இரவோடு இரவாக தன்னந்தனியாக நடந்தே மருத்துவமனை போனேன்!

இரவோடு இரவாக தன்னந்தனியாக நடந்தே மருத்துவமனை போனேன்!

கல்யாணமாகி பன்னிரண்டு வருடம் எனக்கு குழந்தை இல்லை. பதிமூன்றாவது வருடம்தான் எனக்கு குழந்தை உண்டானது. எனக்கும் என் அம்மாவுக்கும் சிறுவயதிலிருந்தே பிடிக்காது (அப்பா இல்லை). அதனால் ஒன்பது மாதம் வரைக்கும், நான் எனது கணவர் வீட்டில்தான் இருந்தேன். எனது கணவர் ஊருக்கும் அம்மா ஊருக்கும் அரைகிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும். இந்த நேரத்தில் நூலகத்தில் வேலை பார்ப்பதற்கான படிப்பிற்காக எனது கணவர் மூன்று மாதப் பயிற்சிகாக மதுரைக்குப் போயிருந்தார்.

ஊருக்குள் என் அம்மாவை யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. பத்தாம் மாதம் பிறப்பதற்கு ஒருவாரம் இருக்கும்போது ஊரில் எனது சின்னம்மா, அத்தை என்று பத்து பெரிய ஆட்களோடு அம்மா என்னை கூப்பிட வந்தாள். அப்போதெல்லாம் வளைகாப்பிற்கு பெரிய ஆடம்பரமெல்லாம் எதுவும் கிடையாது. வந்தவர்களுக்கும் உள்ளூரில் இருக்கும் சிலருக்கும் சோறு, பருப்பு என்று விருந்து வைத்து எல்லோருடைய காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு போகவேண்டும் அவ்வளவுதான். நானும் அப்படியே அம்மாவுடனும் ஊர்ப்பெரியவர்களுடனும் பிறந்த ஊருக்குப் புறப்பட்டேன்.

ஊருக்கு வந்த ஒருவாரத்தில் இரவு ஒன்பது மணி இருக்கும். எனக்கு வலி எடுத்து விட்டது. எனக்கு அதைப் பற்றி தெரியாதாகையால் நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை எல்லோரும் படுத்து விட்டார்கள் ஆனால் நேரம் ஆக, ஆக எனக்கு வலி பொறுக்கமுடியவில்லை. எனது அம்மாவோ எனக்கு வீட்டில் வைத்துதான் பேறுகாலம் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டாள். ஏனென்றால் எங்கள் ஊரிலிருந்து சத்திரப்பட்டி என்ற ஊருக்குப்போய், பஸ் ஏறி, ராசபாளையம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும். எங்கள் ஊருக்கும் சத்திரப்பட்டிக்கும் இரண்டு கிலோ மீட்டர். அவ்வளவு தூரம் நடந்துத்தான் போக வேண்டும். அதனால் யாரும் அவ்வளவாக அப்போது ஆஸ்பத்திரிக்கு போவதில்லை. ஆனால் எனக்கு வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு விருப்பமே இல்லை. நமக்கே பன்னிரண்டு வருசம் கழித்துதான் பிள்ளைதங்கியிருக்கிறது. அதனால் ஆசுப்பத்திரிக்குத்தான்போக வேண்டும் எனது பிள்ளையை டாக்டர்கள்தான் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் எப்படியோ வந்துவிட்டது.

இரவு முழுக்க வலி, என் அம்மாவிடம் சொன்னேன். முதல் பிள்ளைக்கு அப்படித்தான் வலிக்கும், விடியட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றாள். ஆனால், நானோ அடுப்பில் வெந்நீரை வைத்து குளித்தேன். ஒரு பையில் மாற்று சேலை, ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டேன். என்கையில் ஐந்து ரூபாய் இருந்தது. அப்போது ஐந்து ரூபாயென்றால் ஐநூறு ரூபாய்க்கும் மேலே. அதனால் இரவோடு இரவாக விறுவிறுவென்று சத்திரப்பட்டியை நோக்கி தன்னந்தனியே நடக்க ஆரம்பித்தேன். வலி வரும்போது அங்கேயே உட்கார்ந்து விடுவேன். பிறகு எழுந்து நடக்க ஆரம்பிப்பேன்.

இப்போது விடிந்துவிட்டது நானும் பஸ்ஸில் ஏறிவிட்டேன். அப்போது ராசபாளையத்திற்கு ஐம்பது பைசா டிக்கெட்! பஸ்ஸிலிருந்து இறங்கி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டேன். ஆனால் டாகடர் யாரும் இல்லை. அங்கே என்னைப்போல் நிறைய பேர் வலியோடு உட்கார்ந்திருந்தார்கள். சிலர் கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒன்பது மணிக்கு டாக்டர் வந்தார். அவர் பெயர் ஜான்ஸி. மிகவும் நல்லவராக இருந்தார். நான் என் பிரச்சனையை அவரிடம் சொன்னேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு உனக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். நான் அங்கேயே வலியோடு நடந்து கொண்டிருந்தேன்.

காலையில் என்னைத் தேடியவர்கள் எப்படியும் நான் ஆசுபத்திரிக்குத்தான் போயிருப்பேன் என்றுமுடிவு கட்டி, பத்து மணிக்கு என் அம்மா, சின்னம்மா, பெரியம்மா என்று ஒரு கூட்டமே கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். வந்தவர்களும் சும்மா இராமல் "எதுக்கு இப்படி ஆசுபத்திரிக்கு வந்தே? இதுக்குள்ள வீட்டுலேயே அழகா புள்ள பெத்து சட்டென உதறி தூக்கியிருக்கலாம்" என்று என்னென்ன வசவெல்லாமோ வஞ்சித் தீர்த்தார்கள். நான் பேசாமல் இருந்தேன். பேசுகிறாற்போல் என் நிலைமையும் இல்லை. வலி என்னை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தது. சின்னம்மா தான் அன்பாக இருப்பார். அவர் என் அருகில் வந்து, 'உன்பாட்டுக்கு வந்துட்டே… நாங்க ரெண்டு சுடுகாட்டுக்கும் நாலு கோழிமுட்டயவில்ல காவு கொடுத்துட்டு வந்தோம்' என்றார்.(நாங்கள் சத்திரப்பட்டி ஊருக்கு வரும் வழியில் இரண்டு சுடுகாடு இருக்கிறது.)

 ‘எதுக்கு சின்னம்மா?’ என்றேன்.

 ‘வயித்துப் புள்ளைக்காரி ஒத்தையில போனா சுடுகாட்டுல இருக்க காத்து, கருப்பு அவ பின்னாலேயே வந்து அவள பிள்ள பெறவிடாம தன்னோடயேவில்ல கூட்டிட்டு போயிரும்… உன்னக் கணக்கா ஒத்தையில் வரும் வவுத்துப்புள்ளக்காரியெல்லாம் எப்படி புள்ளபெற மாண்டாம சாவுதான்னு பாத்தே?’

 ‘எதுக்கு சாவுதா?’

"இந்த காத்து, கருப்பு அடிச்சிதேன்" என்றார். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அப்போது எந்த வசதியும் இல்லாததால் என் கணவரிடம் சொல்லமுடியவில்லை. இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. டாக்டர் என்னைக் கூப்பிட்டு இனிமே உனக்கு குழந்தை தானாக பிறக்காது, ஆபரேஷன்தான் பண்ண வேண்டும். உன்னுடன் வந்தவர்கள் யாரையாவது வரச்சொல் கையெழுத்துப் போட வேண்டும் என்றார்.

என்னோடு வந்திருக்கும் யாருக்கும் கையெழுத்துப் போட தெரியாது. அதை நான் சொன்ன உடனே, சரி நீயே ஒரு கையெழுத்து போடு என்றார். நான் ஒரு கையெழுத்து போட்டேன். பிறகு நான் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்தேன். உள் அறையில் கூட்டிப் போய் ஒரு ஊசி போட்டார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். மறுநாள் நான் கண்விழித்தபோது எனக்கு பையன் பிறந்திருந்தான். அப்போது ஊரே திரண்டு என்னைப் பார்க்க வந்துவிட்டது. விசயம் என்ன என்றால் என் வயிற்றை அறுத்து பிள்ளையை எடுத்த அதிசயத்தைப் பார்க்கத்தான். அப்போது அது ஒரு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

கிராமங்களில் அப்போதெல்லாம் அண்டியும் சவலையுமாக பத்துபிள்ளைகள் வரை பெற்றார்கள். பிள்ளை பெறுவது அவர்களுக்கு சுலபமாகவே இருந்ததுபோல் தெரிந்தது. எதையாவது புடைத்துக் கொண்டோ, கேப்பையில் திருவையில் திரித்துக் கொண்டோ இருப்பார்கள். பிறகு வீட்டிற்குள் போய் ஒரு நிமிசத்தில் சத்தமில்லாமல் பிள்ளையை பெற்றுவிடுவார்கள்.

ஆனால், தலைப்பிள்ளை பெறும் பெண்களுக்கு அப்படியில்லை. கிராமத்தில் பிள்ளை பெறுவதற்காகவே ராசியான வீடு என்று ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டின் நடுவில் ஒரு கனமான கயிற்றைக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். பாட்டி, சின்னம்மா, அத்தை என்று இவர்கள் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். ஒரு பேறுகாலம் பார்த்தால் இவர்களுக்கு இரண்டு வேளை நெல்லுச்சோறு (நெல்லுச்சோறு என்பது அப்போது பொக்கிஷம்) காய்ச்சி, பருப்பு கடைந்து, சோற்றில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பட்டி தட்டிப்போட வேண்டும். அது பெரிய விருந்து. அதன் பிறகுதான் காய், பருப்பு ரசம் என்று வைக்க வேண்டும். எந்நேரமும் வெற்றிலை பாக்கு, புகையிலை இதையெல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும்.

தலைப்பிள்ளை பெறும் பெண்ணுக்கு வலி வந்த உடனே அது புள்ளை வலியா, இல்லை வெறுமே வந்துபோகிற சூட்டு வலியா? என்று அறிந்து கொள்வதற்காக மிளகை நன்றாக அம்மியில் வைத்து நுணுக்கி, அதில் விளக்கெண்ணையில் குழப்பி, அவளின் உள்ளங்கையில் வைத்து, அப்படியே நக்கி சாப்பிட சொல்வார்கள். அல்லது வீட்டைச் சுற்றிலும் அப்போது சிறுகீரைகள் கிடைக்கும். அதை பறித்து வந்து, கொஞ்சம் சீரகம் போட்டு, அவித்து, அரை கிளாஸ் கசாயம் போட்டு கொடுப்பார்கள். இவைகளை சாப்பிட்ட உடனே சூட்டு வலி என்றால் ‘கப்’பென்று நின்றுவிடும். பிள்ளை வலியென்றால் தொடர்ந்து வலிக்கும். உடனே அந்த ராசியான வீட்டுக்கு கூட்டி வந்துவிடுவார்கள்.

வலியால் துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணை அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைப் பிடித்து ’உன் வலியைவிடு… வலியைவிடு’ என்பார்கள். ஆனால், அவளோ ’எனக்கு வலி பொறுக்க முடியவில்லையே’ என்று கூப்பாடு போடுவாள். அவள் உடம்பை பார்த்துவிட்டு, புள்ள தல திரும்பி படிவாசல்ல நிக்க, கொஞ்சம் முக்கு முக்கு என்பார்கள். அவளுக்கோ முக்க முடியாது. வலி கூடிக் கொண்டேபோகும். அந்தப் பெண்ணோ ’அய்யோ வலி பொறுக்க முடியல… என்ன விடுங்க, நானு செத்துப்போறேன்’ என்பாள்.

உடனே தாயி, ’தங்கமில்ல… இந்த வலிக்காவா சாவாங்க… அழகா ஆம்பளபுள்ள பெத்து… அவன ஊருக்கே ராசாவாக்கபோற!’ என்று சொல்ல, ஒருவர் ஓடிப்போய் அவளின் குல தெய்வத்தின் திருநீறை கொண்டு வந்து பூசுவார். இன்னொருவர் சாமியாடியிடம் வருதி கேட்பார். உடனே அவர், என் புள்ள அழுவுத சத்தம் எனக்கு கேக்குப்பா. இந்தா நானு வந்து புள்ளையையும், தாயையும் வேற வேற ஆக்கி அவுகள நல்லபடியா பொழைக்க வைக்கிறேன்ப்பா. என்பார். இதற்குள் சாமி விட்டுவிடும். புள்ளையும் பிறந்துவிடும். ஆண் குழந்தை ஊரே கேட்கும்படி மூணு குலவையிட்டு ‘தொப்புள்கொடி’ அறுப்பார்கள் பெண் பிள்ளைகளுக்கு. அதெல்லாம் கிடையாது, ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து பிறந்திருக்கும் ஆண் பிள்ளையை பார்த்துவிட்டு கொஞ்சம் வெற்றிலை, பாக்கு, கருப்பட்டி எல்லாம் வாங்கிக் கொண்டு போவார்கள். ஊரே இன்னாருக்கு ஆம்பளப் புள்ள பொறந்திருக்கு என்று பேசி சந்தோசம் கொண்டாடுவார்கள். பெண் பிறந்தால் எந்த சத்தமும் கிடையாது. பக்கத்து ஊர்களிலிருந்து பிள்ளை பெற்றவர்களைப் பார்க்க போகிறவர்கள் அரிசி, கருப்பட்டி, சாவல் மிதிபடாத வெடைக்கோழிகளை கொண்டு போவார்கள்.

பிள்ளை வளர்த்தி இலை, பச்சை இலை, ஆவாரம் பூ, வில்வ இலை, கோரக்கிழங்கு, வேப்பம்பூ இன்னும் சில இலைகளை வைத்து அதோடு கஸ்தூரி மஞ்சளையும் அரைத்து பிள்ளையையும், அதன் தாயையும் குளிப்பாட்டுவார்கள். அதனால், அவர்கள் எப்போதும் மணத்துக் கொண்டு இருப்பார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com