“….திருமா வியல்நகர்க் கருவூர் முன்றுறைத்
தெண் நீர் உயர்கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே…” கணக்காயனார் மகனார் நக்கீரனார் [அகநானூறு ]
“…. பொலம்செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண்ஆன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்….” ஆலந்தூர் கிழார் [ புறநானூறு ]
விடிந்து கொண்டிருந்த வைகறை வேளை. தோட்டத்து வீட்டின் உள்ளறையில் உறங்கிக் கொண்டிருந்த நான் கண்விழிக்கிறேன். விநோதமான ஒருவித சப்தம் கேட்கிறது. எழுந்து வெளிவாசலுக்கு ஓடி வருகிறேன்.
எங்கள் வீட்டினர் எல்லோரும் தென்கிழக்கு திசையில் பார்த்தவாறே நிற்கின்றனர். அப்பா மிதிவண்டியை உருட்டி வந்தபடி சொல்கிறார். ‘பெரியாத்துல வெள்ளம் வந்திருச்சு…. பெருத்த சேதமாக இருக்குமாட்ட இருக்கு… ஒரு எட்டு போயி பாத்துட்டு வாறேன்….’
நானும் அடம்பிடித்து மிதிவண்டியின் முன்சட்டத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். இரவெல்லாம் பெய்த கனமழையின் நீர்ப்பெருக்கு வழியெல்லாம் வழிந்தோடுகிறது. ஈரமண்சாலையில் மிதிவண்டி மெதுவாக சென்றது. ஆற்றின் நீரோட்ட முறைச்சல் ஓங்கிக் கேட்டது. அப்பா மிதிவண்டியை ஓட்டிப்போய் வெள்ளப்பெருக்கோரம் நிறுத்துகிறார். அந்த இடத்தில் அமராவதி தெற்கேயிருந்து வந்து கிழக்கே திரும்புகிறது. புனல்பொங்கி எங்களை மூழ்கடிக்கும் தொனியில் கனமுறைச்சலிட்டபடி நெருங்கி வருவது மனசுக்குள் பெரும்திகிலை கொடுத்தது. ஆற்றுவெள்ளம் நெடும்பனை உயரம் இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். வெள்ளத்தோடு ஆணிவேர் பலம் குறைந்த கரையோர நெடுமரங்கள், வாழைகள், தென்னை நுனிகள், ஆடுமாடுகள், மாட்டுவண்டிகள், வைக்கோல்போர் என மிதந்து செல்கின்றன. மொந்தமான கட்டுவிரியன் ஒன்று கரையொதுங்கி நெளிகிறது.
எனக்கு அமராவதி நதி குறித்த முதல் காட்சி சித்திரம் இதுவாகத்தான் இன்னும் நினைவடுக்கில் தங்கி இருக்கிறது. இந்த நதிவெள்ளம் எம்.ஜி.ஆர் முதன்முறையாக முதலமைச்சரான ஆண்டு என்று வீட்டினர் சொல்லக் கேட்டதுண்டு.
எங்கள் ஊரிலிருந்து கிழக்கே ஐந்து மைல் சென்றால் கோட்டைமாரியம்மன் கோவில் வரும். அமராவதியின் இடக்கரையோரம் அமைந்துள்ள ஆதிகாலத்துக் கோவில். கொற்கைமாரி பிரசித்தி பெற்றவள். கண்நோய்க்கு விமோசனம் கொடுப்பவள். ஆண்டுக்கு இருமுறையாவது எங்கள் வீட்டினர் சவ்வாரிவண்டி கட்டிக்கொண்டு சென்று கோட்டைமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து அபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று அநேகமாக அடசல் (சேவல் பலியிடுவது) போடுவதும், கிடாய்வெட்டும் நிகழும். குடைச்சீத்தை மரநிழலில் கல் அடுப்புக்கூட்டி கறி வேகவைத்து உண்பதும் நடக்கும். சிறுவர்களான எங்களுக்கு கிடாய்வெட்டும் கறிசோறும் சாமி கும்பிடுதலும் முக்கியமல்ல… அந்த தினம் முழுவதும் அமராவதியில் நீந்திக் குளிப்பது மட்டுமே குதூகலம். கமலாத்தாள் சித்திக்கு கல்யாணம் நடந்த வருசம் கந்தசாமி சித்தப்பாவும் புதுமாப்பிள்ளையாக எங்களோடு கோட்டைமாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். சவ்வாரி வண்டியிலிருந்து இறங்கியதும் கந்தசாமி சித்தப்பா கருப்புவெள்ளை கேமரா ஒன்றை எடுத்து கழுத்தில் தொங்கவிட்டார். சிறுவர்களான எங்களை எல்லாம் ஆற்றுக்கு கூட்டிப் போய் பாறை மீது நிற்க வைத்து நிறைய புகைப்படம் எடுத்தார். எனக்கு நினைவு தெரிந்து புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தது அதுதான் முதல் தருணம். அந்த புகைப்பட ஆல்பம் எங்கள் வீட்டு ஆசாரத்து மரமேசையில் வெகுகாலம் கிடந்தது. விளையாட்டில் சண்டை வரும்போது எங்கள் எதிரி அந்த புகைப்பட ஆல்பத்தில் இருந்தால் முகத்திற்கு மீசை வரைவதும் நடக்கும். அந்த மீசை வரைந்த புகைப்படங்கள்தான் பிற்காலத்தில் எனக்கு ‘மீசை வரைந்த புகைப்படம்’ சிறுகதை எழுத உந்துதல். அந்த ஆல்பத்தில் நாங்கள் ஆற்றங்கரையோர பாறை ஒன்றின் மீது நின்று எல்லோரும் ஒரேநேரத்தில் ஆற்று நீரைப் பார்த்து சிறுநீர் கழித்த புகைப்படம் ஒன்றும் இருந்தது. அந்த புகைப்படத்தை கந்தசாமி சித்தப்பா எப்படியோ ரகசியமாக எடுத்திருக்கிறார். வீடு பாகம் பிரித்து தனித்தனியாக அமைந்ததில் அந்த புகைப்படம் எப்படியோ காணாமல் போய்விட்டது.
அந்த அமராவதியும் கோட்டைமாரியம்மன் கோவில் வளாகமும்தான் எனது மாயாதீதம் நாவலின் கதைக்களம். பால்ய காலமெல்லாம் நான் அமராவதியின் கரையோரத்தில் கண்ட மாந்தர்கள்தான் அதன் பிரதான கதை மாந்தர்கள்.
எங்கள் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப் பாசனமும் பாதிக்கு மேல் மானாவாரியும் கொண்டவை. ஒருபோகம் விளையும் நெல்வயல்கள் எல்லாம் அமராவதியின் அக்கரையின் மீது இருந்தன. ராஜவாய்க்கால் பாயும் கரைவெளியின் கடைமடை. தோட்டத்திலிருந்து அரை மைல் போல் சென்று தாழைக்கரையின் வண்ணார்துறையில் இறங்க வேண்டும். ஆற்று நடுவில் குத்துப்பாறை ஒன்றின் மீது முற்றிய ஆயமரம் இலைகள் சலசலக்க நிற்கும். நதி பெருகிய எத்தனையோ வெள்ளத்திற்கும் அந்த ஆயமரம் சாயந்ததில்லை.
எங்களையெல்லாம் பெரும்பாலும் பெரியப்பாதான் சவ்வாரி வண்டி பூட்டி வயலுக்கு அழைத்துப் போவார். வண்ணார்துறையில் சவ்வாரி வண்டியை அவிழ்த்துவிட்ட பின் எருதுகளுடன் அக்கரை வயலுக்கு ஆற்றில் இறங்குவார். எங்களை பருவகாரர்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஆற்றில் ஆள் இறங்க முடியாத வெள்ளம் ஓடும்போது பெரியப்பா எருதுகளின் வாலைப் பற்றி அக்கரை ஏறுவார். வால்பற்றி பழக்கப்பட்ட எருதுகள் சராங்கமாக ஆற்றைக் கடக்க உதவும். பெரியப்பா திரும்பி வரும்வரை ஆற்று நீரில் நீந்தி விளையாடுவோம். அந்தி சாயும்வரை ஆறேதான் கதி. ஆற்று நீரோடு பொழுது கழிந்த தினங்கள் எங்கள் இளம் பிராயத்தின் பெருமகிழ்ச்சி தினங்களில் ஒன்று. பருவகாரர்கள் மரக்கிளை வளைத்து கழிஞ்சிக்காய் பறித்துத் தருவார்கள். அந்த வாரமெல்லாம் பள்ளிக்கூடத்தில் கழிஞ்சிக்காய் உரசி மற்ற சேக்காலிகளின் தொடையில் சூடு வைப்போம். பருவகாரர்கள் பாறை மடுவில் முக்குளித்து ஆறா மீன்கள் பிடித்து பாறையில் பரப்பி சுத்தம் செய்வார்கள். சோற்றுப்போசியிலிட்டு சவ்வாரிவண்டியில் வைப்பார்கள். சில தினம் விலாங்கு மீன்களும் சிக்கியதுண்டு. எங்களுக்கு அந்த இரவின் உணவு சுவைகூடியது. இன்றும் மறக்க முடியாதது.
அப்பா மொட்டைவண்டி பூட்டினாலும் நாங்கள் ஏறி உட்கார்ந்து கொள்வோம். மொட்டைவண்டி நேராக அமராவதியோடு உப்பாறு கலக்கும் கூட்டாற்று முனைக்கு செல்லும். பருவகாரர்கள் அங்கு காத்திருப்பார்கள். கூட்டாற்றுமுனையின் அக்கரை மேட்டுக்கு மேலேயும் எங்களுக்கு ஓர் நெல்வயல் இருந்தது. உப்பாறு அமராவதியின் உபநதி. அப்பா பருவகாரர்களோடு சேர்ந்து நடந்து நாணல்கள் செழித்த அக்கரைக்கு செல்வார். நாணல் வெட்டி மொட்டைவண்டியில் ஏற்றுவார். நாங்களும் நாணல்கள் வெட்டுவோம். கரும்பின் பூபோல காற்றாடும் நாணல் பூக்கள் மிகுவசீகரம் கொண்டவை. நாணல் பாரமேற்றிய மொட்டைவண்டியின் மீது அமர்ந்து திரும்பி வரும் பயணம் எங்களுக்கு இளவரசர்களின் தேர்யாத்திரையாக உணரும் தரும். மொட்டைவண்டி தோட்டம் வந்ததும் அப்பாவும் பருவகாரர்களும் வெளிவாசல் பந்தலுக்கு நாணல் கூரை வேய்வார்கள். பச்சை வண்ண நாணல்பந்தல் முனிவர்களின் வனக்குடிலின் தோற்றத்தை கொடுக்கும்.
இன்றுவரை என் படைப்புகளில் அமராவதிக்கரை நாணல்கள் பிரதானமான பங்கு வகிக்கின்றன. நாணல்கள் மட்டுமல்ல. நீர்க்கொடிகளும் நீர்த்தாவரங்களும் நீர்ப்பறவைகளும் மீனினங்களும் நண்டினங்களும் ஆமையினங்களும் எனது படைப்புகளில் இடம் வகிப்பதற்கு இந்த அமராவதியே மூலகாரணம். அமராவதியை காணும் ஒவ்வொருமுறையும் எனக்கு அவை நெருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
அமராவதியில் இரண்டாவது பெரிய வெள்ளம் எனது பால்யம் முடிவுற்று இளைஞனாக மாறிய காலத்தில் ஏற்பட்டது. அமராவதியுடன் சண்முகநதி சங்கமிக்கும் இடத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை துணிகரமாக பரிசல் செலுத்தி மீட்ட பரிசல்காரரின் சாகச நீர்ப்பயணத்தை நதிப்பிரவாகம் என்கிற குறுநாவலாக எழுதினேன். அந்த பரிசல்காரர் ஆற்றில் பரிசல் செலுத்துவது நின்றுபோன பின்பும் அறுவடையின்போது நெல்களத்தில் சாக்குப்பையுடன் வந்து பரிசல் கூலி வாங்குவார். காலம் என் கதையில் வாழும் அவரையும் காணாமல் போனவர்களோடு சேர்த்து விட்டது.
ஓர் ஆடிப்பெருக்கில்
புதாற்று வெள்ளம் சுழித்த மடுவில்
விரும்பி அகப்பட்டுக் கொண்டாள்
நீந்தத் தெரிந்த அம்மா
நாங்கள் பதறி கூடிக் கூப்பாட்டிட்டோம்
வானம் அளவுக்கு கூக்குரலிட்டோம்
விளையாட்டை புரிந்துக்கொண்டு
சிற்றலையாக அவளை மாற்றி
கரையேற்றிவிட்டது ஆறு.
கவிஞர் கதிர்பாரதியின் இந்த புதாற்றுக் கவிதை எங்கள் அமராவதிக்கும் பொருந்தும். அமராவதி பெருவெள்ளம் அதிகம் மரணச்சேதியைக் கொண்டுவந்ததில்லை. உயிருள்ள உடலை சிற்றலையாக்கி கரையொதுக்கி விடும் சுபாவம் கொண்டவள் அமராவதி.
பெருக்கெடுக்கும் நதிக்கரையில் நின்று கொண்டிருக்கிறேன்
காணும் நீங்கள்
உங்கள் ஊரில் ஓடிக்கொண்டிருக்கும் நதியை நினைத்துக் கொள்கிறீர்கள்
ஓடிக்கொண்டிருக்கும் என்னுடைய நதி என்கிற கவிஞர் வேல்கண்ணனின் கவிதையில் வரும் வரிகளை நான் நிஜத்தில் உணர்ந்ததுண்டு. நான் என் பயணத்தில் எந்த நதியைக் கண்டாலும் அது அமராவதியாகத் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடந்த கார்த்திகை மாதம். நான் இரவோடி நாவலின் இறுதிப்பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன். அமராவதி நதியின் வெள்ளப்பெருக்குதான் சில அத்தியாயங்களின் கதைக்களம். அப்போது அமராவதி குத்துப்பாறைகள் துருத்தி கூழாங்கற்களுடன் வறண்டு கிடக்கிறது. நான் கண்ட அமராவதியின் இரண்டாவது பெருவெள்ளத்தை ஞாபகப்படுத்தி எழுதியபடி இருக்கிறேன். மேற்கே முகத்துவாரமான ஆனைமலை பக்கம் கனமழை கொட்டி அமராவதி நீர்பெருகி கரை புரண்டோடும் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. அமராவதி எனது இரவோடிக்காகவே பெருகி ஓடியதாக நினைத்துக் கொண்டேன்.
எனது புத்தகங்களின் என்னுரை எல்லாம் அமராவதி நதி சார்ந்தவை. காலநதிப் பிரவாகம், நிதர்சன நதி, நெடுந்தூரப் பெருநதியின் நீர்ப்பாதை என்றே எழுதியிருக்கிறேன். அமராவதிதான் என் கதைகளின் ஊற்று. அமராவதி இல்லாமல் என் படைப்புகள் இல்லை. தற்காலத்தில் ஆற்று மணல் அள்ளப்பட்டு ஊற்றுத் தோண்டினால் சுனை ஊறுவதில்லை. எருதின் வாலை பிடித்து அக்கரை செல்லும் பயணத்தை எவரும் மேற்கொள்வதில்லை. பாறையிடுக்கில் ஆறாமீன்களும் விலாங்கு மீன்களும் கிடைப்பது அரிதாகிவிட்டன. சில ஆண்டுகளாக கடைமடை வயல்களில் சரியாக நெல் விளைவதேயில்லை. சமீபத்தில் வண்ணார்துறை ஆயமரம் காய்ந்து சாய்ந்து விட்டது. நாணல்கரையின் செழுமை சீமைக்கருவேல் முளைத்து குறைந்துவிட்டது. இருப்பினும் விரைந்து கடக்கும் காலத்தில் ஏதோ ஒரு வருடத்தில் அமராவதியில் பெருவெள்ளம் வருகிறது. கடைமடை கரைவெளியில் நெல்நடவு நடக்கிறது. கரையோர நாணல்கள் பூத்து காற்றாடுகிறது. தாழை புடை தள்ளி மணக்கிறது.
இப்படித்தான் எனக்கு நீர் நிறைந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்கிற கவிப்படிம சொற்களாய் அமரலோகத்து நதியான ஆன்பொருநை என்கிற அமராவதி காட்சி தருகிறாள். நீர்ப் பெருக்கின்போது கரையோர மாந்தர்களின் எல்லாப் பிராய வாழ்வையும் கதைகதையாகச் சதா சொல்லி கடக்கிறாள்.