ஓம் ஷாந்தி ஓம் திரைப்படத்தில் ஷாருக்கான் பேசும் சிறப்பான வசனம் ஒன்று உண்டு. ‘நண்பா எல்லாக் கதைகளும் இறுதியில் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்க வேண்டும், இல்லாவிடில் அது கதைக்கான முடிவல்ல…’ ( இந்த வசனத்தை அப்படியே டொவினோ தாமஸ் நடித்த மலையாளப் படம் ஒன்றில் சுட்டு வைத்தார்கள். எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்களைத் திருடுவதில் மலையாளிகள் நமக்கு முன்னோடிகள். அந்த வரிசையை எழுதினால் தனியாக ஒரு புத்தகமே போடலாம்…)
ஓம் ஷாந்தி ஓம் படத்தின் இந்த வசனம் மட்டுமல்ல திரைப்படமும் எனக்கு விருப்பமான ஒன்று. நல்ல திரைப்படங்கள் என்றால் பொதுவாகவே அழுது வடிந்து எழவைக் கூட்ட வேண்டுமென்கிற மோசமான நம்பிக்கை நமது சூழலில் கற்பிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் நாம் மேன்மைக்குரியதாக நினைப்பதில்லை. அதிலும் கடந்த பத்து வருடங்களுக்குள் அதிகரித்திருக்கும் வன்முறை பார்வையா ளர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் விளைவு மோசமானது. ஒருவர் தொடர்ந்து செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பதன் மூலம் நிகழும் மனநிலை பாதிப்புகளை விடவும் அதிகமான பாதிப்புகளை வன்முறைத் திரைப்படங்கள் உருவாக்குகின்றன.
ரெண்டாம் ஆட்டம் எழுதிய நாட்களில் மதுரையின் பழைய ரவுடிகளைத் தேடி தேடி சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் அனேகம் பேர் சொன்ன ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அந்தத் திரைப்படத்தில் சைக்கிள் செயினை உருவி நாகார்ஜூனா சண்டையிடும் காட்சியினால் உந்தப்பட்டுத்தான் அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ரவுடியிசம் நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா என உங்களுக்கு சந்தேகமிருக்கலாம், ஆனால் அப்படித்தான் நடந்தது.
சுவாரஸ்யமாக சொல்லப்படும் கதையின் உணர்ச்சிகள் அதைப் பார்க்கிறவர்களின் மனங்களை நேரடியாகப் பாதிக்கிறது. அதனாலேயே கதை சொல்லிகள் கூடுதல் கவனத்தோடு கதை சொல்ல வேண்டும். மகிழ்ச்சியைப் பேச வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் நான் அணுகுகிறேன். வாழ்க்கை கொண்டாடித் தீர்க்கவும் அந்தந்த நிமிட மகிழ்ச்சியை நிறைவாக அனுபவிக்கவும் விதிக்கப்பட்டது. இந்த உணர்வுகளை அடையாளம் கண்டுகொள்ள கலை சாதனங்கள் துணைபுரிய வேண்டும். முக்கியமாகத் திரைப்படங்கள். எல்லா துயர்களுக்குப் பின்னாலும் வாழ்க்கை பெறுமதியானது என்பதுதான் மகத்தான படிப்பினை.
தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை, கரகாட்டக்காரன் போன்ற திரைப்படங்கள் அசலான மகிழ்ச்சியைக் காட்சிப்படுத்தியதால்தான் எத்தனை காலத்திற்குப் பின்னால் பார்த்தாலும் பரவசமான உணர்வைத் தரக்கூடியவையாய் இருக்கின்றன. அந்த வகையில் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகான திரைப்படங்களில் ராதாமோகனின் மொழி, சற்குணத்தின் களவாணி, வெங்கட் பிரபுவின் சென்னை 28, சிம்புதேவனின் இம்சை அரசன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எஸ்கே நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களை மகிழ்ச்சியான திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானவையாய்க் குறிப்பிடலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றில் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் பொற்காலம். பாலா, பாலாஜி சக்திவேல், செல்வராகவன், வசந்தபாலன், கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் என திரைமொழியை மாற்றியமைத்த முக்கிய இயக்குநர்களின் வருகை இந்தக் காலகட்டத்தை ஒட்டித்தான் நிகழ்ந்தது. வெவ்வேறு வகையான திரைப்படங்கள் உருவான காலகட்டமும் இதுதான்.
சேது, வெயில், காதல் போன்ற திரைப்படங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகவும் பார்வையாளனின் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தன. துயரின் அழகியல் என இந்தத் திரைப்படங்களை வகைப்படுத்தினால் இம்சை அரசன், மொழி, 96 போன்ற திரைப்படங்களை மகிழ்ச்சியின் அழகியல் என வகைப்படுத்தலாம். மகிழ்ச்சியை நகைச்சுவை உணர்வோடு சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. காதல், நட்பு, அரசியல், பயணம் என ஏராளமான உணர்வுகளை உள்ளடக்கியது. மனிதன் மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறான், இதனாலேயே மகிழ்ச்சியானத் திரைப்படங்களுக்கான தேவைகள் எப்போதும் இருக்கின்றன.
பெண்களை மிகவும் மரியாதைக்குரிய கதாப்பாத்திரங்களாக சித்திரித்ததில் ராதாமோகன் படங்களுக்கு முக்கியமான பங்குண்டு. மொழி மற்றும் அபியும் நானும் திரைப்படங்களில் மென்னுணர்வுகளை சரியாகக் கையாண்டதோடு நகைச்சுவைக் காட்சிகளும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளியான நாயகி, திரைப்படங்களில் இசைக் கலைஞராக வேலை செய்யும் நாயகன் என கதாப்பாத்திர வடிவமைப்பே முரணானவை. ஆனால் அழகான முரண். அந்தக் கதாபாத்திரத்திற்கு இணையாக துணைக் கதாபாத்திரங்களும் இதில் முக்கியமானவை. யாரையும் சீண்டாத இயல்பான நகைச்சுவை, மனிதன் ஆக இறுதியாய் நன்மைகளை மட்டுமே சிந்திக்கக் கூடியவன் என ஒரு பார்வையாளனுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய எல்லா அம்சங்களும் உண்டு. அதீத உணர்ச்சிக்கான ஏராளமான சாத்தியங்கள் இருந்தாலும் அதனை இயல்பாகக் கையாண்டதையும் இந்தப் படங்களில் நாம் கவனிக்க முடியும். ஒரு காட்சிக்கு இசையமைக்கையில் ‘பாவம் டா இந்தப் பண்ணையார் பொண்ணுங்க காலம் காலமா பிச்சைக்காரனுங்க மேலதான் இவங்களுக்கு காதல் வருது…’ என நீண்ட கால தமிழ் சினிமாவை போகிற போக்கில் பகடி செய்திருப்பார்கள். எம்.எஸ் பாஸ்கருக்கு நினைவுகள் எம்.ஜி.ஆர் காலத்தோடு உறைந்து போயிருக்கும். அவரைச் சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள் அபாரமான நகைச்சுவை கொண்டவை. ஆனால் அதனை அப்படியே விட்டுவிடாமல் எமோஷனலான ஒரு நிறைவைத் தந்திருப்பார். அடக்கி வைக்கப்பட்ட துயரங்களிலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அந்தக் காட்சியில் நாம் உணர முடியும். ஒரு கதையில் துணைக் கதாப்பாத்திரங்களுக்குமான வாழ்வைத் தெளிவாக எழுதுவது முக்கியமானது. இந்தத் திரைப்படத்தில் அத்தனைக் கதாப்பாத்திரங்களும் முழுமையாக எழுதப்பட்டவை.
சற்குணத்தின் களவாணி திரைப்படம் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வை மையப்படுத்திய முக்கியமான ஆவணம். எதனைக் குறித்தும் கவலை கொள்ளாத வாழ்க்கை குறித்த பெரிய லட்சியங்கள் இல்லாத இளைஞன் இந்தக் கதையின் நாயகன். தமிழ் சினிமா நாயகர்களுக்கு இருக்கும் ஒழுக்கம், அறம் இவையெதுவும் இந்தப் படத்தின் நாயகனுக்கு இல்லை. ஆனாலும் இவன் செய்யும் திருட்டுத்தனங்களும் விளையாட்டுத் தனங்களும் நமக்குப் பிடித்துப்போகக் காரணம் நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருந்தோம். ஒரு திரைக்கதைக்கான ப்ரேக்கிங் பாயிண்டுகளுக்காக மெனக்கெடாமல் நாயகனின் மனப்போக்கிலேயே காட்சிகளை அமைத்ததையும் இதில் முக்கியமானதாகக் குறிப்பிட வேண்டும்.
களவாணி திரைப்படத்தின் நாயகனுக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் நாயகனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பொறுப்பற்றவர்கள், லட்சியங்களோ எதிர்காலக் கனவுகளோ இல்லாதவர்கள். காதலுக்காக நாக்கை கடிப்பது கையை அறுத்துக் கொள்வது, தெருச் சண்டை போடுவது போன்ற சாகசங்களைச் செய்யாமல் இயல்பாகக் காதலிக்கக் கூடியவர்கள். முந்தைய திரைப்படத்தில் தஞ்சை மாவட்டத்து இளைஞனின் உடல் மொழி எப்படி தனித்துவமாகக் காட்டப்பட்டிருந்ததோ பாலகுமாராவில் சென்னை இளைஞனது உடல்மொழி பதிவாகியிருக்கும். நமக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இந்தத் திரைப்படங்களின் கதாப்பாத்திரங்கள் இருப்பதால் இவர்கள் நமக்கு பிடித்தமானவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆபாச நகைச்சுவைக்கு ஏராளமான சாத்தியங்களிருந்தும் அதனை கவனமாகத் தவிர்த்து முக்கியமானது. இந்த வரிசைத் திரைப்படங்களில் இன்னொரு முக்கியமான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இந்தத் திரைப்படங்களின் எளிமைதான் இவற்றின் பலம். பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும் இதுபோன்ற கதைகளை வெற்றிகரமாக எழுதி இயக்குவது அசாதாரணமான காரியம். எழுதும்போது நமக்கு உருவாகும் நகைச்சுவை உணர்ச்சி காட்சியாக எல்லோரிடமும் சென்று சேரும் என்பதற்கு உத்திரவாதங்கள் இல்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கிராமங்களில் ஆலமரத்தடியில் அமர்ந்து வெட்டியாக பழம் பெருமை பேசும் ஆண்களை நையாண்டி செய்கிறது. ஊர்ப்பெருமைக்காக போலியாகத் தன்னைப் புகழ்ந்துகொள்வதையும், சாதி மற்றும் ஊர்க்கட்டுப்பாடு என்னும் பெயரில் நடக்கும் கேலிக் கூத்துகளையும் போகிற போக்கில் இடதுகையால் டீல் செய்ததோடு பெண்களுக்கு நடக்கும் இளவயது திருமணங்களுக்கு எதிராகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு எழுத்தாளர் திட்டமிட்டு உருவாக்கினாரா அல்லது இயல்பாக நடந்ததா என்பது முக்கியமில்லை. ஆனால் பெரும் கொண்டாட்டமான இத்தகைய திரைப்படங்களில் இந்தப் பிரச்னை கையாளப்படும்போது ஏராளமான பார்வையாளர்களைச் சென்றடைகிறது. அந்த வகையில் பாலகுமாரா படத்தின் இறுதிக் காட்சியில் மது அருந்துவதற்கு எதிராக வைக்கப்படும் குரலும் முக்கியமானது. யதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகளின் வழியாகச் சொல்லப்படும் செய்திகள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் தங்கிவிடுகின்றன. நன்மையோ தீமையோ ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல எளிய வழி நகைச்சுவை.
இந்த வரிசையில் வந்த மற்றுமொரு முக்கியமான திரைப்படம் சென்னை 28. கிரிக்கெட்டையும் நட்பையும் பிரதானமாகக் கொண்ட கதை. சென்னை மாநகரையும் அதன் மனிதர்களையும் யதார்த்தமாக சித்திரித்த திரைப்படங்களில் இதற்கு முக்கியமான பங்குண்டு. வெவ்வேறு அடையாளங்களோடு ஒரே இடத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்வதில் உள்ள சுவாரஸ்யங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வெற்றிகள் குறித்த பெருமிதங்களை உடைக்கும் அந்தக் கடைசிக் காட்சி அபாரமானதொன்று.
இந்த எல்லாத் திரைப்படங்களிலும் பொதுவான அம்சங்களாக நான் பார்ப்பது அதன் யதார்த்தமும் எளிமையும் கூடவே அந்தந்த தருணங்களில் வாழ்தல் என்னும் முக்கியமான தத்துவமும் தான். கடந்த காலம் குறித்த கவலைகளிலும் எதிர்காலம் குறித்த அச்சங்களிலுமே நமது பெரும்பாலான வாழ்நாள்களைச் செலவழிப்பதால் இந்தத் தருணத்தின் அற்புதங்களை நாம் கவனிப்பதில்லை. மகிழ்ச்சியென்பது அந்தந்த தருணங்களில் வாழ்வதுதான். விம் வெண்டர்ஸின் பெர்ஃபெக்ட் டேய்ஸ் என்னும் திரைப்படம் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. அந்தந்த தருணத்தில் வாழ்தலின் அற்புதங்களை உணர்த்திய மகத்தான திரைப்படமாக அதனைக் குறிப்பிட வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட தமிழ் திரைப்படங்களிலும் இந்தக் கூறுகள் இருக்கின்றன. வாழ்வைப் புரிந்துகொள்ள ஒருவர் அதனை முழுமையாக ரசித்து வாழவேண்டும். இதனாலேயே மகிழ்ச்சியான திரைப்படங்களுக்கு முன்னெப்போதையும்விட அதிகமான தேவை இந்தக் காலகட்டத்தில் இருக்கிறது.