
மத்திய அரசில் பாஜக கூட்டணியில் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்றாலும் ஐந்தாண்டுகள் முழுமையாக திமுகவால் அதில் நீடிக்க முடியவில்லை. வாஜ்பாய் என்ற தலைவரை முன்னிறுத்தி திமுக செய்துகொண்ட சமரசக் கூட்டணி அது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அதனால் தம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறது என்று உணர்ந்த நிலையில் திமுக எச்சரிக்கையாக ஐந்தாண்டுகள் முடிவதற்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து தன் அமைச்சர்களைத் திரும்பப் பெற்றது. ஆதரவையும் விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து பாமக. மதிமுக ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகின.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த காங்கிரஸ், பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க வேறு வழியில்லை, நாடுமுழுக்க ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்ற முடிவுக்கு 2004 நாடாளுமன்றத் தேர்தலையொட்டித்தான் வந்திருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸும் திமுகவும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்தன. மதச்சார்பின்மை என்ற கருத்தின் அடிப்படையில் இது அமைந்தது.
2004- ஜனவரி ஆரம்பத்தில் சோனியாவின் தூதுவராக சென்னை வந்த மன்மோகன்சிங், கருணாநிதியைச் சந்தித்தார். அதை அடுத்து இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைக் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானதை முறைப்படி அறிவித்தனர். இதையடுத்து திமுக குழு ஒன்று டெல்லி போய் சோனியா காந்தியைச் சந்திக்க, அவரும் சென்னைக்கு வந்து கருணாநிதியைப் பார்த்தார். அன்று தொடங்கிய திமுக- காங்கிரஸ் உறவு இடையில் சில ஆண்டுகள் தவிர வெற்றிகரமான கூட்டணி உறவாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அன்று கருணாநிதி தமிழ்நாட்டில் அமைத்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ் தவிர இரு இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இடம் பெற்றன. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்றே பெயரிட்டு வழிநடத்தினார் கருணாநிதி. அந்த தேர்தலில் தமிழ்நாடு- புதுச்சேரியில் முழுமையாக 40 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றி, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைய உதவிகரமாக இருந்தது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். இந்த சூழலைப் பயன்படுத்தி திமுகவுக்கு பல அமைச்சர் பதவிகளை வாங்கவும் அவர் தவறவில்லை. டிஆர் பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் கேபினட் அமைச்சர்கள் ஆயினர். எஸ்.எஸ். பழனிமாணிக்கம். ரகுபதி, வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை அமைச்சர்கள் ஆயினர்.
அப்படியே இதே கூட்டணி 2006-இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஒரே ஒரு வித்தியாசம்: எப்போதும் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய மதிமுக, அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்ந்துகொண்டது. இந்தத் தேர்தலில் திமுக எல்லோருக்கும் வாரிக்கொடுத்துவிட்டு 128 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. காங்கிரஸ்- 48, பாமக-31, சிபிஎம் 13, சிபிஐ 10 என இடங்கள் ஒதுக்கப்பட்டன. முடிவு? இந்த கூட்டணி அதிக இடங்களைப் பெற்றாலும் திமுகவால் 96 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. கருணாநிதி ஐந்தாவது முறையாக முதலமைச்சர் ஆனார். இதனால் ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்றே ஜெயலலிதா திமுகவை விமர்சித்து வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நாம் தான் 34 இடங்களைப் பிடித்திருக்கிறோம். நம் ஆதரவில் தான் ஆட்சி நடக்கிறது. ஏன நமக்கு ஆட்சியில் பங்களிக்கக்கூடாது என்று குரல்கள் கேட்டாலும் மத்தியில் ஆதரவு தருகிற தம் பங்களிப்பைக் காட்டி திமுக, இக்குரல்களைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொண்டது. ஆட்சியில் பங்கு என தேர்தலுக்கு முன்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால் பிற கட்சிகள் பங்கு கேட்பதில் நியாயமும் இல்லாமல் போய்விட்டது. ஆட்சிக்குத் தேவையான இடங்களைப் பெறவேண்டுமானால் கூடுதலான இடங்களில் நின்றே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு திமுகவினர் வந்தது இந்த தேர்தலில் கிடைத்த அனுபவத்தால்தான் என்று சொல்லலாம்!
இதையடுத்து 2009 நாடாளுமன்றத்தேர்தல் வந்தது. 2004 இல் இருந்த அதே கூட்டணியை இம்முறை தக்க வைக்க முடியவில்லை. மத்தியில் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை இடது சாரிகள் விலக்கிக் கொண்டுவிட்டமையால் தமிழ்நாட்டிலும் சிபிஐ, சிபிஎம் இரு கட்சிகளும் விலகின. மதிமுக சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக பக்கம் போயிருந்தது. பாமகவும் அதிமுக பக்கம் சென்றது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடர்ந்தது. உள்ளே புதிய வரவாக விசிக வந்தது. வழக்கம்போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இவ்வளவுதான்.
முடிவுகள் ஆச்சர்யம் அளித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களில் வென்றது. திமுக -17, காங்கிரஸ்- 8, விசிக -1, ஐ.யு.எம்.எல். -1.
இங்கு மட்டுமல்ல; மத்தியிலும் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா என்கிற மாதிரி இந்த மத்திய அமைச்சரவையிலும் திமுகவுக்கு நல்ல பிரதிநிதித்துவம் கிடைத்தது.
1999-இல் இருந்து தொடர்ந்து 2013 வரை மத்திய கூட்டணி அமைச்சரவையில் தமிழகத்துக்கு நல்ல பிரதிநிதித்துவம் கிடைத்ததால் பல்வேறுவிதமான உள்கட்டுமான வளர்ச்சிகளை செய்துகொள்ள முடிந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இச்சமயத்தில் தான் ஈழப்பிரச்னை உச்ச கட்டத்தை எட்டி, விடுதலைப் புலிகள் போரில் தோல்வி அடைந்தனர். இந்தப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தமிழ்நாட்டிலும் மத்தியில் கூட்டணி ஆட்சியிலும் இருந்த திமுகவால் தடுக்கமுடியவில்லை என்ற கடும் விமர்சனம் திமுக மீது வைக்கப்பட்டது. அது பல ஆண்டுகளுக்கு திமுகவை நிழலாகத்தொடர்ந்தது என்றே சொல்லவேண்டும்.
ஆனால் ஐமுகூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் திமுகவுக்கு பழைய நன்மதிப்புக் கிடைக்கவில்லை. 2ஜி ஊழல் என்ற பூதம் ஆட்டிப்படைத்தது. 2010- ஆ.ராசா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிபிஐ வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தது.இப்பிரச்னையில் கனிமொழியும் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தும் மத்தியில் ஆளும் கூட்டணில் இடம்பெற்றிருந்தபோதே நடந்தவை. இடையில் 2011 -இல் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஈழப்பிரச்னை, 2ஜி ஊழல் என திமுக வரலாற்றில் மிகவும் சங்கடமான நேரம். கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளைக் கொடுத்தாகவேண்டிய சூழல். 63 இடங்களை காங்கிரசுக்குக் கொடுத்துவிட்டு 119 இடங்களில் மட்டுமே திமுக போட்டியிட்டது. இந்த கூட்டணியில் இணைந்து பாமக 30 இடங்களிலும் விசிக 10 இடங்களிலும் போட்டியிட்டிருந்தன. எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இந்த கூட்டணி தோல்வி அடைந்தது. காங்கிரஸுடன் மேலும் கசப்புணர்வு வளரவே 2013 மார்ச் மாதம் ஈழப்பிரச்னையில் ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு தாங்கள் விரும்பியபடி இல்லை எனக்கூறி ஆதரவை விலக்கிக் கொண்டது திமுக. 1999-இல் தொடங்கிய மத்திய கூட்டணி அரசில் திமுகவின் பங்களிப்பு 14 ஆண்டு ஆண்டுகளுடன் முடிவுக்கு வந்தது!