அந்நியக்கடன் நிலவரம் ஆரோக்கியமாக உள்ளதா?

அந்நியக்கடன் நிலவரம்
ஆரோக்கியமாக உள்ளதா?
Published on

கோவிட்-19 தொற்றுத் தாக்குதலின்போதும் அதன் பின்னரும் உலகில் உள்ள குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்தது. தொற்றுக்கு முந்தைய பத்தாண்டுகளின் நிலவரத்தையும் பிந்தைய காலகட்டத்தையும் சர்வதேச கடன் அறிக்கை(2024) ஒப்பீடு செய்துள்ளது.

அதன்படி குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் கடன் இப்போது குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் நாடுகளுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நாடுகள் செலுத்தும் வட்டியின் அளவு அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவாகும்.

இப்படி அதிகப்படியான வட்டி சுமை, மிக அவசியமான சமூக நலத் திட்டங்களுக்குக்கூட செலவழிக்கமுடியாமல் செய்துவிடுகிறது என்பது கொடுமை.

இப்படி கடன் சுமை உயர்கின்ற நிலை. அத்துடன் நம் அருகிலுள்ள இலங்கை போன்ற நாடுகளில் நிச்சயமற்ற பொருளாதார சூழல். இந்நிலையில் இந்தியா கவனமுடன் செயல்படவேண்டும். பொருளாதாரக் குறியீடுகளை கண்காணித்து நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் அந்நாட்டின் கடன் சுமையை ஒப்பிட கடன் - ஜிடிபி விகிதம் உதவுகிறது. கடன் சுமையைத் தாங்க அதனால் முடியுமா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பின்வரும் படம்-1 இந்தியாவின் தேசிய மொத்த வருமானத்தின் அடிப்படையில் அதன் கடன் - ஜிடிபி விகிதத்தின் போக்கைக் காட்டுகிறது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் - ஜிடிபி விகிதம் 19 சதவீதம் என்பது எளிதாக சமாளிக்கக்கூடிய எல்லைக்குள்தான் உள்ளது. கடந்த ஆண்டுகளில் அது கொஞ்சம் குறைந்துள்ளது. 2021-இல் கோவிட் தாக்குதல் சமயத்தில் அது உச்சத்தை எட்டியது(21 சதவீதம்). ஆனால் அதன் பின்னர் குறைந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் சீனா(14 சதவீதம்), ரஷ்யா(12 சதவீதம்) ஆகிய இரு நாடுகளும் நம்முடன் ஒப்பிடுகையில் குறைவான விகிதம் கொண்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது(44 சதவீதம்).

கடன் - ஜிடிபி விகித அடிப்படையில் பார்த்தால் நிலைமை கட்டுக்குள் இருப்பது போல் தோன்றினாலும் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் அளவு கொரோனாவுக்குப் பின்னால் உயர்ந்துள்ளது. 2020-இல் 558 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 2023-இல் 624 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 2024 டிசம்பரில் வெளிவந்துள்ள முதல்கட்ட தரவுகளின் அடிப்படையில் இது 718 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துவிட்டது. 2023-இல் இருந்ததைவிட 15% உ யர்ந்துவிட்டது. தற்போதைய உலகச் சூழலில் அமெரிக்கா வரிவிதிப்புப் போரை நடத்த முயலுகிறது; அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. ரஷ்யா- உக்ரைன் போர் முடிவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் நாட்டின் வெளிநாட்டுக் கடன் உயர்வது, நமது பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும். எனவே வெளிநாட்டுக் கடன் மீது கூடுதல் கண்காணிப்பு தேவை.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு பொருளாதாரக் குறியீடு கடன் சேவை விகிதம் ஆகும். ஒரு நாடு எவ்வளவு கடனை திருப்பி கட்டிக்கொண்டிருக்கிறது(வட்டி + அசல்) என்பதுடன் அதன் ஏற்றுமதி வருமானத்தை ஒப்பிட்டு வரும் வகிதமே அது. இந்த கடன் சேவை விகிதம், கடந்த ஆண்டுகளில் கொஞ்சம் குறைந்துள்ளது. 2024 டிசம்பரில் வெளியான முதல்கட்ட தரவுகளின் படி அது 6.6% ஆக உள்ளது.

வெளிநாட்டுக் கடன்களுக்கு நம் நாடு செலுத்தும் வட்டி அளவின் போக்கை மட்டும் நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது உயர்ந்துகொண்டே வருகிறது.

2023இல் நாட்டின் தேசிய வருமானத்தில் அது ஒரு சதவீதமாக இருந்தது. இது 2022 (0.6%), 2021(0.4%) ஆகிய ஆண்டுகளில் இருந்ததைவிட மிகவும் அதிகம்.

இந்தியா தன் அந்நியக் கடனை எந்த நாணயங்களில் வாங்கி உள்ளது என்று பார்த்தோமானால் பெரும்பாலான அளவு டாலர்களில் வாங்கி உள்ளது. அதாவது நமது கடனில் பாதிக்கு மேல் (சுமார் 54 சதவீதம்) அமெரிக்க டாலர்களாக உள்ளது

(ஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை, 2023-24). உலகப் பிரச்னைகளால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரியுமானால், நமது அந்நியக் கடன் சூழல் மீது அழுத்தம் கூடும். கடனாக திருப்பி செலுத்தும் தொகை அதிகமாகும்.

நமது மொத்த கையிருப்பு (அந்நிய செலாவணி + தங்கம்), மொத்த அந்நியக் கடனுடன் ஒப்பிடுகையில் 96 சதவீதம் என்கிற ஆரோக்கியமான நிலையில் உள்ளது(2020-இல் இருந்து இது கொஞ்சம் குறைந்திருந்தாலும் கூட). இந்தியாவுக்கு கடனை திருப்பிச்செலுத்தும் திறன் நன்றாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது. பல கூறுகளை உள்ளடக்கிய அந்நியக் கடன் என்கிற சிக்கலான விஷயத்தில் நமக்கு கடன் கொடுத்தவர்கள் யார் என்பது ஓர் முக்கிய அம்சம். நமது அந்நியக் கடன்களில் நாட்டின் நிறுவனங்கள் வர்த்தகக் காரணங்களுக்காக வாங்கிய வெளிநாட்டுக் கடன் (37 சதவீதம்) முதலிடத்திலும், வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை(28 சதவீதம்), குறைந்த காலக் கடன் (18 சதவீதம்), உலகவங்கி போன்றவற்றில் இருந்து வாங்கும் பலதரப்புக் கடன்(12 சதவீதம்) என்ற கணக்கிலும் உள்ளன. வர்த்தகக் கடன்களை அதிகமாக சார்ந்திருப்பது சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கும். தற்போதைய உலகச் சூழ்நிலையில் நம் அந்நியக் கடன்களின் இந்த வகைப்பாடு கவனத்துக்கும் எச்சரிக்கைக்கும் உரியது.

அந்நியக் கடன் குறியீடுகள் கட்டுக்குள் இருக்கின்றன; பெரிதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும் கூட, இந்திய அரசு சர்வதேச நிலவரங்களைக் கவனித்து, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்.

(கட்டுரையாளர் பொருளாதாரம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற ஆய்வாளர். டெல்லியில் வசிப்பவர். தமிழில் : ஜான் ஸ்னோ)

கடன் FACTS

• 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. 2014-2025 வரையிலான 11 ஆண்டுகளில் அது கிடுகிடுவென வளர்ந்து 31 மார்ச் 2025 வரை மொத்தம் ரூ. 181,74,284 கோடியாக அதிகரித்துள்ளது. (ரூ.181 இலட்சத்து 74 ஆயிரத்து 284 கோடி). இந்தியாவின் ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.1,30,000 கடன் விழுகிறது. இந்த 2025-26 நிதியாண்டு முடிவடையும் போது அதாவது 31 மார்ச் 2026ல் இந்தியாவின் மொத்த கடன் ரூ. 196,78,772 கோடியாக உயரும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

• 2026 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் சராசரியாக சுமார் ரூ.1,10,000 கடன் சுமை உள்ளது.

• 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 10 ஆண்டுகளில் வங்கிகளில் ரூ.25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி ரூ.10.41 லட்சம் கோடி மற்றும் ஷெட்யூல்டு வங்கி கடன்கள் சுமார் ரூ.14.53 லட்சம் கோடி அடங்கும்.

• ஆசியாவில் அதிக கடன் வாங்கிய நாடுகள் வரிசையில் முதலிடத்தில் சீனா இரண்டாமிடத்தில் ஜப்பான், மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது.

• சீனாவின் ஒட்டுமொத்த கடன் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.1,109,78,032 கோடிகளாகும். இது இந்தியாவின் மொத்த கடனை விட ஏறக்குறைய ஆறு மடங்கு அதிகமாகும்.

• ஜப்பானின் கடன் மதிப்பு சுமார் 10.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8,53,67,717 கோடி ஆகும். இது இந்தியாவின் மொத்த கடனை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும்.

• அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 87 லட்சம் கடன்சுமை உள்ளது.

தொகுப்பு: சுப்பாராமன்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com