சாதா கிடையாது ரொம்ப ஸ்பெஷல்!

லட்சுமி விலாஸ், ராசிபுரம்
lakshmi-vilas
Published on

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ளது ‘லட்சுமி விலாஸ்’. பாடல் பெற்ற ஸ்தலம் என்பதுபோல் இங்கே கிடைக்கும் ப்ளைன் தோசையும் பாடல் பெற்றுள்ளது. தமிழறிஞர் கிவா ஜகந்நாதன் இங்கு கிடைக்கும் தோசையை சாப்பிட்டுவிட்டு ஆசைக்கு ஒரு தோசை என பாடல் புனைத்து அளித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆக இது சாதா தோசை அல்ல ஸ்பெஷல் தோசை.. ஆனாலும் ப்ளைன் தோசை என்றுதான் உரிமையாளர் சொல்கிறார். தோசை ஒரு புறம் இருக்க, இங்கு கிடைக்கும் மைசூர் பாகு தனிப்புகழ் பெற்றது.

இன்னும் இரண்டு ஆண்டில் நூற்றாண்டை கொண்டாட உள்ள இந்த கடையை பிரகாஷ், முரளி சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதைப் பற்றி தெரிந்து கொள்ள பிரகாஷிடம் பேசினோம்.

“என்னுடைய தாத்தா வெங்கட்ராம ஐயர் அரசு ஊழியராக இருந்தவர். அவருடைய இருபத்தி மூன்றாவது வயதில், நண்பருடன் சேர்ந்து, ‘லட்சுமி விலாஸ்’ என்ற உணவகத்தை இதே இடத்தில்தான் தொடங்கினார். எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. கடையை மூடிவிட்டார்கள். இரண்டு ஆண்டு கழித்து, 1926 இல் மீண்டும் கடையை திறந்தார் தாத்தா. அப்போது, மைசூர் பாகு, லட்டு, ஜிலேபி, பாதுஷா,, குளோப் ஜாமூன் மட்டும்தான் விற்றார். அதிலிருந்து தொடர்ந்து விற்பனை உண்டு.

1990 வரை பீஸ் கணக்கில்தான் விற்பனை செய்தோம். மந்தார இலையில் வைத்து தருவோம். பிறகுதான் கிலோவில் விற்பனை செய்யத்தொடங்கினோம். லட்டு, ஜிலேபி, பாதுசா, முந்திரி கேக், பாதாம் அல்வா போன்ற இனிப்புகளும் விற்பனை செய்கிறோம்.

அந்த காலத்தில் ராஜாஜி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் ராசிபுரம் வந்தால், அவர்களுக்கு எங்க கடையிலிருந்துதான் பிளைன் தோசையும் இனிப்பும் வாங்கி போவார்கள்.

எல்லா இனிப்புகளையும் நெய்யிலேயே செய்கிறோம். மற்ற இனிப்புகளைவிட மைசூர் பாகுக்கு பதம் ரொம்ப முக்கியம். குறிப்பிட்ட பதத்தில் பாகை எடுக்காவிட்டால் கல் மாதிரி ஆகிவிடும். முன்னரே எடுத்தால் ’மைசூர் பா’வாகிடும். இதனுடைய செய்பொருட்கள் கடலை மாவு, சர்க்கரை, நெய் மட்டும்தான். எங்கள் மைசூர் பாகை உடைத்துப்பார்த்தால், தேன்கூடு மாதிரி உள்ளே ஓட்டையாக இருக்கும். ஒரு கிலோ 780 ரூபாய்.

எங்கள் கடையில் 30 ஸ்வீட் வகைகள்தான் விற்பனை செய்கிறோம். இதில் மைசூர் பாகு இந்தியா முழுக்க பயணிக்கிறது. பலருடைய கொண்டாட்டங்களில் பங்குகொள்கிறது!’ என்கிறார் பிரகாஷ்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com