
அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம், அந்தக்கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டணி அமைய வேண்டும் என்ற முழக்கம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வருகின்ற விஷயம். அந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக அவ்வப்போது மூன்றாவது அணிகள் அமைக்கப்படுவதும், தேர்தல் நெருக்கத்தில் அந்த மூன்றாவது அணி அதிமுக எதிர்ப்பு அணி அல்லது திமுக எதிர்ப்பு அணியாகச் சுருங்கி, இரண்டில் ஒரு கட்சியை வெற்றிபெற வைப்பதும்தான் கடந்தகால வரலாறு.
அந்த வரலாற்றைத் திருத்தி எழுதுகிறோம் என்று சொல்லி 2016 ஆம் ஆண்டில் உருவான கூட்டணி மக்கள் நலக்கூட்டணி. அந்த அணி உருவாக்கப்பட்ட விதம், எடுத்துவைத்த வாதங்கள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சந்தித்த சவால்கள் எல்லாமே தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமானவை. குறிப்பாக, அந்தக் கூட்டணிக்குக் கிடைத்த தேர்தல் முடிவு.
2014 மக்களவைத்தேர்தலுக்கு முன் அதிமுக அணியிலிருந்து வெளியேறிய இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேர்தலுக்குப் பின்னர் திமுக அணியிலிருந்து விலகிய திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, பாஜக அணியிலிருந்து விலகிய வைகோவின் மதிமுக ஆகிய கட்சிகள் எந்தவொரு தேர்தல் கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்தனியே இயங்கிக்கொண்டிருந்தன.
அப்போது, “ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி” என்ற முழக்கத்தை எழுப்பினார் விசிக தலைவர் திருமாவளவன். தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைத்துக்கொள்ளும் பெரிய கட்சிகள் ஆட்சி அமைக்கும்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தருவதில்லை. இந்த நிலை இனியும் கூடாது. எதிர்வரும் தேர்தலில் சிறிய கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளுடன் அதிகாரப் பகிர்வைக் கோரவேண்டும். இனி ஒருகட்சி ஆட்சி என்பது கூடாது, கூட்டணி ஆட்சியே வரவேண்டும் என்றார் திருமாவளவன்.
அந்த முழக்கம் பரவலான கவனத்தை ஈர்த்து, அரசியல் களத்தில் பேசுபொருளானதும், இடதுசாரித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன். பிறகு மதிமுக, இடதுசாரிக் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர். அப்போது அவர்களுடன் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கமும் சேர்ந்து கொண்டது.
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளுக்காக மக்கள் நலக்கூட்டியக்கம் தொடர்ந்து போராடும் என்று அறிவிக்கப்பட்டது. திடீரென ஒருநாள் அந்தக் கூட்டியக்கத்தில் இருந்து விலகினார் தமிழருவி மணியன். ஏனென்று கேட்டபோது, “கூட்டியக்கத்தில் உள்ள சில கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் திமுக பக்கம் சென்று விடும்” என்று விளக்கம் கொடுத்தார் தமிழருவி மணியன். அதன்பிறகு மற்ற ஐந்து கட்சிகளும் கூட்டியக்கமாகவே செயல்பட்டனர்.
பிறகு கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, “பஞ்சபாண்டவர் அணியாக இருக்கும் நாங்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் இணைந்தே போட்டியிடுவோம்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த ஜவாஹிருல்லா, “தமிழ்நாட்டில் உள்ள 64000 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்கும் பலம்கூட இல்லாத நிலையில், சேர்ந்தே தேர்தலை எதிர்கொள்வது எப்படி?” என்ற கேள்வியை எழுப்பி, மக்கள் நலக் கூட்டியக்கத்திலிருந்து வெளியேறினார்.
அரசியல் கூட்டணியாக மாறுவதற்கு முன்பே இரு நண்பர்களை இழந்தாலும், மக்கள் நலக் கூட்டியக்கத்தை முழுமைப்படுத்தும் முயற்சியாக குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கும் பணிகள் தொடங்கியபோதே விமரிசனங்கள் எழுந்தன. மதிமுக, விசிகவின் ஈழக்கொள்கை மீது சிபிஎம்முக்கு உடன்பாடு கிடையாது. முல்லைப் பெரியாறு விஷயத்தில் இடதுசாரிகளின் நிலைபாட்டை மதிமுக ஏற்காது. பூரண மதுவிலக்குதான் மதிமுக, விசிகவின் விருப்பம். ஆனால் மதுப்பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதுமே சாத்தியம் என்பது சிபிஎம்மின் நிலைப்பாடு.
இத்தனை வேறுபடும் புள்ளிகள் இருந்தாலும், ஒன்றுபடும் புள்ளிகளைக்கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கினர் மக்கள் நலக் கூட்டியக்கத்தினர். அத்தோடு நான்கு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார் என்றும் அறிவித்தனர். அந்தக் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தின் தேமுதிக, ஜி.கே.வாசனின் தமாகா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, SDPI கட்சியைச் சேர்க்க விரும்பியது விடுதலைச் சிறுத்தைகள். ஆனால் கேரள அரசியலில் இடதுசாரிகள் – SDPI இடையே நல்லுறவு இல்லை என்பதால் அந்தக் கட்சி தவிர்க்கப்பட்டது.
விஜயகாந்தையும் ஜி.கே.வாசனையும் கூட்டணிக்கு வருமாறு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அழைத்தது பலத்த விமர்சனங்களை எழுப்பியது. காங்கிரஸின் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்று, அதன் அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜி.கே.வாசன் எப்படி திடீரென புனிதமடைந்தார்? பாஜகவுடனான கூட்டணியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் விஜயகாந்தை அழைப்பது எந்த வகையில் கொள்கைபூர்வமான முடிவு என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.
அந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலைச் சொன்னவர் திருமாவளவன் மட்டுமே. விஜயகாந்தின் தேமுதிகவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அது மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்தால், மாற்று அரசியலை முன்வைக்கும் முயற்சிக்கு வலு கூடும்; தேமுதிகவுக்கும் அரசியல்ரீதியாக நல்ல பலன் கிடைக்கும் என்றார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தைப் பாராட்டி பத்திரிகை ஒன்றில் பேட்டி கொடுத்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பிறகு அவருடைய அழைப்பின் பேரில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் முதலியோர் விஜயகாந்தைச் சந்தித்தனர். பிறகு தமாகா தலைவர் ஜி.கே.வாசனையும் சந்தித்தனர்.
அந்தச் சமயத்தில்தான் மாற்று அரசியல் பேசும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. மக்கள் நலக்கூட்டணியில் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை, எல்லோரும் சமம் என்று சொல்லிவிட்டதால், வாக்குவங்கி ரீதியாகவும் நான்கு கட்சிகளுமே சமபலத்துடன் இருப்பது போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டது.
அப்போது மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் பெயர் பேசப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளரைத் தேர்தலுக்கு முன்னர் அறிவிப்பது ஜனநாயக நெறிமுறைக்கு முரணானது என்று சொல்லிவிட்டார் நல்லகண்ணு. இறுதியாக, மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் விஜயகாந்த் கூட்டணிக்குள் வரும்பட்சத்தில், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தபோது, “இன்றுவரை முதல்வர் வேட்பாளர் என்று எவரையும் அறிவிக்கும் திட்டமில்லை. ஆனால் விஜயகாந்த் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், அதுபற்றி எங்களுக்குள் விவாதித்து, முடிவெடுப்போம்” என்றார் திருமாவளவன்.
இந்தப் பின்னணியில்தான் மக்கள் நலக்கூட்டணியின் மாநாடு மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதில் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பேசினாலும், திருமாவளவனின் பேச்சு மட்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழ்நாட்டில் ஊழல் புற்று வளர்ந்து கிடக்கிறது. அந்தப்புற்றில் கட்டுவிரியன் குடியிருக்கிறது. கட்டுவிரியனை விரட்டிவிட்டு, கண்ணாடி விரியன் குடிபுகப் பார்க்கிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் மாற்றாக, என் குட்டிப்பாம்பை ஆட்சியிலே அமர வையுங்கள் என்கிறது சாதிப் பாம்பு என்றார். ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், அன்புமணி ஆகியோரையே மறைமுகமாக விமரிசிக்கிறார் திருமாவளவன் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால் அதனை அறிக்கை வாயிலாக மறுத்தார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மதிமுகவுக்கு மட்டுமே பெரும்பாலான தொகுதிகளில் கட்சிக் கட்டமைப்பும் ஆதரவுத்தளமும் இருந்தது. கூடக்குறைய இருந்தாலும், நிரூபிக்கப்பட்ட வாங்குவங்கி கொண்ட கட்சி மதிமுக மட்டுமே. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணியில் நின்று கிடைத்த வாக்கு சதவிகிதத்தையே தங்கள் வாக்கு சதவிகிதமாக முன்வைத்தன.
வடமாவட்டங்களில் அடர்த்தியான வாக்கு வங்கி கொண்ட கட்சி விசிக தலித் கட்சியாக அறியப்பட்டாலும்கூட ஈழ ஆதரவு, சமூகநீதி, தமிழ்த் தேசியம், பெண்ணுரிமை, சிறுபான்மையினர் உரிமை, மாநில உரிமை என்று பல விஷயங்களை முன்வைத்துப் போராடும் கட்சி என்பதால், அந்தக் கட்சிக்குப் பொதுத்தளத்திலும் ஆதரவு இருந்தது.
இடதுசாரிக் கட்சிகளுக்கு சிறிய வாக்கு வங்கியும் பெரிய மரியாதையும் உண்டு. முக்கியமாக, மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் ஏதுமில்லை. ஆனால் சிபிஎம்முக்கு 10 எம்.எல்.ஏ.களும் இந்திய கம்யூனிஸ்டுக்கு 9 எம்.எல்.ஏ.களும் இருந்தனர். மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு இடதுசாரிகளின் பிரதிநிதிகளாக டி.ராஜா, டி.கே. ரங்கராஜன் செயல்பட்டுவந்தனர்.
இந்த அம்சங்களை எல்லாம் தாண்டி, பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளோடு மக்கள் நலக்கூட்டணி உருவாகியிருந்தது. அந்தக் கூட்டணியைப் பலப்படுத்தும் வகையில் தேமுதிகவும், தமாகாவும் சேர்ந்துகொண்டன. அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது மக்கள் நலக்கூட்டணி.
அந்தக் கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. மதிமுக 29 தொகுதிகளிலும், தமாகா 26 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்தும் காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனும் போட்டியிட்டனர். கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார் வைகோ. பிறகு மக்கள் நலக் கூட்டணி மிகத்தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்துமுடிந்து, முடிவுகள் வெளியானபோது மக்கள் நலக்கூட்டணிக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பலமான மாற்று என்று சொல்லப்பட்ட தேமுதிக, தமாகா - மக்கள் நலக்கூட்டணி வெறும் ஆறு சதவிகித வாக்குகளையே பெற்றது.
ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, கூட்டணி ஆட்சி என்ற மூன்று முக்கிய முழக்கங்களுடன் உருவான எங்கள் அணி, தேமுதிக மற்றும் தமாகாவின் உதவியுடன் ஆட்சியில் அமரும் என்றனர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள். ஆனால் ஆறுகட்சிக் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்கிற விஜயகாந்தின் கணிப்பைப் பொய்யாக்கியது தேர்தல் முடிவு. மக்கள் நலக்கூட்டணி நூறு சதவிகித தோல்வியைப் பெற்றிருந்தது.
அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோற்றுப்போனார். காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட திருமாவளவன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். என்றாலும், திமுக மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பையும் மீண்டும் கருணாநிதி முதல்வரானதற்கான வாய்ப்பையும் தடுத்து நிறுத்தியிருந்தது மக்கள் நலக்கூட்டணி. முக்கியமாக, அதிமுக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு மக்கள் நலக்கூட்டணி மறைமுகப் பங்களிப்பைச் செய்திருந்தது.
இந்த இரண்டு அம்சங்களைத் தாண்டி மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் முடிவுகளை நுணுக்கமாகப் பார்த்தால், மூன்றாமிடத்தைப் பெறுவதற்தே பாமகவுடனும் பாஜகவுடனும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தியிருந்ததைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தின.
பாமக செல்வாக்குள்ள வட மாவட்டங்களில் பெரும்பாலும் பாமகவுக்கே மூன்றாமிடம் கிடைத்தது. அங்கே மக்கள் நலக்கூட்டணியினருக்கு நான்காமிடம்தான் கிடைத்திருந்தது. அதேபோல, பாஜக செல்வாக்குள்ள கோவை, குமரி முதலிய பகுதிகளில் பாஜகவுக்கே மூன்றாமிடம் கிடைத்தது. அங்கேயெல்லாம் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நான்காமிடம்தான் கிடைத்திருந்தது.
பாமக, பாஜக செல்வாக்குடன் இல்லாத பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் மூன்றாமிடத்துக்கு வந்தனர். ஆக, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவான மக்கள் நலக்கூட்டணி என்கிற மூன்றாவது அணி தேர்தல் களத்தில் மூன்றாமிடத்துக்கு வருவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் 2016 சட்டமன்றத்தேர்தல் உருவான மக்கள் நலக்கூட்டணியின் மூலம் கிடைத்த தேர்தல் பாடம்!
(ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். இந்தியத் தேர்தல் வரலாறு, தமிழக அரசியல் வரலாறு முதலான புத்தகங்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)