காமராஜரும் ராஜாஜியும்
காமராஜரும் ராஜாஜியும்

"ஜெயிப்பது நிச்சயமில்லை!''

1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.

அப்போ குமாரசாமி ராஜா முதலமைச்சர். மாநிலம் முழுக்க அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறு அவுன்ஸ்தான் ஒரு குடும்பத்துக்கு அரிசி தரமுடியும்னு குமாரசாமி ராஜா சொல்லிட்டார். தி.மு.க. தலைவர் அண்ணாவோ, திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு எங்கள் ஆதரவென்று சொன்னார். வட தமிழ்நாட்டில் காமன்வீல் கட்சியென எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயகர்னு ரெண்டு பேர் நடத்திகிட்டிருந்த கட்சி. அவங்க அண்ணாவோட அறிவிப்பை ஏற்றுக்கொள்வதா கையெழுத்து போட்டுத் தந்தாங்க.

காங்கிரஸ் கட்சி தரப்பில பிரச்சாரம் செஞ்சவங்க, எங்களுக்கு வாக்கு அளிக்கலைனா நாடு சிதறுண்டு போகும்னு பேசினாங்க. காங்கிரசுக்கு எதிர்ப்பா இருந்தவங்க, ஆறு அவுன்ஸ் கட்சிக்கா வாக்களிக்கப் போறீங்கனு பிரச்சாரம் செய்தாங்க. பெரியாரோ காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கணும்னு பேசினார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் ஆதரவு தந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாரும் அப்போ சிறையில இருந்தாங்க.

அப்போ ஆந்திரப் பகுதி நம்ம சென்னை மாகாணத்தோடதான் இருந்தது. ஆந்திர மாநிலக் கோரிக்கைக்காக பெரிய போராட்டம் நடந்துகிட்டிருந்தது. அந்த சமயம் அந்தப் பகுதிக்குப் பிரச்சாரத்துக்குப் போனாரு, ராஜாஜி. அவர் மேல தார் வீசினாங்க. அவர் சொன்னாரு, ‘ தாரினால் ஒரு மாநிலம் கிடைக்குமானால் என் மீது தாரை வீசுங்கள். தார் வீச்சை நான் தாங்கிகிட்டா உங்களுக்கு தனி மாநிலம் கிடைச்சிடுமா'ன்னு கேட்டார்.

பெரியாருடைய விடுதலை ஏட்டுக்காக அப்போது சென்னையில் பணியாற்றினேன். ஐயாவுடைய கூட்டங்களில் அதிகமாகக் கலந்து கிட்டு அவருடைய பேச்சை செய்தியாக்குவேன். அவர்கூடவே தங்கியிருந்தேன். மௌண்ட் ரோடு, மீரான் சாகிபு தெரு வீட்டுல இருந்து சிந்தாதிரிப்பேட்டை, பாலகிருஷ்ண பிள்ளைத் தெருவில விடுதலை அலுவலகம் அப்போது... கை ரிக்ஷாவில் அவர் ஏறிப்போவார். என் தோள் மீது கைவச்சுதான் ஏறுவார். அவர் பின்னாடியே சைக்கிள்ளயே போயி அவர் இறங்கும்போது அங்க இருப்பேன்.

அடுத்து, 1957 தேர்தல்

மார்ச் ஒன்று தொடங்கி 11ஆம் தேதிவரை அஞ்சு கட்டங்களா தேர்தல் நடந்தது. முதல் முதலா தி.மு.க. அப்போதான் போட்டியிட்டது. அப்போ உதயசூரியன் சுயேச்சை சின்னமா இருந்தது. எல்லாருக்கும் உதயசூரியன் வேணும்னு தி.மு.க.வில கேட்டாங்க. அப்படி கொடுக்க முடியாது; எங்கெங்கே சாத்தியப்படுமோ அங்க தரோம்; இயலாதுன்னா இயலாதுதான்னு தேர்தல் ஆணையர் கறாரா சொல்லிட் டார். அப்போ, நெடுஞ்செழியன் கோழி சின்னத்தில போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் தரப்புல, பெரிய அளவுக்கு பிரச்சாரம் செய்யல. 'அணைகளைக் கட்டியிருக்கோம், தொழிற்சாலைகளைக் கட்டியிருக்கோம், ஆக்கபூர்வமான பணிகளைக் கட்டியிருக்கோம்; மேலும் இதை எடுத்துகிட்டுப் போகணும்னா எங்களுக்கு வாக்களியுங்க'னு கேட்டாங்க.

அப்போ, திராவிட நாடு பெரிய பிரச்னை இருந்தது. அந்த சமயத்துல, நேரு சென்னையில் நடந்த ஒரு பிரச்சா ரத்துல கலந்துகிட்டு, வானமே இடிந்து விழுந்தாலும் இந்தியாவில இருந்து எந்த ஒரு பாகத்தையும் பிரித்துக்கொடுக்க மாட்டோம்; பிரிவினைக்கு இடமே இல்லைனு அவர் பிரச்சாரம் செஞ்சார்.

அந்த நேரத்தில, முன்னாடி காங்கிரஸ் கட்சிக்கு பரம எதிரியா இருந்த பெரியார், காங்கிரசை ஆதரிச்சார். குலக்கல்வித் திட்டத்தை அழிச்ச பச்சைத் தமிழரை ஆதரிப்பது நம்ம கடமைனார்.

அப்போ, கம்யூனிஸ்ட்கட்சிகள் வில்லுப்பாட்டு மூலமாக விசித்திரமான பிரச்சாரம் பண்ணினாங்க. மத்தவங்க அப்படி பண்ணல. நாங்க ஆட்சி க்கு வந்தா, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவோம்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் தருவோம்; உபரி நிலங்களைப் பிரிச்சிக் கொடுப்போம்னு பிரச்சாரம் செய்தாங்க.

தி.மு.க.வுக்கு ஆதரவா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எம்ஜிஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன்லாம் பிரச்சாரம் செஞ்சாங்க. இதை ஒரு கூட் டத்தில குறிப்பிட்ட பெரியார், தி.மு.க. ஒரு கூத்தாடிங்க கட்சினு விமர் சனம் பண்ணினது அப்பதான்.

1967...மொழிப்போர் கொழுந்துவிட்டு எரிஞ்சிகிட்டு இருந்த நேரம்... எல்லாரும் மொழியுணர்வால தூண்டப்பட்டிருந்தநேரம்... தருமபுரியில சட்டமன்ற இடைத்தேர்தல்... திமுக எளிதாக வெற்றிபெறும்னு கணித்தார்கள். காமராஜர் நிறுத்திய வேட்பாளருக்கு பெரியார் ஆதரவு கொடுத்தார். அவர் சொன்ன காரணம், ‘காமராஜரைக் காப்பாற்றும் பொறுப்பு என்வசம் வந்து விட்டது; ஆகையால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்'னார்.

‘தருமபுரி மக்களே, உஷாரா இருங்க. (மொழிப் போராட்டத்தை ஒட்டிய) கலவரக்காரர்களை ஆதரிக்காதீங்க. கண்ணீர்த்துளிகளின் கூட்டுசதிக்கு இடம் தராதீங்க..'னார். அந்த நேரத்தில, ராஜாஜி தி.மு.க.வை ஆதரிச்சார்... அப்போ அவர் சுதந்திரா கட்சினு தனியா ஆரம்பிச்சிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சி தி.மு.க.வை ஆதரிச்சது. இந்திய கம்யூனிஸ்ட் தனியா வேட்பாளரை நிறுத்தினாங்க.

கடைசியா, அதிர்ச்சி கொடுத்தது முடிவு. காங்கிரஸ் வேட்பாளர் பொன்னுசாமி கவுண்டர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு கள் வித்தியாசத்தில தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடிச்சார்.

1967 சட்டமன்றத் தேர்தல்

அந்தத் தேர்தல்லதான் எம்ஜிஆருக்கு முதல் முறையா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்பு தந்தது. அந்த நேரத்தில எம்.ஆர். ராதா அவரை சுட்டுட்டார். சுடப்பட் டவரு மருத்துவமனையில இருக்கார்.. ஆனாலும் அவர் பெயர், பரங்கிமலை தொகுதி வேட்பாளர்னு பட்டியல் வந்தது. பல கலவரங்கள்... மனுத்தாக்கல் செய்ற நிலைமையில அவர் இல்ல. தேர்தல் நடத்தும் அதிகாரிய அங்க வரச் சொல்லி, அப்படி தான் கையெழுத்து வாங்கிட்டுப் போனார். கழுத்துல குண்டடி பட்ட கட்டோட அவர் கையெடுத்துக் கும்பிடுவதைப் போல போஸ்டரை தமிழ்நாடு முழுவதும் ஒட்டுனாங்க. அதப் பாத்து பாமர சனங்க..லாம் அழ ஆரம்பிச்சுட்டாங்க. அது அந்தத் தேர்தல்ல தி.மு.க.வுக்குப் பெரிய உதவியா இருந்தது. நான் என் கண்ணால பாத்திருக்கேன்... பெண்களெல்லாம், படுபாவி, இப்பிடியா சுடுவான்ன்னு கோபமாப் பேசுவாங்க.

அப்போ, ராஜாஜி தி.மு.க.வோட கூட்டணிக் கட்சி. சென்னை, திருவல்லிக்கேணியில ராஜாஜி பிரச்சாரம் செஞ்சார்... பிராமணர்களைப் பாத்துப் பேசுறார்... 'தி.மு.க. ஆட்சிக்கு வந்துருச்சுன்னா உங்க உச்சிக் குடுமிய எல்லாம் யாரும் அறுக்கமாட்டாங்க. அப்பிடி அறுத்தாலும் அவங்கள ஜெயிலுக்குப் போயிடுவாங்க. பயப்படாம தி.மு.க.வுக்கு ஓட் செய்யுங்க..'னார். ஓட்டுப் போடுங்கனு சொல்ல மாட்டார்; ஓட் செய்வாங்கனுதான் சொல்வார். அவரு அப்படிப் பிரச்சாரம் பண்ணினார். ஆனா, தி.க.காரங்க அப்படிப் பேசு வாங்களே தவிர, பெரியார் காலத்தில அப்படி வன்முறைலாம் இல்ல. அவங்களப் போல சாதுவானவங்க யாரும் இல்ல.

தேர்தல் முடிவில, காமராஜர் அமைச்சரவையில இருந்த பூவராகன்னு ஒருத்தரத் தவிர எல்லாரும் தோத்துப் போயிட்டாங்க. விருது நகர்ல சீனிவாசன்னு இளம் தி.மு.க. வேட்பாளர் 1200 வாக்குகள் வித்தியாசத்தில காமராஜரைத் தோற்கடிச்சுட்டாரு.

தோல்வி தகவல் பத்தி நிருபர்கள் அவர்கிட்டக் கருத்தைக் கேட்கப் போனப்போ, “என்ன பண்றது, காங்கிரஸ் கட்சி மேல ஜனங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுருச்சு.. மாறுதல் வேணும்னு நெனைச்சாங்க. அதனால மாத்திட்டாங்க. இதுல என்ன அதிசயம் இருக்கு? ஜனங்க என்ன தீர்ப்பு சொன்னாங்களோ அதைத் தலைவணங்கி ஏத்துக் கிறதுதானே நம்ம கடமை.'னு ஏத்துக்கிட்டாரு.

 

ஜெயிப்பது நிச்சயமில்லை

அந்தத் தேர்தல்ல அண்ணாதுரை சட்டமன்றத்தில போட்டியிடல. நாடாளுமன்றத்துக்கு தென் சென்னையில போட்டியிட்டாரு. அப்போ, காமராஜர் பிரச்சாரம் செஞ்சப்போ, தி.மு.க. கூட்டணிக் கட்சி களக் குறிப்பிட்டு, ‘ எட்டு நொண்டிகளக் கொண்ட கூட்டணி அது. நான் படுத்துகிட்டே ஜெயிப்பேன்'னு சொன்னார் காமராஜர். அதுக்கு திமுகவில ‘படுப்பது நிச்சயம், ஜெயிப்பது நிச்சயமில்லை'னு பதிலுக்கு பிரச்சாரம் செஞ்சாங்க. முடிவா, தி.மு.க. ஜெயிச்சிட்டாங்க.

பயணியர் விடுதியில்தான் தங்கல்

காமராஜர். பொதுவா முன்னாடி டிவிஎஸ் விருந்தினர் இல்லங்கள்ல தங்குவாரு, அந்தக் குடும்பத்தில டிஎஸ்கிருஷ்ணா காமராஜருக்கு நெருக்கமான தோஸ்த். பிறகு, டிராவல்லர் பங்களாவுல தங்க ஆரம்பிச்சுட்டாரு... அப்படி பல மாவட்டங்களுக்கும் போகும்போது ஏற்கெனவே அந்த ஊர் டிராவல்லர் பங்களாவுல யாராவது தங்கியிருந்தங்கன்னா அவங்கள இவர் நினைச்சா காலிசெஞ்சிட்டு தங்கிட முடியும். ஒருபோதும் அப்படிச் செஞ்சதில்ல. ஒரு முறை கடலூர் பிரச்சாரத்துக்குப் போனப்போ, இப்படித்தான் யாரோ முன்னாடியே வந்து தங்கியிருந்தாங்க. காமராஜரு யோசிக்கவே இல்ல. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில தங்கிட்டாரு.

கில்லட் பிளேடு

பிரச்சாரத்தில மதியம் ஓரளவுக்கு நல்லா சாப்பிடுவார். மற்றபடி 2 சப்பாத்தி அளவுக்குதான் உணவு. தானாதான் சேவிங் செய்துக்குவார். சேவிங்ல கத்தி பட்டு ரத்தக் காயம் வந்துடக்கூடாது ன்னு அவர் இப்படி செய்வார்.. ஏதோ அவருக்கு கில்லட் பிளேடுன்னாதான் பிடிக்கும். இதுக்காகவே சென்னை, மௌண்ட் ரோடு எம்.எஸ். ஸ்டோர்னு ஒரு கடையில இருந்து சம்மந்தப்பானு அப்போ திருவல்லிக்கேணி பகுதி கவுன்சிலரா இருந்தவர் கடை, அது. ஒரு மாசத்துக்குத் தேவையான பிளேடை இவருக்கு அனுப்பிச்சிடுவார். காமராஜர் மேல அவருக்கு அவ்வளவு பிரியம்.

உலகம் சுற்றும் வாலிபனும் பிரச்சாரமும்

அ.தி.மு.க. தொடங்கினதும் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில தி.மு.க. ராஜாங்கம் இறந்துட்டதால, இடைத்தேர்தல் நடந்தது மாயத்தேவரை எம்ஜிஆர் நிறுத்தினார். தேர்தலுக்குள்ள உலகம் சுற்றும் வாலிபன் படத்தைக் கொண்டுவரணும்னு எம்ஜிஆர் தீவிரமா இருந்தார். தேர்தல் பணிகளைத் தம்பிகள் பாத்துக்குவாங்கனு சொன்னார். அப்போ, திமுகவுல இருந்த மதுரை முத்து, ஒரு கூட்டத்தில, ‘அவர் என்னமோ உலகம் சுற்றும் வாலிபன் படத்தை விடணும்னு பேசுறார். அந்தப் படம் ரிலீஸ் ஆகாது. அப்படி ரிலீஸ் ஆனாலும் ஓடாது. அப்படி ஓடுச்சுனு வையுங்க, நான் திமுகவில இருந்து அதிமுகவிலயே போய்ச் சேந்துருவேன்; இது சவால்'னு பேசினார். ஆனா அவர் எம்ஜிஆர்கிட்டயே சரண் அடைஞ்சிட் டார். அந்தத் தேர்தல்ல கம்யூனிஸ்ட்டுகள் ரொம்பத் தீவிரமா எம்ஜிஆருக்காக வேலை செஞ்சாங்க. தங்கராஜ்னு ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் அப்படி வேலை செஞ்சார்... நல்லாப் பேசுவார். பணத்தை நிறைய வாரி இறைச்சாங்க. கொஞ்சநஞ்சப் பணமெல்லாம் இல்ல. வேட்பாளருக்கு வேண்டியபோதெல்லாம் காசை இறைச்சுகிட்டே இருந்தாங்க. பேருக்குதானே மாயத்தேவர். எம்ஜிஆர்தானே அங்க எல்லாம்... பிரச்சாரம்னு கிளம்பிட்டார்னா காலைல தொடங்கி இரவு 12 மணிவரைக்கும் போவார், வெளியூர்களுக்கு. கூட்டம் முடிச்சிட்டுவந்து படுப்பார்... மறுநாள் காலைல சரியா எழுந்துடுவாரு... குண்டடி பட்டதுக்குப் பிறகு, அவரு அதிகமா பேசுறதில்ல. பேசவும் முடியாது இல்லையா? பேசுறதைவிட அவர்கிட்டக் குழந்தைக்குப் பெயர் வைக்கிறதுக் குதான் நேரம் அதிகமாகும்.

(வி. என்.சாமி மூத்த பத்திரிகையாளர். 93 வயதாகும் இவர் இப்போது மதுரையில் வசிக்கிறார். எழுத்துவடிவம்: இரா.தமிழ்க்கனல்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com