மேற்கிலிருந்து சில மகிழ்ச்சியான படங்கள்

மேற்கிலிருந்து சில மகிழ்ச்சியான படங்கள்
Published on

Feel Good படங்கள் என்பது ஹாலிவுட்டிலும் உலக சினிமாவிலும் ஒரு முக்கியமான வகை (Genre). இது என்னவென்றால், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது, படம் பார்க்கும் மக்களின் மனதில் மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை ஆகியவை கிளர்ந்து எழுந்தால், அத்தகையே படமே இந்த ஃபீல்குட் என்று அழைக்கப்படும் படம். ஹாலிவுட்டிலும் உலகப் படங்களிலும் இது கச்சிதமாக நிர்ணயிக்கப்பட்டுத் திரைப்படங்கள் எழுதப்படுகின்றன. எனவே அங்கே அப்படங்களுக்கான திரைக்கதை விதிகளும் நன்றாகவே வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஃபீல்குட் என்ற தலைப்பைத் தமிழில் மகிழ்ச்சிகரமான படங்கள் என்று ஒரு புரிதலுக்காக நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்படி ஹாலிவுட்டிலும் உலகிலும் வெளியாகியிருக்கும் மறக்கமுடியாத சில மகிழ்ச்சிகரமான படங்களை நினைவுகூர்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதல் படமாக, உலகெங்கும் கொண்டாடப்படும் It’s a Wonderful Life (1946) படத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்தத் திரைப்படத்தின் நாயகன் ஜார்ஜ் பெய்லி, எப்போதும் பிறருக்கு உதவுபவர். அவர் தன்னுடைய குடும்பத்தையும், அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் நலனையும் பாதுகாப்பதையே – அதாவது பிறருக்காக வாழ்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருநாள் அவரது உறவினர் ஒருவர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழக்க, அந்தப் பொறுப்பு ஜார்ஜின் தலையில் விடிகிறது. எனவே ஒரு கிறிஸ்துமஸ் இரவில் தற்கொலை செய்ய முடிவு செய்கிறார்.

அப்போது கிளாரன்ஸ் என்ற தேவதை அங்கு வந்து ஜார்ஜைக் காக்கிறாள். ஜார்ஜ் இல்லாத உல்கம் எப்படி இருக்கும் என்று அவருக்குக் காட்டுகிறாள். ஜார்ஜ் இல்லாத உலகத்தில் அவர் யாருக்கெல்லாம் உதவியிருக்கிறாரோ அவர்கள் அனைவரும் துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கிறார்கள். அந்த நகரமே வேறு ஒரு பெயரில் இருண்டுபோன ஒரு நகரமாக இருக்கிறது. உடனடியாக, தனது இருப்பின் முக்கியத்துவத்தை உணரும் ஜார்ஜ், திரும்பவும் வாழவேண்டும் என்று அந்தத் தேவதையை வேண்டுகிறார். திரும்பவும் அவரது நகருக்கே மரணத்தில் இருந்து தப்பித்து வந்து சேர்கிறார். ஜார்ஜைப் பார்த்து மகிழும் நகரவாசிகள் அனைவரும் ஜார்ஜுக்குப் பணம் திரட்டிக்கொடுத்து உதவுகிறார்கள். அன்பாலும் நன்றி நிரம்பிய மனதாலும் நெகிழ்ந்துபோகும் ஜார்ஜ், அவரது வாழ்க்கை உண்மையில் நல்ல நோக்கங்களால் நிரம்பியுள்ளதை உணர்கிறார். வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று புரிந்து-கொள்கிறார்.

இந்தப் படம் பலமுறை சினிமா-விலும் தொலைக்காட்சியிலும் நாடகங்களாகவும் திரும்பத்திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறது. 1946இல் வெளியான இந்தப் படத்தின் இயக்குநர், புகழ்பெற்ற இயக்குநரான ஃப்ராங்க் காப்ரா. அக்காலகட்டத்தின் சூப்பர்ஸ்டார் ஜேம்ஸ் டீன் இதில் கதாநாயகனாக நடித்தார்.

அடுத்து, Singin’ in the Rain (1952) படம் பற்றிப் பார்க்கலாம். இன்றுவரை ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ’ம்யூசிகல்’ (மறக்கமுடியாத பாடல்கள் நிறைந்த படம்) என்று இது கருதப்படுகிறது. சினிமாவைப் பற்றியே சினிமாவாக எடுக்கப்பட்ட படம் இது. இன்றுமே திரும்பத்திரும்பப் பார்க்கப்படும் மகிழ்ச்சிகரமான படமாக இது உள்ளது.

இதன் கதை மிக எளிமையானது. ஹாலிவுட்டில் ஊமைப்படங்கள் என்று அழைக்கப்பட்ட Silent திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டம் (1927). அக்காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகன் டான் லாக்வுட்டும் கதாநாயகி லீனா லேமண்ட்டும் தங்களது புதிய ஊமைப்படமான Royal Rascal என்ற படத்தின் திரையீட்டு விழாவில் பங்கேற்கிறார்கள். அப்போது அந்த விழா முடிந்ததும் ஹாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர், டானை அழைத்து, Talkie என்று அழைக்கப்படும் பேசும் படம் ஒன்று பற்றிய குறும்படம் ஒன்றைப் போட்டுக் காட்டுகிறார். மௌனப்படங்களில் இருந்து பேசும் படங்களுக்கு ஹாலிவுட் மாறப்போகிறது என்று நமக்குக் காட்டப்படுகிறது.

இந்தப் பின்னணியில் வார்னர் பிரதர்ஸின் ‘Jazz Singer’ என்ற உலகின் முதல் பேசும் படம் விரைவில் வெளியாகிறது. உடனே இந்தத் தயாரிப்பாளர், டான் மற்றும் லீனாவின் அடுத்த படத்தை ஒரு பேசும் படமாக எடுக்கத் தீர்மானிக்கிறார். டானையும் லீனாவையும் அழுத்தமான வசன உச்சரிப்பு வகுப்புகளுக்கெல்லாம் அனுப்புகிறார். பேசும் பட வரவால் ஹாலிவுட்டே களேபரம் அடைகிறது. அப்போது ஒரு சிக்கல் – நாயகி லீனாவின் குரல் கீச்சுக்குரலாக இருக்கிறது. இதனால் படம் சிக்கலில் மாட்டுகிறது. அப்போது தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை, லீனாவுக்கு டப்பிங் கொடுக்க வைக்கலாம் என்று டான் முடிவு செய்ய, இதனால் என்னென்ன பிரச்னைகள், அந்தப் படம் வெளியானதா இல்லையா என்றெல்லாம் பல சம்பவங்கள் நடந்து இனிதே முடிவதே கதை. இந்தப் படத்தில்தான் நடிகர் வடிவேலுவால் அமரத்துவம் அடைந்த ‘சிங்ங்ங்ங் இன் த ரெயின்’ பாடல் வருகிறது என்பது துணுக்குச் செய்தி.

பேசும் படம் எடுப்பதில் துவக்க காலத்தில் இடம்பெற்ற சிக்கல்களைப் பற்றியே ஒரு ம்யூசிகல் படமாக இது அமைந்ததால் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. பெருவெற்றியும் அடைந்தது. அக்காலத்திய மிகப்பெரும் நடிகரான ஜீன் கெல்லியே இந்தப் படத்தை நடித்து இயக்கினார்.

அடுத்து, இந்தியாவிலேயே பிய்த்துக்கொண்டு ஓடிய ஒரு படம் – குறிப்பாக சென்னையில் சூப்பர்ஹிட் ஆன படம் – The Sound of Music (1965).

இதுவுமே ஒரு ம்யூசிகல் படம்தான். ஆனால் இந்தியப் படங்களைப் போல, குறிப்பாக தமிழ்ப்படங்கள் போலவே கதை இருந்ததால் தமிழ்நாட்டில் நன்றாக ஓடிய படம் இது. உடனடியாகவே ‘சாந்தி நிலையம்’ என்ற பெயரில் எஸ்.எஸ் வாசன் தயாரிப்பில் சித்ராலயா கோபு எழுத்தில் ஜெமினி கணேசன் மற்றும் காஞ்சனா நடிப்பில் வெளியாகி, தமிழ் வடிவமும் சூப்பர்ஹிட் ஆனது.

Sound of Music, புத்தகமாக எழுதப்பட்டு, பின்னர் நாடகமாக்கப்பட்டு, அதன்பின்னரே திரைப்படமாக மாறியது. இதில் மரியா என்பது கதாநாயகியின் பெயர். கேப்டன் வான் ட்ராப் என்ற நபரின் ஏழு குழந்தைகளுக்கு மரியா செவிலித்தாயாக மாறி, அவர்களின் உலகில் புதிதாக வந்து சேர்வாள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வாள். இது ஆஸ்திரியா நகரில் நடக்கும். அந்தக் காலகட்டத்தில்தான் உலகப்போர் வெடித்து, நாஜி ஜெர்மனி, ஆஸ்திரியாவைக் கைப்பற்றிவிடும். ஆனால் இது மரியாவுக்கும் கேப்டன் வான் ட்ராப்புக்கும் பேரதிர்ச்சியைக் கொடுக்கும். இதனால் ஆஸ்திரியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்குத் தப்பிச் செல்ல இவர்கள் முடிவெடுப்பார்கள். இந்தக் குடும்பம் ஸ்விட்சர்லாந்துக்குத் தப்பினார்களா இல்லையா? அவர்களுக்கு யாரெல்லாம் உதவினார்கள் என்பதை அழகான, உணர்ச்சிகரமான படமாக எடுத்திருந்தார் இயக்குநர் ராபர்ட் வைஸ். ஜூலி ஆண்ட்ரூஸும் க்ரிஸ்டோஃபர் ப்ளம்மரும் நன்றாக நடித்திருந்தனர். அந்த வருடத்தின் ஆஸ்கர்களில் ஐந்து விருதுகளை அள்ளிய படம் இது. இறவாப் புகழ்பெற்ற பாடல்கள் நிறைந்த படம். இதன் பாடல்களை இன்றும் பாடிக்காட்டும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அக்காலத்திலேயே எட்டு மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் டாலர்களை அள்ளிய படம் இது.

ஃபேண்டஸி என்ற வகையைச் சேர்ந்த படங்கள் எப்போதுமே நமக்குப் பிடிக்கும்தானே? அப்படித் திரைரசிகர்களைக் கவர்ந்த ஒரு படம்தான் The Princess Bride (1987). ஒரு தாத்தா, ஏதோ ஒரு நோயினால் (நிமோனியாவாக இருக்கலாம் – படத்தில் அது என்ன நோய் என்று சொல்லப்பட்டிருக்காது) பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கும் தனது பேரனுக்கு ஒரு புத்தகத்தைப் படிப்பார். அதுதான் திரைப்படமாக விரியும்.

வெஸ்ட்லி என்ற இளைஞன், பட்டர்கப் என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலிப்பான். அப்போது அவனுக்கு ஒரு பிரச்னை வரும். காதலித்தால் மட்டும் போதாது அல்லவா? அவளைப் பார்த்துக்கொள்ளப் பொருளீட்டவேண்டுமே? எனவே அவன் அவளைப் பிரிந்து பணம் சம்பாதிக்கச் செல்வான். அப்போது ஹம்பர்டிங்க் என்ற கெட்ட இளவரசன் ஒருவனுடன் பட்டர்கப்பைச் சேர்ந்தவர்கள் அவளைத் திருமணம் செய்ய முடிவுசெய்து நிச்சயதார்த்தம் நடத்திவிடுவார்கள். ஆனால் திடீரென மூன்று சமூகவிரோதிகளால் பட்டர்கப் கடத்தப்பட்டுவிடுவாள். அப்போது யாரென்றே தெரியாத ஒருவன் இவர்களைப் பின்தொடர்ந்து வந்து இந்த மூவரையும் ஒவ்வொருவராக வென்று பட்டர்கப்பைக் காப்பாற்றுவான். அதுதான் அவளது காதலன் வெஸ்ட்லி. அவளுக்காகத் திரும்பிவந்திருப்பான். இப்போது தீய இளவரசனைப் பல இன்னல்களைத் தாண்டி எப்படி வெஸ்ட்லி முறியடிக்கிறான் என்பதே அந்தத் தாத்தா பேரனுக்காகப் படிக்கும் கதை.

இதில் உண்மையான காதல், நட்பு, வீரம், நம்பிக்கை ஆகியவை வெளிப்படும். இதனாலேயே இந்தப் படம் பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ராப் ரெய்னர். இவரது இன்னொரு படத்தைத்தான் அடுத்ததாகப் பார்க்கப்போகிறோம்.

அந்தப் படம்தான் When Harry Met Sally (1989). படம் வெளிவந்த காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்பட்ட படம் இது. தொலைக்காட்சியில் பல முறைகள் ஒளிபரப்பப்பட்ட படம். இந்தியாவில் HBO சேனல் வந்தபோது அதில் டேப் தேயும் வரை இதைப் போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஹாரி என்பவனுக்கும் சாலி என்பவளுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய படம் இது. ஆனால் இதில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால், கல்லூரி முடித்தவுடன் இருவரும் முதலில் சந்திப்பார்கள். அதில் இருந்து பல வருடங்கள் அவ்வப்போது இருவரும் சந்திக்கும்போதெல்லாம் இருவருக்குமே வேறொரு உறவு இருக்கும். அதில் சிக்கல்கள் இருக்கும். இருவருக்கும் மற்றவர்களுடன் ஏற்படும் பிரேக்கப், பிரச்னைகள் பற்றியெல்லாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல்படுத்திக்கொண்டு இருப்பார்கள். அப்படியே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது இருவருக்கும் ஓர் இரவில் எதேச்சையாக ஒரு உறவு ஏற்பட்டுவிடும். இதை இருவருமே அடுத்தநாள் புரிந்துகொள்ளாமல், நண்பர்களுக்குள் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துப் பிரிந்துவிடுவார்கள். ஆனால் பின்னர் இருவருக்குமே, தங்களுக்குள் இருக்கும் ஆழமான காதல் புரியும். இதன்பின் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே இந்த அழகான, மென்மையான படத்தில் சொல்லப்பட்டிருக்கும். இதில் பில்லி க்ரிஸ்டலும் மெக் ரயானும் மிக இயல்பாக நடித்திருப்பார்கள். படம் முழுக்கவே மிகவும் நல்ல உணர்வைக் கொடுக்கும்.

இந்தப் படத்தைக் காப்பியடித்துதான் ஹம் தும் என்ற இந்திப் படம் வெளியானது. அதில் சாயிஃப் அலி கானும் ராணி முகர்ஜியும் நடித்திருந்தனர். அதில் நடித்ததற்காக சாயிஃபுக்கு தேசியவிருது வேறு வழங்கப்பட்டது (!!).

அடுத்ததுதான் உலகெங்கும் உள்ள நல்ல திரைப்பட ரசிகர்கள் எப்போதுமே ரசிக்கும் படமான Forrest Gump (1994). இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மொத்தம் ஆறு ஆஸ்கர்கள் வாங்கிய படம். டாம் ஹாங்க்ஸ் தனது மிகச்சிறந்த நடிப்பை அளித்த படங்களில் ஒன்று. தொடர்ந்து இரண்டாவது வருடமாக டாம் ஹாங்க்ஸ் மிகச்சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்ற படம் (இதற்கு முந்தைய வருடம் ‘ஃபிலடெல்ஃபியா’ படத்துக்காக வென்றிருந்தார்). இந்தப் படம், இந்தியில் அமீர் கானால் முறைப்படி உரிமை வாங்கப்பட்டு லால் சிங் சட்டா என்று மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் இது.

ஃபாரஸ்ட் கம்ப் படத்தை அனேகமாக அனைவருமே பார்த்திருக்கலாம். மனதை உருக்கக்கூடிய கதை ஒன்றை நகைச்சுவை தடவி, ஆங்காங்கே மனதை வருடும் காட்சிகளோடு சொல்லிய படம். இதை இயக்கியவர் இப்படிப்பட்ட படங்களுக்கே பெயர் போன இயக்குநரான ராபர்ட் ஸெமகிஸ். தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கண்டு துவண்டுபோகாமல், அவற்றை வெல்லவேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் செயல்படும் ஃபாரஸ்ட் கம்பின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து நம்பிக்கை அளித்தது.

இப்போது ஒரு வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு மிகப்பெரிய ஹிட்டான படம் ஒன்றைக் கவனிப்போம். The Birdcage (1996). இது ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ராபின் வில்லியம்ஸ் நடித்த மறக்கமுடியாத படங்களில் ஒன்று.

ராபின் வில்லியம்ஸின் கதாபாத்திரத்தின் பெயர் அர்மாண்ட் கோல்ட்மேன். இவருக்கு இணையர் ஒருவர் உண்டு. அவர் பெயர் ஆல்பெர்ட் கோல்ட்மேன். ஆம். இருவருமே ஓரினச் சேர்க்கையாளர்கள். இவர்களுக்கு இருபது வயதில் ஒரு மகன். பெயர், வால். பல வருடங்களுக்கு முன்னர் குடித்துவிட்டு ஒரு பெண்ணுடன் ஒரே ஒரு நாள் அர்மாண்ட் உறவுகொண்டதால் பிறந்துவிட்ட மகன் இவன். அவனை இரண்டு பேரும் மகனாகவே வளர்ப்பார்கள். இந்த இருவரும் சேர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஒரு க்ளப் நடத்துவார்கள். அதுதான் Birdcage.

இப்போது கதையின் திருப்பம் என்னவென்றால், வால் ஒரு பெண்ணைக் காதலிப்பான். அதைத் தனது பெற்றோர்களான அர்மாண்ட் மற்றும் ஆல்பெர்ட் ஆகிய இருவருக்கும் சொல்வான். ஆனால் இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், அந்தப் பெண்ணின் தந்தை மிகுந்த கறாரான கொள்கைகள் கொண்ட ஒரு அரசியல்வாதி. ஓரினச் சேர்க்கையாளர்களை முற்றிலும் வெறுப்பவர். இதனால் வால் ஒரு யோசனை சொல்கிறான். தந்தை அர்மாண்டை ஒரு இயல்பான தந்தையாக மாற்றி, ஒரு பெண்ணைத் தனது அம்மாவாக நடிக்கவைத்து, தந்தையின் இணையரான ஆல்பெர்ட்டைத் தனது மாமாவாக மாற்றி நடிக்கச் சொல்கிறான். இதனால் நடக்கும் பயங்கரமான குழப்பங்கள்தான் படம். அட்டகாசமான நகைச்சுவையுடன் முக்கியமான ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு பேசிய படம் இது. ஒரு ஃப்ரெஞ்ச் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்துக்கும் மிகப் பொருத்தமாக விளங்கும் படம் இது.

ஹாலிவுட்டில் இருக்கும் ஏராளமான Feel Good என்ற மகிழ்ச்சிகரமான படங்களில் மிகச்சில உதாரணங்கள் இவை. Legally Blonde, Groundhog Day, Clueless, Little Miss Sunshine, 50 First Dates, Up, Green Book, Breakfast at Tiffany’s, La la Land, The Notebook, Mamma Mia!, Elf, Robin Hood: Prince of Thieves, Pretty Woman, Father of the Bride என்று துவங்கி நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் இருக்கின்றன. இவை அத்தனையிலுமே படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்தி, வாழ்க்கையில் ஒரு சிறிய நம்பிக்கை வரவைத்து, அந்த மகிழ்ச்சியை அந்தப் படத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் எப்போதும் படரவைக்கக்கூடிய திறன் இருப்பதுதான் மிகச்சிறப்பான அம்சம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com