
தமிழ் சினிமாவில் வசனங்கள் இடம்பெறாத காலகட்டம். அத்தனை படங்களுமே அக்காலத்தில் ‘ஊமைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இப்படி வெளியான படங்கள், அக்காலத்தில் தென்னிந்தியாவெங்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படும் அத்தனை ஊர்களிலும் திரையிடப்பட்டுவந்தன. இவை அத்தனையுமே புராணங்கள் சார்ந்த படங்களாகவும் இருந்தன.
இப்படி முதன்முதலாக வெளியான திரைப்படம் ‘கீசக வதம்’ என்ற படம். இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட திரைப்படம். இது வெளியான ஆண்டு 1917 (1918இல் இது வெளியானது என்று இன்னொரு பாடபேதமும் உண்டு). இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்று நம்மிடையே இல்லை. மிகச்சில காட்சிகள் மட்டும் இணையத்தில் கிடைக்கின்றன.
கீசக வதத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்று அழைக்கப்பட்ட ரங்கஸ்வாமி நடராஜ முதலியார். இந்தியன் ஃபிலிம் கம்பெனி லிமிடட்’ என்ற ஒரு திரைப்பட நிறுவனத்தை 1917இல் நிறுவி, தொடர்ந்து பல படங்களை இவர் தயாரித்தார். தாதாசாகிப் பால்கே எடுத்த திரைப்படங்களைப் பார்த்தபின்னர் நடராஜ முதலியாருக்குத் திரைப்படங்கள் மீது ஒரு விருப்பம் வந்து, அதன்பின் அவர் வரிசையாக வசனங்கள் இல்லாத ஊமைப்படங்களைத் தயாரித்தார் என்று அறிகிறோம். 1917இல் இவர் நிறுவிய இந்தியன் ஃபிலிம் கம்பெனியே தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோ. இது புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் உருவாகியது.
இதன்பின்னர்தான் நடராஜ முதலியார் கீசக வதத்தை இயக்கித் தயாரிக்கிறார். அதன் வெற்றியைத் தொடர்ந்து, திரௌபதி மான சம்ரக்ஷணம் (1918), மயில்ராவணன் (என்ற) மைத்ரேய விஜயம் (1918), லவ குசா (1919), காளிங்க மர்த்தனம் (1920), ருக்மணி கல்யாணம் (1921), மார்க்கண்டேயா (என்ற) சிவலீலா (1923) முதலிய திரைப்படங்களை எடுக்கிறார். கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்திலேயே ரகுபதி சூர்யப்பிரகாஷ் உள்ளே வந்து, அவரும் ஏராளமான வசனமில்லாப் படங்களை எடுக்கிறார். இதன்பிறகு ராஜா சாண்டோவின் வருகை, ஏ. நாராயணன், டி. ரங்கையா, ஹெச். தேசாய் முதலிய பிரபலமானவர்கள் படம் இயக்கத் தொடங்க, அப்படியே திரைப்படங்கள் பின்னர் பேசவும் தொடங்கின.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இப்படங்களை அலசுவது அல்ல என்பதால் இத்துடன் சரித்திரத்தை எடுத்துவைத்துவிட்டு, இப்படங்களின் ஒரு முக்கியமான அம்சத்தை அலசலாம்.
கீசக வதத்தை இயக்கித் தயாரித்த நடராஜ முதலியாரின் பெயர் தான் அது.
அவரது பெயரில் அவரது சாதி இருப்பதை நாம் கவனிக்கலாம். இது அவர் பெயரில் மட்டும் அல்ல. அக்காலகட்டமான 1917-1918இல் சர்வசகஜமாகப் பலரின் பெயர்களின் பின்னாலும் சாதிப்பெயர் புழங்கிக்கொண்டிருந்தது. அதனாலேயே திரைப்படங்களில் இடம்பெற்றவர்களின் பெயர்களிலும் சாதி இடம்பெற்றிருந்தது.
இன்னும் சில உதாரணங்கள் பார்க்கலாம். (முப்பதுகளில் தமிழ்த் திரைப்படங்களில் ஐயர், ராவ் ஆகிய சாதிப் பெயர்கள் பல இடம்பெற்றுள்ளன. இவையே மிக அதிகமான சாதிப் பெயர்களாகவும் விளங்கின. இந்தப் பெயர்களில் இருந்தவர்கள் பலர் என்பதால் அத்தனை பெயர்களையும் பட்டியல் இடுவது மிகவும் கடினம்).
1932வில் வெளிவந்த ‘ஹரிச்சந்திரா’ திரைப்படத்தின் இயக்குநராக சர்வோத்தம் பாதாமியுடன் இணைந்து பணிபுரிந்த பிரபல இயக்குநர் வடிவேலு நாயக்கர், 1933இல் வெளியான ‘வள்ளித்திருமணம்’ படத்தை இயக்கிய அக்கால பிரபல இயக்குநர் பி.வி.ராவ் (இவர் தெலுங்குப் படங்களையும் இயக்கினார்). இந்தப் படத்தை சாமிக்கண்ணு வின்செண்ட் (இவரைப் பற்றிப் படித்துப் பாருங்கள்) தயாரித்தார். டி.பி. ராஜலக்ஷ்மி நடித்த இந்தப் படத்தில் பாஸ்கரதாஸ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ திரைப்படத்தை இயக்கிய ஹெச்.எம். ரெட்டி, ஶ்ரீராமுலு நாயுடு – இவர் கோவை பட்சிராஜா ஸ்டுடியோவை உருவாக்கியவர். திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். ஏ.கே. செட்டியாரை பயணம் செய்பவர்கள் அனைவருக்குமே தெரியும் – காந்தி பற்றி அவர் இருக்கும்போதே ஆவணப்படம் எடுத்தவர். அந்தப் படம் 1940யில் வெளியிடப்பட்டது. அதேபோல் அக்காலத்திய பிரபல தயாரிப்பாளர் வேணு செட்டியார் இன்னொரு உதாரணம். தயாரிப்பாளர் நாகிரெட்டி அடுத்த உதாரணம்.
பம்மல் சம்மந்த முதலியாரை அனைவருக்குமே தெரியும். தமிழ் நாடகத் தந்தை என்று புகழப்பட்டவர். இவருமே முதலியார் என்ற சாதிப்பெயரோடுதான் அழைக்கப்பட்டுவந்தார். நம் அனைவருக்கும் எம்.என். நம்பியாரை நன்றாகவே தெரியும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்று இயற்பெயர் உடைய அவர், நம்பியார் என்ற சாதிப்பெயரிலேயேதான் இறுதிவரை அறியப்பட்டார்.
இன்னும் இப்படி ஏராளமான பெயர்களைப் பட்டியல் இடமுடியும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கிட்டத்தட்டப் பாதிவரை இப்படிப் பரவலாகப் பரவியிருந்த சாதிப்பெயர்கள் மெல்ல மெல்ல அகலத் தொடங்கின. இதற்குக் காரணம் திராவிட இயக்கப் பரப்புரைகளே.
இதன்பின் என்ன ஆனது? கலைஞர்கள் பெரும்பாலும் தங்களது பெயர்களால் அல்லது இனிஷியல்களால் அறியப்பட்டனர். அவர்கள் பெயர்களின் பின்னொட்டாக இருந்துவந்த சாதிப்பெயர்கள் முற்றிலும் அகன்றன.
ஐம்பதுகளில் தொடங்கித் தொண்ணூறுகளின் இறுதி வரை தமிழ்ப் படங்களில் இடம்பெற்றவர்களைக் கவனித்தால் இது இன்னும் நன்றாகவே புரியும். இளங்கோவன், அண்ணாதுரை, கருணாநிதி, ஶ்ரீதர், கண்ணதாசன், ஏ.எல். நாராயணன், ஆரூர்தாஸ், ஜாவர் சீதாராமன், சக்தி கிருஷ்ணசாமி, வலம்புரி சோமநாதன், சித்ராலயா கோபு, வித்வான் லக்ஷ்மணன், வியட்நாம் வீடு சுந்தரம், தூயவன், பஞ்சு அருணாசலம், மகேந்திரன், பாக்யராஜ், கலைஞானம், சுஜாதா, கே.ராஜேஷ்வர், மணிவண்ணன், வி.சி. குகநாதன், எம்.ஜி.வல்லபன், விசு, கோகுலகிருஷ்ணன், அனந்து, ஆபாவாணன், லியாகத் அலி கான், பாலகுமாரன், எம்.ரத்னகுமார், கெ.செல்வபாரதி, கிரேஸி மோகன், கோபு-பாபு, லிவிங்ஸ்டன், பரதன் (தமிழ்ப்பட வசனகர்த்தா), பிரசன்னகுமார், கமல்ஹாஸன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ஈ.ராம்தாஸ், விஜி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ரமணகிரிவாசன், பொன் பார்த்திபன், சி.முருகேஷ்பாபு என்ற இந்தப் பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள். ஐம்பதுகளில் இருந்து தற்போது வரையிலும் புகழ்பெற்ற தமிழ் சினிமா திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் வசனகர்த்தாக்கள் இவர்கள் (இவர்களில் சிலர் திரைப்பட இயக்கமும் நடிப்பும் செய்திருக்கலாம். அது விஷயம் இல்லை. இந்தப் பட்டியலை நான் முதலில் கொடுத்ததற்குக் காரணம் இவர்கள் அனைவரும் எனது துறை என்பதால்தான்). இவர்களில் ஒருவராவது தனது சாதிப்பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டிருக்கிறாரா? இல்லை அல்லவா?
இதேபோல இன்னும் சில பட்டியல்களும் போட முடியும். இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், நடனக் கலைஞர்கள் இத்யாதி இத்யாதி. எந்தப் பட்டியலிலும் ஐம்பதுகள் முதல் இரண்டாயிரம் வரை மிகப்பெரும்பாலும் சாதிப்பெயர் இருக்காது.
இதற்குக் காரணம் இந்த அந்திமழை இதழில் இருக்கும் அரசியல் கட்டுரைகளில் உள்ளது. இருபதுகளின் இறுதியில் நடந்த மிகப்பெரும் மாநாடு ஒன்று எப்படி சாதி ரீதியாக அதுவரை மக்களின் பெயர்களில் இருந்த பின்னொட்டைத் தகர்த்து எறிந்தது என்று நீங்கள் இந்த இதழில் படிக்கலாம். அதன்பின்னர்தான் பெயரில் இருந்து சாதியை நீக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் எழுந்தது. எந்த அரசும் அப்படிச் செய்யச்சொல்லி எந்தச் சட்டமும் இதுவரை போட்டதில்லை. ஆனால் திராவிட அரசுகளின் தாக்கத்தில் மக்களே முன்வந்து தங்கள் பெயர்களில் இருக்கும் சாதிப் பின்னொட்டுகளை நீக்கித் தூக்கி வீசினர். இது தமிழ்நாடு ஒன்றுக்கு மட்டுமே உரித்தான பெருமையாகும்.
ஒரு காலகட்டத்தில் வட இந்தியாவிலோ அல்லது பிற மாநிலங்களிலோ இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து நடிக்கத் தொடங்கிய நடிகைகளுக்குக் கூட நம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயக்குநர்கள் தெளிவான, அழகிய தமிழ்ப்பெயர்களையே சூட்டினர். அந்த நடிகைகளின் இயற்பெயர்களில் சாதி இருந்திருக்கலாம். ஆனால் தமிழுக்கென்றே அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டன (ரதி அக்னிஹோத்ரி ஒரு உதாரணம். தமிழில் அவர் வெறும் ரதியாகவேதான் அறியப்பட்டார். ஆஷா கேளுன்னி நாயர், ரேவதியாகவே அறியப்பட்டார். ஷோபனா சந்திரகுமார் பிள்ளை, ஷோபனா ஆனார். ரிஷிபாலா நாவல், சிம்ரன் ஆனார். இவை சில உதாரணங்கள்).
ஆனால் கடந்த சில வருடங்களாக, நூறு வருடங்கள் முன்னர் தமிழ் சினிமா எப்படி இருந்ததோ அதேபோன்ற போக்கு மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது என்று அடித்துச் சொல்லமுடியும். அந்த அளவுக்கு ஏராளமான பெயர்களில் மறுபடியும் சாதிப் பின்னொட்டு இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு விதை போட்டவராக அவசியம் இயக்குநர் கௌதமைச் சொல்லமுடியும். முதலில் கௌதம் என்றும், பின்னர் கௌதம் வாசுதேவ் என்றும் பெயர் போட்டவர், திடீரென கௌதம் வாசுதேவ் மேனன் என்றே போட்டுக்கொள்ளத் ஆரம்பித்தார். இன்றுவரை மாற்றிக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து காஜல் அகர்வால், ராஷ்மி மேனன், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி ஐயர், அனுஜா ஐயர், லக்ஷ்மி மேனன், நித்யா மேனன், ஹன்சிகா மோட்வானி, பூமிகா சாவ்லா, டாப்சி பன்னு, பூஜா ஹெக்டே என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம்.
இதில் குறிப்பிடத்தகுந்தது, நடிகர் பிரகாஷ் ராய் தமிழில் அறிமுகமாகும்போது பிரகாஷ் ராஜ் என்று தனது பெயரைப் போட்டுக்கொண்டார். அங்கே ராய் என்ற சாதி அடையாளம் மாற்றப்பட்டது. இப்படித்தான் சில வருடங்கள் முன்னர் கூடத் தமிழ் சினிமா மிகத்தெளிவாக, சாதிப் பெயர்களை உள்ளே விடாமல் தடுத்திருக்கிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை.
இப்படி நடந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான பாதையாகத் தெரியவில்லை. காரணம், தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பிற எல்லா மாநிலங்களிலுமே வெளிப்படையாக சாதிப் பெயரைப் பின்னால் போட்டுக்கொள்வதே இன்றுவரை வழக்கம். ஆனால் அதனை எப்போதோ தமிழ்நாடு தடுத்துவிட்டது. ஆனால் இப்போது பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இந்த தமிழ்சினிமா சாதிப்பெயர்களைப் பார்த்து சாதாரண மக்களும் அப்படிப் போட்டுக்கொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஒருபக்கம் அண்டை மாநிலமான கேரளத்தில் பார்வதி என்ற நடிகை, தனது சாதிப்பெயரைத் தவிர்த்து, அது வேண்டாம் என்று முடிவுசெய்து, திருவோத்து என்று திருத்திக்கொள்கிறார். மறுபக்கம் சாதிப்பெயர்களையே ஒழித்த தமிழ்நாட்டில் சாதிப்பெயர்கள் மறுபடியும் திரையுலகில் அதிகரித்து வருகின்றன. கவனம் தேவை அல்லவா?