திருமண விளம்பரங்களும் சாதிப் பிரிவினைகளும்

திருமண விளம்பரங்களும் சாதிப் பிரிவினைகளும்
Published on

எப்பொழுதெல்லாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க? தேவையில்லாமல் ஜாதி பத்தி பேசுறாங்க சார். மொதல்ல ஸ்கூல்ல ஜாதி கேட்பதை நிறுத்தணும் சார்.” இந்த வார்த்தைகள் அடிக்கடி..... இல்லையில்லை தினமும் யார் மூலமாவது நம் காதுகளில் விழுந்து கொண்டு தான் உள்ளது.

இதைப் பேசுபவர்கள் யார் என்று பார்த்தால் தினம் தினம் தனியார் தொலைக்காட்சிகளில் ஜாதிக்கான திருமணம் பற்றிய (casteist Matrimonial) விளம்பரத்தையும், தமிழ் ஆங்கில தினசரிகளில் வெளிவரும் “வரன் தேவை” விளம்பரங்களையும் சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறவர்கள்தான். ஏனெனில் அந்த விளம்பரங்களில் கூட அவர்களின் உள் மனதிற்குப் பிடித்த “Caste No bar except SC” என்று வருகிறது. இதன் மூலம் அவர்கள் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற ஆதரவளிப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் அதில்கூட பட்டியலினத்தவருக்கு இடமில்லை.

அதிகம் பேர் வாசிக்கக்கூடிய ஆங்கில தினசரிகளில் முன்னேறிய ஜாதியினர் சம்பந்தமான குலம், கோத்திரம், நட்சத்திரம் (பாதம் சேர்ந்தது) ஆகியவை குறிப்பிட்டு விளம்பரம் வரும். தமிழக முன்னணித் தமிழ் தினசரிகளில் பிற்பட்டோரில் பொருளாதாரத்தில் சற்று வளர்ந்த நிலையில் உள்ள ஜாதியினர் சம்பந்தப்பட்ட வரன் தேவை விளம்பரங்கள் வரும். இரண்டு விளம்பரங்களிலும் உட்பிரிவு சம்மதம் என்று பொதுவாக தற்போது வருவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன் அதாவது ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு உட்பிரிவு சம்மதம் என்று வருவது அபூர்வம். அதில் கூட மணவிலக்குப் பெற்றோர், துணையை இழந்தவர்கள் அளிக்கும் விளம்பரத்தில் தான் உட்பிரிவு சம்மதம் என்று குறிப்பிட்டு விளம்பரங்கள் வரும். தற்போது அது சற்று முன்னேறிய ஜாதிகளுக்குள் வருவது ஒரு மாற்றம்.

மணமக்கள் தேவை விளம்பரங்களில் வரும் இன்னொரு முக்கிய செய்தி சிகப்பு, மாநிறம் போன்ற நிற வேறுபாடுகள் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் திருமண விளம்பரங்களில் வருவதாகும். சுமாரான அழகுடைய, வசதி கூடுதலான மணமகள் என்று அதிகம் வருவது முற்பட்ட பிரிவினரிடையே வரும் விளம்பரங்களில் அதிகம் காணலாம்.

ஜாதி கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வகையான உத்திகளை நகரங்களில் பயன்படுத்தி எப்படியாவது கண்டுபிடித்துவிடுவார்கள். சிறு நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் ஊர் பெயர், தெரு பெயர் தெரிந்து கொண்டாலே அவை ஒருவரது ஜாதியை கண்டுப்பிடிக்க சுலபமான வழியாக அமைந்துவிடுகிறது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னமும் பல இடங்களில் உங்கள் ஜாதி என்ன என்று கேட்டுத் தான் வீடு வாடகைக்குக் கொடுக்கிறார்கள். அப்படி வாடகைக்குக் கொடுப்பதற்கு முன் அவர்களின் பழக்க வழக்கங்கள், எப்படி முறைவாசல் செய்வார்கள், எந்த சாமியைக் கும்பிடுவார்கள், குல தெய்வம் என்ன என்பது போன்று விலாவாரியாகக் கேட்டுத் தான் வாடகைக்கு விடுகிறார்கள். வன்னிய தேனாம்பேட்டை, வெள்ளாள தேனாம்பேட்டை என்று குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வசிக்கும் பகுதியாக இருந்த பகுதிகள் பின்பு சுருங்கி வன்னியர் தெரு, யாதவர் தெரு, ஆச்சாரி தெரு, நாயுடு தெரு, கம்மாளர் வீதி என்ற தெருக்களாகவே சுருங்கிவிட்டது. எந்த ஜாதியை குறித்து பகுதிகளும், தெருக்களும் அமைந்துள்ளதோ அவை இப்போது பல்வேறு ஜாதியினர் வசிக்கும் இடங்களாக மாறிவிட்டன. ஆனாலும் அந்த இடங்களில் பட்டியலினத்தவர்கள் தங்களது ஜாதி அடையாளத்தை மறைத்துத் தான் வாடகை வீடுகளில் குடியேறவேண்டிய அவசியமாய் உள்ளது.

மயிலாப்பூர், மந்தைவெளி, நங்கநல்லூர் போன்ற சில பகுதிகளில் “பிராமணர்கள் மட்டும்” என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது என்றாலும் வேறு வகைகளில் “சைவம் மட்டும்” என்று குறிப்பிட்டு வருகிறது. தற்போது வானுயரக் கட்டப்பட்டிருக்கும் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் “வெஜிட்டேரியன்களுக்கானது” என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே பணியாளர்கள் கூட அசைவம் சாப்பிட முடியாது. இது ஒரு நவீன தீண்டாமை ஆகும்.

இட ஒதுக்கீடு பெறுவதற்காக ஜாதி கேட்பதும், தங்கள் குழுக்களில் இருந்து சற்றே பிரித்து பார்ப்பதற்கு ஜாதி கேட்பதும் தற்போதைய இளம் தலைமுறையினரிடம் குழப்பமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஜாதி கேட்பது தவறு என்று நினைக்கும் இளைய தலைமுறையினர் பெரும்பாலும் முற்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருப்பதும் ஏதோ ஒரு வகையில் நமக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சலுகை கிடைக்கிறது. எனவே, ஜாதி கேட்பது தவறானதாகப் படவில்லை என்று இட ஒதுக்கீட்டு சலுகையினை அனுபவிக்கும் முற்பட்ட பிரிவினர் அல்லாத சமூக இளைஞர்கள் எதற்காக இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே ஆதரவளிக்கிறார்கள். அதிலும் சில குழப்பங்கள் ஏற்படவே செய்கிறது. ஜாதி ஒழிப்பு பேசும் முற்பட்ட சாதி இளைய தலைமுறையினர் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நியாயங்களை சீர்தூக்கி பார்க்காமலேயே, மொத்தமாக இட ஒதுக்கீடு ஒழிய வேண்டுமென்று பேசுகிறார்கள்.

நான்கு வருங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்களைப் பாதுகாக்க ஆணையம் ஓன்றினை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைத்தது. அதில் என்னை ஓர் உறுப்பினராக தெரிவு செய்திருந்தார்கள். அதில் நிறைய பேருக்கு என்னை அந்த ஆணையத்தில் போட்டது வியப்பாகவும், சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. நிறைய அன்பர்கள் தொலைபேசியில் அழைத்து உங்களை எப்படி அதில் உறுப்பினராக போட்டார்கள் என்று கேட்டார்கள். நானும் அதற்கு பதில் சொல்லும் விதமாக அரசு நியமனம் செய்துவிட்டது என்று மட்டும் சொன்னேன். உடனே ஆணையம் அமைப்பதற்கான சட்டத்தினைப் படித்துவிட்டு நான் என்ன ஜாதியாக இருக்கும் என்று யூகித்தார்கள். சில நண்பர்கள் என்ன அதிகமாக நீதிமன்றம் பக்கம் வருவதில்லை என்று என் பதவிக் காலம் முடிந்த பிறகு நீதிமன்றம் வந்தபோது நிறுத்தி கேள்வி கேட்டார்கள். நானும் என்னை ஆணையத்தில் உறுப்பினராக போட்டார்கள் என்று சொல்வேன். மிகுந்த மகிழ்ச்சியாக அப்படியா, எந்த ஆணையம் என்று கேட்டவுடன் நான் எஸ்.சி./எஸ்.டி ஆணையம் என்று பதில் சொல்வேன். அவர்களது மலர்ந்த முகத்தில் லேசான மாற்றம் ஏற்பட்டு கைகுலுக்கல் தளர்வாக விலகுவதும் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

என்ன தான் ஜாதி ஒழிய வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசினாலும் உள்ளுக்குள் ஜாதியின் தாக்கம் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று ஆழ்மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. இதை மாற்ற வேண்டுமென்று நாம் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் மனப்பூர்வமாக இது மாற வேண்டுமென்று விரும்புவது அவரவர் எண்ணத்தில் இயற்கையாக வரவேண்டும். அதற்கு  ஜாதி ஒழிப்பு இயக்கங்களின் செயல்பாடுகள் இன்னும் வீரியமாக அமைய வேண்டும் என்பது தற்போது தேவையான ஒன்றாக உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com