சூர்யா, முதல் பிறந்தநாளில்
சூர்யா, முதல் பிறந்தநாளில்

அந்த நள்ளிரவில் அடைமழையில்...

வெளியே அடைமழை கொட்டிக்கொண்டிருக்கிறது. வீட்டில் தனியாகப் படுத்திருக்கிறேன். தூக்கம் பிடிக்கவில்லை. மனதெல்லாம் என் மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனையிலேயே இருக்கிறது. இன்னும் ஓரிருநாட்கள் ஆகும் என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு நொடியையும் கடப்பது சிரமமாக இருக்கிறது. மணியைப் பார்க்கிறேன். பனிரெண்டு. திடீரென வீட்டுத் தொலைபேசி ஒலிக்கிறது… அதில் வந்த தகவல்…

ஊரில் இருந்து சென்னைக்குப் பெரிய ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றத் தான் வந்தேன். அதற்காக உழைத்து படித்து  முடித்து தயாராகும்போது அந்த தொழிலில் எதிர்காலம் இல்லை எனத் தெரிந்தது. இந்த படிப்பு முடிவுக்கு வரும்போதே… நான் கல்யாணம் கட்டி குழந்தைகுட்டி பெற்று வாழ்வதற்கெல்லாம் வசதி இருக்காது, எனவே திருவண்ணாமலை சென்று சாமியாராகிவிடவேண்டும் என எண்ணி இருந்தேன். அதுதான் 1965 –இல் என்னுடைய நிலை. ஆனால் காலம் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தது. கல்லூரிப் படிப்பு முடிவதற்கு முன்பே ஏவிஎம் ஸ்டூடியோவில் எனக்கு மேக் அப் டெஸ்ட் எடுத்தார்கள்.

கடற்கரையில் காந்தி சிலை அருகே சைக்கிளைப் பூட்டி விட்டு அமர்ந்தால், எட்டு தேசிய விருதுகள் பெற்ற என் ஆசிரியர் சந்தானராஜ், உன்னைப்போல் காந்தி படம் யாரும் வரைய முடியாது என்று சொன்னது ஞாபகம் வரும். லேன்ட்ஸ்கேப் ஓவியங்களில் சிறந்த பிபி சுரேந்திரநாத் நான் வரைந்த தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை ஓவியங்களைப் பாராட்டியது ஞாபகம் வரும். எல்லாம் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் சேர்ந்தார்ப்போல் ஆயிரம் ரூபாயை நான் பார்த்தது இல்லை. ஊரில் இருந்து மாதாமாதம் என் மாமா கல்விக்கடன் 100 ரூபாய் அனுப்புவார். (அதில் 85 ரூபாயே போதும் என்று சொல்லி விடுவேன்). இந்நிலையில் என்ன கதி ஆகப்போகிறோமோ என்று நடுங்கிக் கொண்டிருக்கையில் ஏவிஎம்மில் அழைத்து படத்தில் நடிக்க 100 ரூபாய் முன்பணம் அளித்தார்கள். ஆயிரம் ரூபாய் அந்த படத்துக்கு சம்பளம். அந்த படம் முடிந்தவுடன் மீதி 900 ரூபாய் கொடுத்தார்கள்.

இது முடிந்து நான் ஊருக்குப் போயிருந்தபோது மீட் மீ அட் ஜெமினி ஸ்டூடியோ என்று ஒரு தந்தி வருகிறது. ஜெமினி அதிபர் வாசன் அவர்கள் அனுப்பி இருந்தார். அன்றுவரை எப்போதும் முன் பதிவு இருக்கையிலேயே ரயில்களில் பயணம் செய்கிற நான், அன்றைக்கு முன்பதிவில்லாத இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து சென்னைக்கு ஓடிவந்து மறுநாள் காலையில் வாசன் அவர்களை சந்தித்தேன்.

”ஆர் யூ ஃப்ரம் கர்நாடகா?”

“நோ சார்’

“ஆர் யூ ஃப்ரம் கேரளா?’

“நோ சார்.. ஐ ஆம் எ பக்கா டமிலியன்” என்று பதில் சொன்னேன். “அப்ப சரி தமிழில் பேசுவோம்” என்றவர்.’ என்னய்யா சிவகுமார் என்று பெயர் வெச்சிருக்கே?” என்றார். ஏனெனில் தமிழ்நாட்டில் அப்போது அந்த பெயர் மிக அபூர்வம்.

 ‘சார் என்னோட ஒரிஜினல் பெயர் பழனிசாமி” என்றதும் விழுந்து விழுந்து சிரித்தார். ‘அப்புறம் ஏன்யா இந்த பேர வெச்ச?”

“இல்ல சார்.. மாடர்னா இருக்கட்டும்னு ஏவிஎம்ல வெச்சாங்க” என்றேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்.

“1500 ரூ சம்பளம் தர்றேன் ஓகே வா?’ என்றார். நானோ வாழ்க்கையில் 1000 ரூபாய் மொத்தமாகப் பார்த்திராதவன். கையெடுத்துக் கும்பிட்டேன். 500 ரூபாய் முன்பணம் அளித்தார்கள்.

இப்படியெல்லாம் காலம் மாறி ஏழெட்டுப் படங்கள் நடித்தபின்னர் திருமணம் செய்யலாம் என்று முயற்சி செய்தபோது சினிமாக்காரனுக்கு பெண் தர யாரும் தயாராக இல்லை.

அப்புறம் ஒரு அப்பாவி மனிதர் எனக்குப் பெண் கொடுத்தார். அந்தப் பெண் நான் நடித்த எந்த படத்தையும் பார்த்தது இல்லை என்பது ஒரு வசதியாகப் போய்விட்டது. அவர் முதலில் பார்த்தது நானும் ஜெயசித்ராவும் நடித்த வெள்ளிக்கிழமை படம். நான்  நெருக்கமாக ஜெயசித்ராவோடு நடித்த காட்சிகளைக் கண்டு அவருக்கு நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல்  இருந்ததாகப் பத்து ஆண்டுகள் கழித்து குறிப்பிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் மாதத்தில் 30 நாளும் காலை ஆறுமணிக்கு திரைப்படப்படிப்புக்குப் போவேன். மாலை வேளைகளில் நாடகங்களில் நடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் தான் வருவேன். ஓய்ந்து போய் கட்டிலில் விழுவேன். எப்படியோ அவங்க தாய்மையடைஞ்சிட்டாங்க!

தலைப்பிரசவத்துக்கு  ஊருக்குச் செல்லவேண்டும் என்றார். உங்க ஊருல இருந்து கோவைக்கு 30 மைல் ஆகிறது. திடீரென வலி எடுத்தால் பிரச்சனையாகிவிடும். அவ்வளவு தூரம் போகமுடியாது. எனவே உங்க அம்மாவை இங்கேயே வரச் சொல்லு என்றேன். அப்போதெல்லாம் நம்மை எதிர்த்து யாரும் பேச முடியாதுல்ல… நாமதான் ராட்சச பயல் ஆச்சே !அவங்க அம்மா வந்திருந்தார்.

கல்யாணி மருத்துவமனையில் வலி வந்தபின் கொண்டுபோய் பிரசவத்துக்காகச் சேர்த்தோம். படிப்பதற்காக வாரப்பத்திரிகைகளைக் கொண்டு போயிருந்தோம். என் துணைவியார் காலை நீட்டிப்போட்டு புத்தகங்களைப் படிப்பதைப் பார்த்த மருத்துவர், குழந்தை பிறக்க இன்னும் ரெண்டு மூன்று நாட்கள் ஆகும் போலிருக்கிறது. நீங்க கவலைப்படாமல் இரவு வீட்டுக்குப் போய்விட்டு காலையில் வாங்க என்றார்.  நான் வீட்டுக்கு வந்து படுத்துவிட்டேன். அன்றிரவு சென்னையில் சரியான அடை மழை. இரவு இரண்டு மணிவாக்கில் ஒரு போன் வருகிறது. ‘ சார் உங்களுக்கு பையன் பிறந்திருக்கிறான்!’

இன்ப அதிர்ச்சி ! எனக்கு மகனா.. அவன் கறுப்பா? சிவப்பா எப்படி இருப்பான்? அந்த இரவில் மழையில் நனைந்து கொண்டே மருத்துவமனை ஓடினேன். ஒரு சின்ன பிரம்புத் தொட்டில். துண்டு ஒன்றைப் போட்டு அதில் படுக்க வைத்திருக்கிறார்கள். குழந்தையின் கைவிரல்கள் நீளமாக இருக்கின்றன. தொட்டிலின் பிரம்புகளுக்குள் விரலை விட்டு பிடித்துக் கொண்டிருக்கிறான்.

காலையில் முதல் சாக்கலேட் சின்னப்பா தேவர் அண்ணாவை பார்த்துக் கொடுக்கச் சென்றேன். அலாதிக்காட்டில் நடந்த என் திருமணத்துக்கு அதிகாலை 5 மணிக்கே வந்து ஆசி கூறியவர் அவர்.. .காலையில் நாலரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருக்கிறார். ‘அண்ணே பையன் பிறந்திருக்கிறான்’ என்றேன். ‘முருகா.. முருகா..’’ என்றவர்.. ‘முருகன் பேர் வைடா’ என்றார். பிறகு சிவாஜி வீட்டுக்குச் சென்றேன். அந்நேரத்துக்கு அங்கே யாரும் எழுந்திருக்கவில்லை. சாக்லேட் பெட்டியைக் கொடுத்துவிட்டு வந்தேன். அன்று காலை படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன்.

இதற்கிடையில் சின்னப்பா தேவர், கல்யாணி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். குழந்தைக்கு ஒரு சவரன் தங்க நாணயம் வாங்கிச் சென்று கொடுத்துவிட்டு, என் மனைவியைப் பார்த்து, ‘எங்கம்மா நாலு சிங்கக்குட்டியைப் பெத்தா… நீ ஒரு சிங்கக் குட்டியைப் பெத்திருக்கே’ என்று ஜாலியாகச் சொல்லி இருக்கிறார். வாசலில் நின்ற எங்க அம்மா…‘அந்த நாலு சிங்கக்குட்டிகளுக்கும்  ஒரு பைத்தியக்காரி பொண்ணு பெத்து குடுக்காட்டி நீங்க என்ன பண்ணி இருப்பீங்க’ என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார். எங்க அம்மா ஓர் அழுத்தமான ஆள்… ‘இது யாரு?’ என்று கேட்ட சின்னப்பா தேவர், சிவகுமார் அம்மா என்றதும்...  ‘அம்மா மன்னிச்சுக்கம்மா.’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார்.

கல்யாணம் பண்ணவே வேண்டாம் என்றிருந்த நான் குடும்பியாகி முதல் குழந்தை பெற்ற கதை இதுதான். என் மகன் குழந்தைப்பேறுக்கு மனக்கிலேசம் அடையாத நான், என் மகளுக்கு முதல் பிரசவத்தின் போது குழந்தைப்பேறு தாமதம் ஆனபோது, குளியல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டு இறைவா... ஏன் அந்த குழந்தையை இப்படிச் சோதிக்கிறாய் என்று கதறினேன். இதற்கு அப்போது நான் மனமுதிர்ச்சி அடைந்திருந்தேன் என்பது காரணமா?அல்லது நான் ஒரு தகப்பனாக கனிந்திருந்தேன் என்பது காரணமா?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com