குடிநோயைத் தவிர்ப்பது எப்படி?

Siva
Published on

குடியை மருத்துவ ரீதியாக இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று சமூகக் குடிப்பழக்கம். மற்றொன்று குடிநோய். குடிநோய் என்பது ஒரேநாளில் வருவதில்லை. முதலில் ‘கிக்’கிற்காகவே பலரும் குடிக்கத் தொடங்குகின்றனர். தொடக்கத்தில் ‘கட்டிங்’ குடித்தால் கிடைக்கும் ‘கிக்’, பிறகு ‘குவாட்டர்’ குடித்தால்தான் கிடைக்கும். இதை நம் உடலும் ஏற்றுக் கொள்ளுவதால் குடித்துக் கொண்டே இருப்போம். யார் குடி நோயாளி ஆகிறார்கள் என்பதில் (மரபு அணு) ஜீன் முக்கியப் பங்காற்றுகிறது. குடிப்பவர்களில் 20 சதவீதம் குடிநோயாளி ஆகலாம் என்கிறது டி.டி.கே மருத்துவமனையின் ஆய்வு.

உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவது:

குடியில் பாதுகாப்பான அளவு என்பது இல்லை. குறைந்த அளவு குடியும் தீவிரமான உடல் பாதிப்பையும் குடிநோயையும் ஏற்படுத்தும். குடிப்பழக்கம் எப்போது குடிநோயாக மாறுகிறது என்பது அறுதியிட்டுக் கூற முடியாது. குடியின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தால் இரண்டுவிதமான சார்புநிலைகள் வரும். உடல்ரீதியான சார்புநிலை (Physical Dependence), மனரீதியான சார்புநிலை (Psychological Dependence) இந்த நிலைகளில் இருப்பவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது. இதனால் அவர்கள் உடல், மனம், குடும்பம் மற்றும் பொருளாதார நிலைகளில் மிக மோசமான விளைவுகளுக்கு ஆளாவார்கள்.

குடிப்பழக்கத்தின் ஐந்து படிநிலைகள்:

1. ஆரம்ப நிலை: குடி அல்லது போதை என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தாலோ, நண்பர்கள் தரும் அழுத்தத்தாலோ குடிப்பது

2. தவறான பயன்பாடு (Abuse): பிரச்னைகள் வந்தாலும்கூட நிறுத்தாமல் தொடர்ந்து குடிப்பது

3. ஏற்பமைவு (Tolerence): முன்னர் கிடைத்த அனுபவம் (கிக்) இப்போது கிடைப்பதற்கு அதிக அளவு குடிப்பது

4. சார்பு நிலை: இயல்பாகச் செயல்படுவதற்கு உடலுக்கும் மனத்துக்கும் குடி தேவையானதாக ஆகிவிடுகிறது.

5. குடிநோய்: குடியினால் பிரச்னைகள் உண்டானாலும்கூடக் குடிக்காமல் இருக்கமுடியாத நிலை

மனநலப் பிரச்னைகள்

குடியினால் மூளை பாதிக்கப்படுகிறது. அதனால் மனம் சார்ந்த பல பிரச்னைகளுக்கும் குடிநோய்க்கும் குடிப்பவர் ஆளாகிறார். குடிப்பழக்கத்தால் மறதி, தூக்கமின்மை, குழப்பம், சோர்வு, இல்லாதது தெரிவது, கேட்பது, தற்கொலை எண்ணம், பைத்தியம் பிடிப்பது, பக்கவாதம் ஏற்படுவது, ஆளுமைத் திறன் பாதிக்கப்படுவது, பயமுறுத்தும் கனவுகள் வருவது போன்ற பல மனநலப் பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் ரீதியான பாதிப்புகள்

கொஞ்சம் குடித்தாலும் மூளையும், கல்லீரலும் பாதிக்கப்படும். கல்லீரல் மீண்டும் உருவாகலாம். ஆனால் மூளை நிரந்தரமாக பாதிக்கப்படும்.

குடியினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி இல்லாமல் போவது, மற்றும் எரிச்சல் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

குடியினால் தன்னியக்க நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வயிற்றுப்போக்கு, ஆண்மை இழப்பு ஏற்படலாம். தசை மண்டலமும் பாதிக்கப்படும். உடல் வலிமை குறையும். இதயத் தசைகளும் பாதிக்கப்படலாம். இதனால் இதயம் செயலிழப்பு ஏற்படலாம். குடிநோயாளிகள் இதயநோயால் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும், செத்துப்போன தசை செல்களிலிருந்து மையோகுளோபின் வெளியேறும்போது அது கிட்னி இயக்கத்தை முற்றிலும் முடக்கலாம்.

குடியால் ஜீரண மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜீரண மண்டலத்தோடு தொடர்புடைய கணையம், பாதிக்கப்படலாம். எலும்பும் பலவீனம் அடையலாம். தோல் நோய்கள் வரலாம்.

குடும்ப, சமூக, பொருளாதார பிரச்னைகள்

குடியால் பாதிக்கப்படுவது முதலில் குடும்பம்தான். குடிப்பவர்கள் வீட்டில் அதிக நேரத்தைச் செலவழிக்கமாட்டார்கள். திருமணம் போன்ற பொது நிகழ்வுகளையும் புறக்கணிப்பார்கள். ஆண்மை இழப்பு, விவாகரத்து போன்ற பிரச்னைகளுக்குக் குடி முக்கிய காரணியாக உள்ளது. பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகலாம். குடிநோயாளிகள் குடிப்பதில் அதிக நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவழிக்கின்றனர். சொல்லப்போனால் வேலைக்குக்கூடப் போகமாட்டார்கள். கடன் வாங்கிக் குடிக்கும் அளவுக்கு வருவார்கள். குடிப்பதற்காக எதையும் செய்யும் நிலைக்கு வருவதுதான் குடிநோயின் கடைசி நிலை எனலாம்.

குடிக்க ஆரம்பித்தால் அளவில்லாமல் குடித்துக் கொண்டிருப்பார்கள். கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள். இதைத்தான் குடிநோய் என்கிறோம். குடிநோயாளி ஆகிவிட்டால், ஆயுட்காலத்தில் பதினைந்து வருடத்தை இழக்க நேரிடும்.

குடி மீள்தல்

குடியை விடவேண்டும் என்று குடிநோயாளிகள் நினைத்தால்தான் குடிநோயைக் குணப்படுத்த முடியும். இப்படி நினைப்பவர்களுக்குக் குடும்பத்தினரும் உறவினர்களும் அனுசரணை யாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

குடிப்பது மனதையும் உடலையும் பாதிப்பதால், குடியை ஒரேயடியாக நிறுத்துவதுதான் குடியிலிருந்து மீள்வதன் முதல் படி. இப்படி திடீரெனக் குடியை நிறுத்தும்போது வரும் விளைவுகள் (Withdrawal Syndrome) அதிகம். குடியால் மூளையும் உடலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் குழப்பம், பதற்றம், தூக்கமின்மை, வாந்தி, வலிப்பு, கைகால் உதறுதல், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மறுவாழ்வு மையத்துக்கு வருபவர்களுக்குத் தலைமுதல் கால் வரை மருத்துவப் பரிசோதனை செய்து, அதற்கேற்றவாறு மருத்துவம் பார்ப்போம். இவர்கள் உடல் ரீதியாகக் குணமடைய நான்கு முதல் 14 நாள்கள்கூட ஆகலாம். அதன் பிறகு கவுன்சிலிங் கொடுப்போம். இதுமட்டுமில்லாமல் சம்பந்தப்பட்டவரின் மனைவி, பிள்ளைகளுக்கும் கவுன்சிலிங் கொடுப்போம். அதேபோல், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மீண்டும் குடிக்காமல் இருப்பதற்கான ஆலோசனைகள், குழுப்பயிற்சி வகுப்புகள் (Activity Based Therapy), யோகா, மன அமைதிக்கான மருத்துவம், உடல் பயிற்சி போன்றவை வழங்குவோம்.

எஸ்பிரால் என்ற மாத்திரையை (Esperal Tablet) அவர்களின், குடும்பத்தாரின் ஒப்புதலோடு தருவோம். இது குடிக்கவிடாமல் செய்யும் மாத்திரை. எஸ்பிரால் மாத்திரை எடுக்கும்போது குடிப்பது ஆபத்தானது என்பதால் இதை எடுப்பவர்கள் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். அவர்களின் உடலும் மனமும் சீராகிவிடும். முதல் மூன்று வார மருத்துவம் முடிந்த பின்னர் தொடர்சிகிச்சை அவசியம். இது அவர்களுடைய மற்றும் குடும்பத்தாருடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆலோசனை மூலம் தீர்வுகாண உதவும்.

குணப்படுத்துவதைவிடத் தடுப்பதே சிறப்பு. எனவே மது உபயோகத்தைத் தடுப்பதற்கான முழுமுயற்சியில் டி.டி.கே மருத்துவமனை தீவிரமாகப் பணியாற்றுகிறது. குடிப்பழக்கத்தினால் நன்மை ஏதும் இல்லை என்ற விழிப்புணர்வையும் அதனால் விளையும் தீமைகளைப் பற்றிய புரிதலையும் சமூகத்தின் பல தரப்பினர்களுக்கும் அளிக்கிறோம். எல்லோரும் நலமாக வாழ்க!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com