சலன பொம்மைகள்

மூன்றாம் பரிசு ரூ. 5000 பெறும் கதை-1
சலன பொம்மைகள்
பி.ஆர்.ராஜன்
Published on

சர்மினார் எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன் வந்தடைய இன்னும் நிறைய நேரமிருந்தது. ஆனாலும் அருண் அடிக்கடி மணி பார்த்துக்கொண்டே இருந்தான். இன்று இரயில் நிலையத்தில் அவ்வளவாக கூட்டமில்லை.

வார இறுதி நாட்களாக இருந்திருந்தால் நிலைமை வேறு. இப்போது பெரும்பாலானோர் பயணியர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். வந்து நிற்கும் இரயிலில் ஏற அங்குமிங்கும் லக்கேஜ்களோடு அலைபவர்கள் குழந்தைகளை உடன் இழுத்துக்கொண்டு ஓடுவதை வேடிக்கை பார்ப்பது பிடித்திருந்தது. கொசுக்கடி போக்கும் மின்விசிறிக் காற்று வரத் தோதான இருக்கையாகப் பார்த்து அவன் அமர்ந்துகொண்டு மீண்டும் மணி பார்த்தான். இன்னும் பதினைந்து நிமிடம். வாசுகியின் முகத்தை நினைத்துப் பார்த்தான். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது கொஞ்சம் மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

வாசுகி. அவன் அப்பாவின் இரண்டாவது மனைவி. ஆனால் இப்போது அவனிருக்கும் சூழ்நிலையில் சித்தி என வாய் நிறைய அழைக்கவேண்டுமென விரும்பினான். அவள் புதிதாக பார்க்காமலிருந்தால் அம்மா என்று கூட அழைக்கலாம் தான். தன்னுடனான சந்திப்பை என்ன மாதிரியாக எடுத்துக் கொள்வாளென படபடப்பாக இருந்தது. போன் ஒலித்து ஓய்ந்தது தெரிந்து எடுத்துப் பார்த்தான். அம்மா அழைத்திருக்கிறாள். அம்மாவுக்கு வாசுகியை அவன் சந்திப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. பதினெட்டு வருடங்களுக்கு முன்பிருந்த அதே அம்மா இப்போது படுத்த படுக்கையானாலும் அவள் விஷயத்தில் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்.

'என்னோட வாழ்க்கைய பங்கு போட்டவ கூட எப்படி ஒட்ட முடியும்? எப்படி மனசு வந்து கூசாம பேச முடியும்? முடிஞ்சுப்போன கதைய நீயும் உன் மாமனும் எதுக்கு திரும்பவும் கிளறுறீங்கனு தெரியல' என்று முந்தாநாள் கூட சலித்துக் கொண்டாள்.

அம்மாவின் நிலையில் நின்று ஒரு காலத்தில் வாசுகியை எதிர்த்த பிரகாசம் மாமா இப்போது நிறைய மாறிவிட்டிருந்தார். பட்டன் போனை தூக்கியெறிந்துவிட்டு தொடுதிரையைத் தடவி அமெரிக்காவிலிருக்கும் மகனோடு அடிக்கடி வீடியோ கால் பேசும் மாமா நிறைய மாறிவிட்டதில் ஆச்சரியமில்லை.

சொத்துக்காக வாசுகி கிராமத்து வீட்டை பங்கு கேட்டு வந்து நின்றபோது தென்னை மட்டையை எடுத்துக்கொண்டு இந்த மாமாவா அடிக்க வந்தார் என இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

அருண் தனக்கு வேலை கிடைத்தபிறகு அந்த கிராமத்து வீட்டை விற்றுவிட்டு நகரம் வந்து செட்டில் ஆனபிறகும் அப்பாவின் கடைசிச் சொற்களை பிடிவாதமாய் பற்றிக்கொண்டு இருந்தான். ஆனால் உண்மையில் அச்சொற்கள் தான் அவனைப் பிடித்துக்கொண்டு நகர விடாமல் தொந்தரவு செய்தன. சிறந்த நிறுவனத்தில் பணி கிடைத்து லட்சங்களில் ஊதியம் பெறும் போதும் நித்திலாவை விரும்பி அது திருமணம் முடிவானது வரை வந்தபோதிலும் கூட ஏதோவொன்று குறைவது போலத் தோன்றியது. முதன்முறையாக நித்திலாவின் வீட்டுக்கு அவளது அப்பாவை சந்திக்கச் சென்றான். அவர்களுடையது பெரிய குடும்பம். கூடி நிற்பவர்களை இன்ன உறவுகள் என அவர்கள் விளக்கி முடிக்கவே அதிக நேரமான போது தனக்கு அம்மா மட்டுமே இருக்கிறாள் என்பதை அவன் சொன்னான். அதன்பிறகு அவர்கள் வீசிய பரிதாபப் பார்வை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இதேபோன்று ஒருமுறை பழைய கிராமத்து விசேஷத்துக்குப் போயிருந்தபோது காதுபடவே யாரோ ஒரு உறவுக்காரன் அவனைக் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தான்.

பி.ஆர்.ராஜன்

'என்னதான் லட்சத்துல சம்பளம் வாங்கட்டுமே.‌. அவனுக்குன்னு யாருமே இல்லங்குறது தானே உண்மை?பொண்ணு வீட்டுக்காரன் இதையும் தானே யோசிப்பான்'

அவன் சரியாக அந்த சொற்கள் காதில் விழும்போது பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதற்கு மேல் உணவைப் பிசைய கைவரவில்லை. அன்றிலிருந்து தான் வாசுகியின் ஞாபகம் அதிகம் வர ஆரம்பித்தது.

'அவ பாவம்டா பிரகாசம்‌. அவளுக்கு நான் ஒண்ணுமே செய்யல. நான் போய்ட்டாலும் அவளுக்கு செய்ய வேண்டியத செஞ்சிடுங்கப்பா. மனசு உறுத்தலாவே இருக்கு'

என மாமாவிடம் புலம்பிய அப்பாவின் கடைசி வார்த்தைகள் இப்போதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வருகின்றன.

உண்மையில் சொத்தின் மீது பங்கு கேட்டு முதன்முறையாக வாசுகி வந்தபோது கிராமமே அரண்டுப்போனது.

அப்பா தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்து சென்றபோது அங்கே தான் வாசுகியோடு தொடர்பு ஏற்பட்டதென ஊரார் பேசிக்கொண்டார்கள். நாளடைவில் இவர்கள் பழக்கம் அம்மாவுக்குத் தெரிந்து விஷம் குடித்தபோதுதான் அப்பா முற்றிலுமாக வாசுகியை கைவிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். அதன்பிறகு தன்னை கைவிட்ட கோபத்தில் வாசுகி தன் சொந்தக்காரர்களொடு வாடகை கார் எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்ததாக அம்மா அடிக்கடி அவனிடம் சொல்லிப் புலம்புவாள். அப்படி பிரச்னைக்கு வரும்போதெல்லாம் தன் அக்காவுக்குத் துணையாக பிரகாசம் மாமா வந்து நிற்பதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் அருண் பள்ளி முடிந்துத் திரும்பும்போது கவலையோடு பார்த்தபடி நிற்பான். அப்போது அவனுக்கு பத்து வயதுதானிருக்கும்.

அம்மா அடிக்கடி 'கார் வருதுடா அருண்.. கார்ல அந்த டவுன்காரி வர்றா.. உன்னை என்னைலாம் பிடிச்சிட்டு போய்டுவா..' என சிறுவயதிலேயே அவனை வாசுகி மீதான வெறுப்புக்கு தயார் படுத்தித் வைத்திருந்தாள்.

ஒருமுறை வீட்டில் யாரும் இல்லாத போது அப்பாவின் பழைய குவாட்டர் பாட்டில்களை பொறுக்கி வைத்து ஐஸ்வண்டிக்காரனுக்கு அவன் காத்திருந்த நேரம் அதேபோல் வாடகைக்கார் வந்து நின்றது. அதிலிருந்து வாசுகியும் இன்னபிற ஆட்களும் இறங்கியது தான் அவன் அவளை அவ்வளவு நெருக்கத்தில் முதன்முறையாகப் பார்த்தது.

'டேய் பையா இங்க வாடா.. ' என கைநீட்டி அவள் அழைக்கவும் ஐஸ்வண்டிக்காரன் வரவும் சரியாக இருந்தது.

'உங்கப்பா காட்டுல தானே இருப்பாரு? போய் கூட்டிட்டு வா' என்ற அவள் பேச்சுக்கு அவன் ஏனோ அப்படியே கட்டுண்டுப் போனான்.

கையிலிருந்த குவாட்டர் பாட்டில்களோடு கடந்துபோகும் ஐஸ் பெட்டியை அவன் ஏக்கத்தோடு பார்த்து நின்றதைக் கண்டு 'டேய் ஓடிப்போய் கூட்டிட்டு வர்றியா இல்லையா?' என வாசுகி அதட்ட அவனுக்கு மூத்திரம் வருவது போலானது. அங்கேயே ட்ரவுசர் நனைவதைப் பார்த்தவள் சட்டென அருகில் ஓடிவந்தாள். 'அடப்பாவமே..

இதுக்கே பயந்துட்டா எப்படி?' எனக் கேட்டபடி அவன் கன்னத்தைக் கிள்ளி கையில் இருபது ரூபாயைத் திணித்தாள். அவ்வளவு பெரிய தொகையை அம்மா பக்கத்து வீட்டு அக்காவிடம் கடன் வாங்கும்போது பார்த்திருக்கிறான். மகிழ்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு அப்பாவைக் கூட்டிவர ஓடினான்.

ஆனால் திரும்பிவந்தபோது அம்மாவும் பிரகாசம் மாமாவும் தன் சொந்தங்களோடு சேர்த்து அவளோடு மோதிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெலவெலத்துப் போனான். அவளிடம் தான் பணம் வாங்கியது அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நடக்குமென யோசித்துப் பார்த்தான். அந்த பயத்திலேயே இருபது ரூபாயை மாட்டுக் கொட்டகையின் செம்மண்சுவர் விரிசலில் செருகியவன் அதன்பிறகு மறந்தும்போனான். பிறகு ஒருநாள் ஞாபகம் வந்து ஓடிப்பார்த்தபோது அந்த இருபது ரூபாய் நோட்டை கரையான் அரித்திருந்தது. இப்படி பால்யத்தின் மீது அச்சேறிய வாசுகியின் ஞாபகங்கள் அவள் நல்லவளா கெட்டவளா என்ற குழப்பத்தில் அவனை நிறுத்தியிருந்தன. நல்லவளாக இருந்தால் ஏன் வாடகைகாரில் ரௌடிகளை அழைத்துக்கொண்டு வருகிறாள். கெட்டவளாக இருந்தால் ஏன் இருபது ரூபாயை தன்னிடம் சாதாரணமாகக் கொடுக்கிறாள் போன்ற கேள்விகளுக்கு அவனிடம் அப்போது பதிலில்லை.

வாசுகி தொடர்ந்து போராடியபோதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோதும் தீர்ப்பு அவளுக்கு சாதகமாக அமையவில்லை. கிராமத்தில் கூட்டிய பஞ்சாயத்தில் ஒன்றிரண்டு பேர் அவள் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டனர்.

'அந்தப் பொண்ணும் கார் வச்சிட்டு வருது போகுது. உரிமையில்லாமலா இவ்வளவு கஷ்டப்படுது? சொத்து எழுதலனாலும் ஏதாச்சும் குடுத்து கழிச்சி விடுங்கப்பா..' என ஊர் கரைக்காரர் பேச அறுபதாயிரம் தருவதாகப் பேசி முடிவுக்கு வந்தார்கள். இருபது வருடங்களுக்கு முந்தைய அறுபதாயிரம் அவளுக்குக் கிடைத்திருந்தால் அது கணிசமானது. ஆனாலும் அந்தத் தொகையை தருவதற்கு முன்பே அப்பா இறந்து போனார்.

அப்பா இறந்த தினத்தன்று நீண்ட யோசனைக்குப் பிறகு வாசுகிக்கு செய்தி சொன்னார்கள். முதன்முறையாக வாடகை கார் இல்லாமல் பேருந்தில் வந்திறங்கி ஓடிவந்த வாசுகியை ஊரே விநோதமாகப் பார்த்தது. அப்பா இருந்தவரை கைவிடமாட்டாரென காருக்கு செலவு செய்தவள் அவர் சென்ற மறுநொடியிலேயே நிராயுதபாணியாக மாறிவிட்டிருந்தாள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

அப்பாவைக் குளிப்பாட்டும் சடங்கில் அம்மாவை வளையல்கள், புதிதாக மஞ்சள் பூசிய தாலிச்சரடோடு அமர வைத்து அவளுக்கு தண்ணீர் ஊற்றி கடைசி மங்களப்புடவையை சாத்தினார்கள். அதுவரை மூலையில் அமைதியாக நின்றிருந்த வாசுகி 'எனக்கு புடவை இல்லையா? ஏ... சாமி.. எனக்கு யாரும் புடவை சாத்த மாட்டீங்களா? ' என ஊர்க்காரர்களைப் பார்த்து அழுது கதறுவதை அருண் கலயத்தை தோளில் சுமந்தபடி பார்த்திருந்தான்.

மாமா யாரிடமோ 'இவளை முதல்ல பந்தலுக்குள்ள விட்டதே தப்பு ' என முனக யாரோ வந்து சமாதானம் செய்தார்கள். அப்பாவை பாடை மாற்றி தூக்கிச் செல்லும்வரை விசும்பிக் கொண்டே பின்னால் வந்தவள் அதன்பிறகு காணாமல் போயிருந்தாள். அதன்பிறகு எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாளென யாருக்கும் தெரியவில்லை. தருவதாகச் சொன்ன தொகையை கேட்டு வராததன் நிம்மதியோடு அவளைப் பற்றி தெரிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டவுமில்லை. இப்போது அருண் அடிக்கடி தனக்கும் வாசுகிக்கும் இடையில் என்ன மிச்சமிருக்கிறது என யோசித்துப் பார்த்தான். அப்பா கடைசியாக தரச் சொன்ன தொகையைத் தவிர வேறெதுவும் இருப்பதாகப் படவில்லை. அதைப்பற்றி பிரகாசம் மாமாவிடம் பேசினான்.

'ஆமாம்டா.. அது ஒரு சாபம் மாதிரி தொடர்ந்து வருதுன்னு எனக்கும் யோசனையா இருக்கு. உன் அப்பா இறந்தது உன் அம்மாவுக்கு உடம்பு முடியாம போனதுலாம் உறுத்தலா இருக்கு. என்ன இருந்தாலும் ஒரு காலத்துல உன் அப்பாவோட வாழ்ந்தவ.. பேசாம அவள தேடிப் பிடிச்சு ஒரு தொகைய குடுத்துடு' என்றார். அவனுக்கும் அது சரியெனப் பட்டதில் அப்போதைய அறுபதாயிரத்துக்கு மாற்றாக இப்போது நான்கு லட்சரூபாயை தயார் செய்துகொண்டு நித்திலாவிடம் சொன்னான். அவளும் அதை சரியான முடிவென்று சொன்னாள். ஆனால் அம்மாவுக்கு மட்டும் வழக்கம்போல பிடிக்கவில்லை. ஆனால் தரக்கூடாதென அவள் அவனை வற்புறுத்தவும் இல்லை.

நெடுநாளைக்குப் பிறகு யார் யாரையோ பிடித்து வாசுகி ஹைதராபாத்தில் ஒரு தொழிலதிபர் வீட்டில் வேலை செய்வதை தெரிந்து கொண்டான். அவளது தொடர்பு எண்ணை தன் போனில் உள்ளிடும் போது விரல்கள் நடுங்குவதை கவனித்தான். அருண் தானென அறிந்ததும் அவள் எந்தச் சலனமுமின்றி "தெரியுதுப்பா சொல்லு என்ன விஷயம்?" என்றாள்.

எடுத்தவுடன் பணத்தைப் பற்றிப் பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

'தெரிஞ்சவர் மூலமா உங்க நெம்பர் கிடைச்சது. அதான் போன் பண்ணேன்' என எதேச்சையாக காட்டிக் கொண்டான். அவளே அம்மாவைப் பற்றிக் கேட்டது மனதுக்கு இதமாக இருந்தது. தொடர்ந்து பேசுவதற்கும் ஒரு பிடிமானம் கிடைத்த மகிழ்ச்சி.

'கொஞ்சம் முடியாம தான் இருக்காங்க.' எனச் சொன்னதும் அவளே பார்க்க வருவதாகக் கூறினாள். அவள் வந்ததும் கொஞ்சம் பேச வேண்டும். கொஞ்சமல்ல நிறைய. பிறகு தன் கையிலிருக்கும் பணத்தை அப்பா படத்தின் முன் வைத்துத் தரவேண்டும் என நினைத்துக்கொண்டான்.

சார்மினார் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருப்பதாக அறிவிப்பு வந்ததும் அருணிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசியாக அப்பாவின் இறப்பில் பார்த்த முகம் ஞாபகம் வந்தது. இறுதிச்சடங்கு முடிந்து அவள் திரும்ப எப்படி ஊர் போய் சேர்ந்தாளென கேட்க வேண்டுமென அருண் நினைத்துக்கொண்டான். பிறகு அதிலிருந்த அபத்தத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். இனிமேல் கேட்டு என்ன ஆகப்போகிறது?

ரயில் வந்து நின்றதும் வாசுகியை கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இல்லை. போனில் அழைத்து அடையாளம் கண்டுகொண்டான். வாசுகி அவன் மனதிலிருந்த பிம்பத்தை அசைத்து நிறைய மாறியிருந்தாள்.

‘வாங்க சித்தி..'

அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

‘நீ நல்ல உயரம் அருண்.. உங்கப்பா மாதிரி '

இருவரும் காரில் பயணிக்கும்போது நிறைய பேசிக்கொண்டே வந்தாள். அவனது பணி பற்றியும் வீடு பற்றியும் கேட்டுக்கொண்டே வந்தவள் நித்திலாவைப் பற்றிச் சொன்னபோது மகிழ்ச்சியடைந்தாள்.

‘அவங்க எவ்வளவு பெரிய குடும்பமா இருந்தா நமக்கென்ன அருண்? நீ நித்திலா கூடத் தானே வாழப் போற? நம்ம சைடு யாருமில்லனு கவலப்படாத. அதான் நான் வந்துட்டேன்ல..' என அவள் சொன்னபோது அவனுக்குத் தெம்பாக இருந்தது. இவ்வளவு நாள் தொடர்பில் இல்லாமல் இருந்ததை நினைத்து வருந்தினான். தான் இருப்பதை எதன் மீதாவது மோதித்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது வெளிச்சத்துக்கு என்பதை நினைத்துக் கொண்டான். அப்படியான தன் வாழ்வில் வாசுகியின் வருகை புத்துணர்வாகத் தோன்றியதில் பணம் கொடுக்க அவனுக்கு கைவரவில்லை. திரும்பவும் இரயிலேற்றி விடும்போது கொடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தான்.

அவன் யோசனையைக் கலைத்து அடுத்த கேள்வியை வாசுகி கேட்டாள்.

'இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கணும். சின்ன வயசுல நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கானு தெரியல. நான் குடுத்த இருபது ரூபாய செம்மண் சுவருல ஒளிச்சு வச்சியே.. திரும்ப அதை எடுத்தியா இல்லையா?'

அருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு களேபரத்துக்கு நடுவிலும் தான் பணத்தை ஒளித்து வைத்ததை பார்த்திருந்து அதை நினைவில் வைத்துக் கேட்கும் வாசுகியின் மீதான அன்பு அவனுக்கு இன்னும் அதிகரித்தது.

‘அது கரையான் அரிச்சிடுச்சு சித்தி. அந்த வயசுல எங்க ஒளிச்சு வைக்கணும்னு கூட தெரியல பாருங்க' எனச் சிரித்தான்.

‘அதெல்லாம் இல்ல. உங்கம்மா என்னைப் போட்டு பொளந்தத பாத்து உனக்கு ஒண்ணும் புரியல. அவசரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அங்க போய் மறைச்சத பாத்து எனக்கு உன்மேல பாவமா இருந்துச்சு'

அருண் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

‘உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அருண். நான் உனக்கு சித்தி இல்ல. பெரியம்மா'

அருண் புரியாமல் பார்த்ததை கவனித்தவள் காருக்கு வெளியே பார்த்தபடி சொன்னாள்.

‘என்னை தான் உங்கப்பா மொதல்ல கல்யாணம் பண்ணாரு. அதுவும் ரெஜிஸ்டர் மேரேஜ்'

அவன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

‘நான் சொல்றத கேட்டு உனக்கு கோபம் கூட வரும். ஆனா நியாயப்படி பாத்தா உங்கம்மா இடத்துல நான்தான் இருந்திருக்கணும். ஆனா எல்லாம் தலைகீழா மாறிடுச்சு அருண். ஏன் தெரியுமா? நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவனு தெரிஞ்சு தான் உங்கப்பா என்னை லவ் பண்ணாரு. எங்களுக்குள்ள அவ்வளவு அந்நியோன்யம் இருந்தது. முழுசா மூணு வருசம். குழந்தைங்க இல்லையே தவிர எங்களுக்குள்ள இருந்தது அழகான வாழ்க்கை. ஆனா நான் ஏற்கனவே கல்யாணமாகி பிரிஞ்சி வந்தவங்குற அந்த ஒரே விஷயத்தை வச்சி உங்கப்பாவ என்கிட்டே இருந்து கழிச்சிட்டாங்க.இதெல்லாம் ஏன் உன்கிட்ட சொல்றேன்? உங்கம்மா சின்னவயசுல இருந்து உன்கிட்ட சொன்ன வாசுகியும் உண்மையான வாசுகியும் வேற வேறன்னு உனக்கு காட்டத்தான்'

அருண் அம்மா தன்னிடம் சொன்னவற்றை நினைத்துப் பார்த்தான். நிறைய பொய்களைக் கொண்டு உண்மையின் பழுது தெரியாமல் பூசி வனைந்த பொம்மையை தன் கையில் விளையாடத் தந்திருக்கிறாள். பேசிக்கொண்டே அவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.

உள்ளறைக்குச் சென்றதுமே நேராக படுக்கையை எட்டியவள் அம்மாவின் கைகளை முன்பு எதுவுமே நடக்காதது போல இறுகப் பற்றினாள். ஒரு நீண்ட அமைதி அங்கு பரவியதை அவனால் உணர முடிந்தது. அந்த ஒற்றைக் கஷாயத் தீண்டலில் மொத்த நெஞ்சின் காழ்ப்பும் கரைந்தது போல அம்மா அமர்ந்திருந்தாள். அதன்பிறகு அம்மா வாசுகியிடம் தன்னை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசியது வியப்பாக இருந்தது. இதற்கு முன் அவளை சந்திக்கவே கூடாதென முரண்டு பிடித்தவள் இப்போது மாறியிருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சாரலுக்கு பயந்து ஒதுங்கும் குழந்தை அடைமழை பழகியதும் சகஜமாக நனையத் தொடங்கிவிடுவதைப் போல அவள் வாசுகியுடன் பேசிக் கொண்டிருந்தாள். பொதுவாக யார் வந்தாலும் படுத்தே கிடப்பவள் இப்போது எழுந்தும் அமர்ந்திருந்தாள். இருவரும் ஒரே கட்டிலில் உட்கார்ந்துப் பேசுவதை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

காலையில் எழுந்து பார்த்தபோது அவள் அம்மாவுக்கு சுக்குநீர் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு காபி தயாராக இருந்தது. அம்மாவை பார்த்துக் கொள்ளும் நர்ஸ் வர இன்னும் நேரமிருந்தது. அதற்குள் வாசுகியே அம்மாவை ஓரளவு தயார்படுத்தி இருந்தது அவனுக்கு சங்கடமாக இருந்தது.

அம்மா ‘நானும் வேணாம்னு தான் சொன்னேன். கேட்கவேயில்லடா..' என நெடுநாளைக்குப் பிறகு கண்ணாடி பார்த்துக்கொண்டே வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

‘இதுல என்ன இருக்கு? நான் தினமும் வேலைக்கு போற இடத்துல இதேதான் செய்றேன்' என அவளும் குளித்து முடித்து புறப்பட்டிருந்தாள்.

அம்மா அவளறியாமல் சைகையிலேயே பணத்தை தந்துவிட்டாயாவெனக் கேட்டாள். இல்லையென தலையசைத்து மறுத்தான்.

‘எனக்கு லீவ் இல்ல. இப்ப கொஞ்சம் மிச்சம் பண்ணாதான் அருண் கல்யாணத்துக்கு பத்துநாள் முன்னாடி வரமுடியும்.. ஒண்ணும் கவலப்பட வேணாம். எல்லா கல்யாண வேலையும் நான் பாத்துக்குறேன்' என சொல்லிக்கொண்டே அவள் வெளியே வரும்போது கூடவே இருந்துவிடச் சொல்லலாமாவெனத் துடித்தான். திடீரென கேட்க கூச்சம் தடுத்தது.

செல்லும் வழியில் நித்திலாவின் வீட்டுக்கு அவர்கள் போனார்கள். காரின் பின்னிருக்கையில் இருந்து இறங்கும்போது அவள் பழைய வாசுகியை நினைவூட்டினாள். தனது பெரியம்மா என அவளை அறிமுகம் செய்து வைத்தபோது கம்பீரமாக உணர்ந்தவன் புது இடம் பற்றிய தயக்கமேதுமின்றி நித்திலாவின் குடும்பத்தாரிடம் அவள் உரிமையோடு பேசியதை இரசித்தான்.

விடைபெற்று வரும்போது நித்திலாவிடம் தன்னைத் தனியாக அவன் அறிமுகப்படுத்தியதில் வாசுகிக்கு அத்தனை சந்தோஷம். திரும்ப இரயில் நிலையம் வரும்போது வழியில் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்தினார்கள்.

‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அருண். நீ சென்னைக்கு வந்தது. வேலை கிடைச்சு நல்லபடியா செட்டில் ஆனது எல்லாமே எனக்கு யாராவது சொல்லுவாங்க. அப்பலாம் மனசுக்கு நிம்மதியா இருக்கும். முன்னாடியே எனக்கு உன்னோட போன் நெம்பர் கூட தெரியும். தெரியுமா?’ எனச் சிரித்தாள்.

‘சத்தியமா சொல்றேன் அருண். நீ போன் பண்ணதும் நான் என்ன நினைச்சேன் தெரியுமா? பையன் நல்லா வசதியாகிட்டான். சரி பழைய கணக்கா நினைச்சு நமக்கு ஏதாவது பணம் தந்து கழிச்சி விடத்தான் கூப்பிடுறான்னு நினைச்சுட்டேன்'

அவனுக்கு உள்ளுக்குள் எதுவோ அறுந்தது. அவசரமாக,‘ச்சே ச்சே அப்படிலாம் ஒண்ணுமில்ல பெரியம்மா' என மறுத்தான்.

‘என்னை அம்மானு கூப்பிட்டா இன்னும் உங்கம்மா திட்டுவான்னு நினைக்கிறியா..?'

அதற்கும் அவனிடம் பதிலில்லை. கை வைத்து அள்ளாத வரை நீர் கலங்காமல் தானே இருக்கிறது. முகத்தை எதுவெதுவோ செய்து சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவளை இரயிலேற்றி விட்டான். போனை எடுத்து அவள் எண்ணுக்குள் நுழைந்து வாசுகி அருகில் அம்மா என இட்டான்.

ந.சிவநேசன், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர். விவசாயத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம். தெற்கு ஜன்னல் 2025ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இவரது சிறுகதைத் தொகுப்பு நூல்.

கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல், ஞௌ போல வாழ்பவர்கள் ஆகியவை இவரது கவிதை நூல்கள். இவரது கவிதைகள் மற்றும் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com