
‘’அம்மா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். கொஞ்சம் பொறுமையா கேளு”
17 வயது மகள் படுக்கையில் தன்னை கட்டிபிடித்துக்கொண்டு கேட்டபோது அந்த அம்மாவிற்கு கொஞ்சம் பதற்றமாகத் தான் இருந்தது.
“என்ன சொல்லு”
“நான் எங்க ஸ்கூல்லயே ஒரு கவுன்சிலர் கிட்ட கவுன்சிலிங்க் போய்ட்டு இருக்கேன், அவங்க உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க”
அம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“கவுன்சிலிங்கா?. கவுன்சிலிங் போற அளவுக்கு உனக்கு என்னடி பிரச்சினை? இவ்வளவு கஷ்டப்பட்டு நான் நாய் மாதிரி அலைஞ்சி வேலை பார்க்குறதெல்லாம் உனக்காகத்தானே!. என்ன கஷ்டம் உனக்கு கொடுத்துருப்பேன்?, எந்த கஷ்டமும் இல்லாம சொகுசா தானே வளர்க்கிறேன்? இன்னும் என்ன வேணும்னு கவுன்சிலர் கிட்ட போற?” என சடசடவென திட்ட ஆரம்பித்தாள்.
அதற்கு பிறகு மகள் எதுவும் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் அந்த அம்மா கவுன்சிலரை பார்த்து இதையே புலம்பினார்.
அந்த கவுன்சிலர் நிதானமாக அந்த அம்மாவை பார்த்துவிட்டு சொன்னார் “அவளுக்கு நீங்க நினைக்கிற மாதிரி எந்த கஷ்டமும் இல்லை. இந்த வயசுல அவளுக்கு பகிர்ந்துக்கிறதுக்கு நிறைய விஷயம் இருக்கு. ஆனா அதை பொறுமையா கேட்கிறதுக்கு யாரும் இல்லை. அதனால என்கிட்ட வந்து சொல்றா. நான் அவ சொல்றத பொறுமையா கேட்கிறேன். உங்கள வர சொன்னது கூட, இத சொல்றதுக்கு தான். அவ ஏதாவது உங்ககிட்ட சொன்னா உடனே அவளுக்கு அறிவுரை சொல்லாம, அவ செய்தது சரியா, தவறானு முடிவுக்கு வராம, அவ சொல்றத ஜஸ்ட் கேளுங்க. எந்த முன்முடிவுக்கும் வராம கேட்டால் போதும். அவ எல்லாத்தையும் அதுக்கப்புறம் உங்ககிட்டயே பகிர்ந்துப்பா, என்ன மாதிரி கவுன்சிலர தேடி வரமாட்டா”
“இவ்வளவு நாள் அவ சொல்றத நான் கேட்கவே இல்லனு சொல்றீங்களா?”
“கேட்டிங்க, ஆனா, அவ சொல்றது முழுசா கேட்கிறதுக்கு முன்பே நீங்களா ஒரு முடிவுக்கு வந்து அவளுக்கு அறிவுரை சொல்வீங்க இல்லனா திட்ட ஆரம்பிப்பீங்க. பொறுமையா கேட்டதேயில்லை. பொறுமையா கேட்கிறதுக்கு உண்டான நிதானம் உங்களுக்கு இல்லை. அறிவுரைகளை விட பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்பதுதான் எல்லா வகையிலும் குழந்தை வளர்ப்பில் சிறந்த முறை”
தனது மகள் சமீப காலமாக தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி போவதற்கான காரணம் அப்போதுதான் அந்த அம்மாவிற்கு புரிந்தது.
கடினமான வேலை, பொருளாதார ஸ்திரமின்மை, கடன் என பல்வேறு காரணங்களால் இன்றைய பெற்றோர்கள் பதற்றமாக இருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் அவர்களால் நிதானமாக அணுகமுடியவில்லை. எதிலும் ஒரு ஈடுபாடு இல்லை. எல்லாவற்றையும் ஒரு சம்பிரதாயமாக செய்து பழகிவிட்டார்கள். இந்த வெளிப்புற அழுத்தம் குழந்தை வளர்ப்பிலும் வெளிப்படுகிறது.
அவர்களின் ஒரே லட்சியம் தங்கள் குழந்தைகளை வெற்றிகரமானவர்களாக வளர்ப்பதாக தான் இருக்கிறது. அதனால் சிறு வயது முதல் அதையும் ஒரு வேலை போல செய்து வருகிறார்கள். இந்த வயதில் இதை செய்ய வேண்டும், இந்த வயதில் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமன்பாடு அவர்களிடம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான வெற்றி பெற்ற குழந்தைகளின் கதைகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட வழிமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒருவேளை அவர்களின் இந்த கால அட்டவணை படி குழந்தைகள் வளரவில்லையென்றால் நிதானமிழக்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள். அதை தங்களின் தனிப்பட்ட தோல்வியாக கருதுகிறார்கள். இந்த இயலாமை கோபமாக வெளிப்படுகிறது, இதைக் குழந்தைகளிடம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவை, அவர்களின் கற்றல் முறையிலிருந்து, நடவடிக்கைகள், விருப்பு, வெறுப்புகள், நுண்ணறிவுகள் என எல்லாமும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்ள தயாராக இல்லை. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பிற்கு மாறான கதைகளை குழந்தைகளிடம் இருந்து இவர்கள் கேட்பதில்லை. அப்படிப்பட்ட கதைகளை நிராகரிக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் தரப்பு விளக்கங்கள் கூறுவதைக்கூட பொறுமையாகக் கேட்க இயலாமல் பதற்றத்தின் உச்சிக்கே செல்கிறார்கள். இப்படி பகிர்ந்து கொள்ளப்படாத விஷயங்கள் தான் குழந்தைகளின் நடத்தை பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன் ஒருவனை அவனுடைய தந்தை சமீபத்தில் அழைத்து வந்திருந்தார். மிகவும் நன்றாக படிக்கக்கூடிய மாணவன், சமீபகாலமாக மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்திருக்கிறது. பெற்றோரிடம் பேசுவதையே தவிர்த்து எந்த நேரமும் தனிமையாக அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்கிறான். பள்ளியிலும் முன் போல யாரிடமும் பேசுவதில்லை. வகுப்பில் கவனிப்பதில்லை. நிறைய நாட்கள் ஏதாவது காரணம் சொல்லி பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து விடுகிறான் என அவன் மீது ஏராளமான புகார்கள்.
அவனைத் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேசினேன். முதலில் தயங்கியவன் பிறகு பேச ஆரம்பித்தான். அவனது தந்தை மிகவும் கண்டிப்பானவர். காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என அத்தனைக்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறார். அதன் படிதான் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். இதை பின்பற்றவில்லையென்றால் மிகவும் கடினமாக நடந்து கொள்வார். பன்னிரெண்டாவது வந்ததிலிருந்து இந்த அட்டவணை இன்னும் கடினமாகியிருக்கிறது. சாப்பிட இவ்வளவு நேரம், குளிக்க இவ்வளவு நேரம் என அத்தனைக்கும் நேரம் கொடுத்து இவனை பின்பற்ற சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிகாலை 6 மணியிலிருந்து சிறப்பு வகுப்பு. இரவு பத்து மணிவரை படிப்பதற்கான அட்டவணை. விடுமுறை தினங்களிலும் இதே போல மூச்சு முட்டும் அளவிற்கு அவனுக்கு அட்டவணை.
எப்போதும் இன்னொருவரின் அட்டவணையைப் பின்பற்றுவது ஒருவித அழுத்தத்தை அவனுக்கு கொடுத்திருக்கிறது. படிப்பே ஒரு சுமையாக தோன்ற ஆரம்பித்திருக்கிறது. படிப்பின் மீதான ஈடுபாடு குறைந்து வெறுப்பாக மாற தொடங்கியிருக்கிறது. இதை பல முறை தந்தையிடம் சொல்ல முயற்சி செய்திருக்கிறான். ஆனால், தந்தை கோபப்பட்டு கத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் இதை பற்றி இவரிடம் பேசவே முடியாது என முடிவு செய்திருக்கிறான். அதற்கு பிறகு அவர் மீது ஏற்பட்ட வெறுப்பு படிப்பின் மீது வந்திருக்கிறது, தந்தையைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவன் படிப்பதை தவிர்த்திருக்கிறான், அவருக்குப் பிடிக்காத ஒவ்வொன்றையும் செய்ய ஆரம்பித்திருக்கிறான். மதிப்பெண்கள் குறைய தொடங்கியிருக்கிறது. அதனால் உண்டான மன உளைச்சலில் அத்தனையிலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டு தனிமையில் இருக்க தொடங்கிருக்கிறான். அவனின் இந்த சரிவு மேலும் மேலும் அவனுக்கு மன உளைச்சலை கொடுத்ததின் விளைவாக அவன் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறான். சில நேரங்களில் தற்கொலை எண்ணங்களும் வந்திருக்கின்றன. ஒரு முறை அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்ட போது அவனது தாய் அதனைப் பார்த்து அதிர்ச்சியாகி தந்தையிடம் பேசி இங்கு அழைத்து வந்திருக்கிறார்.
அவனது இத்தனை பிரச்னைகளுக்கும் என்ன காரணம்? அவன் சொல்லவருவதைப் பொறுமையாகக் கவனித்திருந்தாலே அவனது இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். அவனது தந்தை எதிர்பார்ப்பதை விட மிக சிறப்பாக அவனால் படித்திருக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் இந்தப் பொறுமை பெற்றோர்களிடம் இல்லை. குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக தாங்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் போதும் என்ற உறுதியான பெற்றோர்களின் நிலைப்பாடுதான் அவர்களின் தரப்பைக் கேட்பதிலிருந்து தடுக்கிறது. குழந்தைகள் பேசுவதை எந்த முன்முடிவும் இல்லாமல் பொறுமையாகக் கேட்பதன் மூலம் குழந்தைகள் இன்னும் சிறப்பாக தான் வளர்வார்களே தவிர, மோசமாக மாட்டார்கள்.
குழந்தை வளர்ப்பு மிகவும் சவாலானதாக மாறிவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் புறச்சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. அவர்களின் கனவுகள், லட்சியங்கள், விருப்பங்கள் என அத்தனையும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. பெற்றோர்களின் பங்கு என்பது அவர்களுக்கான திட்டங்களை வகுப்பதல்ல, விருப்பங்களைத் திணிப்பதல்ல. அந்த சூழலில், குழந்தைகளுக்கு அரவணைப்பாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதே அவசியமானது. இந்தப் பாதுகாப்பு என்பது, எவ்வளவு தூரம் வெளிப்படையாக குழந்தைகளிடம் இருக்கிறோம் என்பதை பொறுத்தது. குழந்தைகள் தங்களது அந்தரங்க விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்கான நம்பிக்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பொறுமையாகக் கேட்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால், அத்தனையும் சொல்வதற்கு அவர்களும் தயாராகவே இருப்பார்கள்.