உதவித் தலைமை ஆசிரியர்

சிறப்பு பரிசு ரூ. 2500 பெறும் கதை
உதவித் தலைமை ஆசிரியர்
நரசிம்ம பாலாஜி
Published on

"ஓஏ வேலைன்னு சொல்லித் தானே காசு வாங்கினீங்க, இப்ப பள்ளிக்கோடத்த கூட்டுனு சொன்னா என்னா நியாயம் மாமா”பஞ்சாயத்து தலைவரான தர்மனிடம் சீறினான் மூர்த்தி. 

தர்மன்தான் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும் அவர்தான். அவர் சொல்பவர்தான் பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவராகவும் இருக்க முடியும். பட்டப்படிப்பு படித்தவர். நம்ப ஊரு பள்ளிக்கு நம்மைக் கேட்காமல் பணிநியமனம் வழங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தர்மனுக்கு எப்போதும் கோபம். அவர்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதாக எப்போதுமே நினைப்பார். அவர் ஆளும் கட்சி வேறு, உள்ளூர் மந்திரிக்கு நல்ல அறிமுகமானவர். அதனால்தான் மூர்த்தி, நம்பி ஒரு லட்சம் ரூபாய் தந்தான். மாமன் எப்படியும் வேலை வாங்கி தந்துவிடுவார் என்று முழுமையாக அவன் நம்பினான். பல பேரிடம் பேசி யாருமே அந்தத் தொகையினைக் கொடுக்க முடியாததால் கடைசியாகதான் மூர்த்தியிடம் வந்தார் தர்மன். 

மூர்த்தி எட்டாவது படித்து இருக்கிறார், ஆறு ஏக்கர் நிலம் உள்ளது, இரண்டு ஏக்கர் நீர் பாயும் அளவிற்கு பம்புசெட் வசதி உள்ளது. அரசு வேலை மீது அவருக்கு ஆசை இருந்ததால் உடனே சம்மதம் தெரிவித்து பணத்தையும் திரட்டி ஒரு வாரத்தில் கொடுத்து விட்டார். அலுவலகப்பணி மாதம் பன்னிரெண்டாயிரம் ஊதியம் என்று சொன்னதும், வயது முப்பதுதான் ஆகிறது கொடுத்த ரூபாயினை ஒருவருடத்தில் எடுத்து விடலாம், மரியாதையான பணி என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு பள்ளியைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணி என்றவுடன், உடம்பெல்லாம் அதிர்ந்து அடிவயிறு அதிர தர்மனிடம் சண்டையிட்டார். 

கிழக்குப் பார்த்த மாதிரி தலைமை ஆசிரியர் இருக்கை, அவருக்கு எதிரே ஒரு தேக்கு மரத்தாலான வார்னீஸ் போடப்பட்ட தேநீர் நிறம் போல இருந்த பெரிய டேபிள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு, விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களுக்கான பதிலி ஆசிரியர்களின் பதிவேடு, ஆசிரியர்களின் கால அட்டவணை, அப்புறம் சின்னச்சின்ன கோப்புகள் என கண்ணாடி போர்த்திய அந்த டேபிளில் காணப்பட்டன, அந்த டேபிளுக்கு எதிரே இரு எஸ் டைப் சேர்கள் அதன் பின்பு இரு எஸ் டைப் சேர்கள். அதன் பின்பு நால்வர் நடப்பதற்கான இடைவெளி இருந்தது. எதிரே உதவி தலைமை ஆசிரியர் இருக்கை, மேல் நிலைப்பள்ளி என்பதால் முதுநிலை ஆசிரியருக்குதான் அந்த இருக்கை, வகுப்பையும் அவர் பார்ப்பதால் அந்த இருக்கையில் அவரைப் பார்க்க முடியாது, அவருக்கு அருகே அலுவலக கணினி அதன் அருகே இளநிலை உதவியாளர் இருக்கை முதல் இரண்டு எஸ் டைப் சேரில் வலதாக தர்மனும் இடதாக மூர்த்தியும் அமர்ந்திருந்தார்கள்.        

பொய் சொல்லிவிட்டோம் என்று மனம் நினைத்ததால் தர்மன் வாய் பேசாமல் அமைதி காத்தார். பள்ளி அலுவலகத்தில் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த இருவரையும் அமைதியாக இலவம் பஞ்சால் செய்யப்பட்டு தலை வரை நீண்டு இருந்த ரோல் டைப் சேரில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார் தலைமை ஆசிரியர். தர்மனின் அமைதி அவருக்கு ஆச்சரியம்தான்.

“இந்த வேலைய வேற யாருக்கோ கொடுத்துட்டு நான் கட்டுன காச கொடுங்க, நாலு மாசம் ஆச்சு, வட்டி இல்லனாலும் பரவாயில்ல பணம் கொடுத்துருங்க” என்றார் மூர்த்தி.

வேலையினை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. உள்ளூர் பள்ளி வேறு, ஊரில் சிறு பண்ணையார்போல இருந்தவன், இன்றைக்கு பணியில் சேருகிறோம் என்பதற்காக புதிய கருப்புபேண்ட் தகடு போல சலவை செய்த வெள்ளைச்சட்டை அணிந்து வந்துள்ளான். புதுத்துணியின் வாசனை தர்மன் நாசியில் பட்டுக்கொண்டுதான் இருந்தது, பேச்சில் பண்ணையார் தனமும், நேர்த்தி குறைவான ஆடையில் மூர்த்தியின் கல்வி அறிவும் வெளிப்பட்டது.      

பணம் வந்தால் போதும் என்றே நினைத்தான். தர்மனிடம் பணம் போனால் முதலை வாயில் மாட்டியது போலதான் அது வெளியே வராது என்பது மூர்த்திக்கு தெரியும். மூர்த்தியும் சாதாரண ஆள் கிடையாது பிடித்தால் உடும்புப் பிடிதான், மற்றவர்களைப் போல அவனை ஏமாற்ற முடியாது என்பது தர்மனுக்குத் தெரியும். 

மாவட்ட ஆட்சியர் இட்ட ஆணையினை தர்மனிடம் பெற்று என்ன செய்வது என்று தெரியாமல் தர்மனை மீண்டும் ஒரு முறை பார்த்தார் தலைமை ஆசிரியர்.

“சரி மாப்பிள்ள விடு பாத்துக்கலாம்” மூர்த்தியின் தோள் மீது கைவைத்து அமைதிப்படுத்தினார் தர்மன். 

“எப்படி மாமா உனக்கு தெரியாத அறுவதுமாரு சங்கிலிக் கருப்பு செய்யுற நாங்க போயி இந்த வேலையை செய்ய முடியுமா?” பணத்தை வாங்கும் முடிவோடே மூர்த்தி இருந்தான். 

அவனின் குலதெய்வம்தான் சங்கிலிக் கருப்பு பச்சை மலையில் இருக்கிறது, ஆயிரம் மீட்டர் நீளம் கனத்த எடைகொண்ட சங்கிலி ஒன்று அறுபது மாராக பின்னிச் சுழன்று கருப்பசாமி கோவில் அருகே கிடந்ததாம். சுற்றி இருந்த ஐந்து வீட்டில் இருந்த ஆண்கள் அந்தச் சங்கிலியை எடுத்து ஊருக்கு வெளியே போட முயன்று இருக்கிறார்கள். அதனை அசைக்கவே முடியலையாம். நடுச் சாமத்தில் மேகத்தில் ஒலிக்கும் சிறு இடி போல சங்கிலிச் சத்தம் கேட்டு இருக்கிறது, மழை வரப்போகிறது என்று நினைத்து யாரும் வெளியே வரவில்லை. காலையில் ஊருக்கு வெளியே சங்கிலி கிடந்ததாம். யாருமே தூக்க முடியாத இந்தச் சங்கிலியை நம்ப கருப்பசாமிதான் தூக்கியது என்று அவர்கள் நம்பினார்கள். அன்றிலிருந்து கருப்பசாமியை அறுபதுமார் சங்கிலிக் கருப்பாக அழைத்தார்கள். 

மூர்த்தியும் தன்னை அறுபதுமார் சங்கிலிக் கருப்பாகவே நினைத்தார். துடைப்பத்தை ஒருபோதும் தொடக்கூடாது என்று முடிவாக இருந்தார். அவன் மனதில் உள்ளதை புரிந்து கொண்டார் தர்மன். இனி பணி ஆணையினை வேறு ஒருவருக்கு மாற்றவும் முடியாது, வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் முடியாது ஒரு வழியாக முடிவை எடுத்தார் தர்மன். 

“சரி விடு மாப்பிள்ள இந்த பள்ளியில நீ எப்போதும் தொடப்பத்த எடுத்து கூட்ட வேண்டாம், ஆபீசு வேலைய மட்டும் பாரு ஹெச்சம் கிட்ட நா சொல்லிக்கிறேன்”  

தலைமை ஆசிரியரைப் பார்த்து “என்னங்க சார் நா சொல்றது”என்றார் தர்மன். 

“உங்க ஊரு பள்ளி நீங்க சொல்லி நா கேட்காமல் இருக்க முடியுமா”என்றார் தலைமை ஆசிரியர்.  

அப்போதும் மூர்த்தியின் முகம் விரைப்பாகவே இருந்தது, அதைப் புரிந்துகொண்ட தர்மன், 

“சார் ஒரு சேர் டேபிள எடுத்துப்போடுங்க”  

நான்கு மாணவர்களை அழைத்து வேதியல் ஆய்வகத்தில் இருந்த சேர் டேபிளை எடுத்து வந்து அலுவலகத்தில் உதவி தலைமை ஆசிரியர் இருக்கைக்கு பின்புறம் மூர்த்தியை அமர வைத்தார்கள், அமைதியானார் மூர்த்தி. பணி சேர்ப்புக்கான அறிக்கையைத் தயார் செய்து அலுவலகப் பணியாளர் வருகைப் பதிவேட்டில் மூர்த்தியின் பெயர் சேர்க்கப்பட்டது. கையொப்பம் பெற இளநிலை உதவியாளர் நீட்டியபோது 

“இப்போ ராகு காலம் ஒரு மணிக்கு மேலதான் நல்ல நேரம். அப்போ கையெழுத்து போட்டுக்கிறேன்” இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரி போலப் பேசினார் மூர்த்தி. 

நரசிம்ம பாலாஜி

அடுத்தநாள் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் அலுவலக உதவியாளர் என்று அறிமுகம் செய்து ஒரு பொன்னாடை போர்த்தி அறிமுகப்படுத்தினார் தர்மன். மாணவர்கள் கைதட்டினார்கள். 

மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் செல்வது, ஊழியர்களின் ஊதிய கணக்குகளை கருவூலம் எடுத்துச் செல்வது, தலைமை ஆசிரியர் தரும் பதிலி ஆசிரியர் பதிவேடு, சுற்றறிக்கை இவைகளை ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்குவது. என மூர்த்திக்கு அலுவலக வேலைதான். 

முதுநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரை விட உயர்ந்தவர். பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியரை விட நான்தான் மேல். பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் கலைப் பிரிவு ஆசிரியர்களை மட்டமாக நினைப்பது, பத்தாம் வகுப்பில் கணித ஆசிரியர்கள் நாங்க தாண்டா மேல என்று நினைத்து கெத்தாக இருப்பது.. இப்படி பாடங்களில் பதவிகளில் உயர்வு தாழ்வு எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் மூர்த்தியைக் கண்டால் முதல் வணக்கம் செலுத்தினார்கள். 

உள்ளூர்க்காரர் பிடிஏவிற்கு சொந்தம். தலைமை ஆசிரியர் இருக்கும் அலுவலகத்தில் இருக்கிறார், அதனால் மூர்த்திக்கு மரியாதை கூடியது. 

பள்ளியில் வண்ணம் தீட்டுவது, இயந்திரங்கள் பழுது பார்ப்பது, விழா எடுப்பது, தலைமை ஆசிரியர் உத்தரவினை ஆசிரியர்களிடம் சொல்வது என மூர்த்தி இல்லாமல் பள்ளியின் நிர்வாகமே நின்றுவிடும் போல் இருந்தது. 

சுதந்திர தின குடியரசு தின பள்ளி இறுதியில் நடக்கும் ஆண்டு விழா என்றால் மூர்த்திதான் ஒன்பதாம் வகுப்பில் அடங்காமல் இருக்கும் வாட்டசாட்டமான பத்து மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளியில் இருக்கும் சுற்றுச் சுவர்கள், புங்கன் வாகை மரத்து அடிப்பாகத்தில் வண்ணம் தீட்டும் பணி கொடுப்பார். மூர்த்தி அழைத்தால் போட்டி போட்டுக்கொண்டு மாணவர்கள் வருவார்கள். சிறிது நேரத்தில் வேலை முடிந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்து கொள்கிறோம் என்பார்கள் மாணவர்கள், அவர்களுக்கு வகுப்பை விட மூர்த்தியிடம் வேலை செய்வதுதான் பிடித்து இருந்தது. 

“ஏங்க இப்படி பசங்க வேல செய்யறத யாராவது போட்டோ எடுத்து போட்டுட்டா அப்புறம் பிரச்சனை ஆகிடும்”என்று ஆசிரியர்கள் பேசினால் 

“நம்ப பள்ளிகோடம்... யாரு சார் போட்டோ எடுப்பா? அப்படியே அப்பா அம்மா வந்தாலும் நா பாத்துக்கிறேன் சார், எல்லாம் எனக்கு தெரிஞ்சவைங்கதான்” என்பார் மூர்த்தி. 

அப்படித்தான் ஒரு நாள் பத்தாம் வகுப்பில் அடங்காத ஒரு மாணவனை லேசாக இருந்த மூங்கில் பிரம்பு உடைய வெளுத்து விட்டார் பட்டதாரி ஆசிரியர் நாகராஜன், முதுகு கால்களில் தடுப்பு எழுந்து விட்டது. அடுத்தநாள் பத்து பேர் வந்து விட்டார்கள். அலுவலகத்தில் உள்ளே புகுந்து செந்நாய்கள் கூட்டம் மானைப் பிடித்து வேட்டையாடுவது போல வெறியோடு தலைமை ஆசிரியரிடம் பேசினார்கள். அதிலே ஒருத்தன் அந்த ஆசிரியரை பார்க்க வேண்டும். அதே மாதிரியே அடிக்க வேண்டும் என்றான்.  

“மொதல்ல ஆஸ்பத்திரியில்ல சேத்தி விட்டு கேஸ் போடலாம் வாங்கடா”என்றான் மற்றொருவன். தலைமை ஆசிரியர் பதட்டமாகிவிட்டார், அவர் கைகால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. மூர்த்திதான் மொத்த கூட்டத்தையும் அமைதிப் படுத்தினார். அவன் பேச்சை கேட்டு அவர்கள் கலைந்து சென்றார்கள். வந்தவர்கள் அவருக்கு உறவினர்கள், அதனால் பிரச்சினை சுமுகமாக முடிந்தது. 

மூர்த்தி செய்த பைசூல் பள்ளி முழுக்கப் பரவியது, அவரின் மீதான மரியாதையும் கூடியது, மூர்த்தி விலகிச் சென்றால் கூட ஆசிரியர்கள் கூப்பிட்டு வணக்கம் வைத்தார்கள். தலைமை ஆசிரியரே மூர்த்தி சொல்வதை மீறுவதில்லை, பள்ளியில் எந்தவிழா நடந்தாலும் தலைமை ஆசிரியர் பின் இருக்கையில் மூர்த்தி இருப்பான், மராமத்துப் பணியினை தலைமை ஆசிரியர் பார்வையிட வந்தால் அவருக்கு பாதுகாப்பு அதிகாரிபோல் அருகே இருப்பான். மூர்த்திதான் எல்லாம் என்று மாணவர்கள் தெரிந்து கொண்டார்கள். தலைமை ஆசிரியர் இல்லாத நாட்களில் பள்ளி வேலை நேரத்தில் இடையில் இல்லம் திரும்பும் மாணவர்கள் அலுவலகத்திற்கு வந்து தகவல் தெரிவித்தால் உதவி தலைமை ஆசிரியரிடம் கேட்காமலேயே “போயிட்டுவாங்க” என்பார். 

கோடை முடிந்து வசந்தகாலம் வரவேற்றது. அனைத்து மரங்களிலும் இலைகள் துளிர்த்து, புதிதாக முளைத்து பள்ளிக் கட்டிடத்தின் பார்வையினை மறைத்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தன, அலுவலகத்தின் எதிரே இருந்த ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்த முதலையின் தோல் போல அடிப்பாகத்தை கொண்ட வாகை மரத்து நிழலில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது, அங்கு ஒரு ஆசிரியரும் ஆசிரியையும் மாணவர்கள் அமரும் நீண்ட இரும்பு இருக்கையில் அமர்ந்து சேர்க்கைப் பணியினைச் செய்து கொண்டு இருந்தனர்.     

துவக்கக் கல்வியை, சிறிய பள்ளியில் முடித்த மாணவர்கள் இப்பள்ளியை வியந்து பார்த்தார்கள். மைதானத்தைப் பார்த்தார்கள், மரங்களைப் பார்த்தார்கள், அலுவலகத்தைப் பார்த்தார்கள், பள்ளி சிறு திருவிழா போன்று இருந்தது. அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் இளநிலை உதவியாளர் மூர்த்தி இம்மூவரும் இருந்தனர், இளநிலை உதவியாளர் கணினியில் பணி செய்துகொண்டிருந்தார், வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பது ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்களின் பணிப்பதிவேட்டினை பராமரிப்பது, அரசு கேட்கும் புள்ளி விவரங்களை உடனுக்குடன் அனுப்புவது என்று அவருக்கு அந்தப் பணியே சரியாக இருக்கும்.  

மூர்த்திதான் சேர்க்கை நடைபெற்ற விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று அதனை வரிசையாக அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் தலைமை ஆசிரியருக்கு உதவியாக இருந்தான். அவருக்கு அடுத்தது மூரத்திதான் என்பதுபோல் அவன் பணி இருந்தது. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். எப்போதும் வெள்ளைச் சட்டை கருப்பு பேண்ட்தான் அவனது உடையாக இருந்தது.       

பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தில் ஐயப்பாட்டு வினா நடத்தி கொண்டிருந்த இடைநிலை ஆசிரியரான மாது 

“இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் யார்?” என்றார்,

 அனைவரும் அவர் பெயரை சரியாகச் சொன்னார்கள். 

“உதவி தலைமை ஆசிரியர் யார்?” என்று கேட்டார்.

தலைநிறைய தேங்காய் எண்ணை தேய்த்து தன் தாடையில் வழிந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த முருகன் எழுந்து “அப்படின்னா யாரு சார்?” என்றான்.  

“தலைமை ஆசிரியருக்கு உதவியாக இருப்பவருடா” என்றார் ஆசிரியர்.   

மாணவர்கள் அமைதி காத்தார்கள்,

இடைநிலை பட்டதாரி முதுநிலையில் இருக்கும் மூத்த ஆசிரியர்களின் பெயரைச் சொன்னார் ஆசிரியர்.  

அவர்கள் அந்த வகுப்பறையே அதிரும் அளவிற்கு “மூர்த்தி சார்” என்றார்கள். 

அலுவலக வராந்தாவில் நின்றுகொண்டு மொத்த பள்ளியினையும் பார்த்துக்கொண்டு இருந்தார் மூர்த்தி, அவர் பார்வையில் உதவித் தலைமை ஆசிரியர் தோரணை இருந்தது.

கந்தசாமி சித்தையன், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி பூர்வீக கிராமம். அரசுப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தெவம் என்ற நாவலும் எழுதியுள்ளார். இப்பொழுது சிறுகதைகளை எழுதிவருகிறார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com