மாபெரும் நூல் கனவு - திருச்செங்கோடு திருவள்ளுவனார்

திருவள்ளுவனார் தன் துணைவியாரோடு
திருவள்ளுவனார் தன் துணைவியாரோடு
Published on

 சுமார் 60 ஆண்டுகளாக புத்தகங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருபவர் திருச்செங்கோடு திருவள்ளுவனார். வீட்டை நூலகம் ஆக்கி அதற்குள்தான் அந்த குடும்பமே வாழ்கிறது என்று சொல்கிற அளவுக்கு வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்கள்.

 அவரிடம் பேசியதிலிருந்து:

“என் தந்தை பெயர் முனியப்பன், அம்மா ஜானகி.

அப்பாவுக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டு. அப்பா அவரது சின்ன வயதில் இருந்தே  கலைக்கதிர், மஞ்சரி போன்றவற்றை 1940-1950களில் இருந்து வாங்கிச்சேர்த்து பைண்ட் செய்து வைத்திருப்பார். அவற்றைச் சந்தா கட்டி தான் வாங்கிப் படிப்பார். கலைக்கதிர் ஆண்டுச் சந்தா ஆறு ரூபாய். ஓர் இதழ் எட்டணா. அப்படி வீட்டுக்கு விடுதலை பத்திரிகையும் வரும். அந்தக் காலத்தில் கல்வி கற்றவர்களே மிகவும் குறைவு. பத்திரிகை, புத்தகம் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால் அப்பா புத்தக வாசிப்பாளராக இருந்தார். அதைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருக்கும். அது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது.

அவர் ஒரு சித்த மருத்துவர். குறிப்பாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மருந்து கொடுப்பதில் பெயர் பெற்றிருந்தார். அவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். பெரியார் சேலம், திருச்செங்கோடு வந்தால் எங்கள் வீட்டில் தான் தங்குவார். முதல் நாளே தகவல் வந்துவிடும். பெரியார், மணியம்மை போன்றவர்களுக்கு அம்மாதான் சமைத்து சாப்பாடு ஏற்பாடு செய்வார். எனக்குத் தெரிந்து பெரியார் பத்து முறையாவது  எங்கள் வீட்டுக்கு வந்திருப்பார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு அப்பா கட்சியில் தீவிர செயல்பாடுகளைக் குறைத்து ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டார். ஆனால் புத்தக வாசிப்பை நிறுத்தவில்லை. அப்படியே என்னிடம் அதை மடைமாற்றியது போல் என் வழியே அது தொடர்ந்தது .

நான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சின்ன வயதில் அர்த்தம் புரியாமலேயே பலவற்றையும் நான் வாசித்தேன். அப்பா புத்தகப்பிரியர்  என்றால் நான் புத்தகவெறியர் என்று சொல்லும் அளவிற்குப் போகப் போக புத்தகங்கள் மீது எனக்குப் பேரார்வம் வந்தது.  இந்த மாற்றம் எனக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.அது இன்று வரை குறையாமல் இருப்பது தான் ஆச்சரியம்.

முதலில் தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார், போன்ற கல்கண்டு இதழில் வருகிற தொடர் கதையைக் கிழித்து பைண்ட் செய்ய ஆரம்பித்த நான், பிறகு பொது வாசிப்புக்குரிய எழுத்தாளர்கள் தொடர்கள், எழுதுவது அனைத்தையும் அப்படி பைண்ட் செய்ய ஆரம்பித்தேன். தினமணி கதிர், விகடன் பிறகு குமுதம் போன்ற இதழ்களில் இருந்து இப்படிச் செய்ய ஆரம்பித்தேன்.

தொடர்ந்து வாசிக்கும் போது வாசிப்பின் படிநிலைகள் எழுத்துகளின் தர வேறுபாடு, எழுத்தில் ஆழ அகலங்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தன.தெரிந்ததும் அப்படியே மெல்ல மெல்ல பரவலாக வாசிக்க ஆரம்பித்தேன்.  என்னுடன் வங்கியில் வேலை பார்த்த நண்பரான வ.னிவாசன் மூலம் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு எனது வாசிப்பு மாறியது. பிறகு தி. ஜானகிராமன், லா.ச.ரா., அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், புதுமைப்பித்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் படைப்புகளுக்குள் நுழைந்தேன்.அப்புறம்  ஜெயகாந்தன் படைப்புகளில் ஆர்வம் வந்து தொடர்ந்து  இன்று எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பா திராவிடர் கழகத்தின் தீவிர செயல்பாட்டாளராக இருந்தாலும் அவர் ஒரு ஜனநாயகவாதியாக இருந்தார் .எந்தக் கருத்தையும் என் மீது திணித்ததில்லை. எனக்கு மிகவும் சுதந்தரம் கொடுத்தார். எனவே நான் பெரியார் நூல்களை மட்டுமல்ல பக்தி இலக்கியங்களையும் வாங்கினேன். பன்னிரு திருமுறைகளும் என்னிடம் உள்ளன. எனது அலமாரியில் ஒரு பக்கம் பெரியார் நூல்கள் இருக்கும். மறுபக்கம் காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் தொகுதிகள் இருக்கும்

தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் உரைகள் என்று பார்வை நூல்களாக நிறைய என்னிடம் உள்ளன. பிரம்மராஜனின் மீட்சி, யுகமாயினி, ஓம் சக்தி, காலச்சுவடு, உயிர்மை,  திசை எட்டும்  போன்றவற்றைத் தொடர்ந்து சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர்களும், அறுபதுகளுக்கு முந்திய விகடன் மலர்களும் உள்ளன.

கம்பராமாயணம், மகாபாரதம் தொகுதிகள், பாரதியின் காலவரிசைப் படுத்தப்பட்ட படைப்புகள் தொகுதிகள் போன்றவை என்னிடம்  உள்ளன. முன் வெளியீட்டுத்  திட்டத்தின்படி வர்த்தமான் பதிப்பகம் வெளியிடும் அனைத்து பெரிய தொகுதிகளையும் நான் புக் செய்து வாங்கி விடுவேன். நான் வெளியூர்களுக்குச் செல்லும்போதும், புத்தகக் கண்காட்சியின் போதும் நிறைய புத்தகங்கள் வாங்குவேன். நான் கவிதைகள் பெரிதாக வாங்குவதில்லை. பாரதியார், பாரதிதாசன் இப்போது கல்யாண்ஜி வரை சிலவற்றையே படித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

எனது நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் எந்தெந்த வகை, யார் எழுதியது, எது எங்கு இருக்கிறது என்று 70% நான் இனம் கண்டுபிடித்து  எடுத்து விடுவேன். பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் வாரியாகத் தனித்தனியாக வைத்திருக்கிறேன். ஒன்று இரண்டாக உள்ள நூல்கள்  கண்டுபிடிப்பது  சிரமமாக இருக்கும்.

ஆசைப்பட்டு வாங்கிய இவ்வளவு புத்தகங்களில் எல்லாவற்றையும் படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் புத்தகம் நமக்குத் தேவை என்று நான் வாங்கி விடுவேன். புத்தக விமர்சனங்களாலும் நண்பர்கள் படிக்க வேண்டிய நூல் என்று கூறுவதாலும் வாங்கிவிடுவேன்.

இப்போது அலைந்து வாங்க வேண்டியது இல்லை. உடனே உணர்ச்சிவசப்பட்டு ஆன்லைன் புக் செய்து, உடனே வரவழைத்து விடுவேன். ஆனால் மனம் நினைக்கிறது படிக்க வேண்டும் என்று, உடல் தான் ஒத்துழைக்காமல் இருக்கிறது.

என்னிடம் ஒரு பழக்கம், அது தவிர்க்க வேண்டியதுதான். என்றாலும் முடியாமல் தொடர்கிறது. என்னிடம் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று சில நேரம் குழப்பமாக இருக்கும். எனவே வாங்கிய புத்தகத்தையே மீண்டும் வாங்கி விடுவேன்.

நான் புத்தகம் வாங்குவதை வீட்டில் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேட்பதுண்டு.  ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒவ்வாமை இருந்தது .பிறகு அப்படியே விட்டு விட்டார்கள். அதனால் புத்தகங்கள் என்னை மட்டுமல்ல வீட்டையும் ஆக்கிரமித்துள்ளது. நான் புத்தகங்களை இரவல் கொடுக்க மாட்டேன்.  என்னிடம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தாலும் இங்கே நேரில் வந்து பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மட்டும் அனுமதித்து வருகிறேன்.

புத்தகங்கள் என்னுடன் இருப்பதை அந்த படைப்பாளிகளும் என்னுடன் இருப்பதைப் போன்று மகிழ்ச்சியாக உணர்கிறேன்,’’ என்கிறார் திருவள்ளுவனார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com