சர்வதேச அங்கீகாரங்கள்

கால்நூற்றாண்டு தமிழகம் - இலக்கியம்
சர்வதேச அங்கீகாரங்கள்
Published on

தீவிர இலக்கியம் பேசி குறுங்குழுக்களுடன் இயங்கி வந்த பத்திரிகைகள் கடந்த கால்நூற்றாண்டில் தம் வாசகப் பரப்பை விரிவாக்கிக் கொள்ள தங்களை நெகிழ்வுபடுத்திக் கொண்டன என்பது மிகமுக்கியமான மாறுதல்.

ஒரு காலத்தில் திரிலோக சீத்தாராமின் மொழிபெயர்ப்பில் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா, கநாசுவின் மொழிபெயர்ப்பில் பேர்லகர் குவிஸ்டின் பாரபாஸ் போன்றவை ஆரம்பத்தில் மொழிபெயர்ப்புகளாக நமக்குக் கிடைத்திருந்தன. முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா போன்றவற்றின் உதவியால் ரஷ்ய இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கக் கிடைத்திருந்தன. தொண்ணூறுகளின் இறுதியில் மொழிபெயர்ப்பில் ஒரு தேக்கம். சோவியத் ரஷ்யா சிதறுண்டதை அடுத்து மேற்சொன்ன பதிப்பகங்களும் செயலிழந்தன. இந்தச் சூழலில் தங்கள் உள்ளடக்கத்தை மாற்றிக்கொண்ட சிறுபத்திரிகைகள் மொழிபெயர்ப்புகளுக்கு வாய்ப்புகளை அளித்தன. வெளியிலிருந்து நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் அதே வேளையில் தமிழின் உன்னத எழுத்துகள் வெளியே செல்வது இல்லையே என்ற குறை இருந்துகொண்டே இருந்தது. கடந்த தசாப்தத்தில் உலக புத்தகக் கண்காட்சிகளை நோக்கி நமது பதிப்பாளர்களின் பார்வைகள் திரும்பியதை அடுத்து புதிய நூல்கள் மொழிபெயர்ப்புக்கு வரும் அதே வேளையில் நமது எழுத்தாளர்களின் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் அனைத்து மொழிகளுக்கும் தமிழின் பெருமையைச் சொல்லும் காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பெருமாள் முருகனின் மாதொருபாகனில் தொடங்கி கடந்த சில ஆண்டுகளில் இந்த மொழிபெயர்ப்புச்செயல் பரவலாக்கம் பெற்றுவருகிறது. மாதொரு பாகனின் மொழிபெயர்ப்பு 2013-இல் பென்குயினால் அனிருத்தன் வாசுதேவன் பொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியானது. 2018-இல் இது அமெரிக்காவிலும் க்ரொவ் அட்லாண்டிக் பதிப்பகத்தால் கொண்டு சேர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய இருநூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஜேசிபி இலக்கிய பரிசுக்கு (2019) பரிசீலிக்கப்பட்டன. அவரது ஆலாண்ட பட்சி நாவலின் மொழிபெயர்ப்புக்கு 2023 ஆம் ஆண்டு ஜேசிபி இலக்கிய விருது வழங்கப்பட்டது. அவரது பூக்குழி மொழிபெயர்க்கப்பட்டு புக்கர் பரிசுக்கான நீள் பட்டியலில் இடம்பெற்றது இன்னொரு அங்கீகாரம்.

சாருநிவேதிதாவின் என் பெயர் ஔரங்கசீப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு சமீபத்தில் கிராஸ்வேர்ட் விருது பெற்றது. ஜெயமோகனின் அறம், ஏழாம் உலகம் ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்புகளுமே (ப்ரியம்வதா ராம்குமார், சுசித்ரா ராமசந்திரன்) அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் சங்க விருதுக்கான நீள் பட்டியலில் இடம்பெற்றன.

இமையம், எஸ்.ராமகிருஷ்ணன், கௌதம சித்தார்த்தன் முதலியோரின் படைப்புகளும் ஆங்கிலம் உட்பட்ட மொழிகளில் வந்துகொண்டிருக்கின்றன. அசோகமித்திரன் போன்ற சிலரின் கிளாசிக் நாவல்கள் தான் மொழிபெயர்ப்பில் இருந்த நிலை தற்போது மாறுகிறது. காலச்சுவடு போன்ற தனிப்பட்ட பதிப்பாளர்களின் முயற்சி மட்டுமல்லாமல் தமிழக அரசின் சென்னை உலகப் புத்தகக் கண்காட்சியும் தமிழ்நூல்களை பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல வழங்கப்படும் பொருளுதவியும் இந்த இயக்கத்துக்கு இன்னொருபுறம் பெரும் உந்துதலை வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவின் அறிமுகம், பதிப்புத் துறையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெரும் தாக்கத்தால் இந்தச் செயல்பாடு இன்னும் வேகம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com