குற்றப்பத்திரிகை நம்பர் 2? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

குற்றப்பத்திரிகை நம்பர் 2?
ஜனநாயகனும் ஜனநாயகமும்...
Published on

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது. ஆளுக்கொரு தேதி சொல்லி அலுத்துப்போன மீடியாக்களும் தற்போது நிரந்தர சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்கள்.

இதற்கு முன்பே சில விஜய் படங்கள் இப்படி சென்சார் சிக்கலுக்கு ஆளாகி பின்னர் சில சேதாரங்களுடன் திரைக்கு வந்த கதைகள் உண்டென்றாலும் ஜனநாயகனுக்கு நேர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்பதை விட ’தாமரை’ இலை தண்ணீர் போல தெளிவானது என்பது நிதர்சனம்.

நடுநிலையாக இயங்கவேண்டிய சென்சார் போர்டு ஆளும் அதிகாரவர்க்கத்தின் பகடைக்காயாக செயல்படுவது இன்று நேற்று அல்ல. இதற்கு பன்னெடுங்கால வரலாறு உண்டு.

நாம் இடையில் இருந்து ஆரம்பிப்போம். எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான அரசியல் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, கருணாநிதி கதை வசனம் எழுதிய பல படங்களுக்கு, குறிப்பாக அரசியல் வசனங்களுக்கு கத்தரி போடப்பட்டன. ‘நீதிக்கு தண்டனை’ என்கிற கருணாநிதி கதை, வசனம் எழுதிய படத்தை சென்சார் அதனளவில் பாடாய்ப்படுத்தியதோடு நில்லாமல் படம் திரையிடப்பட்டதியேட்டர்களும் தாக்குதலுக்கு ஆளாகின. அப்படி அரசியல் அட்ராசிட்டிக்கு ஆளான இன்னொரு முக்கியமான திரைப்படம் கோமல் சுவாமிநாதன் கதை வசனம் எழுதி கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’.

அரசியல்வாதிகளின் ஒரிஜினல் முகத்தை முழுக்க அம்பலப்படுத்திய படமான இந்த தண்ணீர் தண்ணீர் சென்சாரில் சிக்கி சின்னாபின்னமானது. பின்னர் பெரும்போராட்டத்துக்குப் பின் திரைக்கு வந்தபோதிலும் படத்தை முதல் வாரமே தூக்கச்சொல்லி அத்தனை அரசியல்வாதிகளும் நெருக்கடி கொடுத்தது மறக்க முடியாத வரலாறு.

இவற்றையெல்லாம்விட ஆகப்பெரும் சோதனைகளை சந்தித்த தமிழ்ப் படம் ஆர்.கே. செல்வமணி இயக்கிய ‘குற்றப்பத்திரிக்கை’. ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான இப்படம் 1991இல் பூஜை போடப்பட்டு 92இல் ரிலீஸாக தயாராக இருந்தது. ராஜீவ் மரணம் தொடர்பான பல உண்மைகளை புட்டுப்புட்டு வைத்ததால் இப்படத்துக்கு சென்சார் மறுக்கப்பட்டு, ரீ சென்சார், ரிவைசிங் கமிட்டி என்று பல அட்ராசிட்டிகளைத் தொடர்ந்து படம் ரிலீஸானது 16 ஆண்டுகளுக்குப் பின் 2007ல். காட்சிகள், வசனங்கள் என படம் முழுவதும் வெறிநாய்க்கடிக்கு ஆளானது போல் குதறப்பட்டு ரிலீஸானதால் படம் படுதோல்வி அடைந்தது.

கமலுக்கும் கூட இப்படியான பல அனுபவங்கள் இருந்தன என்றாலும் ‘விஸ்வரூபம்’ படத்தில் சென்சார் சான்றிதழ் வாங்கியபிறகு வெளியே நடந்த அரசியல் கெடுபிடிகளால் ‘இந்த நாட்டில் வாழவே பிடிக்கவில்லை’ என்று கதறும் அளவுக்கு  ‘வச்சு செய்யப்’ பட்டார்.

சென்சார் என்பது தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்பு என்று ஒப்புக்கு சொல்லப்பட்டாலும் அது எப்போதும் மத்திய ஆளும் கட்சியின் ஊதுகுழல்தான் என்பது காலம்காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. தணிக்கைக் குழுவில் எப்போதும் ஆளுங்கட்சி விசுவாசிகள் சற்று தூக்கலாகவே தெரிவார்கள்.

அந்த தூக்கல் எஃபெக்ட்தான் ஜனநாயகன், விஜய் வகையறாவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. ஜனநாயகன் அடுத்த குற்றப்பத்திரிக்கையாக ஆக்கப்படுமா என்று பார்ப்பதற்கு முன் சிக்கலில் சிக்கிய விஜய் படங்கள் என்றொரு குறும்படத்தை ஓட்டுவோமா?

சின்னப்பொண்ணு வேணுமா, பெரிய பொண்ணு வேணுமா? என்று மாமனாராகப்பட்டவர் விஜய்க்கு ஆடி ஆஃபர் கொடுத்தபோது,

‘ரெண்டு பேரும் வேணாம். எனக்கு அத்தை மட்டும் போதும் மாமா’ என்று விஜய் ஆடித் தள்ளுபடியை ஆன்ட்டி தள்ளுபடியாக எடுத்துக்கொண்டபோதும், அதே ஆன்ட்டிக்கு  பரந்த முதுகில் சோப்புப் போட்டபோதும் கண்டுகொள்ளாத சென்சார் விஜய்யை முதன் முதலாக தொந்தரவு செய்தது  ‘கீதை’ பட டைட்டில் வழியாக. கீதை என்கிற தலைப்பு இந்து மதத்தினர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டால் அது புதிய கீதையாக மாற்றப்படுகிறது.

அடுத்து துப்பாக்கி படம் இஸ்லாமியர்களை புண்படுத்தியதாக கிளம்பிய குற்றச்சாட்டு சென்சார் சிக்கல்வரை நீண்டது. அடுத்த பெரும் தலைவலியாக மாறிய படம் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் தயாரான ‘தலைவா’. விஜய்க்கு அரசியல் ஆசை அரும்புவிட்டிருந்த காலம். தலைவா தலைப்போடு டேக் லைனாக ‘டைம் டு லீட்’ என்று வைக்கவே அம்மாவின் மூக்கு சிவந்தே போனது. படத்தை காரணம் எதுவும் கூறாமல் சென்சார் மவுனமாக இழுக்கவே தந்தையும் தனயனும் கொடநாடு வரை கும்பிட்டு அழுத கதை காலம் எழுத மறக்காத கல்வெட்டு.

அடுத்தடுத்து வெளியான புலி, தெறி, வாரிசு போன்றவை வெவ்வேறு காரணங்களால் சிக்கல்களுக்கு ஆளாக மறுபடியும் சென்சாரில் பல்க்காக சிக்கிக்கொண்ட படம் ’மெர்சல்’. பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது என்று தகவல் காட்டுத்தீயாய்ப் பரவி, விலங்குகள் நல வாரியம் மூலமாக தொடங்கி சொல்லவொண்ணாத் துயரங்கள் தரப்பட்டன இப்படத்துக்கு.

இப்போது அதையும் தாண்டிப் புனிதமானது என்கிற இக்கட்டில் வந்து நிற்கிறார் மிஸ்டர் ‘ஜனநாயகன்’. இந்த இக்கட்டக்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் என்ட்ரியேதான்.

 ‘பகவந்த் கேசரி‘ என்கிற தெலுங்குப் படத்தின் அப்பட்டமான ரீமேக்தான் இந்த ஜனநாயகன்’. இதே கதைக்கு தெலுங்கில் மட்டும் சிக்கலில்லாமல் சென்சார் கிடைத்தது எப்படி என்கிற கேள்விக்கே இங்கு இடமில்லை.

கரூர் கொலைகார சம்பவத்தில் எஃப்.ஐ.ஆரில் கூட சேர்க்கப்படாத விஜய் இப்பட சென்சார் அப்ளைக்குப் பின்னர்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு வரவழைக்கப்படுகிறார். சென்சார் குறிப்பிட்ட காரணங்களைச் சொல்லாமல் இழுத்தடிக்கிறது. படத்தயாரிப்பு நிறுவனம் கோர்ட் படியேறினவுடன் மூக்கு விடைக்க, எங்களைத் தாண்டி இப்படத்துக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு தரக்கூடாது என்று அடம்பிடிக்கிறார்கள்.

வேறு வழியின்றி, கலவர நிலவரத்தை உணர்ந்துகொண்டு விஜய்யும் ஜனநாயகன் படக்குழுவும் சென்சார் குழுவின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து வழக்குகளை  திரும்பப் பெற்றுக் காத்திருக்கிறார்கள்.

 “அரசியல் கூட்டணி கோரிக்கைக்குப் பணிந்துபோகாததால் இப்போதைக்கு எவ்வித முன்னெடுப்புகளும் இன்றி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது இப்படம்,” என்பது தமிழ்நாட்டின் வெளிப்படையான ரகசியங்களில் ஒன்று. ஆனால் ஊர்ப் பிரச்னைகள் பற்றியெல்லாம் பேசும் நாயகன் விஜய் இந்த சர்ச்சை பற்றி ஏன் வாய்திறப்பதில்லை என்பது  விடைதெரியாத கேள்வி. சரி...  இந்த ஜனநாயகன் தேர்தலுக்குப் பிறகாவது உயிர்த்தெழுந்து வருவாரா?

ஏக் சென்சார் மே ஏக் கட்சி ரஹ்தாதா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com