கலைஞர் மு. கருணாநிதி
கலைஞர் மு. கருணாநிதி

கலைஞரின் இகிகை!

தமிழகத்தின் கடந்த 100 ஆண்டுகால அரசியல் வரலாற்றின் பெரும்பகுதியை ஏழு மனிதர்களின் வாழ்க்கைக்குள்  அடக்க முடியும். பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, மு.க., எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ தான் அந்த ஏழு நபர்கள். இதில் மற்றவர்களுடன் உடன்பட்டோ எதிர்த்தோ அதிக காலம் அரசியல் செய்தவர் கலைஞர்.

இந்தியாவில் அதிக காலம் அரசியல் கட்சித் தலைவராகவும் தமிழகத்தை அதிக நாட்கள் (6863 நாட்கள்) ஆண்ட பெருமையும் கலைஞருக்கு உண்டு.

கொள்கைகளுக்கு அப்பால் அவர் ஈர்த்த ஆளுமைகள் எண்ணிலடங்கா. அதில் வித்தியாசமான அனுபவங்களை இந்த சிறப்புப் பக்கங்கள் பகுதி ஒருங்கிணைக்கிறது.

கலைஞரின் வாழ்வில் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள் பல உள்ளன. அவற்றில் நான்கு உங்கள் பார்வைக்கு:

பள்ளி இறுதி தேர்வை மூன்று முறை எழுதி தோல்வியைத் தழுவிய அவர் கவலைப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்தார். மூன்று முறை தோற்றவர்கள் மீண்டும் படிக்க முடியாது என்பதால் கல்விச்சாலை செல்லும் வேலையிலிருந்து விடுபட்டதால் மகிழ்ச்சி. ஆனால் கற்பதை கடைசிவரை நிறுத்தவில்லை. எல்லோரையும்போல் அவர் ஒரு வேலையில் சேர்ந்து உருப்பட வேண்டுமென்பது குடும்ப ஆசை. குடும்பத்தின் ஆசையைப் பூர்த்தி செய்வது சராசரியின் செயல்பாடு. முதல் நாடகமான ‘பழனியப்பன்' எழுதி அரங்கேற்றி நட்டப்படுகிறார்.

திருமணம் செய்துவைத்தால் சரியாகி விடும் என்று குடும்பம் 13 செப்டம்பர் 1944இல் பத்மாவதிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். சராசரிக்கு திரும்பாமல் முரண்டு பிடிக்கிறார். பின் ஈரோடு குடியரசில் இயங்கும்போது ஏ.எஸ்.ஏ. சாமியிடமிருந்து மு.க.விற்கு ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வருகிறது. அப்போது திரைப்பட நிறுவனங்கள் எழுத்தாளர்களை, நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை மாத சம்பளத்திற்கு வைத்து கொள்ளும். மு.க.விற்கு அருமையான வாய்ப்பு. ஆனால், அவர் மாத சம்பளத்திற்கு மறுப்பு சொல்லிவிட்டு ‘படத்திற்கு' கமிட் ஆகிறார். கூடவே குடியரசில் பணிபுரிகிறார். ஜூபிடர் பிக்சர்ஸில் பணிபுரியும்போதுகூட ஸ்டுடியோ உள்ளே எல்லோருக்கும் வீடு வசதி செய்யப்பட்ட போது, அதை மறுத்து கோவை சிங்காநல்லூரில் வீடு எடுத்து தங்கி சினிமாவிலும் அரசியலிலும் பணியாற்றினார்.

பெரிய உயரத்திற்குப் போக விரும்பினால் மாத சம்பளத்திற்குள் உங்களை சிறை வைக்கக் கூடாது என்பது கலைஞர் வாழ்வு சொல்லும் முக்கியமான பாடம்.

நல்ல தொண்டனாக இருப்பதே தலைவராவதற்கு முதல் தகுதி என்பதை செயலில் நிரூபித்தவர் கலைஞர்.

1959 - சென்னை மேயர் தேர்தலில் 40 தொகுதிகள் வெல்லமுடியுமா என்று ஆசைப்பட்ட அண்ணாவுக்கு 45 தொகுதிகளை வென்று கொடுத்த கருணாநிதி.

1953 - இல் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து தமிழகம் முழுக்க பரபரப்பாக்கிய கருணாநிதி.

1965 - இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தளகர்த்தராக இருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் சென்ற கருணாநிதி.

1966 - இல் தேர்தல் நிதியாக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்த கருணாநிதி.

1969, பிப்ரவரியில் மெரினா கடற்கரையில் இதயத்தை இரவலாகக் கொடுத்திடு அண்ணா என்று சொன்ன கருணாநிதி.

கடைசி மூச்சுவரை தன் தலைவரின் பெயரை மறக்காத தொண்டன் இந்திய அரசியலில் ஓர் அபூர்வம்.

அண்ணா சொல்லி கலைஞர் கேட்காதது ஒரு விஷயம்தான். இளமைப்பலி கட்டுரையைப் படித்துவிட்டு திருவாரூர் வந்த அண்ணா பள்ளிச் சிறுவனாக இருந்த கருணாநிதியைப் பார்த்து‘ முதலில் பள்ளிக்குச் சென்று படி' என்றார். அதை மட்டும்தான் கருணாநிதி கேட்கவில்லை.

பதவிக்கு வந்தவுடன் ஆரம்பகாலங்களில் ஏற்றி விட்டவர்களை எட்டி உதைக்கும் நபர்களுக்கு மத்தியில் கலைஞர் போன்ற தொண்டர் வேண்டும் என ஆசைப்படாத தலைவர்கள் இல்லை.

அப்போது அவர் இளைஞர். கட்சியிலும் இளையவர். அறிவாலயத்தில் கலைஞரைச் சந்திக்கச்செல்லும்போது அவரைச் சுற்றி மூத்த தலைவர்கள் அமர்ந்திருப்பர். அவரது சீனியாரிட்டிக்கு அவர் சற்று தள்ளிதான் அமர முடியும். ஆனால் அவர் சாதுர்யமாக கலைஞரின் காலடியில் அமர்ந்துகொள்வார்.

அப்படித் தொடங்கிய நெருக்கம், கலைஞர் அவரது நூலுக்கு முன்னுரை எழுதியபோது நான் இவருக்குத் தாயுமானேன் என்று எழுதினார். கலைஞர் கரங்களில் போர்வாளாக இருந்தவர், பின்னாளில் கலைஞருக்கு எதிராகப் போராடும் நிலைக்குச்  சென்றார். சூழல்கள் மாறின. எதிரணியாக இருந்தவர் கூட்டணிக்கு வந்தார். அணைத்துக் கொண்டார். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இவ்வளவுக்குப் பிறகு கூட்டணி மாநாட்டுக்கு வருவதற்கு முன்பாக கடைசி நேரத்தில்  அவர் எதிரணிக்குப் போய்விட்டார். மீண்டும் திரும்பிவந்தார். அப்போதும் அரவணைத்தார். இவரை மட்டுமல்ல தன் கட்சியில் இருந்துவிட்டு எதிரணிக்குச் சென்று, துறைமுகத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட க.சுப்புவை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது உறவில் மட்டுமல்ல தலைவனுக்கான குணமும்கூட என்பது கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சொல்லும் பாடம். தான் தன் தலைவனுக்கு அப்பழுக்கற்ற தொண்டனாக கட்டுப் பட்டு இருந்தபோதும் தன் தொண்டர்களிடம் அதை எதிர்பாராதவர்.

ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம். அதற்குக் காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன. இறுதியில் நீண்ட ஆயுளுக்குக் காரணம் அவர்கள் அனைவருக்கும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தனர் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருந்தது. ஜப்பானிய மொழியில் இகிகை என்றால் Reason to live என அர்த்தம்.

நான் படித்தவரை எனக்குப் பிடித்த மூன்று நபர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் பட்டியலில் உள்ளனர். 1. பாப்லோ பிகாஸோ ( 92 ஆண்டுகள்) 2. பெரியார் (94 ஆண்டுகள்) 3. கலைஞர் (94 ஆண்டுகள்)

இவர்கள் கொண்டிருந்த இகிகை இவர்களுக்கு நீண்ட ஆயுளை அளித்திருக்கிறது. எல்லோருக்கும் வாழ ஆசை உண்டு. ஆனால் எல்லோருக்கும் இகிகை உண்டா கலைஞரைப் போல்?

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com