புதையல்

சிறப்புப்பரிசு ரூ. 2500 பெறும் கதை
புதையல்
ஜீவா
Published on

அன்று காலை நான் அவசரமாக என் அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் பைக் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தேன். என் மாமா எரிமலையென உள்ளே வந்துகொண்டிருந்தார். உட்காரச் சொன்னேன். உட்காராமல் முகட்டைப் பார்த்து நின்று,

“மருமகனே, இருந்த பணம், நகை எல்லாம் அந்தப் பூசாரிப் பயலாலே போச்சு. பூஜைக்கு ஒரு லட்சத்துக்கு மேலே புடுங்கிட்டான். அவன் கணக்கில் பேங்கில் போட்ட மூணு லட்சத்தைக் கேட்க அவன் ஊருக்குப் போகப் போறேன். கொடுக்கலைன்னா அங்கேயே அவனை கண்டம் துண்டமா வெட்டிப்போட்டுட்டு வந்திடுவேன். இதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்,” சொல்லிவிட்டு படிகளில் வேகமாக இறங்கினார்.

அவசரப்பட்டு அப்படி எதையும் செஞ்சிடாதீங்க,” என்று சொல்லிக்கொண்டே அவர் பின்னால் ஓடினேன். பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார்.

மாமாவின் இந்த ஆவேசத்துக்கான காரணத்தைச் சொல்றேன். ஸ்கிப் பண்ணாம கேளுங்க.

நான்கு மாதங்களுக்கு முன் ஒரு நாள் காலை போனில் மாமா அவசரமாக வீட்டுக்கு வரச்சொன்னார். ஐந்து கி.மீ. தள்ளி இருக்கிறது அவரது கிராமம். பைக்கை முடுக்கிப் பதினைந்து நிமிடங்களில் அவரது வீட்டிற்குள் நுழைந்தேன். உள்ளே கால் வைத்ததும் டைல்ஸ் தரை ஜில்லென்று இருந்தது. அப்போதுதான் அலசிவிட்டிருப்பார்கள் போல. வீடெங்கும் சாம்பிராணி வாசனை. மாமாவும் அத்தையும் பரபரப்பாக இருந்தார்கள்.

எப்போதும் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டுடன் இருக்கும் மாமா அதிசயமாய் சட்டை போட்டிருந்தார். அது அவரது வயிற்றின் சிக்ஸ் பேக்ஸ் வரிசைகளை மறைத்து இருந்தது. விஜய் டிவி மகாபாரதம் சீரியலில் வரும் பீஷ்மரைப் போல இருப்பார். அவரது தோட்டத்தில் பத்து ஆட்கள் செய்யும் வேலையை இவர் ஒரே ஆளாகச் செய்வதால் வந்த உடற்கட்டு. நிறம் மின்னும் கருப்பு. அது உழைப்பின் பிரதிபலிப்பு. வானத்துச் சூரியனின் அன்பளிப்பு.

என் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்த மாமா, வாசலை ஒரு தரம் பார்த்துவிட்டுத் தாழ்ந்த குரலில்,

“மருமகனே, அந்த ரூமில் புதையல் இருக்குதாம். அதை எடுத்துத் தர கம்பம் புதூரிலிருந்து பூசாரி ஒருத்தர் இப்போ வந்திடுவார். புதையல் பத்தி யார்ட்டேயும் மூச்சுவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கார். நீங்க எங்க கூட இருந்தால் நல்லதுன்னு உங்களை வரச்சொன்னேன்,” எனக் கிசுகிசுத்தார்.

பரபரப்புக்கான காரணம் எனக்குப் புரிந்தது.

“பூசாரியைப் பார்ப்பதற்காக அவ்வளவு தூரம் போயிருந்தீங்களா?” கேட்டேன்.

“இல்லை. போன வாரம் நம்ம சேதுபதி வீட்டுக்கு வந்திருந்தார். என் கடைக்குட்டி மகளின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து கல்யாணம் பத்தி கேட்டேன். பார்த்துட்டு புதையலைப் பத்தி சொன்னார்,”

ஜீவா

எனக்கு அரைகுறையாக ஜாதகம் பார்க்கத் தெரியும் என்பதால், அவரது மகளின் ஜாதகத்தை எடுத்து வரச்சொன்னேன். உள்ளே சென்று ஐந்து நிமிடங்களில் ஒரு மஞ்சள் துணிப்பையுடன் வந்தார். அதிலிருந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு,

“மாமா, இந்த ஜாதகத்தை யாரிடம் காட்டினாலும் வீட்டுக்குள்ளே ஒரு மறைபொருள் இருக்குன்னுதான் சொல்வாங்க,” என்றேன்.

“எப்படி சொல்றீங்க?”

“ஜாதகம் எழுதும்போதே உடன்பிறந்தவர்கள் எத்தனை, தாய்மாமன்கள் எத்தனை பேருன்னு உங்ககிட்டே கேட்டு அவங்களுக்கு மட்டும் தெரியும் பாஷையில எழுதிடுவாங்க. புதையல் இருப்பதாகவும் குறிச்சிடுவாங்க,” என்றேன்.

“மருமகனே! டவுன்ல இருக்கும் ராகவன் டாக்டர், புதையல் எடுத்துதான் அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியைக் கட்டினாராம்,”.

“அதெல்லாம் கட்டுக்கதை. இப்போ உங்களுக்கு இந்த ஆசை ஏன் வந்துச்சு? என்ன பண நெருக்கடி, சொல்லுங்க. எங்க தாத்தா கொடுத்துட்டுப் போன அஞ்சு ஏக்கர் தோட்டம், கோடையிலும் வற்றாத கிணறு, இந்த வயசிலும் இளவட்டம் போல பாடுபடுற தெம்பு உங்களுக்கு இருக்கு. நிம்மதியா குடும்பத்தை ஓட்டுங்க,” என்றேன்.

“புதையல் எடுத்து எனக்குத் தெரிந்து நிறைய பேர் பணக்காரங்களாகி இருக்காங்களே”

“பூமிக்கடியில இருப்பதைக் காட்டும் ஸ்கேனர்கள் வந்துட்ட காலம் இது. மண்ணுக்கடியில் ஒளிஞ்சிக்கிட்டிருந்த கடவுள்களையே ஸ்கேனர் மூலம் கண்டுபிடிச்சு எடுத்து கடத்திய கும்பலை போலீஸ் பிடிச்சதை நியூஸில் காட்டினாங்களே. நல்லா யோசிச்சு இதிலே இறங்குங்க”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது வாசலில் கார் சத்தம் கேட்டது. அனைவரின் கண்களும் வாசலை நோக்கின. மாருதி ஒன்று சிவப்பு நிறத்தில் வந்து நின்றது. காவி சீருடையில், அள்ளிச் செருகிய கொண்டையுடன் பூசாரி இறங்கி வந்தார். அவரை முந்திக்கொண்டு விபூதி வாசம் உள்ளே வந்தது. மாமா ஓடிப் போய் வணங்கி வரவேற்று அழைத்து வந்தார். என்னை அறியாமலே நானும் எழுந்து நின்று வணங்கினேன்.

வீட்டை ஒரு நோட்டம் விட்டு நேராக ஈசான மூலையில் இருக்கும் அந்த ரூமுக்குப் போனார். அது அலசப்பட்டு, அங்கங்கே கொஞ்சம் ஈரமாக இருந்தது. தரையை உற்றுப் பார்த்தபோது அவரது உடல் உதறியது. ஆவிகள் ஆக்ரோசமாக இருப்பதாகக் கூறி, வீட்டுப் பெண்களை வெளியே போயிடச் சொன்னார். மண்டியிட்டு உட்கார்ந்து, வலது கை ஆள்காட்டி விரலை கொக்கி போல மடக்கி, லைட் ப்ளூ கலர் டைல்ஸ் தரையைத் தட்டித் தட்டிப் பார்த்தார். ஒரு இடத்தில் சத்தம் வித்தியாசமாகக் கேட்டது. அந்த இடத்திற்கு முன்பாகச் சம்மணமிட்டு உட்கார்ந்தார்.

அவரது கூந்தல் அவிழ்ந்து தரையைத் தொட்டது. பூசாரிகள் சடாமுடி தரித்து பயமுறுத்துவார்கள். ஆனால் இவர் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலைக்கும் தாடிக்கும் ஷாம்பு போடுவார் போல. கருப்பும் வெளுப்புமாக முடி மின்னியது. கொண்டு வந்திருந்த வாழை இலையை அந்த இடத்தில் விரித்து, பூஜைப் பொருட்களை எடுத்து வைத்தார். மந்திரங்களை முணுமுணுத்தபடி பத்தியைப் பொருத்தி, பழத்தில் குத்திவிட்டு, சின்னக் குச்சிகளை அடுக்கி, சூடங்களைக் கொட்டி யாகத் தீயை வளர்த்தார். பத்தி வாசம் வீடு முழுக்க பரவியிருந்த சாம்பிராணி வாசனையுடன் கலந்தது.

மாமாவையும் என்னையும் உடனே வெளியே போகும்படி உத்தரவிட்டார். அந்த இடத்தை மணி அடித்துக்கொண்டே மூன்று முறை சுற்றிவிட்டு, அவரும் வேகமாக வெளியே வந்து கதவைச் சாத்தினார். அடுத்த நொடி “டமால்”ன்னு சத்தம். பயந்துபோன நாங்கள் பூசாரியைப் பார்த்தோம். கழுத்தில் தொங்கிய ருத்ராட்ச மாலையைத் தடவிக்கொண்டு சிரித்தார். அவரது பற்களும் கூட காவி நிறத்தில் இருந்தன.

கதவைத் திறந்து பார்த்தபோது, யாகம் வளர்த்த இடத்தில் டைல்ஸ் இல்லை. ரூம் முழுக்க டைல்ஸ் துண்டுகள் சிதறிக் கிடந்தன. குச்சிகளும் புகைந்தபடி கிடந்தன.

“ஆவிகளோட ஆக்ரோசத்தைப் பாத்தீங்களா? முதல் தடையைப் போக்கியாச்சு. இடமும் தெரிஞ்சாச்சு. இந்த ரூமில் யாரும் நிம்மதியா தூங்கியிருக்க முடியாதே?” எனக் கேட்டார். மாமா ஆமோதித்தார்.

டைல்ஸ் வெடித்த இடத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே கொஞ்ச நேரம் நின்றார். கண்களை மூடி, தலையை மேலே உயர்த்தினார். பிறகு மெல்ல மாமா பக்கம் திரும்பி,

“இந்தப் புதையல் பற்றிப் பேச்சு எடுத்ததிலிருந்து உங்க குடும்பத்தில் ஒருத்தருக்கு உடல்நிலை பாதிச்சிருக்கணுமே?”

“ஆமா. என் கடைசிப் பொண்ணுக்கு காய்ச்சல் வந்துக்கிட்டே இருக்கு. ஊசி போட்டும் சரியாகமாட்டேங்குது,”

“இனி சரியாகிவிடும். பலமான புதையலாக இருக்கிறது. தங்கத்தில் ஒரு சாண் அளவு வேல், ஒரு பெரிய வைர நெக்லஸ், தங்க ஒட்டியாணம், சின்னக் குடம் நிறைய தங்கக் காசுகள். தோராயமாப் பாத்தாலும் இந்தப் புதையலோட மதிப்பு பல கோடியைத் தாண்டும்,” என்று சொல்லிக்கொண்டே, “முன்னாடியே இதை எடுக்க முயற்சி செய்திருக்கீங்க,” என மாமாவை ஏறிட்டுப் பார்த்தார்.

“ஆமா சாமி. வள்ளியூரிலிருந்து ஒரு பூசாரி வந்திருந்தார். அவரால முடியல. ஆனா நீங்க எடுத்துக் கொடுத்துடுவீங்கன்னு நம்புறோம்,” என்றார்.

“சரி. நான் தினமும் பூசித்து வரும் வன பத்ரகாளித்தாய் மேலே பாரத்தைப் போட்டு இந்த ஆபத்தான காரியத்தில் இறங்குறேன். அதற்கு முன்னால் என்னுடைய கண்டிஷன்களைச் சொல்லிவிடுறேன். புதையலின் மதிப்பை அதை எடுத்த பிறகுதான் சரியாகச் சொல்ல முடியும். எனக்கு நாற்பது சதவீதம் கொடுத்திடவேண்டும். புதையலை ஒரே பூஜையில் எடுக்க முடியாது. அவசரப்பட்டு கைவைத்தால் உயி்ர்ப்பலி எத்தனை ஆகும் என்று சொல்ல முடியாது. எப்படியும் நான்கு ஐந்து பூஜைகள் பண்ணி ஆவிகளைச் சாந்தப்படுத்தவேண்டும். ஒரு பூஜைக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆகும். இதுக்கெல்லாம் நீங்கள் ஒத்துக்கொண்டால் எடுத்துத் தந்துடுறேன்.”

மாமா ஒத்துக்கொண்டார்.

இரண்டு மாதங்களில் ஆறு பூஜைகள் நடந்தன. பூஜை பண்ணப் பண்ண அந்த இடம் மேடாகி வருவது போல மாமாவுக்குத் தோன்றியதால், அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. பூசாரி கொடுத்த விபூதியை பூசியதில், அவரது மகளுக்கு காய்ச்சல் வருவது நின்று போனது. ஏழாவது பூஜையின் போது குண்டத்தின் முன்னாடி உட்கார்ந்திருந்த பூசாரி, அவரோட பேங்க் அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்து, அதில் மூன்று லட்சம் போடச் சொன்னார். உடனே மாமாவைத் தனியே அழைத்துச் சென்று,

“புதையலை எடுத்துக் கொடுத்த பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லுங்க,” என்றேன்.

“பூசாரி நம்மை நம்பாமல் அட்வான்ஸ் மாதிரி கேட்கிறார். ஒரு லட்சம் பக்கம் செலவழிச்சாச்சு. பழைய பூசாரியாட்டம் இவரும் பாதியிலேயே விட்டுட்டுப் போயிடக்கூடாது, மருமகனே. பணத்தைக் கட்டிட்டு ரசீதை பத்திரமா வச்சிருப்போம்,” என்றதும் என்னால் அடுத்து பேச முடியவில்லை.

போன வருஷம் மாமாவின் அல்லக்கைகள், “உங்க நல்ல குணத்துக்கு எல்லாரும் கண்டிப்பா உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க, ஈசியா ஜெயிச்சுடலாம். நம்ம ஊருக்கு இனி நீங்கதான் நிரந்தர பிரசிடெண்ட்” என்று உசுப்பேத்தி அவரை பஞ்சாயத்து எலக்ஷனில் நிக்க வச்சிட்டாங்க. நாமினேஷன் தாக்கல் செய்த அன்றும், எலக்ஷன் அன்றும் ஏழு கிடாய்கள் வெட்டி ஜனங்களுக்கு கரி விருந்து போட்டார். தினமும் நைட் டிபன். ஒரு மாசம் முழுக்க மாமாவின் தோட்டம் ஜேஜேன்னு இருந்தது. கடைசியில் அவரது சகலை குடும்பம் ஓட்டுப் போடாததால், நாலே நாலு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். கையிருப்பும் அடுக்கி வைத்திருந்த வயக்காட்டு அரிசி மூட்டைகளும் காணாமல் போனதுதான் மிச்சம். பூசாரி கேட்ட மூன்று லட்சத்துக்கு எங்கே போவார்? அத்தையோட நகைகளை வித்தாரோ, அடகு வைத்தாரோ தெரியலே. எப்படியோ பணத்தை பேங்கில் கட்டிவிட்டார்.

மாமா விவசாயத்தை மறந்துவிட்டார். தோட்டத்துப் பக்கமே போகவில்லை. தென்னைகள் வாடின. தடாபுடான்னு செலவு செய்ய ஆரம்பித்தார். புதையலை நம்பி கடன் வாங்கவும் ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு பூஜையையும் முடித்து பூசாரி போகிறபோது தவறாமல் பத்தாயிரம், பத்தாயிரமாகக் கொடுத்தார்.

எட்டாவது பூஜை நடந்து கொண்டிருந்தது. புதையலை கட்டாயம் எடுத்திடுவார் என்கிற ஆசையில் இருந்தார் மாமா.

“ஆத்தா இன்னும் உத்தரவு தரலே. அடுத்த அம்மாவாசை ராத்திரி பன்னிரண்டு மணிக்கு புதையலை எடுத்திடலாம்,” என பூசாரி சொன்னதும், பொறுமை இழந்த மாமா பொங்கி எழுந்து பூசாரியுடன் சண்டைக்குப் போய்விட்டார். தடித்த வார்த்தைகளில் திட்டியும் விட்டார். காரணம், பண நெருக்கடி அவரது கழுத்தை நெறித்து, மூளையை மழுக்கி இருந்தது. வீட்டில் இருக்கிறதையெல்லாம் வழிச்சு எடுத்து பணத்தைக் பூசாரிக்குக் கொடுத்துவிட்டார். வீட்டுச் செலவுக்கும் பூஜைக்கும் பத்து பைசா வட்டிக்கு கடன் வாங்கியிருக்கார். எந்த வருமானமும் இல்லாமல் வட்டியை எப்படி கட்டுவார்? வட்டியைக் கட்ட வட்டிக்கு வாங்கியிருக்கார். கடைசியில் அத்தை, பிள்ளைகள் எல்லாம் இவரிடம் சண்டை போட, மனுஷன் பைத்தியக்காரனாட்டம் தூக்கம் இல்லாமல் திரிய ஆரம்பித்துவிட்டார்.

எட்டாவது பூஜையை பாதியிலேயே நிறுத்திவிட்டு போன பூசாரி, இரண்டு மாதங்களாக வரவே இல்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் "இந்த எண் உபயோகத்தில் இல்லை" என்று வந்தது. கம்பத்துக்கு போய் அவரை வெட்டிக் கொல்லப் போறதா கத்திட்டுப் போனாரே மாமா. சொன்னபடி செய்யக்கூடிய ஆள்தான். அதனால் அவர் கம்பத்துக்கு போவதற்கு முன்னே நான் போய் பூசாரியைப் பார்த்திட நினைத்திருந்தேன். ஆபிஸில் லீவு கிடைக்காததால், நான்கு நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமைதான் கிளம்ப முடிந்தது.

அதிகாலையிலே ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன். பூசாரி ஊரில இருப்பாரான்னு, கிளம்பி வந்த பிறகு சந்தேகம் எழுந்தது. போன் போட்டேன். வழக்கம் போல ‘உபயோகத்தில் இல்லை ‘ என்று வந்தது. மாமாவின் இந்த நிலைக்கு நானும் ஒரு வகையில் காரணம்ம்தான். ஆரம்பத்திலேயே தடுத்திருக்கணும். தவறிட்டேன். சீக்கிரம் பிரச்சினையை முடிக்கணும். பஸ்ஸில் ஏறினேன். மூன்று மணி நேரப் பயணத்தில் தேனி வந்தது. அடுத்து கம்பம் போகும்போது ரோட்டுக்கு இரண்டு பக்கமும் பச்சை பசேல்னு நெல் வாழை, கால்வாய் நிறைய தண்ணீர் தெரிந்தது. ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே போனேன்.

பூசாரியின் கம்பம் புதூர் வந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது ஒரே போலீஸ் தலைகளாகத் தெரிந்தன. ஆள் நடமாட்டமே இல்லை. ரோட்டோரம் இருந்த இரண்டு குடிசை டீக்கடைகளும் பூட்டியிருந்தன. சாதிக் கலவரம் போலத் தெரிந்தது. பஸ்ஸில் என்னுடன் இறங்கியவர்களும் என்னைப் போலவே ஒன்றும் புரியாமல் நின்றார்கள். அதில் ஒருவர் சற்று தள்ளி வந்துகொண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டு விசாரித்தார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன்.

“சொக்கலிங்கம் பூசாரியை எவனோ நேத்து நைட்டு கொத்து புரோட்டாவாட்டம் கொத்திப் போட்டுட்டுப் போயிட்டான். அதான் போலீஸ் நாய் வந்திருக்கு. நேரே வீட்டுக்கு போயிடுங்க,” என எச்சரித்துவிட்டு வேகமாக நடையைக் கட்டினார்.

உடனே மாமாவைப் போனில் அழைத்தேன். எடுக்கவில்லை.

‘அவசரப்பட்டுட்டாரே, போலீஸ் சும்மா விடுமா, பணமும் போய் ஆயுசுக்கும் கம்பி எண்ணப் போறாரே, தோட்டத்தில் பதுங்கியிருப்பாரா’ இந்த சிந்தனையிலேயே பஸ் ஏறினேன். ஊர் எப்போ வரும்னு மனம் தவித்தது. நாகர்கோவில் பஸ் நல்ல வேகம். மணி மூன்றைத் தொடும்போது ராஜபாளையம் வந்துவிட்டேன்.

டூவீலர் ஸ்டேண்டில் போட்டிருந்த பைக்கை எடுத்துக்கொண்டு நேராக மாமா ஊருக்கு விரைந்தேன். மாமா வீட்டின் முன்னாடி பைக்கை நிறுத்துவதற்குள், சத்தம் கேட்டு வெளியே வந்தது அத்தை. பாவம்… அதோட கழுத்திலும் காதிலும் எதுவும் இல்லை. மாமாவின் கம்பீரத்தில் முக்கால்வாசி அத்தையிடமும் இருக்கும். இப்போது அதுவும் இல்லை. மாமா மேலே இருந்த என் கோபம் அதிகமானது.

“மாமா இருக்காரா, அத்தே?” கேட்டேன்.

“உங்க மாமா முகத்தைப் பார்த்து வாரக்கணக்கில் ஆகுது. வீட்டுக்கு வர்றதே இல்ல. தோட்டத்தில்தான் இருப்பு,” என்றது சலிப்போடு.

கியரைப் போட்டு பைக்கைக் கிளப்பினேன். வடக்கே இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்து பம்ப்செட் ரூமுக்கு எதிரே நிறுத்தினேன். ரூம் பூட்டியிருந்தது. அவரது பைக் இல்லை. அவருக்குத் திரும்ப போன் போட்டேன். எடுக்கவில்லை. விரக்தியுடன் திரும்பியபோது, பக்கத்துத் தோட்டத்தில் ஒருவர் வரப்பு வெட்டிக்கொண்டிருந்தார். அவரிடம் ஓடி மாமாவை விசாரித்தேன்.

“காலையிலிருந்து அவரைப் பார்க்கல. ஆனால் நேத்து மதியம் பக்கத்துத் தோட்டத்து நாயக்கருடன் பேசிக்கிட்டு இருந்தார். தேனி, கம்பம்ன்னு அவங்க பேசிக்கொண்டது லேசா கேட்டது தம்பி.,” என்றார்.

இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்விட்டது. தோட்டத்தில் மாமா இல்லை, ஸ்டேஷன் போய் பார்க்க நினைத்து பைக்கை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த என் செல்போன் அதிர்ந்தது. போனின் திரையைப் பார்த்தேன். “மாமா” என்று காட்டியது.

“உங்களை எத்தனை தடவை கூப்பிட்டுருக்கேன்! ஏன் எடுக்கலே?” கோபத்தில் கத்தினேன்.

“பஸ்ஸில் பாட்டு சத்தம். சரியாகக் கேட்கல. இறங்கினதும் கூப்பிட்டேன்.

“எங்கே இருக்கீங்க?” மீண்டும் கத்தினேன்.

அவரது பதிலைக் கேட்டதும் என் செல்போன் நழுவியது. விழாமல் பிடித்துக்கொண்டேன். இருதயத் துடிப்பு உச்சம் தொட்டது. பசி பறந்துவிட்டது.

“ஹலோ… ஹலோ…” என்றார். என்னால் பேச முடியவில்லை. முகத்தைத் துடைத்துவிட்டு,

“தேனியா! அங்கே எதுக்கு போனீங்க?”.

“மிளகாய் நாத்து வாங்க வந்தேன், மருமகனே.”

“யாருக்கு வாங்கப் போயிருக்கீங்க?”

“எனக்குத்தான். மிளகாயும் வெங்காயமும் போட ஒரு வாரமா ஒத்தையிலேயே தோட்டத்திலே பாத்திகள ரெடி பண்ணிட்டேன். மிளகாய் கிலோ நூறு ரூபாய்க்கு போகுது. தினம் பத்தாயிரம் கிடைக்கும். மேட்டுப் புஞ்சையில் குதிரவாலியை விதைச்சுட்டா உரம் போட வேண்டாம். மருந்து அடிக்க வேண்டாம். ஒரே ஒரு களை எடுத்தால் போதும். விளைஞ்சதும் மெஷின் வந்து அறுத்துக் கொடுத்துடும். காஞ்சும் காயாததுமா களத்துக்கே வந்து வியாபாரிகள் கிலோ ஐம்பதுனு எடுத்துட்டுப் போயிடுவாங்க. கடனை அடச்சுப் போடலாம், மருமகனே.”

“சந்தோஷம் மாமா. இந்த ஐடியா எப்படி வந்தது?”

“பக்கத்துத் தோட்டத்து சுப்பையா நாயக்கர்தான் சொன்னார். சின்னப் பிள்ளைகள் வச்சிருக்கும் பலூன் வெயிலில் வெடிப்பது போல அந்த டைல்ஸுக்கு அடியில் இருந்த காத்து விரிவடைஞ்சு வெடிச்சிருக்கு. பூசாரியை வெட்டிப் போட்டால் பிரச்சின தீராதுனு புத்திமதி சொன்னார். கடைக்குட்டி பிள்ளையை எவன் பொண்ணு கேட்டு வருவான்னு நினைச்சேன். மனசு மாறிட்டேன். அவரும் நானும் தான் தேனி வந்திருக்கோம். சரி மருமகனே, கம்பம் பக்கத்தில்தானே இருக்கு. போய் அந்தப் பூசாரியைப் பார்த்துட்டு வரட்டுமா?” என மாமா கேட்டதும்

“வேண்டாம்… வேண்டாம் மாமா. ஊருக்கு வாங்க. நேரிலே பேசிக்கலாம்,” சொல்லிவிட்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினேன். மாமா தன்னையும் மண்ணையும் நம்பி விவசாயத்தில் இறங்கியதால், விழுந்தவர் எழுந்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இயற்கையும் வியாபாரிகளும் மாமாவுக்கு கை கொடுக்கணும்.

பேங்க் ரசீது சாட்சி சொல்ல, சாம பேத தான தண்ட முறைகளைப் பயன்படுத்தி பூசாரியின் வாரிசுகளிடமிருந்து மூன்று லட்சத்தை வாங்கி மாமாவுக்குக் கொடுத்துவிட்டேன். பூஜைக்குச் செலவழித்த தொகையை வாங்க முடியவில்லை. விபத்தில் கை முழுசா தப்பிய சந்தோசத்தில் ஒரு விரல் போனதை மறந்துவிடுவார்கள். இதுதான் பூசாரி கையாளும் யுத்தி என்பது புரிந்தது.

கதையை ஸ்கிப் பண்ணாமல் கேட்டதற்கு நன்றி. வணக்கம்.

ஆர்.எம்.வைரமுத்து அரசுப் பணியில் இருக்கிறார். நேரம் கிடைக்கும்போது எழுதி வருவதாகக் கூறுகிறார். பிடித்த பாடமான வரலாறு பயின்று பட்டம் பெற்றுள்ளார். தற்போது குடும்பத்துடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com