இத நான் எதிர்பார்க்கலை ங்க...

இத நான் எதிர்பார்க்கலை ங்க...
Published on

பிக்குகளே, ததாகதர் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். அனைத்து தர்மங்களும் நிலையற்றவை. பிறப்பு இருந்தால் இறப்பும் இருக்கும். விடுதலையை அடைவதற்கான உங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்’

– புத்தரின் இறுதிவாக்கு

விரைந்தோடும் நதிகள்

பெயரும் வடிவமும் துறந்து

கடலில் கலப்பது போல

அறிந்தோன்

பெயரும் வடிவமும் விடுபட்டு

அப்பாலுக்கும் அப்பாலான

ஒளிவடிவான புருஷனைச்

சென்றடைகிறான்.

– முண்டக உபநிடதம்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

– திருக்குறள்(336)

நம்மை துன்புறச் செய்வது நிலையாமை அல்ல. எந்த பொருளுமே நிலையானது அல்ல என்கிறபோது அவை நிலைத்து நீடிக்கவேண்டும் என நாம் விரும்புவதுதான் நம்மை துன்புறச் செய்கிறது!

– திச் நாட் ஹான்.

எதிர்பாராத சம்பவம் -1 : இன்றைக்கு இருபத்துஐந்து ஆண்டுகளுக்கு முன் செல்வோம். உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் கூறுகளை அறிந்துகொள்ள ஆரம்பித்த காலம். சென்னையின் தெருக்களில் எல்லாம் கணினிப் பொறியாளர்களாக நிரம்பி இருந்தார்கள்.

கல்லெறிந்தால் எதாவதொரு கணினிப்பொறியாளர் மேல்தான் விழும் எனச் சொல்வதுண்டு. எக்கச்சக்கமான பேர் ஐடி துறையில் வேலை பெற்று அமெரிக்காவுக்கு பணிபுரியச் சென்றார்கள். எதிர்கால வாழ்க்கை பற்றிய கனவுகள் அவர்களுக்கு நிறைந்திருந்தன. அவர்களில் ஒருவராக அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்கிறார் கிரிஷ் மாத்ருபூதம் என்ற இளைஞர். திருச்சியைச் சேர்ந்தவர்.  வல்லம் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தவர். வேலைக்குப் போன சில காலத்திலேயே நடக்கிறது யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வு. பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்த டாட்காம் என்கிற ஒரு  ‘குமிழ்’ வெடிக்கிறது. எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலையில் இணைய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் விலகிக் கொள்ள டாட்காம் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் வேலை இழந்தனர். கிரிஷ் சென்னை திரும்பி, ஜாவா பயிற்சி தரும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மூன்றே மாதத்தில் அதை மூடுகிறார். மீண்டும் வேலை தேடுகிறார். இப்போது ஜோஹோ(Zoho) ஆக இருக்கும் அப்போதைய Adventnet நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இந்த வேலையையும் ஒரு கட்டத்தில் துறந்து ப்ரெஷ்வொர்க்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி வெற்றி பெறுகிறார். 2021-இல் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு13 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

தன் வெற்றிக்கதையை ஆல் இன் என்ற தலைப்பில் நூலாக எழுதி இருக்கிறார் கிரிஷ்மாத்ருபூதம்.

எதிர்பாராத சம்பவம் -2: தன் 14 வயதில் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் அணியை எதிர்த்து சென்னை அணி சார்பாக விளையாடினார் அஸ்வின். ஓர் ஆட்டத்தின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. வலி. ஓட முடியவில்லை. 14 வயதுக்குட்பட்ட தெற்கு மண்டல அணிக்காக அடுத்து ஆடினார். இங்கு நன்றாக ஆடினால் அடுத்த கட்டத்துக்குத் தேர்வாகலாம். முதல் ஆட்டத்தில் அவர் ஆட வைக்கப்படவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ஆடி  இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார். அடுத்த ஆட்டத்துக்கு நீ வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். எப்படி இருந்திருக்கும்? வீட்டுக்கு வந்து அம்மா மடியில் படுத்து அழுதார். ‘நான் இனி என்ன செய்யப்போகிறேன்? நான் நன்றாகப் படிக்கும் மாணவனும் அல்ல. விண்வெளி வீரனாகவோ மருத்துவராகவோ ஆகப்போவது இல்லை. கணக்கும் சரியாக வராது. எனவே பொறியாளரும் ஆகமுடியாது. என் சக மாணவர்கள் எல்லாம் மிக நன்றாகப் படிக்கிறார்கள். கிரிக்கெட்தான் என் வாழ்க்கையில் நன்றாக வரக்கூடிய ஒன்று என நினைத்தேன். அதிலும் சாதிக்கமுடியவில்லை. எதில் சாதிக்கப்போகிறேன்? பள்ளிகள் அளவில் நன்றாக விளையாடிய சாதாரணதொரு கிரிக்கெட் வீரன் மட்டும்தானா நான்? நானொரு தோல்விக் கதையாக முடியப்போகிறேனா? என் பெற்றோர்களும் வசதியானவர்கள் அல்ல. குடும்பத்தை நான் முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என அவர்கள் நினைக்கலாம்; நினைக்காமலும் இருக்கலாம்,’ இப்படி எல்லாம் அவர் நினைத்திருக்கிறார்.

மறுநாள் காலையில் கடும் வலி. நடக்க முடியவில்லை. மருத்துவர்கள் இடுப்பில் ஒரு  ‘டிஸ்க் ஸ்லிப்’ ஆகிவிட்டது என்று கூறிவிட்டனர். ஒரே வழி அறுவை சிகிச்சைதான். இப்போது ஒன்று செய்யவேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் இன்னொன்று செய்யவேண்டும். இப்படி நடந்தால் அஸ்வின் கிரிக்கெட்டை மறந்துவிடவேண்டியதுதான்! கடந்த சில ஆண்டுகளாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி அவரது தாத்தாவும் பெற்றோர்களும் கண்டிருந்த கனவுகள் எல்லாம் சரியக் காத்திருந்தன.

தாத்தாவும் அம்மாவும் சேமித்திருந்த பணத்தில் இருந்து சிகிச்சைக்குத்  தேவையான நிதி திரட்டப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது.

அன்றைய தினம் அஸ்வினின் அம்மா, வேலை பார்த்த இடத்தில் விடுமுறை கேட்டார். அவரது தலைமை அதிகாரி விவரம் கேட்டார். மகனுக்கு அறுவை சிகிச்சை என அவர் கூறினார்: ‘இருங்க.. அதற்கு முன்னர் அப்பல்லோவில் எனக்குத் தெரிந்த எலும்பு சிகிச்சை மருத்துவர் இருக்கிறார். அவரை ஒருமுறை பார்த்துவிடுங்கள்!’ என்ற அவர், அன்று மதியமே நேரம் வாங்கித் தந்தார்.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் குழு காத்திருந்த வேளையில் பெற்றோர் அஸ்வினை அப்பல்லோவுக்குக் கூட்டிப்போனார்கள். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ரிப்போர்ட்டுகளை வாங்கிப் பார்த்த அந்த மருத்துவர்,’ அறுவை சிகிச்சை வேண்டாம்! வீட்டில் ஓய்வு எடுத்தாலே இது சரியாகிவிடும்’ என்று சொல்லிவிட்டார். ஆறு வாரம் வீட்டிலேயே படுத்தபடுக்கையாக இருந்து அஸ்வின் நலம்பெற்றார். கொஞ்சமும் எதிர்பாராத அந்த மருத்துவரின் ஆலோசனை, அஸ்வின் என்ற மாபெரும் சுழற்பந்து வீச்சாளனை இந்திய அணிக்கு அளித்தது ( அஸ்வின் தனது I have the streets நூலில் இது பற்றி எழுதி இருக்கிறார்).

சற்றும் எதிர்பாராமல் காலில் ஏற்பட்ட விபத்தால் தான் மிகவும் விரும்பிய, சாதிக்க நினைத்த கிரிக்கெட்டை விளையாட முடியாமல் மனம் உடைந்துபோன நண்பனை ஒருவனை எனக்குத் தெரியும். இப்போது அவன் தொழில்துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறான்.

தான் மிக விரும்பி, தேசிய அளவில் ஆட விரும்பிய ஹாக்கி விளையாட்டை விபத்தொன்றால் விளையாடவே முடியாமல் போனது. அன்றைக்கு ஹாக்கி மட்டையை தூரப்போட்டு விட்டு, இன்று எழுத்தாளராக மலர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் இன்னொரு நண்பரை நான் அறிவேன்.

திட்டமிட்டு நினைத்தபடியே அனைத்தும் நடப்பதெல்லாம் மிகக் குறைவானவர்களுக்கே. அதற்காக எதுவும் நிலையானதே அல்ல என்ற ஆழமான தத்துவ சிந்தனைக்குள் நாம் போகவேண்டியது இல்லை. “தத்துவத்தின் நோக்கம் மனிதனை நிச்சயமற்ற நிலையில் வாழ்வதற்கு  பயிற்றுவிப்பதுதான்… அவனை அமைதிப்படுத்துவது அல்ல, அவனது மன அமைதியைக் கெடுப்பதுதான்” என்ற ரஷ்ய தத்துவவியலாளர் லெவ் செஷ்டோவின் சொற்களை நினைவு கூரலாம்.  

ஆனால் இதுவும் கடந்துபோகும் என்ற புரிதலுடன் வாழ்க்கையை அணுகவேண்டியது முக்கியம். ஒரு ஜன்னல் மூடப்படுகிறது என்றால் இன்னொரு கதவு திறக்கிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேரத்தை, நிச்சயமின்மையின் நிஜம் தகிக்கும் காலகட்டத்தைத் தாங்கிக் கொள்வது மிக முக்கியமானது.

இந்த இதழில் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருந்தோம். விபத்துகள், இழப்புகள், பேய்கள் என பல்வேறு விதமான அனுபவங்களை எழுதி இருக்கிறார்கள். இவற்றின் இடைவெளிகளுக்குள் நாம் புரிந்துகொள்ள வேண்டியது நிச்சயமின்மைக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு என்பதே.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com