மார்க்சிய இயக்க ஆவணக்காப்பகம்

ஓடை துரை அரசன்
ஓடை துரை அரசன்
Published on

 தனது நூலகம் குறித்துக் கலைஞர் கருணாநிதி ஒருமுறை சொன்னது நினைக்கு வருகிறது. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” – எனக்கும் அப்படித்தான்.

இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் கூட சிற்றுந்தும், பேருந்தும் தடம் பதிக்காத வானம் பார்த்த பூமியைக் கொண்ட பின் தங்கிய ஊர் ஓடைக்காடு. ஈரோடு மாவட்டத்தின் மேற்கு எல்லையும் திருப்பூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இதுதான் என்னுடைய சொந்த ஊர்.

ஓடைக்காட்டில் கைத்தறி நெசவு செய்துவந்த பெரியசாமி – சின்னசாமி சகோதரர்கள்தான் எனது வாசிப்புக்கு வழிகாட்டியவர்கள். இவர்களிடம் திராவிட இயக்கம் சார்ந்த கலை, தனி அரசு, முத்தாரம், தென்றல், மாலை மணி போன்ற இதழ்கள் இருக்கும். அவற்றை என்னுடைய 13 வயதிலேயே படிக்கத் தொடங்கிவிட்டேன்.

எங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்டக் கிளை நூலகத்தில் இருந்து மாதம் சுமார் 50 நூல்களை (பெரும்பாலும் நாவல்கள்) எடுத்துவந்து படிக்கக் கொடுப்பார். அங்கிருந்துதான் கோ.வி. மணிசேகரனின் நீலமல்லிகையில் தொடங்கி சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்ரமன், அரு. இராமநாதன், அகிலன், கல்கி எனப்படித்தேன்.

உயர்நிலைப் பள்ளியில் எனது தமிழாசிரியர் புலவர் இரா. வடிவேலனார் பாவேந்தரின் பாண்டியன் பரிசு நூலைப் படிக்கக் கொடுத்தார். பாரதிதாசனைத் தொடர்ந்து படித்தேன். அதே சமயத்தில் கோவையிலிருந்த ஜெயபால், தாமோதரன், முருகேசன் ஆகிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் வழியாக டி.எச். லாரென்ஸ், பாஸ்ட்டர் நாக், ஆல்பர்ட்டோ மொரேவியா போன்றோரின் ஆங்கிலப் படைப்பிலக்கியங்களைக் கற்கத் தொடங்கினேன்.

பின்னர் கோவை நண்பர்களோடு சேர்ந்து “இளைய மாதவி” என்னும் இலக்கிய இதழைத் தொடங்கினோம். அப்போதே (1966) டி.எச். லாரென்ஸ் கருத்துகளை “ஆபாசம் – நாவல் – காதல் – பெண்கள்” எனும் தலைப்பில் வெளியிட்டோம். இரண்டு இதழ்களுடன் இளைய மாதவி நின்று போனது. கோவை நண்பர்கள் வழியாக ஷேக்ஸ்பியரையும் அறிந்தேன்.  “அவள் ஒரு சாதுர்யமான நைல் நதிப் பாம்பு” என அவர்கள் கிளியோபாட்ராவையும் அறிமுகப்படுத்தி என்னை நூலகங்களுக்கு செல்லப் பணித்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளை நூலகத்திற்குச் சனி, ஞாயிறுகளில் வாரந்தோறும் சைக்கிளில் சென்று படிக்கத் தொடங்கினேன். கிளை நூலகம் மாடியில் இருந்தது. கீழே எதிர்புறமாக SCW சைக்கிள் கடை இருந்தது. எனது சைக்கிளை அங்கு நிறுத்துகிறபோது, அதன் உரிமையாளரும் எங்கள் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்தவருமான தோழர் டி.கே. நல்லப்பன், தாமரை, சோவியத் நாடு, சோவியத் பலகணி போன்ற இடதுசாரி பத்திரிகைகளைக் கொடுத்தார். நூலகத்தில் சோவியத் நாவல்கள், த. நா. குருசாமி மொழியாக்கம் செய்த வங்க நாவல்கள் என அனைத்தையும் படித்தேன்.

1968இல் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் கலந்து கொள்கிறேன். அதன் பின்னர் பாரதிதாசனுடன் பாரதியாரையும் தெளிவாக அறிந்து கொள்கிறேன். பேராசிரியர் நா. வானமாமலை, தொமுசி ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் (தாய் உட்பட பல்வேறு மாபெரும் சோவியத் படைப்புகளை மொழிப்பெயர்த்தவர்), ஜீவா என இலக்கிய அரசியல் ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கலை இலக்கிய பெருமன்றத்துடனும் நெருக்கம் அதிகமாகிறது.

எழுத்து, ஆராய்ச்சி, நீலக்குயில், கசடதபற, கணையாழி, மனிதன், மனஓசை, கண்ணதாசன், நடை, இலக்கிய வட்டம் என சிற்றிதழ் வாசிப்பும், சேகரிப்பும் தொடர்கிறது. கூடவே கம்யூனிஸ்ட் கட்சி மூலம் ரஜனி பாமிதத்தின்  ‘இன்றைய இந்தியா,’ எஸ்.ஏ. டங்கேவின் பண்டைக்கால இந்தியா, புலவர் குழந்தையின் ராவண காவியம் என வாசிப்பு எல்லையும் விரிவடைகிறது.

சிறு பத்திரிகைகளையும், நூல்களையும் நூலகங்களில் கிடைக்காதவற்றை வெளியில் வாங்கியும், சந்தா செலுத்தியும் வாங்கத் தொடங்கினேன். அப்போதெல்லாம் பெரிய நூலகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கவில்லை.

வானம்பாடி காலத்தில் ஞானியுடன் நெருக்கமான உறவு. எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராஜன் போன்றவர்களுடனான தொடர்புகள் மார்க்சியத் தத்துவம் குறித்து நிறையப் படிக்கவும், விவாதிக்கவும் தூண்டியது. விவாதங்களுக்காக வேண்டிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிப் படிக்க வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டது.

சோவியத் மார்க்சியத்தை விமர்சித்தும், மாவோயிசத்தை உயர்த்தியும் பேசிய ஞானி போன்றவர்களுடன் எனது சோவியத் ஆதரவு நிலைப்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ள நிறையப் படிக்க வேண்டி நேர்ந்தது. இவ்வாறான சூழ்நிலைகள் என்னைப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தேடி ஓட வைத்தது.

ஏதோ பழம் பொருட்களை, நாணயங்களை அஞ்சல் தலைகளை வாங்கிச் சேகரிப்பது போல நான் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாங்கிச் சேர்க்கவில்லை. அதற்கு அரசியல் காரணம் இருந்தது. எனது அரசியல் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும், தத்துவார்த்த நிலைபாடுகளை வலிமைப்படுத்திக் கொள்ளவும் பத்திரிகைகளையும் நூல்களையும் தொடர்ந்து இடைவிடாமல் வாங்கினேன். அது இப்போது நூலகமாகிவிட்டது.

எழுபதுகளில் விவேக சித்தன் இதழ் நடத்தினோம். எட்டு இதழ்கள் மட்டுமே வெளியாயின. இலக்கியத்தில் உள்வட்டம் – வெளிவட்டம் போன்ற சர்ச்சைகளை விவேகசித்தன் இதழ் தான் தொடங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் பதிப்பாளர் கருப்பு பிரதிகள் நீலகண்டன், ஷோபா சக்தி ஆகியோருடன் சேர்ந்து அநிச்ச இதழ் தொடங்கினோம். இரண்டு இதழ்களுடன் நிறுத்திக் கொண்டோம். பின்னர் Economic and Political Weekly, Frontline, Mainstream போன்ற ஆங்கில இதழ்களைப் போல - அவைகளிலும் வேறு இதழ்களிலும் வெளியாகும் தத்துவார்த்த அரசியல் தளங்களில் விவாதிக்கத்தக்க கட்டுரைகளைத் தமிழில் வெளியிட மருத்துவர் தோழர் வெ. ஜீவானந்தத்துடன் சேர்ந்து இடது இதழ் தொடங்கினோம்.

கடைசியாக பெரியார் பிறந்தநாளில் (17.09.2025) இடது தனது சிறப்பிதழை செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் எனும் எஸ். பாலச்சந்திரன் எழுதிய நூலாக வெளியிட்டுள்ளது.

பொதுவாகத் தனிநபர்களின் நூலகங்கள் சேகரிப்பாளரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் தான் இருக்கும் என்பார்கள். என்னுடைய நூலகம் இதற்கு விதிவிலக்கு அல்ல. என்னுடைய நூலகத்தை உலகு தழுவிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் மார்க்சிய இயக்கங்களைப் பற்றிய ஆவணக்காப்பகம் என்றே சொல்லலாம். மார்க்சியத் தத்துவம் குறித்து எதிர்த்தும் விமர்சித்தும் எழுதப்பட்ட நூல்கள் – தொடர்ச்சியாக வளர்த்தெடுக்க எழுதப்பட்ட நூல்கள் – கட்சிகளின் வரலாறுகள் – ஆவணங்கள் என கிடைத்த எல்லாவற்றையும் அலைந்து திரிந்து சேகரித்திருக்கிறேன். எனது தேவைக்கேற்பவும், ஆர்வத்திற்காகவும் முக்கியமான உரையாடல்கள் நிகழ்வு களுக்காகவும் நூல்களின் முக்கியத்துவம் கருதியும் இதழ்களையும் நூல்களையும் முடிந்த அளவு படித்துவிடுவேன்.

தமிழ் இதழ்களில் அறுபதுகளில் வெளியாகத் தொடங்கிய இதழ்களில் இருந்து, தற்போது வந்துகொண்டுள்ள தமிழ்த்தடம் வரை வைத்திருக்கிறேன். (முழுப்பட்டியல் கீழே கொடுத்துள்ளேன்). ஆங்கிலத்தில் EPW, Mainstream, Frontline, Social Scientist, Seminar, World Marxist Review, Indian Left Review, Encounter, New Left, society and social change, Art and Ideas போன்ற இதழ்களையும் வைத்துள்ளேன்.

தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம் – சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காவியங்கள், நவீன இலக்கியம் இவைகளின் மூல நூல்கள் - இவை குறித்த ஆய்வு நூல்கள் இருக்கின்றன. நவீன பெண் கவிதைகளில் மீனாட்சி – திரிசடை தொடங்கி இன்றைய லீனா மணிகேலை வரையும். கா.நா.சு – பிச்சமூர்த்தி தொடங்கி இன்றைய ஆண் கவிஞர்கள் வரை வெளியாகியுள்ள கவிதைத் தொகுப்புகள் உள்ளன.

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் படைப்புகளில் இருந்து இன்றைய மார்செலோ மஸ்ட்டோ வரை உள்ளன. இடதுசாரி இயக்கங்களின் வரலாறுகள் – கோட்பாடுகள் – சர்வதேசக் கம்யூனிச இயக்கங்களில் நிலவும் தத்துவார்த்தப் பிரச்னைகள், பின்காலனியம், கீழைத்தேயவியல், புதிய தத்துவப் போக்குகள் குறித்த நூல்கள், பெரியார் – அம்பேத்கர், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – இலக்கிய விமர்சனங்கள் என ஆங்கிலத்திலும் தமிழிலும் சுமார் இருபத்தி ஐந்தாயிரம் நூல்கள் இருக்கின்றன.

எனது நூலகத்தைப் பயன்படுத்தி சிலர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். சமூகச் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல், பணப்பயன் பெறவும், பதவி உயர்வு பெறுவதற்காகவும் வரும் நபர்களுக்கு நான் எவ்விதமான உதவியும் செய்வதில்லை.

தோழர்கள் நல்லக்கண்ணு, து. ராஜா ஆகியோர் என்னுடைய நூலகத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். 1973 என்று நினைக்கிறேன். இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியான கிராம்சியின் சிறைக்குறிப்புகள் நூலைப் பார்த்து து. ராஜா, தமது கருத்துகளை ஒரு இரவு முழுவதும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார். அது ஒரு மறக்க முடியாத நினைவு.

இப்படியாக நூல்கள் சேகரிப்பு, படிப்பு, விவாதம், இதழ் வெளியீடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான அறிவுத்தளங்களில் செயல்படுதல் என வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த எனது வாழ்வு சமூகத்திற்கு ஏதாவது பயனளிக்குமெனில் மகிழ்வேன். என் வாழ்க்கை சரியானதா?

சேகரிப்பில் உள்ள இதழ்கள்:

தாமரை, செம்மலர், தீபம், கணையாழி, சதங்கை, கடிதம், கண்ணதாசன், சுபமங்களா, கசடதபற, புனைகளம், அசை, காலச்சுவடு, மன ஓசை, ஆராய்ச்சி, அன்னம், அன்னம் விடு தூது, யாத்தரா, லயம், எதிர்முனை, உன்னதம், கொல்லிப்பாவை, நோக்கு, அஃ , கவிதாசரன், ஞானரதம், மீட்சி, பிரக்ஞை, புதிய பார்வை, புதிய காற்று, புதிய வானம், புது வெள்ளம், புதிய தலைமுறை, புது எழுத்து, மேலும், சிதைவு, ஆய்வு, தளம், களம்புதிது, கலை, தீம்தரிகிட, எழுத்து, பாலம், இனி, புறப்பாடு, தோழமை, குதிரை வீரன் பயணம், சாளரம், கோகயம், தெறிகள், இலக்கிய வெளி வட்டம், படிகள், நிகழ், தமிழ் நேயம், மார்க்சியம் இன்று, புறப்பாடு, பரிமாணம், வானம்பாடி, மெய்ப்பொருள், இளவேனில், கார்க்கி, சிகரம், சுவடு, ஊடகம், மக்கள், பண்பாடு, நிறப்பிரிகை, எதுவரை?, கிழக்கு, புரட்சிக்கனல், காற்று, காலம், கவனம், வெளி, மக்கள் சகாப்தம், விழிகள், வைகை, பிரச்னை, உதயம், புதுயுகம்,

தீராநதி, தடம், ¼, தொடுவானம்,  சொல்புதிது, பிரகடனம், கோடாங்கி, படிகள், மகாநதி,  கல்குதிரை, ஸ்வரம், மீட்சி, ழ, முன்றில், விருட்சம், தலித், தலித் முரசு,  மார்க்சிய ஒளி, களத்துமேடு, சரிநிகர், பூரணி, அலை, மல்லிகை, குமரன், நாவாவின் ஆராய்ச்சி, புதிய ஆராய்ச்சி, புது விசை, படர்க்கை, சமரன் அகம் புறம், மூன்றாவது மனிதன், நேர், உயிர்ப்பு, தமிழினி, வள்ளுவம், சதுக்கபூதம், நூல் வெளி, புத்தக நண்பன், நீண்ட பயணம், மனிதம், நேயர் விருப்பம். 

இவை என் நினைவில் இருந்து சொல்லப்பட்டவை. வேறு பல இதழ்கள் இன்னும் இருக்கக்கூடும்.

ஆங்கில இதழ்கள்: 

Economic and political weekly, Frontier, Aside, Indian Left Review, Radical Review, Marxist, Marxist Miscellany, Social Science Probings, Social Scientist, Society and Social Change, Art and Ideas, Marxist Review, Social Science, Point Counter Point, Seminar, People’s Front, Third World, Vanguard. இவைகள் தவிர இடதுசாரி இயக்கம், மார்க்சியம், மார்க்சிய சிந்தனையாளர்கள் குறித்து வந்த ஆங்கில சிறப்பிதழ்களையும் தேடிப்பிடித்து வாங்கி விடுவேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com