“சிரிக்கமுடியாவிட்டால் நம் அனைவருக்குமே பைத்தியம் பிடித்துவிடும்”
- ராபர்ட் பிராஸ்ட்
‘முடிகிறபோதெல்லாம் சிரியுங்கள். அது விலை மலிவானதொரு மருந்து’
- லார்ட் பைரன்
“மனித குலத்திடம் ஒரே ஒரு திறன்வாய்ந்த ஆயுதம் உள்ளது. அது சிரிப்பு”
- மார்க் ட்வைன்
இந்த முறை நகைச் சுவைச் சிறப்பிதழ் செய்யப்போகிறோம் என்று மிக முக்கியமான நகைச்சுவை எழுத்தாளரிடம் சொன்னபோது,’ மிக சிரமமான இதழாக அது அமையும். நகைச்சுவை என்பது எளிதல்ல’ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டார்.
எல்லா கவலைகளுக்கும் அருமருந்து சிரிப்புதான் என்று எல்லோருக்கும் காலம்காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்” என்கிறார் வள்ளுவர். மனமகிழ்வோடு சிரித்து வாழும் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்தப் பெரிய உலகம் பகல் பொழுதிலும் இருள் நிறைந்ததாகவே தோன்றும். உண்மைதான்! சிரிக்கும்போதுதான் முகம் வெளிச்சம் பெறுகிறது; அழகு பெறுகிறது!
காலத்தால் நினைவு கூரப்படும் தலைமைப்பண்பு கொண்டவர்களெல்லாம் அழகாகச் சிரிப்பவ ர்களாகவும் நண்பர்களுடன் சிரித்து உரையாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். காந்தியின் நகைச்சுவை உணர்விலிருந்து கருணாநிதியின் நகைச்சுவை உணர்வுவரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
தீபாவளிச் சிறப்பிதழ் என்றால் எப்போதும் நாம் புன்னகை மிளிரும் சிறப்புப் பக்கங்களையே உருவாக்குவது வழக்கம் என்பதை நம் வாசகர்கள் அறிவார்கள். இம்முறை நேரடியாக நகைச்சுவைப் பக்கங்களை உருவாக்குவது என முடிவுசெய்தோம். முக்கியமான ஜோக் எழுத்தாளர்களும் நகைச்சுவையாக எழுதக்கூடிய நண்பர்களும் இந்த இதழுக்குப் பங்களித்துள்ளனர்.
தற்போது வெளியாகி சிறப்பாக வரவேற்பைப் பெற்ற ஜெயிலர்-2 படத்தில் மூர்த்தி என்ற பாத்திரம், எதிராளியிடம் செஸ் காயின்களை எடுத்து வைத்துவிட்டுப் பேசும் காட்சி இணையமெங்கும் கணிசமாகப் பகிரப்பட்டது. பல மீம்கள் உருவாகின. “அவன் எடுத்தது யானையும் கிடையாது; அடிச்சது ராஜாவும் கிடையாது. ஆனா கான்பிடண்டா அடிச்சிட்டுப் போறதப் பாரு” என்று சுராஜ் வெஞ்சரமூடு பேசும் காட்சிக்கு அப்படியொரு வரவேற்பு. இந்தக் காட்சி எழுதப்பட்டபோது சாதாரணமாக இருந்திருக்கும். நடிகர்களின் நடிப்பால் இது மெருகேற்றி, வைரல் என்னும் அலையால் பரப்பப்படும்போது பெரும் சிரிப்பலையில் நாம் மூழ்கடிக்கப்படுகிறோம். இயக்குநர் நெல்சன் படங்களில் இப்படியொரு அப்பாவிப் பாத்திரம் வந்துபோகும். ஜெயிலர் -2 வில் நமோ நாராயணன் உச்சகட்டப் புகழை எட்டிவிட்டார்!
ஆக சிரிப்பதற்குக் காரணங்கள் தேவையில்லை. காசு பணம் தேவையில்லை. எதையும் ஆராயாமல் சிரிக்கத் தயாராக இருந்தால் போதும். உலகம் அதற்கான வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் சிரிப்பதற்கான வாய்ப்புகளிலும் உம்மணாமூஞ்சிகளாக இருக்கிறோம்?
எதற்குச் சொல்கிறோம் என்றால் இந்த இதழின் பக்கங்களில் சிரிப்பதற்கான வாய்ப்புகளை மட்டுமே நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். பிரபலமான ஜோக் எழுத்தாளர்களுக்கு போட்டிபோட்டுக் கைகொடுத்திருக்கிறார்கள், தமிழ்ப் பத்திரிகைகளின் பிரபல ஓவியர்கள். விழுந்து விழுந்து சிரிக்கிறீர்களோ அல்லது அளந்து சிரிக்கப்போகிறீர்களோ உங்கள் விருப்பம். ஆனால் கொஞ்சம் சிரிங்க சார்/ மேடம்!
உலகிலேயே தலைசிறந்த ஜோக் என்று எதைச் சொல்வது? தனிப்பட்ட முறையில் அது வேறுபடும். காலம், சூழல், அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜோக்குகள் சிரிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இணையத்தில் தேடியபோது ஒரு ஜோக் 70 நாடுகளில் 3,50,000 வாக்குகளைப் பெற்று உலகின் மிகவும் நகைச்சுவையான ஜோக் என்ற அடையாளத்தைப் பெற்றிருப்பதாக ஒரு செய்தி. வேட்டைக்காரன் ஜோக் எனப் பெயரிடப்பட்ட அந்த ஜோக் இங்கே:
இரண்டு வேட்டைக்காரர்கள் காட்டுக்கு வேட்டை யாடச் சென்றார்கள். இருவரில் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். மூச்சுப்பேச்சு இல்லை. செத்துவிட்டதுபோல் தோன்றியது. இன்னொரு வேட்டைக்காரர் போனை எடுத்து அவசர உதவி எண்ணை அழைத்தார்.
”என் நண்பர் இறந்து விட்டார்; இப்ப நான் என்ன செய்யணும்?’ மூச்சு வாங்கப் பதற்றத்துடன் கேட்டார்.
எதிர்முனையில் வந்த ஆள்,” பொறுமையா இருங்க, உதவி செய்றேன். முதலில் அவர் செத்துட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கணும்” என்றார்.
சற்று அமைதி. அப்புறம் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது.
திரும்ப போனில் பேசிய வேட்டைக்காரர், “ ஓகே… அடுத்தது என்ன?” என்றார்.
அதிர்ச்சி, பரபரப்பு, எதிர்பாராத திருப்பம் எல்லாம் இந்த ஜோக்கில் இருப்பதால் பரவலாக ரசிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஜோக் பிடிக்காதவர்கள், அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போகலாம்! எங்காவது உங்களைச் சிரிக்கவைக்கும் அந்த வரி ஒளிந்திருக்கும்!
-ஆசிரியர்