எம்.ஜி.ஆர் அமைத்த கூட்டணி வியூகங்கள்

எம்.ஜி.ஆர் அமைத்த கூட்டணி வியூகங்கள்
Published on

கோட்டையைப் பிடிக்க கூட்டணி வியூகம் மிக முக்கியமானது என்பதை அறிஞர் அண்ணா 1967 சட்டமன்றத் தேர்தலில் நிரூபித்திருந்தார். தி.மு.கழகத்தில் உறுப்பினராகி அக்கட்சியில் சுமார் இரு பத்தாண்டுகள் பயணித்ததன் மூலம்

எம்.ஜி.ஆரும் கூட்டணி நடைமுறை அரசியலை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது? தனக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது எதிராளிக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை எடை போட ஓர் அரசியல்வாதிக்குத் தெரிந்திருக்க வேண்டும். வள்ளுவர் வார்த்தையில் சொல்வதென்றால் "தன்வலியும் வினை வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்" என்ற வியூகத்தை புரிந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார். தன்னை பலப்படுத்துவது எதிராளியை பலவீனப்படுத்துவது ஆகிய நகர்வுகள் காய் நகர்த்தல்களே வெற்றிக்கான பாதை என்ற நுணுக்கத்தை.. அணுகுமுறையை தொடர்ந்து அவர் பின்பற்றினார்.

பொதுவாக சமயோசிதமும் அரசியல் மதிநுட்பமும் நிறைந்த சாணக்கியர், ராஜதந்திரி கலைஞர் கருணாநிதி என்று பலரும் சொல்வார்கள். அவரை எதிர்கொண்டு வெல்வது என்றால் எம்.ஜி.ஆர் சாமானியரல்ல. தி.மு.கழகத்தில் இருந்து கொண்டே ரசிகர் மன்றங்களையும் திட்டமிட்டு வளர்த்தது ஒரு தந்திரோபாயம்.

கவர்ச்சி அரசியல் எம்ஜிஆருக்கு கை கொடுத்தது என்றால் இன்னொரு பக்கம் அவருக்கு ஆலோசனை சொல்ல எம். கல்யாணசுந்தரம் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தனர். தி.மு.க-வை பரம எதிரியாகக் கருதிய அறிவுஜீவிகள், சனாதன ஆதிக்க சக்திகளின் ஆதரவும் எம்ஜிஆருக்கு இருந்தது.

நேரடி அன்றாட அரசியலில் ஈடுபடாமல் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் அவருக்கு அரசியலில் அனுபவம் போதாது என்று தான் மதிப்பிடப்பட்டது. ஆனால் உண்மையில் அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதியின் சாதுர்யத்தை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர். அதே சமயத்தில் நடைமுறை சார்ந்து சிந்திக்கும் தன்மையும் இருந்தது. வளைந்து கொடுத்தாவது காரியம் சாதிக்கும் முனைப்பு அவரிடம் இருந்தது. எம்ஜிஆர் மூலம் தி.மு.க பயனடைந்தது என்றே வரலாறு குறிக்கிறது. அதேபோல் தி.மு.கழக ஆதரவும் எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு உதவியது.

1962-இல் எம்.எல்.சி ஆகி சிறுசேமிப்புக்குழு துணைத்தலைவராக இருந்தார். 1967-இல் பரங்கிமலை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா மறைவுக்கு பிறகு யார் முதல்வராக வேண்டும் என்று கருணாநிதிக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே போட்டி எழுந்தபோது கருணாநிதிக்கு ஆதரவான நிலையை எடுத்தார். அதன் மூலம் கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர் எம்ஜிஆர். கருணாநிதி என்னென்ன விதமாக செயல்படுவார் என்பதை கலைஞர் கதை, வசனம் எழுதிய காலம் தொட்டு நட்பு மூலம் அறிந்தவர்.

இந்தப் பின்னணியில்தான் எம்ஜிஆர் வெறும் நடிகர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒரு யதார்த்த அரசியல்வாதி.

1977 மார்ச்சில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி அதிமுகவுக்கு மிகவும் தேவையாக இருந்தது. கருணாநிதி அரசு மீது பழிசுமத்த காங்கிரஸ் ஆட்சியும் ஒத்துழைத்தது. ஆனால் சில மாதங்கள் கழித்து ஜூன் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் காங்கிரஸின் ஆதரவை உதறினார். இதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்றால் எமர்ஜென்சிக்குப் பின் வந்த அந்த தேர்தலில் இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருந்தார். அது மட்டும் இல்லை. மத்தியில் ஏற்பட்ட ஜனதா ஆட்சியின் எதிர்ப்பைத் தவிர்க்க காங்கிரசுடனான கூட்டணியை முறிப்பது பயன்படும் என்ற தந்திரத்தைக் கையாண்டார். எந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்ஜிஆரின் ஆலோசகராக செயல்பட்டதோ அந்தக் கட்சி காங்கிரஸ் உடன் உறவைத் தொடர்ந்த போதும் எம்ஜிஆர் அதைச் செய்யவில்லை. ஜனதா கூட்டணியிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களை கேட்டுக் கொண்டிருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த மமதையில் மார்க்சிஸ்ட் கேட்ட இடங்களை ஜனதா தரவில்லை. விரைந்து செயல்பட்டு 20 இடங்களை கொடுத்து மார்க்சிஸ்ட் கட்சியை எம்ஜிஆர் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

அந்தச் சூழலில் தான் 1979- இல் தஞ்சாவூர் தொகுதி மக்களவை இடைத்தேர்தல் வந்தது. இந்திராகாந்தி இங்கே போட்டியிட விரும்புவதாகச் சொல்லப்பட்டது. இதைத் தவிர்க்க ஒரு உபாயத்தை எம்.ஜி.ஆர் பின்பற்றினார். தொகுதி கடலோரப் பகுதியில் வருவதால் பாதுகாப்பு சிக்கல் உள்ளது என்று கூறி விட்டார். இதன் பின்னால் தான் இந்திரா காந்தி கர்நாடகத்தில் சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆரின் உறுதியற்ற நிலையைப் புரிந்து இந்திரா காந்தி 1980 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் உறவை புதுப்பித்தார். தேர்தலில் சிவகாசி, கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக தோற்றது. எம்ஜிஆர் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று பிரச்சாரம் செய்து அவர் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று திமுக கூறியது.

1980 தேர்தலில் ஆட்சியை பிடித்த இந்திரா, மாநிலங்களில் இருந்த ஜனதா ஆட்சிகளைக் கலைத்தார். அதோடு சேர்த்து எம்ஜிஆர் ஆட்சியையும் கவிழ்த்து விட்டார். ஜனதா ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணம், முன்னதாக 1977 தேர்தலுக்குப் பின்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சிகளை மத்திய ஜனதா ஆட்சி கலைத்தது என்று நியாயப்படுத்தினார். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கலைப்பதற்கான காரணம் எதுவுமில்லை. மக்களவைத் தேர்தல் மக்கள் ஒரு விதமாகவும் மாநில தேர்தலில் வேறு விதமாகவும் முடிவு எடுக்கலாம். அந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவை வைத்து எம்.ஜி.ஆருக்கு மாநிலத்தில் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று சொல்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஆட்சி கலைக்கப்பட்ட பின் சட்டசபைத் தேர்தலில் நம்பிக்கையோடு இ.காங்கிரஸ் -திமுக கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. அப்போது காங்கிரஸின் நிர்பந்தத்தால் சட்டமன்றத்தில் சரிபாதி இடங்களை திமுக விட்டுக் கொடுத்தது. திமுகவின் அந்த முடிவு ஆச்சரியகரமானது.

கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புவதில்லை என்பதற்கு அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி உதாரணம் காட்டப்படுகிறது. எம்ஜிஆர், தான் செய்த தவறு என்ன என்று கேட்டு பிரச்சாரத்தை நடத்தினார். முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. இப்போது முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இரண்டும் எம்ஜிஆருக்கு ஆதரவாக வந்தன. அதே சமயத்தில் பழ. நெடுமாறன் ஆரம்பித்திருந்த தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சி, குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு தேர்தலில் வெற்றியை பெற்றார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டு செல்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்பட்டு விடுகிறது என்ற அடிப்படையில் காங்கிரசை தம் வசம் வைத்துக்கொள்ளும் வேலையில் எம்ஜிஆர் இறங்கினார். இதுதான் எம் ஜி ஆர் பின்பற்றிய உச்ச பட்ச ராஜதந்திரம். 1981-ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு இந்திரா காந்தியை வரவழைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்து சென்ற போதும் கூட இந்திரா காந்தி திமுகவுடன் உறவு தொடர்கிறது என்றுதான் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர் சும்மா இருந்துவிடவில்லை. அந்த சமயத்தில்தான் திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில் ஒரு புதிய சூத்திரத்தை எம்ஜிஆர் முன் வைத்தார். அதாவது ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் எம்.எல்.ஏ காலமாகிவிட்டால் அந்த இடத்தை அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்பதுதான் அந்த சூத்திரம். உண்மையில் தனது கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் காங்கிரஸ் எம்ஜிஆரைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை. இருந்தும் தனி மேடை போட்டு அதிமுக காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது.

இங்கே ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். இந்திரா காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த உள்துறை இணையமைச்சர் யோகேந்திர மக்வானா எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிராக விமர்சனம் செய்து தலைவலியை கொடுத்து வந்தார். தமிழ்நாடு அரசுக்குத் தெரிவிக்காமல் தென் மாவட்டத்திற்கு சென்று வந்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த காளிமுத்து நாவன்மை மிக்கவர். இவர் மக்வானாவுக்கு கடுமையான பதிலடி தந்து வந்தார். "கருவாடு மீனாகாது; கறந்த பால் மடி புகாது. காங்கிரஸ் கரை சேராது" என்பது போன்ற புகழ் பெற்ற வசனங்கள் அவரிடம் இருந்து வந்தவை. காளிமுத்து எல்லை மீறி பேசுகிறார் அவரைக் கட்டுப்படுத்துங்கள் என்று காங்கிரஸ் தலைமையில் இருந்து எச்சரிக்கை கூட வந்தது. காளிமுத்து சற்று உணர்ச்சி வசப்படக் கூடியவர் என்று சமாதானமாக கருத்து சொல்லி எம்ஜிஆர் சமாளித்து விட்டார். சிறிது காலம் கழித்து அதிமுக சார்பில் மக்வானாவுக்கு சிறந்த ஒரு விருந்து தரப்பட்டது. அதன்பின் மக்வானா விமர்சனத்தை நிறுத்திக் கொண்டார்.விருந்தோம்பலுக்கு பெயர் போன எம்ஜிஆர் விருந்து ராஜதந்திரத்தை பின்பற்றியது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இப்படியெல்லாம் பல வித்தைகளை செய்துதான் எம்ஜிஆர் மீண்டும் காங்கிரஸ் தொடர்பான உறவை புதுப்பித்துக் கொண்டார். 84 தேர்தலில் இப்படித்தான் காங்கிரஸ் அதிமுக கூட்டணி மீண்டும் உருவானது.

அந்த தேர்தலுக்குமுன் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இந்திரா காந்தி உதவினார். நேரில் வந்து பார்த்தார். எம்ஜிஆர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் காரணமாக இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அனுதாப அலை வீசியது. எம்ஜிஆருக்கு ஆதரவாகவும் ஒரு அனுதாபம் எழுந்தது. அதைத்தான் சாவுக்கு ஒரு வோட்டு நோவுக்கு ஒரு ஓட்டு என்று கேட்டு பிரச்சாரம் செய்தார்கள். கூட்டணி அமோக வெற்றியை ஈட்டியது. ( சிகாமணி, மூத்த அரசியல் விமர்சகர்)

logo
Andhimazhai
www.andhimazhai.com