உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லையா?

உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லையா?
Published on

ஒருவரிடம் கோபிப்பது என்பது நாம் விஷத்தைக் குடித்துவிட்டு இன்னொருவர் மரணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது என்கிறது புத்த மதம். கோபத்தை அடக்க முடியாத தன்மையைத்தான் நாம் பொறுமை இழப்பு என்று சொல்கிறோம். பொறுமையும் மன்னிப்பும் கோபமின்மையின் அடையாளங்கள். ஒருவர் நமக்கு எவ்வளவுதான் தீங்கு செய்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மன உறுதியும், வலிமையும்தான் பொறுமை. இது குறித்து தமிழ் இலக்கியங்களில் நெடுக பதிவுகள் உள்ளன.

சங்க இலக்கியத்தில் தலைவியின் பொறுமைதான் கற்பு என்று குறியீடாகக் காட்டப்படுகிறது. முல்லைப் பூ அதன் அடையாள பூவாகக் குறிக்கப்படுகிறது. ஆண் மகனின் பொறுமை என்பது போர்க்களத்தில் சித்திரிக்கப்படுகிறது. போர் செய்வதற்கும் சங்க காலத்தில் நெறி இருந்தது. நெட்டிமையார் பாடல், களத்தில் அம்பு விடும் முன், புதல்வர்களைப் பெறாதவர்கள் எல்லாம் களத்திலிருந்து அகன்றுவிடுங்கள், இன்னும் உங்களுக்கு வாழ வேண்டிய வாழ்க்கை பாக்கி இருக்கிறது, எனவே உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறபோது, போர்க்களத்திலும் தமிழ் வீரர்கள் பொறுமை காட்டியது நமக்குப் புரிகிறது.  யார் யாரையெல்லாம் கொல்லக்கூடாது என அந்தப் பாடல் விரிவாகப் பேசுகிறது.

சங்க இலக்கியப் பாடல்களில் பொறை, பொறுத்தார், பொறுத்தாரை, பொறார் எனப் பல சொற்கள் உள்ளன. முனைவர் ப.பாண்டிய ராஜாவின் தமிழ் இலக்கியத் தொடரடைவில் தேடினால், சங்க இலக்கியத்தில் மட்டும் 54 சொற்கள் இது சார்ந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் பொறை என்பது பொறுமையைத்தான் குறிக்கிறது. குறிப்பாக கலித்தொகையில் வரக்கூடிய  ‘பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’ என்ற வரியை மிக முக்கியமானதாக கருதலாம்.  நம்மை யாரும் புகழவில்லை, கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  எத்தனை பேரால் இது முடிகிறது?       

நீதி இலக்கியத்தின் உச்சமாகக் கருதப்படும் திருக்குறள் பொறுமை பற்றி நிறையவே பேசுகிறது. பொறையுடைமை என ஓர் அதிகாரமே வைத்திருக்கிறார். உரையாசிரியர்களும் வள்ளுவர் சொல்லும் பொறுமையை விதவிதமாக தங்கள் உரைகளில் விளக்கியுள்ளனர். குறிப்பாக,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -இது எல்லோருக்கும் தெரிந்த குறட்பா. அதற்கு உரை எழுதுகிறபோது கலைஞர் கருணாநிதி, நிலம் தன் மீது குழி தோண்டுபவரையே பொறுத்துக் கொள்கிறது. நாம் நம்மை இகழ்வோரைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா என்று எழுதுகிறார். குழி தோண்டுபவரையே பொறுத்துக் கொள்வது என்பது ஒரு சிலேடையாக இரட்டை அர்த்தத்தில் வருவதை நாம் கவனிக்க முடியும். நிலத்தில் குழி தோண்டுவதும் அரசியலில் குழி தோண்டுவதும் சகஜம் என்பதை நாம் அறிவோம்.

தண்டிப்போருக்கு ஒருநாள் மட்டுமே மகிழ்ச்சி, பொறுப்போருக்கு இந்த உலகம் மறையும் வரை மகிழ்ச்சி என்று வள்ளுவர் சொல்லுகிறார். நாம் பொறுமையினால் மன்னிப்பினால் கடந்த காலத்தில் நடந்ததை எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும்.

குறளில் ஒரே விதமான கருத்தை வெவ்வேறு அதிகாரங்களில் வள்ளுவர் வலியுறுத்தக் காண்கிறோம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என 314 வது குறளில் தீமை செய்தவர்களையும் பொறுத்து நன்மை செய்யவேண்டும் என்கிறார். ஆனால் எல்லாராலும் இது முடியுமா? சான்றோரால் இது முடியும் என 987-வது குறளில் சொல்கிறார்: இன்னா செய்தார்க்கு இனியவை செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு எனக் கேட்பார்! சரி இது எப்படி சாத்தியமாகும் என்பதை செய்நன்றியதல் அதிகாரத்தில் கொன்றென்ன இன்னா செய்யினும் ஒன்று நன்று உள்ளக் கெடும் என்கிறார். கொலை செய்வது போன்ற தீங்கு செய்தவரையும் அவர் முன்னர் செய்த ஏதேனும் ஒரே ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து பொறுத்துக்கொள்க என்கிறார். உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லையா என்று கேட்கத்தான் தோன்றும்!

பொறுமையோடு இருப்பதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். கம்பராமாயணத்தில் கம்பர் ராமனின் பொறுமையையும் சீதையின் பொறுமையையும் சிறப்பாக  சித்திரித்துள்ளார்.

அந்த காவியத்தில் பொறுமை என்பது ஒரு முக்கிய கருத்தாகும். பொறுமையின் இருப்பிடமாக சீதை கருதப்படுகிறாள். சீதையைக் கண்டுவரும் அனுமன் ராமனிடம் சொல்கையில்

விற்பெரும் தடந்தோள் வீர,

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத் தளாய

நங்கையைக் கண்டேன் அல்லேன்

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்.

இலங்கையில் சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு , சிறந்த பொறுமை  ஆகிய பண்புகளும் கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்த சீதை என்ற வடிவத்தைத்தான் கண்டேன் என்று பொருள். இராமர் காட்டுக்கு அனுப்பப்பட்டபோதும், சீதையை இழந்தபோதும் அவர் பொறுமையைக் கடைப்பிடித்தார் என்பது பற்றியெல்லாம் ஏராளமாகப் பேசப்பட்டுள்ளது.

திரும்பவும் வள்ளுவருக்கு வரலாம். இல்லறவியலில் வள்ளுவர் சொல்கிறார்:

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

இந்தக் குறளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். விருந்தினர்களை உபசரிக்காமல் தவிர்ப்பது வறுமையிலும் வறுமை; முட்டாள்களைப் பொறுத்துக்கொள்வது வலிமையிலும் வலிமை என்று இக்குறளுக்குப் பொருள். பொறுமையாக இருப்பது அதுவும் முட்டாள்களிடம் பொறுமையாக இருப்பது மிகவும் வலிமையான காரியம் என்கிறாரே என்று சொன்னபோது நண்பர் சொன்னார்: இதற்கு இன்னொரு பொருளும் உள்ளதே.. ஆர்வத்துடன் என்னது என்று கேட்டேன். மடவார் என்பதற்கு மகளிர் என்று பொருள் கூட்டிப் புரிந்துகொள்க என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

மூத்த குடும்பஸ்தர்கள் மட்டும் இப்படிப் பொருள்கொள்வார்கள் போல என சொல்லிவிட்டு  என்  துணைவியாரைப் பார்த்தேன். கணவர்களைப் பொறுத்துக்கொள்வதற்காக மனைவியருக்கு அல்லவா நோபல் பரிசு தரவேண்டும் என்றார்.  இந்த தலைப்பில் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் என்பதைக் கூறி இக்கட்டுரையை முடிக்க நினைத்தபோது..

‘ஹாய் பூமர்ஸ், கடுப்பேத்துற மனைவியைப் பொறுத்துக்கொள்வதை விட, கடுப்பேத்துற தோழியைப் பொறுத்துக்கொள்வது தான் வலிமையில் வலிமை,’  என்றார் ஒரு ஜூமர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com