியாக நியமிக்கின்றனர் ஹோவார்டும் டாம் ஸ்மித்தும். ஆனால் ஜானுக்கு அவனது ஒரு கண்ணில் பிரச்னை உண்டு. அதை மீறித் திறமையுடன் சீபிஸ்கெட்டை ஓட்டுகிறான்.
மெல்ல மெல்ல டாம் ஸ்மித்தின் பயிற்சியாலும் குதிரை ஓட்டும் ஜானின் திறமையாலும் சீபிஸ்கெட் மிகச்சிறந்த குதிரையாக மாறுகிறது. அத்தனை பந்தயங்களிலும் வெல்கிறது. அமெரிக்காவே சீபிஸ்கட்டைக் கொண்டாடத் துவங்குகிறது. ஆனால் அதன்பின் ஒரு போட்டியில், பின்னால் இருந்து ஒரு குதிரை முந்துவதைத் தனது பார்வைக் குறைபாட்டால் ஜான் பார்க்காமல் விட்டுவிடுவதால் அதில் சீபிஸ்கெட் தோற்றுவிடுகிறது. இது பெரும் செய்தி ஆகிறது. அப்போதுதான் தனது பார்வைக் குறைபாட்டை ஜான், ஹோவார்டிடமும் டாம் ஸ்மித்திடமும் ஒப்புக்கொள்கிறான். ஆனால் உண்மையைச் சொன்னதால் மன்னிக்கப்படுகிறான்.
இதன்பின் இன்னொரு போட்டி தயாராகிறது. இதில் அமெரிக்காவின் இன்னொரு பிரபலக் குதிரையான War Admiral பங்கு கொள்கிறது. சீபிஸ்கெட்டுக்கும் வார் அட்மிரலுக்குமான போட்டி என்பதால் அமெரிக்கா முழுதும் இந்தப் போட்டி பிரபலமடைகிறது. (இந்தப் போட்டி நிஜத்தில் நடந்தபோது மொத்தம் நாற்பது மில்லியன் மக்கள் வானொலி மூலமாக இந்தப் போட்டியின் வர்ணனையைக் கேட்டார்கள் என்பது உண்மைச்செய்தி).
ஆனால் பயிற்சியின்போது சீபிஸ்கெட்டை ஓட்டும் ஜானுக்குக் கால் எலும்பு முறிகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அவனது நண்பனான ஜான் வூஃப் என்பவன் ஜாக்கியாகிறான். மறக்கமுடியாத அந்த சரித்திரப் புகழ்வாய்ந்த போட்டியில் சீபிஸ்கெட், பின்னால் இருந்து தன்னை முந்தும் வார் அட்மிரல் குதிரையைக் கண்ணுக்குக் கண் பார்க்கிறது. ஒரு முடிவோடு துள்ளிப் பாய்ந்து வார் அட்மிரலைத் தாண்டி ஓடி, போட்டியில் வென்று, அமெரிக்காவின் செல்லக் குழந்தையாக மாறி, சரித்திரத்தில் தனது பெயரை நிலைநாட்டுகிறது. அப்போதைய காலகட்டத்தில் The Great Depression என்ற மிக்கொடுமையான பஞ்சத்தில் வாடிக்கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு, வாழ்க்கையில் வெல்லமுடியும் என்ற மிகப்பெரும் நம்பிக்கையை சீபிஸ்கெட் நிஜத்தில் கொடுத்தது. அதன் சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் வைக்கப்படுகின்றன. இதன்பின்னர் மருத்துவமனையில் இருந்து மீண்டுவரும் ஜான், மறுபடியும் சீபிஸ்கெட்டுடன் கைகோத்துப் பந்தயங்களை மீண்டும் மீண்டும் வெல்கிறான். ‘சீபிஸ்கெட்டை நாங்கள் யாருமே வெல்லவைக்கவில்லை; மாறாக, வாழ்க்கையால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் மூவரையும் (குதிரையின் உரிமையாளர் ஹோவார்ட், பயிற்சியாளர் டாம் ஸ்மித் மற்றும் ஜாக்கி ஜான்) சீபிஸ்கெட் தான் வாழ்க்கையில் தூக்கி நிறுத்தி எங்களை முற்றிலுமாகக் குணப்படுத்தியது’ என்ற அமரத்துவம் வாய்ந்த ஜானின் குரலோடு சீபிஸ்கெட் முடிகிறது. (இதில் ஜானாக நடித்தவர் பழைய ஒரிஜினல் ஸ்பைடர்மேன் டோபி மெகயர்).
4. The Verdict
வாழ்க்கையின் உச்சத்தில் மிகப்பெரிய ஒரு வக்கீலாக இருந்தவர் தோல்வியடைந்து, குடிகாரராக மாறி, இனி வழக்காடவே வேண்டாம் என்று முடிவுசெய்தபின்னர் வேண்டா வெறுப்பாக ஒரு வழக்கில் நீதிமன்றம் செல்ல நேர்ந்து, மெதுவாக மாறி, உத்வேகம் அடைந்து அந்த வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டு வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டு இறுதியில் வென்று, தனது வாழ்க்கையையே மாற்றிக்கொண்டு இழந்த மிகப்பெரிய இடத்தை மீண்டும் அடைந்தால் எப்படி இருக்கும்? இதுதான் வெர்டிக்ட் திரைப்படத்தின் கதை.
மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவரான சிட்னி லுமெட் இயக்க (12 Angry Men, Serpico, Dog Day Afternoon, A View from the Bridge, The Appointment மற்றும் இன்னும் ஏராளமான கல்ட் திரைப்படங்களை இயக்கியவர்), திரைக்கதை மேதை டேவிட் மேமெட் திரைக்கதை எழுத, The Verdict திரைப்படம் 1982இல் வெளியாகி, மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. இதில் வெற்றிகரமான வாழ்க்கையில் இருந்து கீழே விழுந்து மீண்டும் மேலேறி வெல்லும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்தவர், அதே Hustler பால் நியூமேன்!
மிகப்பெரிய வழக்கறிஞராக ஒரு காலத்தில் இருந்து, பின்னர் அனைவராலும் மறக்கப்பட்டு, எப்போதும் குடித்துக்கொண்டு, பிழைப்புக்காக மிகச்சிறிய வழக்குகளை எடுத்துக்கொண்டு நடத்துபவர் ஃப்ராங்க் கால்வின். இவருக்கு அனைவரின் மீதும் கோபம். பிறரும் அவரை மதிப்பதில்லை. ஒருநாள் அவரிடம் ஒரு வழக்கு வருகிறது. அதில் ஏதோ ஒரு மருத்துவமனை ஏதோ ஒரு பெண்ணுக்குத் தவறான சிகிச்சை அளித்திருப்பதாகத் தெரிகிறது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முன்வருகிறது. சோற்றுக்கே அல்லாடும் ஒன்றரையணா வக்கீலான ஃப்ராங்க், அதை ஒப்புக்கொண்டு வழக்கை முடித்துவிடுவார் என்று அனைவரும் நினைக்கின்றனர். அவரே அப்படித்தான் நினைக்கிறார். குழந்தை பிறப்பதற்காக மருத்துவமனையில் சேரும் ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கையில் அவர் கோமாவுக்குச் சென்றுவிடுகிறார். இதுதான் வழக்கு.
மிகப்பெரிய நஷ்ட ஈடு ஒன்று இந்த வழக்கில் கிடைக்கப்போகிறது என்று ஃப்ராங்குக்குத் தெரிகிறது. கோமாவில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கிறார். அவர் மனதில் பரிவு சுரக்கிறது. வழக்காட முடிவெடுக்கிறார். ஆனால் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகப்பெரிய தோல்விகள். மருத்துவமனை, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விலைக்கு வாங்கிவிடுகிறது. யாருமே சாட்சி சொல்ல வருவதில்லை. ஃப்ராங்க் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு தோல்வியும், பழைய புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த வாழ்க்கையை ஃப்ராங்க்குக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. வெறித்தனமாக மாறும் ஃப்ராங்க், எப்படி எல்லாத் தடைகளையும் தாண்டி, மருத்துவமனைக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்து, அவர்களிடம் இருப்பதிலேயே மிகப்பெரிய நஷ்ட ஈட்டை வாங்கிக்கொடுத்தார் என்பதே உணர்வுகரமான இந்தப் படத்தின் கதை.
ஒவ்வொரு வழக்காடும் காட்சியும் இந்தப் படத்தில் அவ்வளவு அருமையாக இருக்கும். பால் நியூமேன் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிவாஜி கணேசன் நன்றாக நடித்தார் என்று எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் பால் நியூமேனின் நடிப்பு. மிகச்சிறிய திரைக்கதை எழுத்தாளராக (அப்போதைய காலகட்டத்தில்) இருந்த டேவிட் மேமெட்டின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அவருக்குத் தயாரிப்பு நிறுவனம் வழங்கியது. அந்த நம்பிக்கை பொய்க்காமல், இந்தப் படம் பெருவெற்றி அடைந்து, டேவிட் மேமெட்டின் வாழ்க்கையே மறுமலர்ச்சி அடைந்தது. இப்போதும் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த கோர்ட் சார்ந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் விளங்குகிறது. அந்த வருடத்துக்கான ஆஸ்கர்களில் ஐந்து முக்கியமான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் படம்.
இவற்றைத் தவிரவும் ஏராளமான கம்பேக் படங்கள் ஹாலிவுட்டில் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த படங்கள்: The Wrestler, Jerry Maguire, Working Girl, Regarding Henry, The Devil Wears Prada, Chef, Joy, The Intern, Rocky Balboa, Cars (animation), Cinderella Man, Creed, Top Gun: Maverick, The Natural, Tincup, The Legend of Bagger Wance, Real Steel, Rush ஆகியன. இவை தவிரவும் இன்னும் எக்கச்சக்கமான படங்கள் ஹாலிவுட்டில் உண்டு.
கம்பேக் படங்களை எடுப்பதில் ஹாலிவுட்டை அடித்துக்கொள்ளவே முடியாது. அங்கே திரைப்படம் பார்க்கையில் ஒரு கதாபாத்திரம், இழந்த பெருவாழ்வை எத்தனையோ முயற்சிகள் செய்து மீண்டும் அடைவதை எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கையில் முன்னேறுவதை அங்கே ஒரு மதம் போலக் கடைப்பிடிக்கின்றனர் என்பதே இதற்குக் காரணம். The American Dream என்று இது அமெரிக்காவில் வர்ணிக்கப்படுகிறது. ஒவ்வொரு அமெரிக்கனும் இந்த அமெரிக்கன் கனவைப் பற்றிப் பள்ளிகளில் படித்தே வளர்வதால் அவர்களுக்குள்ளும் இயல்பாக ஒரு தன்னம்பிக்கை வளரவே செய்கிறது. இதனால் உலகிலேயே கம்பேக் திரைப்படங்களை அதிகமாக எடுக்கும் இடமாக ஹாலிவுட் இருக்கிறது. இந்தத் திரைப்படங்களுமே பெருமளவில் நிஜவாழ்க்கையில் இப்படி கம்பேக் கொடுத்த மனிதர்களைப் பற்றியே ஹாலிவுட்டில் இருப்பதையும் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.