
மாறாத கூட்டணியுடன் மூன்று தேர்தல்களில் வெற்றி. இந்த தேர்தலிலும் அது சாத்தியமாகுமா? தி.மு.க. கூட்டணி கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்களைப் பார்க்கலாமா?
சிலநாள்களுக்கு முன், முகநூல், பிற சமூக ஊடகப் பக்கங்களில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் பிரமுகர்கள் தி.மு.க.வைத் தாக்கியும் விஜய் கட்சியைத் தூக்கியும் பதிவுகள் போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. அதிகார பகிர்வு, அதிக இடங்கள் என்று போர்க்கோலம் பூண்டிருந்த காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு ‘டாடா’ காட்டிவிடுமா என்ற பரபரப்பான விவாதங்கள். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தொடர்ச்சியாக உற்ற தோழனாக இருந்த காங்கிரஸ் முக்கியமான காலகட்டத்தில் முரண்டு பிடித்து, கூட்டணிகள் உறுதித்தன்மைக்கே வேட்டு வைத்துக் கொண்டிருந்தது. அந்த நெருக்கடியான கால கட்டத்தை நினைவு கூறலாம். முதல்வரின் உள்வட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர், “முதல்வரின் கோபம் உச்சகட்டத்திற்கே சென்றது. அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர சுற்றியிருந்தவர்கள் நன்கு உணர்ந்தோம். காங்கிரஸ் பிரமுகர்களின் விமர்சனம் –குறிப்பாக பிரவீன் சக்ரவர்த்தியின் ‘ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓட்டு விழும் என்று நினைப்பது மூடநம்பிக்கை’ என்ற கருத்து முதல்வரை மிகவும் கொந்தளிக்க வைத்தவிட்டது. காங்கிரஸ் பிரமுகர்கள் மீதிருந்த கோபத்தை விட அதைத் தடுக்காத ராகுல் காந்தி மீது வருத்தம் கொண்டார் முதல்வர்” என்றார்.
ராகுல் மீது வருத்தம் கொள்வதற்கான காரணங்கள் நிறைய உண்டு என்றும் சொல்கிறார் அந்த முக்கியப் பிரமுகர். “2013இல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளிவந்த பின் 2014இல் தனியாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து தோல்வி கண்டோம். அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் இணைந்து சந்தித்து, மக்கள் நல கூட்டணி ஓட்டுகளை பிரித்ததன் காரணமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர்’ என்று முதலில் சொன்னவர் எங்கள் தலைவர். அதன்பின் 2019, 2021 தேர்தல்களில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்தோம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ’பாரத் ஜோடோ’ யாத்திரையை தொடங்கி மற்றும் முடித்து வைத்தார் முதல்வர். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் பேசவந்த ராகுல் இனிப்பு வாங்கிக்கொண்டு போய் மேடையில் ‘மை எல்டர் பிரதர் ஸ்டாலின்’ என்று கட்டிப் பிடித்துக் கொண்டார். இப்படி நெருக்கமாக இருந்த உறவில் ஒரு கசப்பு வந்துவிட்டது. இப்போது ஒப்பந்தம் ஏற்பட்டு காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தாலும், அந்த மோதல் காலகட்டத்தில் முதல்வர் வெளிப்படையாக எந்த அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் காங்கிரஸை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் வலுவான தோழமையாக திமுக இருக்கிறது.
கடைசியில் முதல்வரின் பொறுமையும், காத்திருப்பும் வெற்றி பெற்றது. இது போன்ற ஒரு சூழலில் கலைஞர் இருந்திருந்தால் கூட கடுமையான எதிர் விமர்சனத்தை வைத்து நிலைமை அபாய கட்டத்தை எட்டியிருக்கும்” என்கிறார் அந்த உள்வட்டப் பிரமுகர். இனி பிரச்சார காலத்தில் இருவரும் ஒரே மேடையில் தோன்ற வேண்டுமே என்ற கவலை இரு கட்சியினருக்கும் இருக்கிறது.
காங்கிரஸ் போன்று அல்லாமல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 கால கட்டத்தில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தொடங்கிய இயக்கங்கள் தான் இரு கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத மத அரசியல் இந்த கட்சிகளை ஒருங்கிணைத்த அடித்தளங்களில் ஒன்று. ஜெயலலிதா மறைந்த பின்னர் அ.தி.மு.க. உள் அரசியலில் பா.ஜ.க. தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததும் அ.தி.மு.க. ஆட்சி பா.ஜ.க.வை கண்களை மூடிக் கொண்டு ஆதரித்ததின் காரணமாகவும் மதச்சார்பற்ற கூட்டணி என்ற தளத்தில் தி.மு.க. அணி வலுப்பெற்றது. தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., வி.சி.க., முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. என்ற பலமான கூட்டணி உருவாயிற்று. அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் இந்த அணிக்கு மேலும் ஒற்றுமையையும் பலத்தையும் கொடுத்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது தி.மு.க. அணி. தொடர்ந்து 2021 தேர்தலிலும் கூட்டணி இணக்கமாக அமைத்து பத்தாண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
அதன்பின் மத்திய அரசின் நிதி மறுப்பு, அதிகார பறிப்பு, ஆளுநரின் அத்துமீறல்கள், மொழித் திணிப்பு போன்ற நடவடிக்கைகள் கூட்டணியின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தின. ஆனாலும் அவ்வப்போது உறவில் லேசான கீறல்களும் விழுந்து கொண்டுதான் இருந்தன. வேங்கை வயல், சாம்சங் போராட்டம், கள்ளச்சாராயச் சாவுகள், தூய்மை பணியாளர்கள் போராட்டம், காவல் மரணங்கள் ஆகியவை கம்யூனிஸ்டுகளையும் சிறுத்தைகளையும் களத்தில் போராட வைத்தன. பல சமயங்களில் “திமுக கூட்டணி கட்சிகள் ‘அடிமை’களாக மாறிவிட்டனர்.” என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. ஆனாலுமே தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உறவுச் சங்கிலி உறுதியாக இருந்ததற்கு காரணம் பா.ஜ.க. மோடி எதிர்ப்பை மையப்புள்ளியாக கொண்டது தான்.
இந்த நிலையில் தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. 2021 தேர்தலில் புதிதாக களம் கண்ட கமலும் தோற்றுப் போனார். “மத்திய பா.ஜ.க.வின் பாசிச போக்கை எதிர்க்க கமல் தி.மு.க. அணியில் இணைவது இயல்பான ஒன்றாக அமைந்தது. மேலும் பலமடைந்த தி.மு.க. கூட்டணி 2024 இல் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் அள்ளியது.
தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றியை ருசித்து நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. அணி சந்திக்க விரைந்த நிலையில் களம் மாற்றங்களை கண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் த.வெ.க. எப்படிப்பட்ட ஆதரவைப் பெறப் போகிறது என்பதும், அது வாங்கும் ஓட்டு யாருடைய வெற்றியை பாதிக்கும் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தும் பேசுபொருளாக இருக்கிறது. தி.மு.க.விற்கு எதிர்மறையான ஓட்டு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தரும் வகையில் தி.மு.க. அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும் எந்தவிதமான வாய்ப்பையும், எதிர் அணியினருக்கு கொடுக்க ஸ்டாலின் தயாராக இல்லை. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என்ற எதிர் அணிகள் களமாடும் நிலையில், தி.மு.க. அணியை மேலும் பலப்படுத்தி தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் தான் போட்டி என்று பா.ஜ.க. எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்துகிறார் ஸ்டாலின்.
நான்கு முனை போட்டியில் வெற்றி – தோல்வியை ஆயிரம், ஐந்நூறு ஓட்டுகள் தீர்மானிக்கும் என்ற யதார்த்த உண்மையை உணர்ந்து பிரச்சார பலத்தை வலுப்படுத்துகிறார் அவர்.
காங்கிரஸ் ஏற்படுத்திய சலசலப்பில் கூட்டணியின் “தோற்றம்” சற்று ஆட்டம் கண்ட நிலையில் அவசர மற்றும் அவசிய ஏற்பாடாக தே.மு.தி.க.வை உள்ளிழுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார் ஸ்டாலின். “ஆக… கூட்டணி பலமாகிறது… வெற்றி உறுதியாகிறது” என்று கொண்டாடிய கூட்டணிக் கட்சிகள் “அதிக இடங்கள் வேண்டும்” என்று ஒரு அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கினார்கள். தே.மு.தி.க., கமல் மற்றும் சில உதிரி ‘தலைகள்’ கூட்டணிக்கு உள்ளே வந்த சூழலால் “உங்களுக்கு போன தேர்தலை விட இந்த முறை குறைவான இடங்களைத் தான் கொடுக்க முடியும்” என்ற தி.மு.க.வின் கெடுபிடி கூட்டணிக் கட்சிகளை மேலும் கலவரப்படுத்தியது. ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் என்ற காங்கிரஸின் அழுத்தத்தை மூன்று இடங்கள் அதிகம் கொடுத்து அமைதியாக்கினார் ஸ்டாலின். தனிச்சின்னம், ஆறு இடங்கள் எனக் கேட்ட ம.தி.மு.க.வையும் நினைத்தது போல் வழிக்குக்கொண்டு வந்து விட்டது தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டும் ஐந்து இடங்களுக்குள் அடங்கிப் போனது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கடுமையான முணுமுணுப்புடன் முரண்பட்டார்கள். பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. சிறுத்தைகள் திருப்தி அடைய, கசப்புணர்வுடன் கூட்டணியில் தொடர்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
கடந்த மூன்று தேர்தல்களாக பலமான, ஒற்றுமையான கூட்டணியை கட்டமைத்து வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த தி.மு.க. கூட்டணி இந்த முறை இழுபறி நிலையை சந்தித்தது. “நாங்கள் உறுதியான தோழமையாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது வந்து இணைந்த தே.மு.தி.க.வுக்கு அதிக இடங்கள் என்று வரும் செய்திகள் எங்களை பாதிக்கின்றன. இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை எதிர்பார்த்திருக்கும் எங்களை சங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கிறது.” என்கிறார் ஒரு மூத்த விசிக பிரமுகர். உறுதியான கொள்கை அடிப்படையில் இணைந்திருக்கும் எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லையென்ற பலவீனமாக பார்க்கிறார்கள்” என்று வருந்துகிறார் அவர்.
இந்த நிலையில் கூட்டணியைவிட்டு வெளியேறி சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.
“எங்கள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தி.மு.க.வுக்கு ஆதரவு’’ என்கிற நிலைப்பாட்டை மன வருத்தத்துடன் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.
“எங்கள் தலைவர் யாரையும் விட்டுவிடத் தயாராக இல்லை. அனைவரையும் அரவணைத்துக் கொண்டு போகவே எங்கள் தலைவர் விரும்புகிறார். இதுவரை தனது சாதுர்யமான நகர்வுகள் மூலமும் குன்றாத நட்பின் காரணமாகவும் கூட்டணித் தலைவர்களோடு இணக்கமாகவே இருந்திருக்கிறார் தலைவர். எங்களால் கூட்டணி கட்சிகள் பலமும் பெற்று பயனும் பெற்றிருக்கின்றன. வி.சி.க. தனிச்சின்னம் பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவர்களால் நாங்களும் வெற்றி அடைந்திருக்கிறோம். எனவே இந்த முறையும் கூட்டணி எந்த சேதாரமும் இல்லாமல் தொடர்கிறது.” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் திமுக பிரமுகர்கள்.
வி.சி.க., கம்யூனிஸ்டுகள் சொல்லும் முக்கியமான கருத்து கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. எதிர்ப்பு என்ற கோட்பாட்டில் கட்டமைக்கப்பட்டது தி.மு.க. அணி. ஆனால் புதிதாக இணைந்து மற்றவர்கள் பொறாமைப்படும் விதமாக 10 இடங்களை பெற்ற தே.மு.தி.க.விடம் இந்த கோட்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க. – தி.மு.க. உறவு நீடித்திருக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
“நான்கு முனைப் போட்டியில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்ற அடிப்படையில் தே.மு.தி.க. இணைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சிக்கு தமிழகம் முழுவதும் பரவலான வாக்குகள் இருக்கின்றன. அதற்கு எதிர்மறை ஓட்டு கிடையாது. மேலும் எதிர் அணிகள் பலமாகக் கூடாது என்ற நோக்கத்திலும் தே.மு.தி.க. சேர்க்கப்பட்டிருக்கிறது” என்பது தி.மு.க.வின் வாதமாக இருக்கிறது. “சென்ற முறை 188 இடங்களில் உதயசூரியன் போட்டியிட்டது. இந்த முறை 175 இடங்களில் போட்டியிடுகிறது. நாங்களும் குறைத்துக் கொள்கிறோம். யதார்த்த நிலையை உணர்ந்து நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்,” என்பது தி.மு.க.வின் வேண்டுகோளாக இருந்தது.
1967இல் தமிழகத்தில் கொள்கை வேறுபாடு கொண்ட கட்சிகள் தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து புதிய அத்தியாயத்தை உருவாக்கின. அந்த தேர்தல் முதல் தற்போது வரை களம் பல கூட்டணிகளை கண்டிருக்கிறது. ஆனால் மாறாத கூட்டணியுடன் மூன்று தேர்தல்களில் வெற்றியை கண்டு, நான்காவது தேர்தலை அணுகுகிறார் ஸ்டாலின்.
ஓ.பி.எஸ்.ஐக் கட்சியில் இணைப்பது, தே.மு.தி.க.வைப் சேர்ப்பது, அதிரடியாக பெண்களுக்கு 5000 ரூபாய் கொடுத்தது, பொறுமை காட்டி கூட்டணி கட்சிகளைத் தக்க வைப்பது என்று வெற்றிக்கான தடங்களை கட்டமைக்கிறார் ஸ்டாலின். கூட்டணி கட்சிகளின் இழுபறியைச் சமாளித்து ஒருங்கிணைத்ததன் தன் மேலாண்மையை நிறுவியிருக்கிறார் ஸ்டாலின். அவரது யுக்தி என்பது கருணாநிதி கடைபிடித்த யுக்திகளை விட மாறுபட்டது என்பதில் சந்தேகமில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது “ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ்” என்ற எச்.ராஜாவின் கூற்று, பொருந்திப் போகிறதே!