டி.லெனின், சி.பி.ஐ.
டி.லெனின், சி.பி.ஐ.

அம்பேத்கரிடம் பரதன் பேசிய கதை!

இடதுசாரி

கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாலாவது ஐந்தாவது படிச்சப்போவே பிரச் சாரத்துல இறங்கிட்டேன் எனச் சொல்லிச் சிரிக்கிறார், டி. லெனின். சி.பி.ஐ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். ‘பிரச்சாரக் கூட்டம்னு சொன்னா, 1997&98 வாக்கில சட்டக்கல்லூரியில் படிச்சிட் டிருந்தப்போ, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் தோழர்கள்கூடப் பேசத் தொடங்கினேன். சோத்துப்பாக்கம் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட்டபோது, பிரச்சாரம் செய்தேன்.

எங்க கட்சி பிரச்சார முறை, பொதுக்கூட்ட முறையா இருக்காது. எங்க வண்டிக்கு முன்னாடி கலைக்குழுக்கள் நிகழ்ச்சி நடத்திட்டுப் போவாங்க. கூட்டம் கூடிடும். அப்படி ஒவ்வொரு இடத்திலும் அங்கங்க வயல் வேலை செய்றவங்க, அதை விட்டுட்டு வந்து பிரச்சா ரத்தைக் கேட்க வந்து நின்னுடுவாங்க. அதுவே நமக்கு உற்சாகமா இருக்கும். யாருனே தெரியாது, நாம பேசி முடிக்கிறதுக்குள்ள, பிரச்சாரக் குழுவுல இருக்கிற இருபது முப்பது பேருக்கும் டீ கொண்டுவந்து தருவாங்க. கட்சித் தோழர்களா இல்லாம பொதுமக்களா இப்படிச் செய்றவங்க கணிசமா இருப்பாங்க. அந்த அன்பைச் சொல்றதுக்கு உண்மையிலேயே வார்த்தை இல்லை.

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு பிரச்சாரம் போனப்போ, தோழர் நல்லகண்ணு அந்தப் பகுதியைப் பத்தி குறிப்புகளை எடுத்துச்சொன்னாங்க. பொதுவான பிரச்னைகளை மட்டுமில்லாம, அந்தத் தொகுதியில பீடித்தொழில் பத்தியெல்லாம் நல்லாப் புரிஞ்சுகிட்டுப் பேசினதெல்லாம் நல்ல அனுபவம்.

சிவகங்கை, வால்பாறை, திருப்பூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர்னு நாங்க போட்டியிட்ட எல்லா பகுதிகளுக்குப் போய்ப் பிரச்சாரம் செஞ்சிருக்கேன். கட்சியின் தேசியத் தலைவர்களோட பிரச்சாரப் பயணத்தில கலந்துக்கிட்டதும் உண்டு. மறக்கமுடியாத ஒரு நிகழ்வு, திருத்துறைப்பூண்டியில மூத்த தோழர் ஏ.பி.பரதன் கலந்துகிட்ட பெரிய பொதுக்கூட்டம். அவருடைய பேச்சை தமிழில் மொழிபெயர்த்தேன்.

அப்போ அவர் பல விசயங்களப் பகிர்ந்துகிட்டார். அப்படி... அவர் பூர்வீகம் வங்காளம்னாலும் படிச்சது பெரும்பாலும் நாக்பூர். அம்பேத்கர் காலத்தில நாக்பூர் மாணவரா சக நண்பர்களோட, தீட்சா பூமிக்கு போனபோது, அம்பேத்கர் இவர்களைப் பார்த்து ‘நீங்கலாம் யாரு..'னு கூப்பிட்டு பேசியிருக்கார். 'நாங்க கல்லூரி மாணவர்கள்...கம்யூனிஸ்ட் கட்சி'னு பரதனும் மற்றவர்களும் சொல்ல, ‘சாதி அமைப்பில உங்களுக்கு பிடிப்பு உண்டா?'.... ‘கடவுள் நம்பிக்கை உண்டா?'னு வரிசையா கேட்டிருக்கார். ‘இல்லை இல்லை'னு சொன்னதும், ‘ரொம்பச் சரி'னு வாழ்த் தினதோட, மேடையில பேசும்போதும், இப்படி மாணவர்கள் சிலர் வந்தாங்க, பேசினாங்கனு நடந்ததைக் குறிப்பிட்டிருக்கார், அம்பேத்கர்!

எழுத்தும் பேச்சும்

 ஜி. செல்வா, சி.பி.எம்.

கூட்டணியில் இருந்தாலும் ஆளும் கட்சி செய்யும் தவறுகளையும் துணிச்சலாகக் தன் உரைகளில் சுட்டிக் காட்டும் ஜி.செல்வா, எதார்த்த அரசியலை மக்க ளுக்கு எளிமையாகக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குப் போராட்ட உணர்வை விதைத்து வெற்றி பெறச் செய்திருக்கிறார். (எ.கா. சென்னையில் கே.பி, பார்க் குடியிருப்பு போராட்டம், பக்கிங்காம் கால்வாய் பகுதி மக்கள் இடமாற்றப் போராட்டம்)

மக்களின் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கட்டாய இடமாற்றங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தான் களம் கண்ட போராட்டங்களையும், போராடும் மக்களின் இன்னல்களையும் பொது மக்களுக்குப் பரவலாக எடுத்துச் செல்லும் வகையில் ஊடகங்களில் தொடந்து எழுதியும் பேசியும் வருகிறார்.

பதின்வயது முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் களப்போராளியான இவர் ஆழ்ந்த வாசிப்பாளராகவும் சிந்தனையாளராகவும் அறியப்பட்டுள்ளார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளையொட்டி காணொளி விவாதங்களில் ஆழமாக விவாதிக் கக் கூடியவராகவும் மேடையில் தயக்கமின்றி உரையாற்றுபவராகவும் உள்ள இவர் அக்கட்சியின் எதிர்கால முகங்களில் ஒருவர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com