
இருள் ஊரைக் கவ்வி கொண்டிருந்த நேரம் நாய்களின் நடமாட்டத்தை தவிர வேறு மனிதர்களின் தலைகள் எதுவும் தட்டுப்படவில்லை. ரொம்ப நாளாக கைக்கு சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் பெருச்சாளி ஒன்று சாக்கடை குழியில் சுதந்திரமாக உலாவியது.
மொத்தம் ஆறு தெருக்களும், ஒரு ஐயப்பன் கோவில் திண்ணையும், சமூதாய கூடமும் தான் அந்த ஊர். காசுக்காரர்கள் என சொல்லிக் கொள்ள ரெண்டு குடும்பம், படித்து திடீர் பணக்காரர்கள் ஆன நான்கு குடும்பம், இவர்களை தவிர பாக்கி எல்லாம் தகர வீட்டு குடித்தனம் தான். அந்த தகரத்தை பல்லாண்டு காலமாய் சுமந்து வரும் சுண்ணாம்பு கல் சுவர்களின் இறுமாப்புக்கு குளிரும், வெயிலும் அஞ்சவே செய்தது.
வீருசிக்கு பால் கறப்பதற்காக விடியல் முன்பே எழுந்து விடுவாள். தன் புருசன் நோய் நொடி இல்லாத காலத்தில் ஒரு பட்டியே வைத்திருந்தார்கள். இப்போது இரண்டு கறவை மாடுகளும், மூன்று அடி மாடுகளையும் தவிர வேறுயில்லை. வீருசிக்குவின் கணவர் பொம்மையனுக்கு மூப்பு தட்டிவிட்ட வியாதி தானே ஒழிய உடலில் சொல்லி கொள்ளும் அளவிற்கு எந்தவித நோயும் கிடையாது. கடந்த ஓராண்டாய் கண்பார்வை மழுங்கி விட்டது. வெடுக்வெடுக்கென நடக்க முடியவில்லை. கால்களுக்கு ரத்த ஓட்டம் நின்று போய் பத்து எட்டு நடக்க அரைமணி நேரம் பிடித்தது. அவர் எங்காவது நடந்து போனால் கீழே விழுந்து விடுகிறார், இல்லையென்றால் இருசக்கர வாகனங்கள் மோத காயங்களோடு வீட்டுக்கு வருகிறார்.
கணவனுக்கு பண்டுகை பார்த்து பார்த்து அலுத்துப் போன வீருசிக்கு, இனி அவர் வெளியே செல்ல முடியாதபடி கைகளில் சங்கிலியை மாட்டிவிட்டு படுத்த படுக்கையாக்கி விட்டாள். பொம்மையனின் கண்கள் இளம்பச்சை நிறத்தில் பளிங்கு போல் இருக்கும். அவை அரை நூற்றாண்டின் கதைகளை தனக்குள்ளே வைத்திருப்பதை போல தோன்றும். ஒடிந்த தேகமாக இருந்தாலும் கருத்த அவரது உடல் முந்தைய கால ஆரோக்கியத்தைக் காட்டியது. மாடு பத்துவதற்கு வைத்திருக்கும் குச்சியை விட கொஞ்சம் தடித்த கைகளும், கால்களும் இருந்தாலும், ஆங்காங்கே தசைகள் திரண்டிருந்தன, ஒடிந்த மார்பெங்கும் வெண்மயிர்கள் புகையை போல் படர்ந்திருக்கும்.
அவர் அதிகம் மனிதர்களோடு பழகுவதில்லை. மாடும், மாட்டுக் கொட்டமும், கரட்டுப் பயணமும் தான் அவரது தினசரி அலுவல்கள். காலையில் மாடுகளைப் பத்திக் கொண்டு கரட்டுக்குப் போனார் என்றால் சூரியன் மலையில் மறைந்த பிறகே வீடு வந்து சேருவார்.
வீருசிக்கு எப்போதும் போல பால் கறக்க ஏனத்தை எடுத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தாள். கொட்டகையின் அருகே தான் பெரியவரின் கட்டில் கிடக்கும். இரவில் கூட அவருக்கு மாடுகளைப் பார்க்க வேண்டும். கோடை காலம் என்பதால் அடிமாடுகள் எல்லாம் கரட்டில் விட்டிருந்தார்கள். கோடை வெயிலில் ஊரில் தீனிக்கும் பஞ்சம் என்பதால் அவை மற்ற பட்டி மாடுகளோடு கரட்டில் மேயும். பொம்மையன் படுத்திருந்த கட்டிலைப் பார்த்த வீருசிக்கு பதறி போனாள். அவர் கட்டப்பட்டிருந்த சங்கிலி அறுந்து கிடந்ததோடு ஆளைக் காணவில்லை. உடனே அவளுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
திறந்து கிடந்த வாசலைப் பார்த்தவள் மேலும் அச்சத்தோடு பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள். நள்ளிரவின் தூக்கத்தைக் கெடுத்த ஆத்திரம் கதவு திறக்கப்படும் வேகத்தில் தெரிந்தது. வெளியே எட்டிப்பார்த்த வீருசிக்குவின் மகன் ‘என்னத்தா’ என எரிச்சலுடன் கேட்டான்.
‘உங்க அப்பன காணமுடா, சங்கிலிய அத்துகிட்டு எங்கிட்டோ போயிட்டாருடா, என்னானு போயி பாருய்யா’ என அழுது கொண்டே சொன்னாள்.
‘இருத்தா என்னத்துக்கு இப்ப அழுகுற, எங்கிட்டாச்சும் காப்பி கீப்பி குடிக்க போயிருப்பாப்புல, இரு நான் பாத்துட்டு வாரேன்’
என்றவாறு உள்ளே சென்றவன் சட்டையை மாட்டி கொண்டு வெளியே வந்தான். வீருசிக்குவிற்கு நெஞ்சு இறுகி பிடிப்பது போல் உணர்வு.
‘நீ பதறாத, போய் பால் பீச்சு, நான் ஆளப் பிடிச்சுகிட்டு வாரேன்’
ஊர் முக்கில் உள்ள ஐய்யப்பன் கோயிலைச் சுற்றி பார்த்தான். அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. பின்னர் ஊரிலுள்ள ரெண்டு டீக்கடைகளுக்கும் போய் தேடிப்பார்த்தான். கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
அன்று சமுதாயக் கூடத்திற்கு முன்னே ஆடு உறித்து கொண்டிருந்தார்கள். தோல்கள் உரிக்கப்பட்ட ஆட்டின் உடல் வேப்ப மர கொப்பில் தொங்கியது. பேட்டையன் சூரிகத்தியால் தோலினை உரித்து கூறு போட்டு கொண்டிருந்தான். முகம் சொங்கிப் போய் அங்கு வந்த முத்துராசுவைப் பார்த்த பேட்டையன்,
‘என்னண்ணே இந்நேரம் உறக்கம் வல்லையா?’
‘எங்கப்பனப் பாத்தியாடா’
‘இல்லையே என்னாச்சு?’
‘ராத்திரி ஆளு எங்கிட்டோ போயிட்டாப்புள, ஊர அடக்கி தேடிட்டேன் ஆளு சிக்கல’
‘வெக்காளி கிழவனுக்கு இதே பொழப்பு’ என்றவாறே பெருங்குடலில் இருந்து வழித்தெடுத்த செரிக்காத கழிவினை குப்பை வாளியில் வீசினான்.
‘பங்காளி நீ வெட்டிக்கு இருயா, நான் அண்ணே கூட போயி பாத்துட்டு வாரேன்’ சைக்கிளை எடுத்து பேட்டையன் மிதிக்க முத்துராசு ஏறினான்.
‘மந்த பக்கம் போயி பாப்பமானே, தொப்ப கிப்ப தட்ட வந்தாலும் வந்திருப்பாப்புல’
சைக்கிள் மந்தை குளத்தை நோக்கி சென்றது. நீலா வெளிச்சத்தில் நாற்றமெடுத்த குளத்து நீர் பரிசுத்தமாக இருப்பதை போல் தெரிந்தது. பெரும்பாலான பகுதியில் பாசி படிந்து இருந்தமையால் குளம் பச்சைப் பசேலென காட்சியளித்தது. தூரத்தில் யாரோ மலம் கழித்து கொண்டிருப்பது தெரிந்தது. கையிலிருந்த டார்ச் லைட்டை வாயில் கவ்வி கொண்டு அவர் குண்டி கழுவ குளத்தை கலைத்ததில் மறுபுறம் நீர் அலைகள் மோதி கொண்டன. அந்த டார்ச் வெளிச்சத்தை குறி வைத்து பார்த்தனர். கரை வழியே சென்று ஆள் யாரென பார்க்கலாம் என்றாலும் இந்த கும்மிருட்டில் சென்றால் இரண்டு பக்கமும் மல குவியல் இருக்கும். அதனால் இருவரும் நகர்ந்து வரும் டார்ச் லைட்டின் வெளிச்சத்திற்காக காத்திருந்தார்கள். ஒளி மிக அருகே வந்தது. அது பொம்மையனின் பழைய கூட்டாளி சடையாண்டி தான் என அவர்களுக்குப் பிடிபட்டது.
‘யப்பே.. எங்கப்பன பாத்தியா?’
‘ஆரு பொம்மையன் மகனா’ டார்ச் லெட்டை முகத்தில் அடித்து உறுதி செய்து கொண்டார்.
‘நேத்து ஒரு 11 மணி வாக்குல இங்கிட்டு கரட்டு சேவ போனாண்டா, நான் அவனக் கூப்புட்டேன், ஆளு கண்டுக்கவே இல்ல, கையில குச்சியுமில்ல, விளக்குமில்ல, ஆனா நடையில ஒரு வீரியம் இருந்துச்சு. சரி நானும் எதாச்சும் சோலியா போவான்னு விட்டேன்.’ என்றார்.
‘என்னா பெருசு, நேத்தே இதச் சொல்லிருக்க வேணாமா?’ பேட்டையன் கடுப்பானான்.
‘அவரு சொகமில்லாத ஆளுனு உனக்கு தெரியுமில்லப்பா?’
‘ஆரு பொம்மையனா, அவன் நடந்த நடைக்கு இப்ப மேற்க கரட்டைத் தொட்டிருப்பான், பேசாம போய் படுங்கடா விடிய அவனே வந்துருவான்’ என சிரித்தார்.
ஆனால் முத்துராசுவிற்கு அப்படி விட்டுவிட்டு செல்ல மனமில்லை.
‘எலே.. சைக்கிள மிதிடா’ என்றான்.
சைக்கிள் கரட்டை நோக்கி நகர்ந்தது. கரட்டு பாதையில் தார் ரோடு கிடையாது. இரண்டு பக்கமும் தோட்டங்கள், தென்னை, வாழை, திராட்சை பந்தல்கள் என பசுமையாக இருக்கும். இருள் அவை அத்தனையையும் விழுங்கி டார்ச் லைட் பாதைக்கு மட்டும் விலகி கொடுத்தது. சரளி கற்களும், செம்மண் நெடியும், சைக்கிள் மிதித்த பேட்டையனுக்கு அச்சத்தைத் தூண்டின. கடந்த சில தினங்களாக கரட்டில் புலி, நடமாட்டம் இருப்பதாக பேசிக் கொண்டார்கள். அமைதியாக செல்வது அவனுக்கு பீதியை கிளப்பியது. மெல்ல முத்துராசுவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
‘ஏன்ணே பெருசுக்கு ஒரு 90 வயது இருக்குமா?’
‘யார்ரா இவேன், அந்தாளுக்கு வர ஆவணி பத்து வந்தா 96 வயசுடா’
‘வெக்காளி நமக்கெல்லாம் இப்பவே சைக்கிள் மிதிச்சா நெஞ்சு கூடெல்லாம் அடைக்கிதேனே’
‘எல்லாம் அந்த காலத்து ஊட்டம் தாண்டா, ராயி கேப்பனு தின்னு வளந்த உடம்புல அப்பிடித்தான் இருக்கும்’
‘இப்பெல்லாம் எங்கனே அதெல்லாம் கிடைக்கிது’
‘எங்கப்பன் பால் இல்லாம திங்க மாட்டாபுள, விடிய எந்திருச்சு , அரை லிட்டர் பால காச்சி கொடுத்தா குடிச்சுருவாப்புல, சோத்துக்கு பாலை ஊத்தி பெசஞ்சு திங்கிறது, கறி ஆக்குற நாள தவிர மத்த நாளெல்லாம் அந்த ஆளுக்கு பாலு தான் சோத்துக்கு குழம்பு’
‘ஆத்தே.. ஆனா ஒரு வருசத்துக்கு முன்னுக்க வரைக்கும் ஆளு வெடிப்பாத்தே இருந்தாப்புள்ள’
‘ஆமா விடிய நாளு மணிக்கு எந்திருச்சு, பால் பீச்சி வச்சுட்டு, கஞ்சிய எடுத்துகிட்டு பட்டி மாடுகள பத்திக்கு போனாறுனா, சாயங்காலம் தான் வருவாப்புல, இப்பதே ஒண்ணும் முடியல’
‘எதுக்குண அவர சங்கிலி போட்டு கட்டுனீங்க’
‘பெறகு, கண்ணு கோளாறா இருக்க மனுசன வெளிய விட சொல்றியா, எங்கிட்டாச்சும் போயி விழுந்து அள்ளிக்கு வந்திருவாப்புல, ஆத்தா அவருக்கு வைத்தியம் பாத்தே தவிச்சு போச்சு, அதேன் செயின போட்டு கட்டி விட்டோம், எப்ப பாரு மாடு கன்னுக கூட எதாச்சும் பேசிக்கே இருப்பாப்புல, அதுகளும், பதிலுக்கு சத்தம் போடும், அப்புடி என்னதான் பேசிக்கிறாங்கணும் தெரியல’
‘உக்கப்பாரு ஒரு விசித்திரமான ஆளு தானே, மாட்டுக்கு லாடமெல்லாம் நச்சுனு அடிப்பாப்புல, அவரு லாடம் அடிக்கிறப்ப ஒரு மாடு கூட முரண்டு பிடிச்சத நான் பாத்தது இல்ல’ என பேசிக் கொண்டு இருக்கும் போதே மொசைக்குட்டி ஒன்று குறுக்கே துள்ளி குதித்து கொண்டு ஓடியது.
திடீரென நடந்த பாய்ச்சலில் நிலை தடுமாறி போன பேட்டையன் சைக்கிளை நிறுத்தினான். அப்போது தான் அவர்களுக்கு பெரிய ஆலமரத்துக்கு வந்திருப்பதே தெரிந்தது. மரத்துக்கு கீழே சிவலிங்கம் இருந்தது. முத்து ராசு டார்ச் லைட்டை அடித்ததும் ஏதோ ஒளியில் மின்னுவது போல் இருந்தது.
நன்கு ஊற்று பார்த்தால் யாரோ குடித்து விட்டு பாட்டிலை வைத்துவிட்டு போயிருப்பது தெரியவந்தது. ஒரு நிமிடம் அப்படியே நின்ற அவனது நினைவுகள் மீண்டும் திரும்ப ‘மிதிடா…மிதிடா..’ என பேட்டையனை உசுப்பினான்.
‘உங்கிட்ட எதும் சொன்னாறாணே?’
‘எதும் சொன்ன மாதிரி நியாபகம் இல்ல. எங்க ஆத்தா கிட்ட தான் எதோ சொல்லி பொழம்பியிருக்காப்புல’
‘என்னனு?’
‘கரட்டுல இருக்க, நம்ம மாடு ஒன்ன புலி அடிக்க போவுது, அதக் காப்பத்தணும், அதை எப்படியாச்சும் மீக்கனும், அப்டீனு சொல்லியிருக்காப்புல’
‘அதெப்படி அவருக்குத் தெரியும்?”
‘அதே விளங்கல, ரொம்ப தெளிவா சொல்றாப்புள, எங்க ஆத்தா ஏன்கிட்ட சொல்லுச்சு, நான்தே நம்ம ஆளுக அங்கன காவலுக்கு இருக்காங்கள, புலி வந்தா தாக்கல் கொடுத்திருப்பாங்களேனு விட்டேன்’
‘அப்ப ஒரு வேல பெருசு அத தேடித்தான் போயிருக்குமோ?’
‘இருக்கலாம்’
‘இப்ப நம்ம கரட்டுல ஏறனுமாணே?’
‘ஆமாடா’
‘பாரஸ்ட் காரங்க இருப்பாங்களே’
‘நம்ம அணைக்கட்டு வழியா போயிருவோம்’
இருவரும் அணைக்கட்டின் கீழே இருந்த மணலில் சைக்கிளை படுக்கைவசமாக போட்டுவிட்டு இருள் அடைத்திருந்த காட்டுக்குள் நுழைந்தனர். அருவியின் ஓசை மேலிருந்து அவ்வளவு துல்லியமாக கேட்டது. ஒவ்வொரு நீர் துளிகளும் பாறையில் அறைவதன் ஒலியை காற்று அப்படியே கடத்தி கீழே கொண்டு வந்தது. இடைஇடையே காற்றின் விசில் சத்தங்களும், கிரிபுரி என்ற பூச்சியின் கோச்சொலிகளும் இருளை இன்னும் இருளாக்கின.
குளிரைத் தாங்க முடியாமல் பேட்டையன் வேட்டியைக் கழற்றி உருமாவாக கட்டிக் கொண்டான். முத்து ராசுக்கு பழக்கப்பட்ட குளிர்தான் என்பதால் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. யாருக்கும் அஞ்ச வேண்டிய கட்டாயமும் எழவில்லை. இருவரும் மெல்ல மலையின் மேற்பகுதியை நோக்கி நகர்ந்தார்கள். ஒரு மலைக்குள் நுழைய வேண்டும் என்றால் மற்றொரு மலை வழிவிட வேண்டும். அதற்கு அம்மலையை கடக்க வேண்டிய சூழலை சந்திக்க வேண்டும். காட்டு செடிகளின் கீறல்களுக்கு அகப்படாமல் மலையில் ஏற முடியாது. பேட்டையன் தொடர்ந்து பீடியை பற்ற வைத்து அடித்து கொண்டே வந்தான். மாடுகள் பொதுவாக பக்கத்து மலையில் தான் மேயும். அங்கு எப்படியேனும் இரண்டு பேராவது தங்கியிருப்பார்கள்.
கோடைகாலம் முடியும் வரை ஒரு முப்பது, நாற்பது மாடுகளோடு அவர்கள் கரட்டில் தான் வாழ்வார்கள். அவர்களுக்குத் தேவையான சாப்பாடு, பீடி, கஞ்சா, குடிக்க மதுபானம் இவை அனைத்தும் மாட்டின் உரிமையாளர்கள் அடிக்கடி கொண்டுபோய் தருவார்கள். நான்கு மாடுதான் என்பதால் முத்துராசு மற்ற பட்டிக்காரர்களிடம் கொடுத்து அனுப்பி விடுவான். பட்டியைப் பாராமரிப்பது அவனுக்கு முன்பு பழக்கப்பட்ட தொழில் என்றாலும் தந்தை முடமான பின்பு மாடுகளின் மீது பெரிதாக விருப்பமில்லை. இருவரும் எதுவும் பேசி கொள்ளாமல் அண்டை மலையை நெருங்கினார்கள்.
விடியல் மெல்ல திறந்து பாறைகளின் மேல் வெளிச்சம் படர்ந்தது. அது பார்ப்பதற்கு யானை தன் புஜங்களை குழுக்கி கொள்வதை போல், பாறைகள் முறுக்கி கொள்வதாய் முத்துராசுவுக்கு தோன்றியது.
அண்டை கரட்டுக்குள் செல்ல சிறிய நீரோடையை கடக்க வேண்டி வரும். அவ்வாறு கடக்கையில் மிகவும் சூதானமாக இருக்க வேண்டும் என்பார்கள். எத்தனையோ பேர் சின்ன பாறைகளில் கூட வழுக்கி விழுந்து இறந்திருக்கிறார்கள்.
‘பேட்ட அஞ்சு கால் விரலையும் நல்லா விருச்சு பாறைய கவ்விகிட்டே மிதிச்சு நட, ஒரு புலி மாதிரி இருக்கணும் அந்த பிடிமானம்’ என்றான்.
பேட்டையன் ஒருவித நடுக்கத்தோடு பாறைகளை மிதிப்பதை தவிர்த்து கூழாங்கற்களின் மீது மிதித்து நடந்து வந்தான். இருவரும் அக்கரையைத் தொட்டார்கள். கொஞ்ச தூரம் நடந்ததும், ஒரு இடுக்கு பாறை வந்தது. இரண்டு பாறைகள் மிக நெருக்கமாக இருந்தது. அவற்றைக் கடக்க வேண்டும் என்றால் ஒரு பக்கமாக உடலை அசைத்துக் கொடுத்து செல்ல வேண்டும்.
‘பேட்ட இதாண்டா மொல தட்டி பாற, பாத்து சூதானமா வா, இல்லனா சிக்கிகிருவ’ என்றான்.
‘எதுக்குனே இதுக்கு இப்டி ஒரு பேரு?’
‘உனக்கு மொல இல்ல, அதுனால ஒரு சாச்சு வந்துட்ட, அந்த காலத்துல விறகு ஒடிக்க வந்த பொம்பளைக இதுக்குள்ள வரப்ப, மொல தட்டாம வர முடியாது, அதுனால இதுக்கு மொலை தட்டி பாறைனு பேரு’
‘என்னணே நம்ம ஊர்காரங்க வரலாறல்லாம் ஒரு தினுசாத்தேன் இருக்கு’
இருவரும் வெயில்பட்ட சோவில் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். மலையின் ஓர் உச்சியில் புல்படர்ந்த சமவெளியில் மாடுகள் சத்தம் கேட்டது. இவர்கள் மாடு கத்தும் திசையை நோக்கி நடந்தார்கள்.
அவர்கள் செல்லும் பாதையில் எதோ முடை நாற்றம் வீசுவதாக பேட்டையன் சொல்லி கொண்டே இருந்தான். ஆனால் முத்துராசுவின் கவனம் மாடுகள் மேயும் திசையை குறி வைத்தது. அவனது கால்கள் இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்தன. அப்போது திடீரென முத்துராசுவின் பின்னால் பேட்டையன் ‘அண்ணே…’ என கத்தினான்.
முத்துராசு நிதானமாக பேட்டையன் கை காட்டிய திசையை நோக்கி நடந்தான். முடை நாற்றம் பொறுக்க முடியவில்லை. புதர் மண்டிய குன்றின் அருகே பொம்மையனின் முதுகு தெரிந்தது. அவரது கரிய முதுகில் எழும்புகள் துருத்தி கொண்டிருக்க வேர்வைகள் வெயில் பட்டு மிளிர்ந்தது.
முத்துராசு அவரது அருகே மெல்ல நகர்ந்து செல்ல, அவனின் பாதங்கள் சருகுகள் மிதிக்கும் ஓசை கேட்டதும் பெரியவரின் காதுமடல்கள் புடைத்தன. பொம்மையனின் முன்னே கருத்த மாடொன்று கழுத்து பாதி அழுகிய நிலையில் தலையை தூக்கி கிடந்தது. முத்துராசு அதன் கண்களை வெறித்து பார்த்தான். பச்சை நிற குளம் போல காட்சியளித்த அக்கண்கள் மெல்ல சத்தத்திற்கு அசைவது போல் அவனுக்கு தோன்றியது.
ஈக்கள் கடித்து குதறியிருந்த பகுதியில் மொய்த்து கொண்டிருந்தன. முத்துராசு ஒரு நிமிடம் திகைத்து போனான். கறி வெட்டி பழக்கப்பட்டு போன பேட்டையன் இது நேற்றைக்கு நடந்த சம்பவமாக தான் இருக்க வேண்டும் என யூகித்தான்.
முத்துராசு மெல்ல தனது அப்பாவின் பக்கம் வந்தான். பொம்மையனின் கால் வீரல்களின் இடுக்குகளில் ஈக்கள் மொய்த்து கொண்டிருக்க அவர் மாட்டைப் பார்த்தவாறு நிலைகுத்தி உட்கார்ந்திருந்தார். சூரிய ஒளியில் அவரது பளிங்கு நிற கண்களில் நீர் மிதப்பது தெரிந்தது. முத்துராசு மெல்ல அவர் கைகளைப் பிடித்தான். இறந்து போனவர்களின் கைகளை போல் அவரது உள்ளங்கை சில்லென்றிருந்ததும், முத்துராசுக்கு தொண்டைக்குழி அடைத்தது.
உதடுகள் மெல்ல அடித்து கொள்ள மெதுவாக ‘நம்ம சாமியா கும்புட்ற மாட்ட பளியன் இப்படி செஞ்சு புட்டானேடா.. போய் பாருங்கடானு சொன்னேன் கேட்டீங்களா.. இப்ப பாரு நான் அரும்பாடு பட்டு வளத்த பிள்ளைய’ என மார்பு அதிர அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார். அவர் விசும்பலோடு அழும் சத்தம் காடெங்கும் உள்ள பிராணிகளுக்குக் கேட்டிருக்கும்.
பேட்டையன் மேலே சமவெளிக்கு மேய்ச்சல்காரர்களை கூட்டி வர போனான். சிறிது நேரம் அதையே பார்த்து கொண்டிருந்த பெரியவர் மகனின் தோள் பிடித்து எழுந்து, எதுவும் பேசாமல் கரட்டுக்குள் சென்று கரைந்து போனார். முத்துராசு ஒன்றும் புரியாமல் அவர் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிபி சரவணன், திரைப்பட துறையில் உதவி இயக்குநராக பணி புரிகிறார். அஞர், எச்சிலை என்ற இரு நூல்களை எழுதி உள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.