சட்டமும் நீதியும் எப்போதும் ஒன்றாகப் பயணிப்பதில்லை

நீதிபதி பிரபா ஸ்ரீதேவனுடன் ஒரு நேர்காணல்
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்
Published on

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பின்னர் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் (Intellectual Property Appellate Board) தலைவராகவும் பணியாற்றியவர் பிரபா ஶ்ரீதேவன். ஓய்வுக்குப் பிறகு தமிழிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவராகச் செயல்படும் பிரபா ஶ்ரீதேவனுடன் நீதி, பாலினம் குறித்து அந்திமழை மேற்கொண்ட உரையாடல் இது. இறுக்கமான நீதிமன்ற நியதிகளுக்கும் மனிதர்களின் வாழ்வனுபவ வலிகளுக்கும் இடையிலான தூரத்தைக் கலைத்துப் போடுகின்றன அவரது சொற்கள்.

 1983-இலிருந்து வழக்கறிஞராகவும் 2000த்திலிருந்து நீதிபதியாகவும் இருந்தீர்கள். பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாக ஏதேனும் வழக்கு நினைவுக்கு வருகிறதா?

அப்படி ஏதும் குறிப்பிட்டுச் சொல்லும்படி நினைவுக்கு வரவில்லை. ஆனால் ஒரு மிக முக்கியமான கலந்துரையாடலை நான் ஒழுங்கு செய்திருக்கிறேன். சம்கி ராஜ் என்று ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். இடதுசாரி பின்புலம் கொண்டவர். 1995 என்று நினைக்கிறேன். அப்போது நானும் சம்கியும் இணைந்து அதை ஏற்பாடு செய்தோம். அப்போது வடக்கில் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்திருந்தார்கள். அதன் சரி-தவறுகள், சாதக-பாதகங்களை பேசுவதற்கு இந்த கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தோம்.

முக்கியமானவர்கள் என்றெல்லாம் யாரையும் அழைக்கவில்லை. அக்கறை கொண்ட சிலர் கூடியிருந்தோம். பெண்களின் உரிமைகள், சட்டம் சொல்வது என்று பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் எழுந்து நின்றார். “உங்களுக்கு என்ன தெரியும்?” என்று எங்களைப் பார்த்து கேட்டார். “என் மகள் மனநலம் குன்றியவள். அவளுக்கு நான் கட்டாய கருத்தடை செய்தேன். என் கஷ்டம் உங்களுக்கு புரியவே புரியாது, எனது வாழ்க்கையை வாழாத உங்களுக்கு அது எப்போதும் புரியாது” என்றார்.

அந்த சொற்களின் உண்மை, எனக்குள் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த தருணம் ஏன் முக்கியமானதாக மாறியது?

 மனநலம் பாதித்த பெண் குழந்தைக்கு மாதவிடாய் என்பதே பெரிய சவால். பெரும்பாலும் அந்த குழந்தைகளை பராமரிக்க வேண்டியது, தனியாக வாழும் தாய்மார்களின் கடமையாக மாறிவிடுகிறது. இதுபோன்ற குடும்பங்களில் திருமண பந்தம் நீடிப்பதில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன். தாய்மார்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, அந்த பெண் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள். அப்படியொரு தாய்க்கு பெண்களின் உடல் பற்றியும் அதுசார்ந்த உரிமைகள் பற்றியும் வகுப்பெடுக்க நான் யார்?

 அந்த கேள்வி எனக்கு ஒரு பாடத்தை கற்றுத்தந்தது. சட்டத்துக்கும் நியாயத்துக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. எல்லா நேரங்களிலும் அது ஒன்றாக இருக்காது. சில நேரங்களில் ஒன்றாக இருக்கலாம், எல்லா நேரங்களிலும் இல்லை.

உங்களது பார்வையை அந்த சம்பவம் மாற்றியதா?

நிச்சயமாக. பெண் குழந்தைகளின் குறிப்பாக சிறப்புத்திறன் கொண்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை பற்றி (vulnerability) எனக்கு பெரிய திறப்பைக் கொடுத்த அந்த சம்பவத்துக்கு பிறகு நான் ஒன்றை புரிந்துக் கொண்டேன்.

எதையுமே பிரச்சாரம் செய்வது போல பேசுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை. எந்தப் பிரச்னையையும் கறுப்பு வெள்ளையாக பார்க்க முடியாது. அந்த நிலையில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அதைச் செய்யாமல் சகட்டுமேனிக்கு எதையாவது சொல்லக் கூடாது என்று கற்றுக்கொண்டேன். 2000த்தில் நான் நீதிபதியான போது அந்த பாடம் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்தது.

பெண்கள் தினசரி பாகுபாடுகளை சந்திக்கிறார்கள்.

நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு சட்டக் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். “நீதிபதி என்றெல்லாம் என்னைப் பார்க்க வேண்டாம், இதே கல்லூரியிலிருந்துதான் சில வருடங்களுக்கு முன்பு நானும் சட்டம் படித்து வெளியேறி இருக்கிறேன்” என்று சொன்னேன்.

அப்போது ஒரு மாணவர் என்னைப் பார்த்து கேட்டார்: “எந்த விதத்தில் இந்த பெண்களுக்கு disadvantage (குறை) இருக்கிறது? எங்களோடு நேருக்கு நேர் நின்று சண்டை போடுகிறார்கள் அவர்களுக்கு ஏன் சிறப்புரிமைகள் தேவை?”

“நடைமுறை சார்ந்து ஒரு பதில் தருகிறேன், புரிகிறதா என்று சொல்லுங்கள். நீங்களும் பேருந்தில்தான் கல்லூரிக்கு வருகிறீர்கள். அவர்களும் பேருந்தில்தான் கல்லூரிக்கு வருகிறார்கள். பேருந்தில் அவர்களுக்கு நிகழும் பாலியல்ரீதியிலான சீண்டல்களை எல்லாம் அவர்கள் வீட்டில் சொன்னால், எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சட்டப்படிப்பை விட்டுவிட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் அவர்கள் விரும்பாத ஒரு படிப்பில் சேர்த்துவிடுவார்கள். இதுவே நீங்கள் போய் உங்களை பெண்கள் கிண்டல் செய்வதாகச் சொன்னால் உங்கள் வீட்டில் என்ன சொல்வார்கள்? நீங்கள் பெண்களுக்கு பதில் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது எப்படி சமத்துவம் என்று சொல்வீர்கள்?” என்று பதில் சொன்னேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

எல்லா வசதிகளும் இருக்கின்றன, குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டில் சட்டத்தில் குறை சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை. ஆனால் சட்டம், இந்த மண்ணில் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும். அங்கு அது சமமாக இல்லை.

இந்த சமத்துவமின்மை வீடுகளிலிருந்தே தொடங்குகிறது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்

ஆமாம். பெண்களேகூட சகோதரர்களுக்காக சொத்துரிமையை விட்டுத் தருகிறார்கள். காரணம், சொத்து என்பது ஆண்களின் மரபுரிமை என்கிற சமூக மனப்பதிவு இங்கு இருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமை இருப்பதாகக்கூட யோசிக்கமுடியவில்லை. இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருப்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. அது சரியா என்று தெரியவில்லை. ஒரு விஷயம் என்னவென்றால் குற்றங்களுக்கு எதிராக புகாரளிக்கப்படுவது அதிகமாகியிருக்கிறது. இன்னொன்று நிறைய பெண்கள், பெண் குழந்தைகள் வெளியே வருகிறார்கள். 1960களில் எவ்வளவு பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்தார்கள்; பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களை சந்தித்தார்கள் என்று் பார்த்தால் புரியும். இப்போது பெண்கள் அதிகம் வெளியே வருகிறார்கள். வீட்டிலேயே இருந்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அதுவா நமக்கு தேவை?

Social conditioning அல்லது சமூகம் அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நம்மை வார்ப்பது என்பது எப்படி பெண்கள் பற்றிய அணுகுமுறைகளை வடிவமைக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

இன்று கூட இந்து நாளிதழில் பார்த்தேன். கடம் வாசிக்கிறார் ஒரு பெண். அவ்வளவு பாகுபாடுகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு 40 வயது இருக்கலாம். ஆனால் சிறுவயதில் அவருக்கு கடம் வாசிக்க வேண்டும் என்று விரும்பும் போது கடம் வேண்டாம், நடனம் கற்றுக் கொள்ளலாம் என்று சொன்னால் அது பதில் இல்லை. எனக்கு கடம் வாசிக்க வேண்டுமென்றால் கடம் வாசிக்க முடிய வேண்டும். ஆனால் இன்று எல்லா பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விஷயத்தை செய்யும் சுதந்திரம் இன்னும் கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதே நேரம், இங்கு ஆண்களுக்கும் பல பிரச்னைகள் சமூகரீதியாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை எல்லாம் ஆண்களின் மீது ஒரு தாக்கத்தைச் செலுத்துகிறது.

பிறகு அவர்கள் தொலைபேசிகளிலேயே வந்து விழும் விஷுவல்ஸை பார்க்கும்போது அது அவர்களின் ‘ஆண்மையைப்’ பற்றிய சிதைந்த ஓர் உணர்வைத் தூண்டிவிடுவதாக இருக்கிறது. பிறகு ஆண் குழந்தைகளுக்கு இங்கு என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது? பெண்கள் என்றால் அடக்கப்பட வேண்டியவர்கள், இரண்டாம்நிலை குடிமக்கள்தான் என்பதைதான் இங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும்?

பிறந்ததிலிருந்தே பெண்களை மதிக்க வேண்டும் என்பதை ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டும். அதை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செய்ய முடியுமா?

இந்த சார்புகளுக்கு வெகுஜன பண்பாட்டு ஊடகம் எப்படி பங்களிக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

நமது வரவேற்பறைகளில் இருக்கும் தொலைக்காட்சிகளில் நம்மை வந்தடையும் விளம்பரங்கள் எப்படியாக இருக்கின்றன? “சண்டே அன்னிக்கு மட்டன் கேட்கறீங்களே, எப்படி பண்றது?” என்று அங்கலாய்க்கும் மனைவியின் கையில் ஒரு மசாலா பாக்கெட் திணிக்கப்படுகிறது.

ஞாயிறு அன்றுகூட விடுமுறை கிடைக்கப் பெறாத மனைவியிடம் கணவன் மட்டன் கேட்கக் கூடாது, அல்லது மட்டன் வேண்டுமென்றால் அவன் செய்து சாப்பிட வேண்டும்.

விளம்பரத்தில் வரும் இந்தக் காட்சியை குழந்தையும் பார்க்கிறது. வளர்ந்த பிறகு மட்டன் கேட்கவும் செய்து கொடுக்கவும் என சமூகக் கட்டமைப்பின்படி தங்களது ‘பாலினத்துக்கேற்ற பாத்திரங்களில்’ பொருந்திப் போவதை இந்த காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. சினிமாவிலும் இப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஒரு முறை நடிகை பானுமதி சொன்னார்: “முன்னெல்லாம் நாயகியை யாராவது துன்புறுத்துவார்கள், எம்.ஜி.ஆர் போல நாயகர்கள் துன்புறுத்துபவர்களை துவம்சம் செய்துவிட்டு நாயகியை காதலிப்பார்கள். ஆனால் இப்போது நாயகி யார் துன்புறுத்துகிறார்களோ அவர்களையே காதலிக்கிறார்கள். அப்போது நாம் ஆண் குழந்தைகளுக்கு என்ன செய்தியை தருகிறோம்?” என்று கேட்டார்.

முதலில் வெறுத்தாலும் பின்னர் அந்தப் பெண் உங்களை ஏற்றுக் கொள்ளலாம், நீங்கள் என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்றுதானே நாம் சொல்கிறோம்?

குடும்பத்துக்குள் நிகழும் பாலியல் அத்துமீறல்களை பேசப்படாத பாவ செயல் என்கிறீர்கள்.

ஆமாம் அதைப் பற்றி நாம் போதுமான அளவு பேசவில்லை. இது பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழ்கிறது என்று நான் சொல்ல மாட்டேன், ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. பேசப்படாத பாவசெயல்.

மஜிலிஸ் என்கிற அமைப்பின் குழுவில் நான் இருக்கிறேன். அங்கு ஒரு உரையாடலின் போது ஒரு அம்மா கேட்டார்: “அப்பாவுக்கு இல்லாத உரிமையா?” என்று.

அந்த அம்மாவை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவரது சூழல், அப்பாவை சார்ந்து வாழ வேண்டிய நிலை, வறுமை இப்படி பல காரணங்கள். நாம் அவரை விட நல்ல நிலையில் இருக்கிறோம், அதனால் அவரைப் பற்றி நாம் தீர்ப்பு கூறுவது சரியாக இருக்காது.

இந்த மோசமான உண்மைகளைத் தாண்டி பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. முன்னைவிட இப்போது வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத துறைகளில் பெண்கள் கொடிகட்டிப் பறப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல், அதிகாரம் என்று எல்லா நிலைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மம்தா பானர்ஜியிடம் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எந்தவொரு ஆண் துணையும் இல்லாமல் தானாக ஒரு தலைவராக உருவானவர் அவர். அவரிடம் ஒரு தீவிரமான போர்க்குணம் இருக்கிறது. இதுவா அதுவா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இங்கு இடமில்லை. இதிலும் நமக்கு சில விஷயங்கள் பிடிக்கலாம். அதிலும் சில விஷயங்கள் பிடிக்காமல் போகலாம். மம்தா அதற்கு ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன்.

பெண் குழந்தைகளின், இளம்பெண்களின் பாதுகாப்பு என்று வரும் போது சமூகம் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நாம் சாதாரண பெண்கள், அவர்களுடைய பாதுகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சின்ன வயதிலிருந்தே தற்காப்பைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்; பாலியல் கல்வியை எந்த வயதில் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் நாம் உரையாட வேண்டும். பாலியல் கல்வியை கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதும் ஒழுக்கமற்ற செயல் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் என்பது ஒழுக்கக்கேடு இல்லை. அதை நாம் தவிர்க்க முடியாது. தினசரி காலைக்கடனை கழிப்பது போன்ற இயற்கையான விஷயம்தான் பாலியலும்.

அதைப் பற்றி பேசுவதே குழந்தையை கெடுப்பது இல்லை. சொல்லப்போனால் குழந்தைக்கு சில விஷயங்களை அவர்களின் வயதுக்கேற்ப புரிய வைப்பது மிக முக்கியம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயொரு தீர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்தப்படும் விதம் என்ற ஒன்றும் இருக்கிறது. நமது புலனாய்வு கட்டமைப்பு என்பது யார் தவறு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து செயல்படுகிறது. யார் குற்றமிழைத்திருந்தாலும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

தண்டனையை கடுமையாக்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அது எங்கேயும் நம்மை இட்டுச் செல்லப்போவதில்லை. நம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றி, பாலியல் பற்றி சரியான புரிதலை உருவாக்க வேண்டும். பாலியல் பற்றி பாலினம் பற்றி ஆரோக்கியமான, கற்றுணர்ந்த ஒரு பார்வையை நாம் நம் பிள்ளைகளிடத்தில் உருவாக்க வேண்டும்.

கடைசியாக, குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 குழந்தை என்றால் 14, 15, அல்லது 18 வயது என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்தக் குழந்தைக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்:

“உனக்கு (நான் உங்களுக்கு என்று அந்த குழந்தையைச் சொல்லப்போவதில்லை) உன் பெற்றோர், நண்பர்கள், எல்லோரும் உன்னை எப்படிப் பார்க்க வேண்டும் எப்படி மரியாதை தர வேண்டும் என்று நினைக்கிறாயோ, அந்த மரியாதைக்கு உகந்த வகையில் உனது ஒவ்வொரு செயலும் நடவடிக்கையும் இருக்க வேண்டும். ஒரு நொடி கூட அதிலிருந்து வழுவக் கூடாது. இதுதான் உனக்கான சுயமரியாதை. உனக்கு நீ செய்து கொள்ளும் பேருதவி.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com