கடல் பேரிடர்களும் கடைசி மைல் கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி. அவ்வாண்டு டிசம்பர் 26இல் (இந்திய நேரப்படி காலை 6:28 மணி) இந்தோனேசியாவின் ஏசெ பகுதியில் யுரேசிய, ஆஸ்திரேலிய கண்டத் தட்டுகளுக்கு இடையில் நேர்ந்த நகர்வினால் உருவான கடற்கோள். கடல் தரையின் அடியில் 10 கி.மீ. ஆழத்துக்குக் கீழே கண்டத்தட்டுகள் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டபோது ஒன்பது ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக, பல்லாயிரம் கனகிலோமீட்டர் கடல்நீர் 1000 கிலோமீட்டர் வேகத்தில் நாலா திசையிலும் பயணித்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வு நிமிடத்துக்கு 970கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது; சுனாமியின் வேகம் மணிக்கு 900கி.மீ. கரைநிலத்தில் சுனாமி ஏற்படுத்தும் தாக்கமானது, கடலடித் தரையின் தன்மையைப் பொறுத்து (ஆழம், சாய்கோணம், பாறைகள், பவளத்திட்டுகள்) மாறுபடும். கரையை நெருங்க நெருங்க, வேகம் தடைபட்டு மணிக்கு 40கி.மீ. ஆகக் குறைந்து, பெரும் விசையாய் மாறி, கரையில் மோதுகிறது. சுனாமி என்பது இந்த விசையின் தாக்கம்.
14 நாடுகளில் 2,30,000 பேரைக் கொன்றழித்த 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி இந்தியாவில் 18,000த்துக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டது. இயற்கை அரண்களற்ற, தாழ்வான பகுதிகள் 2004 சுனாமியின் முதன்மை இலக்குகளாகியிருந்தன. மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள பவளப்பாறைகள் இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சுனாமி தாக்குதலிலிருந்து முழுமையாகப் பாதுகாத்தன. கிழக்குக் கடற்கரையில் அலையாத்தி வனங்கள் ஆறு ஊர்களைச் சுனாமியிலிருந்து பாதுகாத்தது; தேவனாங்குப்பம் (கடலூர்), அக்கரைப்பேட்டை (நாகை) போன்ற கிராமங்களில் சுனாமி அலை சில கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தை மூழ்கடித்தது. அதே வேளையில் சின்னமேடு (நாகை) கிராமத்தில் மணல்மேடு அரணாக நின்று அவ்வூரைப் பாதுகாத்தது. தமிழ்நாட்டின் ஒரே இயற்கைத் துறைமுகமான குளச்சல்- கொட்டில்பாடு கடற்கரைகளில் சுனாமி அலையின் தாக்கம் மிகக் கடுமையாய் இருந்தது. கன்னியாகுமரியில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று கீழமணக்குடி.
பழையாறு கழிமுகத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் கீழமணக்குடி கிராமம் இயல்பாகவே தாழ்வான நிலப்பகுதி ஆகும். மேற்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக நபார்டு வங்கிக் கடனுதவியுடன் நிறுவப்பட்டிருந்த பாலம், அப்பகுதி மக்களின் நாற்பதாண்டுக் கனவு. கீழமணக்குடி - மணக்குடி கிராமங்களை இணைத்தவாறு கழிமுகத்தின் குறுக்காக, அலைவாய்க்கு மிக அருகில் கட்டப்பட்டிருந்த பாலம் அது. தூண்களின் மீது, இணைப்பு எதுவுமின்றி, இராட்சத காங்கிரீட் தளங்கள் வைக்கப்பட்டிருந்தன. பொங்கி உயர்ந்து கழிமுகத்தில் நுழைந்த சுனாமி இராட்சத அலை கடலுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, பாலத்தின் எச்சமாகத் தூண்கள் மட்டுமே நின்றன. கீழமணக்குடி கிராமம் ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது.
***
2015இல் கடலூரிலும் சென்னையிலும் நேர்ந்தவை பெருவெள்ளப் பேரிடர்கள். நீர்நிலைகளையும் நிலத்தையும் கையாண்டுவந்த முறைகளால் சென்னை நகரம் மழைக்காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது. 2016இல் சென்னையைப் பாதித்த வர்தாப் புயல் கடற்கரைப் பேரிடர். புயலைப் பொறுத்தவரை, வளி மண்டலத்தில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை ஈடுசெய்யும் பொருட்டு, நாலாபுறத்திலிருந்தும் வருகிற காற்று, ஒரு புள்ளியில் மோதி, சுழல்வடிவம் கொண்டு, ஒப்பீட்டளவில் குறைந்த அழுத்தம் நிலவும் திசை நோக்கி நகரத் தொடங்கி கரைகடக்கிறது. நிலம் புயலின் தீவிரத்தைப் படிப்படியாகத் தணிக்கும். பொதுவாக வெப்பமண்டலப் புயல் பயணிக்கும் பாதையை தொழில்நுட்பங்களின் துணைகொண்டு 72 மணி நேரத்துக்கு முன்பாகவே கணித்துவிட முடியும். அமெரிக்காவில் ஐந்து நாள்களுக்கு முன்னர் கணிக்கும் தொழில்நுட்பம் உண்டு. அங்கு புயலின் வகைகள் வேறு.
நவம்பர் 2017 ஒக்கிப் புயல் கணிப்புக்கு அடங்கவில்லை. 2018 கஜாப்புயலும் கூட. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஒக்கிப் புயலுக்கு 18 மணி நேர எச்சரிக்கைதான் கொடுக்க முடிந்தது. அந்த எச்சரிக்கை கூட ஆழ்கடலில் 100 கடல்மைல் தொலைவிலிருந்த 1000த்துக்கு மேற்பட்ட தமிழக மீனவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. முறையான மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக மீனவர்கள் 224 பேர் ஆழ்கடலில் பலியாயினர்.
காலந்தோறும் வானிலை எச்சரிக்கையைப் பெற்றுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பயிற்சியும் அதற்கான கருவிகளும் மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இவை நடக்கவில்லை என்பதுதான் ஆழ்கடல் புயல் மரணங்களுக்குக் காரணம். ஒக்கி புயலின்போது ஆழ்கடலில் படகுகள் கவிழ்ந்தன; எனினும் எல்லா மீனவர்களும் உடனே இறந்துவிடவில்லை. கடலுக்குள் எந்த இடத்தில் இருக்கிறோம் என அவர்கள் கரைக்கு செய்திகளைக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அந்தச் செய்திகளின்படி அரசு துறைகள் சரியாக வேலை செய்திருந்தால் 200 மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். ஒக்கிப் புயலில் உயிரிழந்த கேரள மீனவர்கள் 230 பேர். உண்மையில் இன்னும் பலநூறுபேர் இறந்திருப்பார்கள். அந்த மாநில அரசின் அழுத்தத்தால் கடற்படையின் தென்மண்டல பிரிவு நிறைய பேரைக் கடலுக்குள் இருந்து மீட்டு கொண்டுவந்தது. அதற்கு இணையான முயற்சி தமிழகத்தில் நிகழவில்லை. தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு அரசியலில் குரல் இருக்கவில்லை. மீனவர்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் இடையில் சரியான தகவல்தொடர்பு இல்லை. இன்றைக்கும் அதுதான் நிலைமை. நிற்க.
பொதுவாக, புயல் கரை கடப்பதையே பேரிடர் நிகழ்வாகப் பார்க்கிறோம். புயல் நிலத்தில் சேதத்தை விளைவிக்கும் என்பதே நமது புரிதலாக உள்ளது. ஆழ்கடலில் புயல் நிகழும்போது கடலுக்கு என்ன ஆகும்? அங்குள்ள உயிரினங்களுக்கு என்ன நிகழும்? அதன் உயிர்ப்பன்மையத்துக்கு என்ன ஆகும்? அங்கிருக்கும் கப்பல்கள், படகுகள், மனிதர்களுக்கு என்ன நேரும்? 200 கடல்மைல் வரை நமக்கான முற்றுரிமைப் பொருளாதாரப் பகுதி; அங்குள்ள வளங்களை அறுவடை செய்து வருவது மீனவர் உரிமை எனில், அதற்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.
இந்தியா 7000கி.மீ. கடற்கரையைக் கொண்டது. அதன் தேசியப் பேரிடர் சட்டத்திலோ, மேலாண்மைத் திட்ட ஆவணங்களிலோ கடல் பேரிடர்களைக் கையாள்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை! தேசியப் பேரிடர் ஆணையம் 2018 நவம்பரில் புது தில்லியில் ‘பேரிடர் எச்சரிக்கைக் கட்டுமானங்கள்’ என்னும் பொருண்மையில் தேசியப் பட்டறையை நிகழ்த்தியது. கடல் பேரிடர் முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரண அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவையை அந்த அரங்கில் வலியுறுத்தினேன்.
கடல் எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட நீர்ப்பரப்பு. அது பருவம்தோறும் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. பெருங்கடல், கரைக்கடல் நீரோட்டங்களாக, ஓதங்களாக, அலைகளாக. புயல் ஓர் இயற்கைச் சீற்றம்; அது கடலைத் தலைகீழாகப் புரட்டிப் போடும். கடலுக்கு அடியில் இருக்கும் சேறு, சகதி எல்லாவற்றையும் மேலே கொண்டுவந்துவிடும். அதனால், புயலுக்குப் பிறகு பொதுவாக மீன்வளம் பெருகும்.
வெப்பமண்டலப் புயல்கள் கரைகடக்கும் பகுதிகளில் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்படும்; புயல்வெள்ளம் (storm surge) நிலங்களை மூழ்கடிக்கும். கஜாப் புயல் மேலாண்மையில், மறுகட்டுமானத்தில் மாநில அரசு அரசு எப்படி கோட்டைவிட்டது என அங்கு மீனவர்கள் நினைவுகூர்ந்தார்கள். 80 நாள்களுக்குப் பிறகு அந்தப் பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். வெள்ளப்பள்ளம் (நாகப்பட்டினம்) மீனவர்கள் கஜாப்புயல் சுனாமியைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்கள். புல்டோசர்களால் கூட வீட்டின் கூரை உயரத்துக்கு நிரம்பியிருந்த சேற்றை நீக்க முடியவில்லை. படகுகளைக் கடலுக்குக் கொண்டுபோகவும் முடியவில்லை. உடனடி இழப்புகள் தவிர, கஜாப்புயல் விவசாயத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. நிலம் உவர்ப்பாகி விவசாயத்துக்குத் தகுதியிழந்து போனது.
தமிழ்நாட்டில் வடக்கில் கொற்றலை ஆறு முதல் தெற்கே குழித்துறை ஆறு வரை கடலுக்குள் நல்ல தண்ணீரைக் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தன. வங்கதேசம் டாக்கா முதல் மகாநதி, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆறுகள் வங்கக்கடலில் கலந்துகொண்டிருந்த காலம் வரை கடலின் இயங்கியல் இயல்பாக இருந்தது.
கடலுக்கு வருகிற ஆற்றுநீர் கடலில் உடனே கலந்துவிடுவதில்லை. ஆற்று நன்னீரின் அடர்த்தி கடல் நீரைவிட குறைவு. பல கி.மீ. தொலைவுக்கு ஆற்று நன்னீர் கடலுக்குள் வேகத்தில் சென்றபடி இருந்திருக்கிறது. கடல் மீது படலமாக இருக்கும். இந்த உப்புநீர்- நன்னீர் படலங்கள் வங்கக் கடலில் புயலின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. இப்போது போதுமான தண்ணீர் வந்து சேரவில்லை. வெப்ப மண்டலப் புயல்களைக் கணிக்க முடியாமல் போனதற்கு வங்கக் கடற்பரப்பில் நேர்ந்துள்ள இம்மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
கடல் மட்டம் உயர்ந்து சில இடங்களில் நிலத்துக்கு அடியிலிருந்து கடல் நீர் மேலே வருகிறது இதை உலர்காலப் பெருவெள்ளம் (dry flood) என்பார்கள். மயிலாடுதுறைக் கடற்கரைகள் ஓர் உதாரணம். காலநிலை மாற்றத்தினால் கடல் மட்டம் உயர்கிறது. விதி மீறிய, கட்டுமானங்களால் கடல் அரிமானம் கரை நிலங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. கடல் அரிப்புக்கு தடுப்புச் சுவர்கள் நிரந்தரத் தீர்வு அல்ல என்பதை மீனவர்களும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
***
பேரிடர்ப் பாதிப்புகளைக் குறைப்பது எப்படி? புயல் அடிக்கடி நிகழும் இடங்களில் காற்றால் அடித்துச் செல்லப்படக்கூடிய ஓட்டு, தகரக் கூரைகளைத் தவிர்க்கலாம். தமிழ்நாட்டுக் கடற்கரையில் வழக்கமான மின் கம்பங்களுக்குப் பதிலாக புதை மின்வடங்களை நிறுவிடவும், புயல் அபாயப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு முன் எச்சரிக்கைக் கருவிகள் வழங்கவும் 2012இல் ஆசிய வங்கியில் பெருநிதியைப் பெற்றிருந்தார்கள். ஆனால் திட்டம் ஏனோ முழுமை பெறவில்லை.
கடற்கரையை எப்படி வைத்திருந்தால் சுனாமி, புயல், பெருவெள்ளம் போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும் என்று சுனாமி நிவாரண காலத்தில் பலதரப்பில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று வரை முறையான முற்காப்பு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதாய்த் தெரியவில்லை. பொதுவெளியில் மீனவர் வாழ்வியல், பண்பாடு பற்றிய புரிதலற்றிருந்த நிலையில் சுனாமி மறுகட்டுமானமே மற்றொரு சுனாமியாய்க் கவிந்தது. மீனவர்களின் பாதுகாப்பைச் சொல்லி அவர்களின் பாரம்பரிய குடியிருப்புகளிலிருந்து பல கிராமங்கள் இடம்பெயர்க்கப்பட்டன.
சுனாமிப் பேரிடருக்கு மூன்று மணிநேர அவகாசம் இருந்தபோதும் எச்சரிக்கை கிடைக்காதால், ஏதும் செய்ய முடியவில்லை என்று சொல்லப்பட்டது. கிடைத்திருந்தால் கூட, சுனாமி பற்றிய அறிவோ, முறையான பயிற்சியோ இல்லாமல் என்னதான் செய்திருக்க முடியும். 1999 அக்டோபர் 29ல் பாராதீப்பில் மணிக்கு 260கி.மீ. வேகத்தில் வீசிய ஒடிஷா பெரும்புயலில் 10,000பேர் பலியாயினர். 2013 புயலில் கோபால்பூரில் (ஒடிஷா) இறப்பு எண்ணிக்கை இரண்டு இலக்கத்துக்குக் குறைவாகவே இருந்தது. முறையாக முன்னறிவிப்புடன், ஒடிஷா, ஆந்திரா கடற்கரைகளிலிருந்து 5.5 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்க்கப்பட்டனர்.
ஒரு பேரிடர் நேர்ந்துபோனால் என்ன செய்ய வேண்டும்? மீட்பு, நிவாரணம் மறுகட்டுமான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, பேரிடரிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு அப்பேரிடர் மீண்டும் நிகழாவண்ணம் திட்டமிட்டுச் செயல்படுவதே ஒரு பொறுப்பான அரசின் கடமையாகும்.
2001 ஜனவரியில் ஏற்பட்ட பூஜ் (குஜராத்) நிலநடுக்கத்தில் 14,000 பேர் உயிரிழந்தனர். இதில் 11,000 பேரின் மரணத்துக்குக் காரணம் மீட்பிலும் மருத்துவச் சிகிச்சை அளிப்பதிலும் ஏற்பட்ட சுணக்கம், இதனைக் கருத்தில் கொண்டு மறுகட்டுமான காலத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சில கரிசனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது: நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் வீடுகளை அமைத்தார்கள். ஓட்டுக்கூரைகளைப் புயலைத் தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பத்தோடு அமைத்தார்கள். அடித்தள விலக்க தொழில்நுட்பத்துடன் மூன்று மாடி அரசு மருத்துவமனை கட்டினர்; மீட்பு, மருத்துவப் பணிகளில் தடை நேராதிருக்க உள்வட்ட, வெளிவட்டசாலைகள், நெடுஞ்சாலைகளை அமைத்தனர்.
ஒடிஷாவில் 1999 பாராதீப் புயலும் 2013 கோபால்பூர் புயலும் கடுமையில் கிட்டத்தட்ட சமமானவை. இரண்டு புயல்களும் மணிக்கு 260கி.மீ. வேகத்தில் வீசியவை. முந்தைய புயலில் மரணம் 14,000; பிந்தைய புயலில் இரண்டு இலக்கத்துக்குக் குறைவு. ஒரேயொரு வேறுபாடு- முறையான முன்னெச்சரிக்கையும் முற்காப்பு நடவடிக்கையும்தான்.
பேரிடரில் உயிரிழப்புகளைத் தவிர்ப்பது, இயல்பான காலத்தில் சமூகத்தை எந்த அளவு பயிற்றுவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. ஜப்பான் நிலநடுக்கங்களின் நாடு. நிலநடுக்கத்தின்போது என்ன செய்வது, செய்யக்கூடாது என அங்கு சிறு குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை ஒவ்வொருவருக்கும் பயிற்சி தரப்படுகிறது. வாய்ப்பாடு போல ஒவ்வொரு குழந்தையும் அதை மனனம் செய்துகொள்கிறது; அப்படியே கடைப்பிடிக்கவும் செய்கிறது. மனித உயிருக்கு நேர்விலை கொண்டது ஏதுமில்லை. ஒரு நிலநடுக்கம் நேர்கிறது என்றால் நொறுங்கிப் போகாத ஒரு மறைவின் அடியில் உட்கார்ந்துவிடுவார்கள். அதை எடு இதை எடு என்று பதறி ஓடமாட்டார்கள். பேரிடர் முடிகிற வரை யாரும் வெளியே வரமாட்டார்கள். இது அடிப்படைப் பாடம்.
தவிர்க்கக்கூடிய பேரிடரைத் தவிர்க்கத் தவறுவது ஒருவகையில் வன்முறை; மனித உரிமை மீறல். பேரிடருக்குப் பிறகு செலவிடும் தொகையில் இரண்டு விழுக்காட்டை பேரிடர் தவிர்ப்புப் பயிற்சிக்குச் செலவிட்டால் போதும். சேதத்தைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கைமுறைக்கு சமூகம் பழகிக்கொள்ள வேண்டும். பேரிடரை எதிர்கொள்வதற்கான அடிப்படைப் பயிற்சி எல்லோருக்கும் வேண்டும். சிறிய அளவிலான முற்காப்பு தயார்நிலை, உயிர்களைப் பாதுகாப்பதோடு, பெரிய பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கும். புயலைத் தடுக்க முடியாது. ஆனால் அது பயணிக்கும் பாதையை சார்ந்த துறைகள் முன்கணித்துச் சொல்லிவிட முடியும்; மக்கள் அதற்குச் செவிகொடுத்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும்.
பேரிடர் எச்சரிக்கையை எவ்வளவு எளிமையாக, என்ன வடிவத்தில் கொடுக்க முடியும் என்பது முக்கியம். அதைக் கடைசி மைலில் இருக்கும் கடைக்கோடி மனிதர் வரை கொண்டு சேர்ப்பது நிறுவனங்களின் கடமை.
(பேரா.வறீதையா கான்ஸ்தந்தின், கடல் மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் இயங்கி வருபவர்.)