காயம்பட்ட புலி ஆபத்தானது!: கிரிக்கெட் உலகின் மகா ‘கம் பேக்’ கதைகள்!

காயம்பட்ட புலி ஆபத்தானது!: கிரிக்கெட் உலகின் மகா  ‘கம் பேக்’ கதைகள்!
Published on

ஆரம்பத்தில் மிகவும் பின்னோக்கித் தள்ளப்பட்டு பிறகு ஆக்ரோஷத்துடன் முன்னோக்கிச் சென்று வெற்றி பெறும் கதைகளை விளையாட்டுத்துறையில் நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதில் இரண்டு மறக்கமுடியாத நிகழ்வுகளை மட்டும் இங்கே பார்க்கலாம். இரண்டுமே கிரிக்கெட்டில் நடந்தவை. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே உத்வேகம் அளிப்பவை.

அது 1992. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்தது. அச்சமயம் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்த அணியாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, தன்னை அந்த சூழலுக்கு தயார்ப்படுத்திக்கொள்ள ஒரு மாதம் முன்னரே அங்கு சென்று இறங்கியது. ஆசிய அணிகளுக்கு ஆஸ்திரேலிய மைதானத்தின் பந்து எழுந்துவரும் தன்மையும் அவற்றின் விரிவும் எப்போதும் சவால்தான்.

பாகிஸ்தானில் கேப்டனாக இம்ரான் கான் இருந்தார். அவரது அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சலிம் மாலிக், இளம் வீரரான இன்சமாம் உல் ஹக் போன்றவர்கள் இருந்தனர். அனுபவமும் இளமையும் கலந்த அணி. கிளம்பும்போதே பஞ்சாயத்து களைகட்டியது. மூத்த வீரரும் பாகிஸ்தானின் மிகச் சிறந்த ஒருநாள் போட்டி வீரருமான மியான் தத்தை அணியில் சேர்க்கவில்லை. இம்ரான்கானுக்கும் அவருக்கும் பிரச்னை என்பதால் அணியில் சேர்க்கவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆஸ்திரேலியா போனதும் சில பயிற்சி ஆட்டங்களில் ஆடினார்கள். மகா மட்டமான ஆட்டம். இவர்கள் ஆடிய ஆட்டம் பார்த்து பாகிஸ்தானில் கூச்சல் அதிகமானது. வேறு வழியே இன்றி மியான் தத்தை அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் வந்து சேர்ந்தவுடன் அதுவரை துணை கேப்டனாக இருந்த சலீம் மாலிக்கின் பதவி பறிபோய்விட்டது. அதனால் அவர் சோர்வடைந்தார். இன்னொரு விஷயம் இடிபோல் தாக்கியது. வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸுக்கு காயம். அவர் ஆடமாட்டார் என்பது உறுதி ஆனது.

பாகிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லும் என ஒருவர் கூட நினைக்கவே இல்லை. ஏற்கெனவே கான்சருக்காக மருத்துவமனை கட்டுவதில் கவனம் செலுத்திவந்த இம்ரான் கான் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில்லை என்கிற மாதிரி பிம்பம் வேறு ஏற்பட்டிருந்தது.

உலகக்கோப்பை தொடங்கியது. பேரதிர்ச்சிகள் காத்திருந்தன.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றனர். இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி. மூன்றாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக. அதில் 74 ரன்கள் தான் எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை வந்து ஆட்டம் கைவிடப்பட்டு தப்பினர். அடுத்த ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக. அதில் தோல்வி.

அடுத்த ஆட்டமான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வி.

பாகிஸ்தான் கதை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். கடைசி குரூப் ஆட்டம் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

நன்றாகக் கவனியுங்கள். இதுவரை ஆடிய ஐந்து ஆட்டங்களில் ஒன்றே ஒன்றில்தான் வெற்றி. ஒட்டு மொத்த அணியும் துவண்டுபோயிருந்தது.

ஆட்டத்துக்கு முன்பாக வீரர்கள் அறையில் எல்லோரையும் கூட்டினார் இம்ரான் கான். புலி படம் பொறித்த வெண்ணிற டீ ஷர்ட்டில் இருந்தார். “உலகிலேயே சிறந்த வீரர் நீங்கள்தான் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?’ என ஒவ்வொரு வீரராகப் பார்த்துக் கேட்டார்.

அடுத்து அவர் சொன்னதுதான் உச்சம்.

“நாம் காயம் பட்ட புலியாக இருக்கிறோம். காயம்பட்ட புலி மிகவும் அபாயகரமானது.”

பாக் அணி வீரர்களின் முதுகெலும்புகள் நிமிர்ந்தன. அன்று அக்யூப் ஜாவேத்தும் வாசிம் அக்ரமும் அட்டகாசமாக பந்துவீசினர். தங்கள் முதல் ஆதிக்கமான வெற்றியை பாகிஸ்தான் ருசித்தது!

அடுத்து இலங்கையை வென்றார்கள். அடுத்து வந்த நியூசிலாந்து போட்டியை வென்றார்கள். அணியின் மனோபலம் மிகுந்த உச்சத்துக்குச் சென்றது. இவர்கள் அரையிறுதிக்குப் போகவேண்டுமென்றால் மேற்கிந்திய தீவுகள் அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தால்தான் முடியும் என்ற இழுபறி நிலை வந்தது. பாக் வீரர்கள் கவலையே படவில்லை. எல்லாம் தங்கள் பக்கம் இருப்பதாக எண்ணினார்கள். எப்படியும் நாம் அரையிறுதிக்குப் போவோம் என்ற எண்ணத்திலேயே இருந்தார்கள். மேற்கிந்திய தீவுகளை ஆஸி அணி வென்றது! பாகிஸ்தான் அரையிறுதியில்.

அரையிறுதி ஆட்டம், கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணியாக நம்பப்பட்ட மிகச் சிறப்பாக ஆடிகொண்டிருந்த நியூசிலாந்துக்கு எதிராக. அன்று காலையில் இளம் வீரரான இன்சமாம் உல் ஹக், இம்ரான் கானிடம் வந்து எனக்கு உடம்பு சரியில்லை. இந்த ஆட்டத்தில் என்னைச் சேர்க்கவேண்டாம் என்றார். முந்தைய ஆட்டங்களில் சரியாக ஆடாததால் இன்சமாமின் நம்பிக்கை தளர்ந்துபோயிருந்தது. இம்ரான், ‘முடியவே முடியாது. என்ன ஆனாலும் நீதான் ஆடவேண்டும்’ என உறுதியாக சொல்லிவிட்டார்!

அன்றைக்கு பாகிஸ்தான் அணி 262 என்ற இமாலய இலக்கைத் துரத்தி ஆடியது. இனி வாய்ப்பே இல்லை எனத்தடுமாறிய நிலையில் உள்ளே வந்தார் இன்சமாம். அவர் அன்று விதியின் கரமாக விளங்கினார். 37 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். மியான்தத்தும் அவரும் சேர்ந்து அணியை கரை சேர்த்தனர்.

இறுதிப்போட்டியில் இம்ரான் கான், மியான் தத், இன்சமாம் என எல்லோரும் பங்களிக்க 249 ரன்களை பாகிஸ்தான் சேர்த்தது. 227 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழக்க, கோப்பையைத் தட்டித்தூக்கியது!

அந்தப் போட்டியில் மிகப்பெரிய நம்பமுடியாத உச்சத்தை பாகிஸ்தான் எட்டியது! இம்ரானின் எதிரியாகக் கருதப்பட்ட மியான் தத், ஆட்டம் முடிந்ததும் ஓடிவந்து அவரைக் கைட்டித்தழுவ, அதை இம்ரான் நம்பமுடியாமல் பார்க்க…

இன்றும் கிரிக்கெட்டின் உச்சபட்ச கம்பேக் நிகழ்வுகளில் ஒன்றாக இந்த வெற்றி இருக்கிறது!

உச்சகட்ட போராட்டைட்த்தில் பிறந்த வெற்றி

உலகின் வலிமையான அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி இருந்தபோது 11 டெஸ்ட்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. ஆனால் அச்சாதனையை புத்தாயிரத்தின் ஆஸி அணி முறியடித்தது. பதினைந்து டெஸ்ட்களில் தொடர்ந்து வென்று தோல்வியே காணாத அணியாக ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2001 ஆம் ஆண்டு இந்திய அணியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வந்தது. மும்பையில் இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிகளின் எண்ணிக்கையைப் பதினாறாக ஆக்கியது. இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தாவில்.

முன்னதாக இந்திய அணியில் முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகத் தடை செய்யப்பட்டிருந்தனர். அணித்தலைவர் பதவியில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகி, சவுரவ் கங்குலி அந்த பொறுப்புக்கு வந்திருந்தார்.

கல்கத்தா என்ற பெயரை கொல்கத்தா என மாற்றி இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. இளம் அணித்தலைவரான சௌரவ், ஆட்டத்தின் முதல் நாள் காலையில் டாஸ் போட வருவதற்கு தாமதம் செய்து ஸ்டீவ் வாஹ்-ஐ வெறுப்பேற்றி இருந்தார்.

ஆஸி அணியினர் முதன் இன்னிங்க்ஸைத் தொடங்கி 445 ரன்களைக் குவித்தனர். அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் 110 ரன்களை அடித்திருந்தார். அந்த இன்னிங்க்ஸில் டீனேஜ் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன்சிங் இந்தியாவின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு பளிச் தருணம்.

இதற்கடுத்து சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் மகா மட்டமாக ஆடியது. 171 க்கு ஆல் அவுட் ஆனபோது, அனைவரும் நம்பிக்கை இழந்தனர். ஒரே ஆறுதல் இந்த இன்னிங்கிஸின்போது ஆறாவதாக வந்து ஆடிய விவி எஸ் லட்சுமணன் 59 ரன்களை எளிதாக எடுத்ததுதான்.

ஆஸி அணி, இந்திய அணியை மேலும் நம்பிக்கை இழக்கச் செய்யவேண்டும் என நினைத்து பாலோ ஆன் கொடுத்தது. மீண்டும் இந்திய அணி ஆடியபோது முதல் விக்கெட் விழுந்ததும் லட்சுமண் ஆட உள்ளே அனுப்பப்பட்டார். நல்ல பார்மில் இருப்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். ஸ்கோர் 232 ஆக இருந்தபோது நாலாவது விக்கெட் விழுந்தது. உள்ளே வந்தார் ராகுல் டிராவிட். மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் தோல்வி அபாயம் நீங்கிவிடவில்லை. இன்னும் 42 ரன்கள் பின் தங்கி இருந்தனர். ஆஸி, மிக எளிதாக வென்று தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்ற சூழல்.

நான்காம் நாள் அந்த மகத்தான ஆட்டம் நடந்தது. லட்சுமணும் ட்ராவிடும் அன்று முழுக்க ஆடிய ஆட்டம் இருக்கிறதே… அப்பாடி என இன்றும் வியக்கும் ஆட்டம். இந்த ஜோடி பிரியாமல் நான்காம் நாளும் ஆடி 376 ரன்களை சேர்த்தனர். ஸ்கோர் 608 ஆக இருக்கும்போது லட்சுமண் 281 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல் டிராவிட் 180 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். இந்தியா ஏழு விக்கெட்டுகளுக்கு 657 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. கொல்கத்தாவின் கடினமான வெயிலில் ஐஸ் தண்ணீரில் நனைத்த துண்டுகளை கழுத்தில் கட்டிக்கொண்டு லட்சுமணும் டிராவிடும் ஆடிய ஆட்டம் இன்னும் கால்நூற்றாண்டைக் கடந்தும் கண்ணில் நிற்கிறது. கிளென் மெக்ராத், வார்னே, கில்லெப்ஸி, காஸ்பரோவிச் ஆகிய பந்து வீச்சாளர்களை அந்த வெயிலில் கதறக் கதற அடித்தனர். ஆஸிக்கு 384 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஐந்தாம் நாள் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்களுக்குள் சுருண்டு தோற்றது. ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் ஆடம்கில்கிறிஸ்ட், அணியில் அறிமுகமாகி 16 ஆட்டங்கள் கடந்து சந்தித்த முதல் தோல்வி அதுதானாம்!

140 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாலோ ஆன் பெறும் அணிகள் வென்ற நிகழ்ச்சி இதற்கு முன்னால் இரண்டுமுறைகள் தான் நடந்திருந்தது. கொல்கத்தா ஆட்டம் மூன்றாவதாகச் சேர்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. இந்த வெற்றி தந்த ஊக்கத்தில் மூன்றாவது டெஸ்ட் சென்னையில் நடந்தபோது, அதையும் வென்று வாகை சூடி, தொடரை வென்று இன்னொரு கம் பேக் கொடுத்தது இந்திய அணி!

இது வெறும் டெஸ்ட் வெற்றி என்ற அளவிலானது அல்ல. எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்து மீண்டு வந்து போராடி, வெல்வது என்பதற்கு எப்போதும் முதலிடத்தில்வைத்துச் சொல்லப்படும் உதாரணம் ஆகிவிட்டிருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com