எம்.ஆர். ராதாவின் நக்கல்!

M_R_Radha
எம்.ஆர்.ராதா
Published on: 

என் தாத்தா சோலைமலை தமிழ் சினிமாவில் முக்கியமான கதாசிரியராக இருந்தவர். பீம்சிங் எடுத்த பா வரிசைப்படங்களின் கதாசிரியராக பங்களிப்பு செய்தவர். நான் சென்னையில் ஓவியக்கல்லூரியில் படித்தபோது அவருடன் பல படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றுள்ளேன். பல திரைக்கலைஞர்களைச் சந்தித்துள்ளேன். பல சம்பவங்களை அவர் என்னுடன் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞர் எம்.ஆர்.ராதா பற்றி அவர் சொன்ன சம்பவங்களை எப்போது கேட்டாலும் சிரிப்பு வரும்.

தாத்தா சோலைமலை எழுதிய பாகப்பிரிவினை படத்தை இந்தியில் எடுத்தார்கள். அதில் சுனில்தத், நர்கீஸ், ஜோடி நாயக நாயகியாக சிவாஜி- சரோஜாதேவி நடித்த பாத்திரங்களில் நடித்தனர். எம் ஆர்.ராதா ஏற்று நடித்த பாத்திரத்தில் பிரான் நடித்தார்.

இதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக மதர் இந்தியா என்கிற புகழ்பெற்ற இந்திப்படம் வெளியாகி இருந்தது. அதில் அம்மா வேஷத்தில் நர்கீஸ் நடித்திருந்தார். அவரது மகன் வேடத்தில்தான் சுனில் தத் நடித்தார். மதர் இந்தியா படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது நர்கிசை சுனில் தத் காப்பாற்றினார். அதில் இருந்து ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்பட்டு இவர்கள் திருமணம் செய்திருந்தனர்.  புதுமணத் தம்பதியாக  சென்னை வந்திருந்த  இவர்களுக்கு சென்னையில் பாகப்பிரிவினை படம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. இவர்களுடன் பிரானும் இருந்தார். படத்தைப் பார்த்த இவர்கள் பிரமித்தனர். எம்.ஆர்.ராதா நடிப்பைப் பார்த்த பிரான், ’இவரைப் போல் என்னால் நடிக்கவே முடியாது போலிருக்கிறதே’ என்று வியப்புடன் சொன்னார்.

அப்போது. அந்த இடத்தில் இன்னொரு ப்ளோரில் பீம்சிங்கின் அடுத்த படமான பாவமன்னிப்பு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அதில் எம்.ஆர்.ராதா நடித்த காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. இயக்குநர் பீம்சிங், கதாசிரியர் சோலைமலை எல்லோரும் அங்கே இருந்தனர்.  அவர்களைப் போய்ப் பார்ப்போமா என்று கேட்க, இந்தி நடிகர்கள் ஒப்புக்கொண்டனர்.

அவர்களைச் சந்தித்து சுனி்ல்தத் குழுவினர் பேசிக்கொண்டிருந்தனர். எம்.ஆர். ராதா அன்றைக்கு நல்ல கலகலப்பு மூடில் இருந்தார்.

சுனில்தத்- நர்கீஸ் ஜோடியைப் பார்த்த  ராதா, ’ஏம்பா.. நீங்கள்லாம் அதாவது இந்தி நடிகர்கள் எல்லாம் அட்வான்ஸ்டு ஆன ஆளுங்கப்பா…’ என்றார்.

தத்துக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன… ஏன்?’

‘ஒண்ணுமில்ல.. நாங்க எல்லாம் எங்க கூட அக்கா தங்கச்சியா நடித்த நடிகைகளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவோம். ஆனால் வட இந்திய நடிகர்கள் அம்மாவாக நடித்த நடிகையையே கல்யாணம் பண்ணிக்கிடறீங்கப்பா…. ரொம்ப அட்வான்ஸ்டுப்பா நீங்க.’’ என்று ராதா சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com